TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ராஜபக்ஷ கொண்டிருக்கும் பலத்தின் பரிமாணத்தை

மகிந்த ராஜபக்ஷ கொண்டிருக்கும் பலத்தின் பரிமாணத்தை இன்றைய தேர்தல் தீர்மானிக்கும்.

இன்று இடம்பெற்று முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்கனவே பரந்தளவில் அதிகாரங்களைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பலத்தின் கனதியை தீர்மானிப்பதாக அமையப்போகிறது. என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர் ஆசியாவின் நீண்டகால யுத்தங்களில் ஒன்றை மகிந்த ராஜபக்ஷ வெற்றி கொண்டு ஒரு வருடத்தை அண்மித்துள்ள நிலையில் , 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்திற்கு எம்.பி.க்களைத் தெரிவு செய்யும் தேர்தலில் ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தேர்தல் களத்தில் 36 கட்சிகள், 301 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 7,620 வேட்பாளர்கள் குதித்துள்ளனர். 2005 இல் முதலாவது முறையாக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற தேர்தல்கள் யாவற்றிலும் ராஜபக்ஷவின் கட்சியே வெற்றி பெற்றுவருகிறது. இந்நிலையில், ஆளும் கூட்டணியானது 2/3 பெரும்பான்மைப் பலத்தை அதாவது, 150 ஆசனங்களை வெற்றிகொள்ளும் என்று அக்கட்சி உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது. 2/3 பெரும்பான்மையை ஆளும் ஐ.ம.சு.மு.பெற்றுக்கொண்டால் தமது விருப்பத்திற்கு இசைவாக அரசியலமைப்பை ஜனாதிபதி மாற்றிக்கொள்ள முடியும். ஆயினும், தனது நோக்கங்களை மகிந்தா பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை.

ஏற்கனவே, சாதாரண பெரும்பான்மைப் பலத்துடன் அதிகளவிலான அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டிருப்பதாகக் கூறும் எதிரணியானது 2/3 பெரும்பான்மைப் பலத்தை ஆளும் கட்சி பெற்றுக்கொள்வதைத் தடுத்து நிறுத்தப்போவதாக சூளுரைத்துள்ளது.

இன்றைய தேர்தலில் 1 கோடி 40 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். தேர்தல் பாதுகாப்புக் கடமையில் 80 ஆயிரம் பொலிஸாரும் படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தேர்தல் பிரசாரம் ஒப்பீட்டளவில் இதுவரை அமைதியாகவே இடம்பெற்றது. ஒருவர் இறந்தது உட்பட 340 வன்முறைச் சம்பவங்கள் இதுவரை தேர்தல் வன்முறையுடன் தொடர்புபட்டவையென பதிவு செய்யப்பட்டுள்ளன.

“2/3 பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக் கொள்வதற்கான வேலையை இந்த அரசு செய்துள்ளது. அபிவிருத்தி ,பொருளாதாரம் மற்றும் 30 வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த வேலைகளை அவர்கள் செய்திருக்கிறார்கள். இதனால், நாடு முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்று எச்.எம்.சுதத் என்ற வர்த்தகர் ராய்ட்டர் செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.

“அதிகளவிலான நம்பிக்கையுடன் போட்டியிடும் அரசாங்கமொன்றை மகிந்தா கொண்டுள்ளார். அதேவேளை எதிரணி பிளவுபட்டுக் காணப்படுகிறது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான விரிவுரையாளர் ரொகான் எதிரிசிங்க ராய்ட்டருக்குக் கூறியுள்ளார்.

பிரதான எதிர்க்கட்சிகள் தடுப்புக்காவலில் இருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் பின்னால் அணி திரண்டு நின்றாலும் ஜனாதிபதித் தேர்தலில் நின்றதைப்போன்று ஒரு குடையின் கீழ் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.

யுத்தத்தின் பின்னரான பொருளாதாரத்தில் ராஜபக்ஷவும் அவரின் நேச அணிகளும் வெற்றி கண்டுள்ளன. 2004 இன் பின்னர் பங்குச்சந்தை 150 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது. அபிவிருத்தி முன்னெடுப்பு, வெளிநாட்டு முதலீடுகள் என்பன அதிகரித்துள்ளன.

யுத்தம் முடிவுக்கு வந்தபோதும் உடனடியாக ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை. துரிதமாகத் தேர்தலை நடத்தப்போவதாக மகிந்தா தெரிவித்திருந்தார். ஆனால், மேற்குநாடுகளும் ஐ.நா.வும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கான சாத்தியப்பாடு குறித்து விசாரணை நடத்துமாறு அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றன. “தேர்தலின் பின்னர் அரசியல் ஸ்திரத்தன்மை காணப்படுமானால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவுக்கு ஆர்வம் காட்டக்கூடும். இல்லாவிடில் ஏதாவது மாற்றம் ஏற்படுமென நான் நினைக்கவில்லை என்று முன்னணி ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த பொருளியலாளரான அமால்சந்தரட்ண ராய்ட்டருக்குக் கூறினார்.

அரசாங்க செலவினம் பாரியளவில் இருப்பது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எப்போதும் கொண்டிருக்கும் கவலைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்குத்தடையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வருடம் பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதம் எனவும் இந்த வருடம் 6.5 சதவீதமாக இருக்குமெனவும் மத்தியவங்கி கூறுகிறது. “ஆளும் கட்சி பதவிக்குவந்தால் ஸ்திரத்தன்மை ஏற்படும். ஆனால், எத்தகைய பொருளாதாரக் கொள்கைகளை அவர்கள் அமுல்படுத்தப்போகின்றார்கள் என்பது பற்றி இதுவரை தெரிவிக்கவில்லை என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் சிறிமல் அபேயரட்ண கூறியுள்ளார்.

கொழும்பிலிருந்து ஆதவன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*