TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வரலாற்றில் புலிகளை அழித்த தளபதி சரத் பொன்சேகா

வரலாற்றில் புலிகளை அழித்த தளபதி என்ற பெயருடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு ஆரம்பமாகும் அஸ்தமனம்?.

ஜெனரல் சரத் பொன்சேகா இப்போது மறக்கப்பட்டு வரும் ஒரு மனிதராக மாறிக் கொண்டிருக்கிறார். இது எதிர்பாராத ஒரு விடயம் அல்ல. ஆனால் நிச்சயம் அவர் இதை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி எதிர்பார்த்திருந்திருப்பாரேயானால் அரசியலில் அவசர அவசரமாகக் குதிக்கும் முடிவை எடுத்திருக்க மாட்டார்.

கடற்படைத் தலைமையகத்தில் இளநிலை அதிகாரிகளுக்கான குடியிருப்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்; பொன்சேகாவை மெல்ல மெல்ல அரசாங்கம் சாகடித்துக் கொண்டிருப்பதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது. இது பெரும்பாலும் உண்மையான கருத்தாகவே இருக்கக் கூடும்.

அது எந்தவகையில் என்றால்- அரசியல்ரீதியாக அவர் மெல்ல மெல்ல சாகடிக்கப்பட்டு வருகிறார் என்பதே உண்மை. கடந்த வருட இறுதியில் பாதுகாப்புத் தலைமை அதிகாரி என்ற பதவியை உதறித்தள்ளி விட்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்திருந்தார்.

அப்போதே அவர் அரசியல் ரீதியான தற்காலைக்குத் தயாராகி விட்டார் என்பது தெரிந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் வென்றால் சரி தோற்றால் அவரது எதிர்காலம் பாழாகி விடும் என்பதை தெளிவாகவே உணரமுடிந்தது. ஆனால் இராணுவ அதிகாரியாக இருக்கும் போது எது நடந்தாலும் அதற்கேற்ப செயற்பட வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு அமைய அரசியலில் அவர் செயற்படவில்லை.

வெற்றி ஒன்றையிட்டே சிந்தித்தாரே தவிர தோல்வி ஒன்றின் பின்னால் இருக்கக் கூடிய அபாயங்களையிட்டு கணிக்கத் தவறிவிட்டார். அதைவிட அவர் விரும்பியோ விரும்பாமலோ செய்த சில ஏற்பாடுகளும் சுற்றியிருந்தவர்களின் நடவடிக்கைகளும் சரத் பொன்சேகாவை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று சினமன் லேக் சைட் விடுதியில் இடம்பற்ற நிகழ்வுகளும், அதனை ஒட்டிய சில சம்பவங்களும் தான் சரத் பொன்சேகாவின் அரசியல் எதிர்காலத்துக்குப் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. இதன்காரணமாகவே அவர் தடுப்புக்காவலில் வைக்கப்படும் நிலையை அடைந்துள்ளார்.

* அதுமட்டுமன்றி இரண்டு இராணுவ நீதிமன்றங்களின் விசாரணைகளையும் அவர் சந்திக்க வேண்டியுள்ளது. இராணுவ நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பக் கட்டத்திலேயே இருந்தாலும் அது எப்படித் தொடரப் போகிறது என்ற கேள்விகள் இருக்கவே செய்கின்றன. காரணம் இரண்டாவது நீதிமன்றத்துக்கான புதிய நீதிபதிகள் நியமனம் கடந்த பத்து நாட்களாக இழுபட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் இந்த விடயத்தை எப்படி கொண்டு செல்வது என்பதைத் தீர்மானிப்பதில் சற்றுத் தயக்கம் காட்டுகிறது.

இது ஒருபுறத்தில் இருக்க ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுடன் ஒட்டியிருந்த கட்சிகள் எதுவும் இப்போது அவருக்குத் துணையாக இல்லை என்பது தான் வேடிக்கை.

முன்னாள் பிரதம நீதியரசர் மட்டும் சரத் பொன்சேகா விடயத்தில் அரசாங்கம் செய்வது தவறு என்று கூறிக் கொண்டே இருக்கிறார்.

* அதைவிட அவரது மனைவி அனோமா இன்னொரு பக்கம் அழுது வடியும் முகத்துடன் அடிக்கடி செய்தியாளர்கள் முன்தோன்றி ஏதாவது பரபரப்பான கதைகளை அவிழ்த்து விடுகிறார். உண்ணாவிரதம் இருப்பதாகவும், மதிய உணவை புறக்கணிப்பதாகவும், உணவு கொண்டு செல்வதற்கு தடை ஏற்படுத்தப்படுவதாகவும் சரத் பொன்சேகா விடயத்தில் ஒரு பரப்பரப்பான செய்தியை அவிழ்த்து விடுவதிலேயே ஜேவிபினர் குறியாக இருக்கின்றனர். காரணம் வெறும் அரசியல் இலாபம் மட்டுமே.

ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகா போட்டியில் இறங்கியது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவருக்காக பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று அவருக்காக வீதியில் இறங்க எத்தனை பேர் தயாராக இருக்கின்றனர் என்பதை- கொழும்பில் நடக்கின்ற அவருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்போரின் எண்ணிக்கையைக் கொண்டே உறுதி செய்து கொள்ள முடிகிறது.

ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவின் பக்கம் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் விலகிக் கொண்டது. பின்னர் ஐதேகவும் அதனோடு சேர்ந்த கட்சிகளும் ஒதுங்கிக் கொண்டன. இப்போது சரத் பொன்சேகாவின் பெயரை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருப்பது ஜேவிபி மட்டும் தான். ஜேவிபியைப் பொறுத்தவரையில் பெரிதும் பலவீனமானதொரு கட்டத்தில் இருக்கிறது.

ஐதேகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற அதன் கனவு தகர்ந்து போனபோது சரத் பொன்சேகா என்ற புளியங்கொம்பைப் பிடிப்பதை விட அதற்கு வேறு தெரிவே இருக்கவில்லை.

அதனால் பொதுத்தேர்தல் வரைக்கும் சரத் பொன்சேகாவை முன்வைத்துப் போராட்டங்களை நடத்தும். அதற்குப் பிறகும் ஜேவிபி சரத் பொன்சேகாவுக்காக எந்தளவுக்குப் போராட்டங்களை நடத்தும் என்பது சந்தேகமே. சரத் பொன்சேகா விடயத்தில் அவருடன் ஒட்டிக் கொள்ள முனையும் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்துகிறது அரசாங்கம்.

இதனால் அனைத்து அரசியல் சக்திகளுமே வில்லங்கத்தை எதற்கு விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று ஒதுங்கிக் கொள்ளவே விரும்புகின்றன. இது சரத் பொன்சேகாவின் நிலையைப் பெரிதும் கேள்விக்குள்ளாக்க ஆரம்பித்து விட்டது.

சரத் பொன்சேகாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்க அரசாங்கம் தயாராக இல்லை. அதேவேளை அவரை சட்டப்படியாக வெளியே கொண்டு வருவதும் இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை. இந்தக் கட்டத்தில் அவருக்காக குரல்கொடுத்து வந்த அரசியல் வட்டம் சுருங்கிப் போய்க் கொண்டிருப்பதால் எதிர்காலத்தில் அவர் யாருமே துணைக்கில்லாத ஒருவராக மாறிவிடக் கூடும்.

* வரலாற்றில் புலிகளை அழித்த தளபதி என்ற பெயருடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு இந்தக்கதி ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்ட இராணுவ சேவைப் பதக்கங்களைப் பறிக்கின்ற திட்டமும் கூட அரசாங்கத்திடம் இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன. இப்போதெல்லாம் அவர் பற்றிய செய்திகள் குறைவடையத் தொடங்கியுள்ளன. வெளியாகும் செய்திகளின் மீதான மக்களின் ஆர்வம் குன்றத் தொடங்கி விட்டது.

சரத் பொன்சேகா விவகாரம் மெல்ல மெல்ல மறக்கப்பட்டு வருவதையே இது உணர்த்துகிறது. சரத் பொன்சேகாவின் நிலையை அறியும் ஆர்வம் மக்களிடத்தில் மறையத் தொடங்கியிருப்பதால் ஊடகங்களும் அவரைப் பற்றிய செய்திகளை குறைத்துக் கொள்ளத் தொடங்கி விட்டன.

இது அரசாரங்கத்துக்கு இன்னமும் வாய்ப்பாகவே அமையப் போகிறது. இந்தநிலை நீடிக்குமானால் வெகுவிரைவிலேயே சரத் பொன்சேகா யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டாலும் ஆச்சரியப்பட முடியாது. இந்தநிலைக்குக் காரணம் அவரைத் தவிர வேறெவராகவும் இருக்க முடியாது.

அரசியல் ஆசை அவரை படுகுழிக்குள் கொண்டு போய்த் தள்விட்டிருக்கிறது. மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக அரசியல் நடத்துவதோ அல்லது நடத்த முனைவதோ தவறென்று கூறவரவில்லை. ஆனால் அவர் அரசியல் நடத்துவதற்குத் தெரிவு செய்த பாதைகளும் அதற்கான வழிமுறைகளும்- ஒரு இராணுவ அதிகாரி என்ற தோரணையில் இருந்ததே தவிர அரசியல்வாதி என்ற வகையில் அமைந்திருக்கவிலலை.

* ஒரு தேர்ச்சிமிக்க அரசியல்வாதி சொல்லக் கூடாததை அவர் சொல்லத் தொடங்கியதும் செய்யக் கூடாததை அவர் செய்யத் தொடங்கியதும் தான் அவரது இந்த வீழ்ச்சிக்குக் காரணம். இந்தத் தவறுகள் தான் அவரை வரலாற்றின் பக்கங்களில் கைவிடப்பட்ட ஒருவராக மாற்றிக் கொண்டிருக்கிறது.

கட்டுரையாளர்: ஹரிகரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*