TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சிறிலங்காவை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்க

உலகத் தமிழர் ஒன்றிணைந்தால் சிறிலங்காவை ஒரு பயங்கரவாத நாடாக உலக நாடுகளினால் அங்கீகரிக்கச் செய்யமுடியும். இதனைப் புரிந்துகொண்டு அடுத்த இராஜதந்திரக் காய் நகர்த்தலை உலகத் தமிழினம் செய்யுமா என்பதில் தான் இது தங்கியுள்ளது. ஈழத் தமிழரின் தேசியக் கோட்பாடும் உலகத் தமிழரின் தணியாத தாகமான சோழன் பறக்கவிட்ட புலிக்கொடி ஐக்கிய நாடுகள் சபையிலும், ஏன் அவன் ஆண்ட இந்தியப் பெருங்கண்டம் அனைத்தும் திராவிடனின் பண்டைய நாகரிகம் மீண்டும் புத்தொளி பெற்று வலம் வரும் என்ற உண்மையான பச்சைத் தமிழரின் தாகம் இவ்வினத்தின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது.

தமிழர்கள் ஓன்றுபடுவது என்பது சாத்தியமில்லாததொன்று என்று பல தமிழர்களே பறைசாற்றுகின்றார்கள். அதில் ஒருவர் தான் இன்றைய தமிழ் நாட்டின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. முதலில் நாம் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும். அதாவது ஒற்றுமை என்பது தானாக வருவதில்லை. இவைகள் பல இடர்களுக்கு பின்னர் தான் வருவன. பச்சைத் தண்ணியில் பலகாரம் சுட முடியாது என்பதற்கிணங்க ஒரு சாண் வயிற்றுக்காக ஏங்கித் தவிக்கும் தமிழ் நாட்டு மக்களிடம் எப்படி தமிழின ஒற்றுமையைப் பற்றி பேச முடியும்.

அவர்களின் ஒரே கனவு எப்படித் தமது குடும்பம் ஒரு சாதாரண வாழ்க்கையை அன்றாடம் நடத்தி தமது பிள்ளை குட்டிகளை வளர்த்து எடுக்க வேண்டும் என்றே அவர்கள் இரவு பகல் கனவு கண்டுகொண்டுள்ளார்கள். அவர்கள் ஒரு போதும் ஒரு படிமேல் சென்று அவர்களின் ஊர், சமூகம், மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் வரலாறு என்பதைச் சிந்திப்பதற்கோ அல்லது அவைகளின் பொருள் என்ன என்பதை அறியவோ எத்தனிக்க முடியாது. அதனையும் நாம் அவர்களிடம் இருந்து எதிர்பாக்க முடியாது. இன்றைய முதலாளித்துவ உலகில் குறிப்பாக இந்தியா ஒரு முதலாளித்துவப் போரையே நடத்திக் கொண்டிருக்கின்றது.

இதன் ஒரே நோக்கு தான் சீனாவிலும் பார்க்க உற்பத்தியைப் பெருக்கி உலக முதலாளித்துவ நாடாக உலகில் வலம் வர வேண்டும் என்பதே. ஆனால் ஓன்று மட்டும் உண்மை. எத்தனை பொருளாதாரப் புரட்சி இந்தியாவில் வந்தாலும் எப்படி பொருளாதார ரீதியாக இந்தியா வளர்ந்தாலும் இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் தான் வாழ்வார்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்திலும் எந்த முன்னேற்றமும் இருக்காது. ஆனால் குறிப்பிட்ட சில ஆதிக்கச் சக்திகள் மட்டும் உலகப் பணக்காரர்கள் ஆவார்கள் என்பது மட்டும் உண்மை.

புரட்சியே தமிழனைத் தலை நிமிர வைக்கும்

நூறு ஆண்டுகள் கடந்தாலும் இந்திய மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியே இருப்பார்கள். குறிப்பாக திராவிட இனம் பின் தள்ளப்பட்ட இனமாகவே இருப்பார்கள். தம்மை திராவிடர்களாக அடையாளப்படுத்தி திராவிட தேசங்களில் சூறையாட முனையும் பல ஆரிய மற்றும் கலப்புத் திராவிடரே முன்னோக்கி செல்வார்கள்.

தமிழினம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால் அவர்கள் பொருளாதரத்தில் உயர்வு பெற வேண்டும். இவைகள் இடம்பெற வேண்டுமாயின் அவர்களுக்குள் புரட்சி வந்தாலே ஒழிய அவர்களின் பொருளாதார நிலமையை யாராலும் மாற்ற முடியாது.அப்படியாயின் எப்படி வறுமையின் கீழ் வாழும் பெரும்பான்மையான தமிழ் நாட்டு மக்களை மாற்ற முடியும் என்ற கேள்வி எழுகின்றது. தமது அன்றாட வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் இவர்கள் அடுத்த நூறு ஆண்டுகளில் அவர்களின் வம்சாவளிக்கு என்ன நடக்கும் என்பதை அவர்கள் கடுகளவும் சிந்திக்க முடியாதவர்கள்.

தமிழ் நாட்டு ஊடகங்களோ அவர்களின் ஊடகங்கள் மூலமாக எப்படி பணத்தை சம்பாதிக்க முடியும் என்ற கொள்கையுடன் செயலாற்றுகின்றார்கள். சில ஊடகங்கள் சமூக மாற்றத்துக்காக வெளிவந்தாலும் அவைகள் பின்னாளில் தோல்வியைத் தழுவுகின்றன. குறிப்பாக இந்த நிறுவனங்கள் மூடி விடும் அளவு பொருளாதார சிக்கலுக்கு உள்ளாகிறார்கள். திரையுலக விமர்சனைங்களையும் மற்றும் கோமாளி அரசியலையும் மக்கள் முன் கொண்டு செல்லும் ஊடகங்களைத் தான் பல கோடி மக்கள் ஆதரித்து பணத்தை அள்ளி வீசுகின்றார்கள்.

ஆக ஊடகத் தர்மம் என்பது காசோலையால் மூடி மறைக்கப்பட்டு விட்டதென்பது தான் மறைக்க முடியாத உண்மை.இப்படியான ஒரு நிலையிலேயே தமிழினம் இந்தியாவில் இன்று இருந்து கொண்டிருக்கின்றது.

இந்திய மத்திய சர்க்காரோ மக்கள் எவ்வளவு அறியாமையாக இருக்கின்றார்களோ அந்தளவுக்கு அவர்களில் செல்வாக்கு புது டெல்லியில் உயரும் என்று கணக்குப் போட்டு செயலாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இது போதாதென்று தமிழ் நாட்டை ஆளும் தான் ஒரு பச்சைத் திராவிடன் என்று பறைசாற்றும் கருணாநிதியோ தனது சுய லாபத்திற்கும் குறிப்பாக தனது குடும்பத்தை எப்படி அடுத்த பல நூறாண்டுகள் இந்தியாவை ஆளும் வர்க்கமாக ஆக்க வேண்டும் என்று இந்த தள்ளாடும் வயதிலும் போராடும் கருணாநிதியே சிந்திக்கும் போது எப்படி பாமர தமிழ் நாட்டு மக்கள் அவர்கள் இனம் பற்றி சிந்தித்து செயலாற்றுவார்கள் என்பது தான் இப்பொழுது எழும் கேள்வி. இருப்பினும் இந்த மக்கள் குறுகிய வட்டத்திற்குள் இருந்து வெளியே வந்து செயலாற்றுவார்களேயானால் இப்படியான சுயநலவாதிகள் நிச்சயம் மக்களால் இனம் காணப்படுவார்கள்.

ஆக இவைகள் அனைத்துக்கும் ஒரே வழி அமைதி வழியில் உருவாகும் மாபெரும் எழுச்சியே.ஈழத் தமிழர்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆயுத வழியில் போராடி பல இன்னல்களை சந்தித்தவேளை தமிழ் நாட்டு மக்களோ தாமும் தமது குடும்பமும் என்றே வாழ்க்கையை நடத்திவந்தார்கள். சில நூறு தமிழ் நாட்டு மக்களைத் தவிர மற்றவர்கள் சுய லாபத்திற்காக ஈழத்தமிழரின் விடுதலைப் பயணத்தைக் கையாண்டார்கள். வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்களிடம் ஈழத் தமிழரின் உண்மையான பிரச்சனை எடுத்துச் செல்லப்படவில்லை.

உண்மையிலையே ஈழத் தமிழரின் துன்பத்தை ஒவ்வொரு சந்து பொந்துகளுக்கும் தமிழ் நாட்டில் எடுத்துச் செல்லப்பட்டிருக்குமாயின் நிச்சயம் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழரையும் தமிழருக்கு என்ற ஒரு தனியான நாடு அமைய வேண்டும் என்ற தாகத்துடன் ஈழம் காணப் புறப்பட்ட முப்பதினாயிரத்துக்கும் அதிகமான தமிழ் இளைஞரையும் காப்பாற்றி இருந்திருக்கலாம். பல சுயநலவாதிகள் இவைகளைச் செய்யாமல் தமது வளர்ச்சியிலையே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

ஒரு சோறு சாண் வயிற்றிற்காக ஏங்கித் தவிக்கும் தமிழ் நாட்டுத் தமிழர் நிச்சயம் ஒரு புரட்சி கொண்டவர்களாக இந்தியாவையே ஸ்தம்பிக்க வைத்து இந்திய நடுவண் அரசையும் ஏன் முழு உலகையும் ஈழம் பால் கவர்ந்து சிறிலங்காவின் கொடுங்கோல் தேசத்தை பயங்கரவாதிகளாகக் காட்டியிருக்க முடியும். ஆனால் நடந்தது என்ன? இவர்களின் சோம்பேறித்தனமும் தமது அன்றாட வாழ்க்கையிலும் பாழாய்ப் போன திரையுலகமும் இந்த மக்களை முடமாக்கி இன்று தமிழன் பல இன்னல்களை பல நாடுகளில் சந்தித்து கொண்டுள்ளான். ஏன், இந்தியாவிற்குள் இருக்கும் தமிழனுக்கே பாதுகாப்பில்லை. இவைகள் அனைத்துக்கும் ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்றால் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் ஓன்று திரண்டு புரட்சி நடாத்தினால் பல மாற்றங்களை காண முடியும்.

யார் உண்மையான பயங்கரவாதிகள்?

யார் உண்மையான பயங்கரவாதிகள் என்று உலகறியச் செய்ய உலகத் தமிழரினால் முடியும். ஏழு கோடி இந்தியாவில் வாழும் தமிழர் தார்மிக ஆதரவை நல்கி அவர்களின் அன்றாட குடும்பத்தை மட்டும் எண்ணாமல் சமுக நீரோட்டத்தில் இணைந்து செயலாற்ற முன்வந்து ஒரு குடையின் கீழ் ஓன்று படுவார்களேயானால் நிச்சயம் சிறிலங்காவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியும்.

அத்துடன் பிற நாடுகளில் வதியும் தமிழரும் தமது வசம் இருக்கும் அனைத்து வளங்களையும் ஒன்றிணைப்பார்களேயானால் நிச்சயம் இதனைச் செய்து காட்ட முடியும். புலம்பெயர்ந்து வாழும் தமிழர் எந்தப் பிரிவுமில்லாமல் ஒரே கொள்கையுடன் பயணிப்பார்களேயானால் இதனைச் செய்ய முடியும். இப்பொழுது முன் எப்பொழுதும் இல்லாதவாறு எமக்கு பல உண்மைச் சான்றுகள் உண்டு. அத்துடன் உலக நீதிமன்ற நீதிபதிகளை மற்றும் புத்திசீவிகளை நாடி சிறிலங்காவை கூண்டில் ஏற்றி சிறிலங்காவை பயங்கரவாத நாடாக அறிவிக்க அனைத்து வளமும் தமிழர் வசம் உண்டு.

புலம்பெயர் தமிழர் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட தமிழ் நாட்டில் வாழும் ஏழு கோடி மக்களும் இந்த கொள்கையுடன் தமிழ் நாட்டின் தலைநகராம் சென்னையை எப்படி ஒரு பூகம்பம் வந்து அதிரவைக்குமோ அதைப்போன்ற பல மனித பூகம்பங்களை சென்னையில் உருவாக்கினால் புது டெல்லியையும் அது அதிர வைக்கும் என்பது மட்டும் உண்மை. எப்படி மேற்கு வங்காள மக்களின் ஆதரவுடன் வங்காளதேசம் என்ற நாடு இந்தியாவினால் உருவாக்கிக் கொடுக்கப்பட்டதோ அதைவிடப் பல மடங்கு தமிழ் மக்கள் எழுச்சியுடன் இந்தியாவின் மத்திய சர்க்காரை ஆடவைக்க முடியும்.

முதற்கட்டமாக சிறிலங்காவை இராசதந்திர வழியில் பணிய வைத்து எப்படி உண்மையான விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக பல உலக நாடுகளினால் அறிவிக்கப்பட்டு தமிழரின் விடுதலையில் ஒரு பின்நகர்வை இரண்டு கோடி சிங்கள மக்களை தன்னகத்தே வைத்து தமிழரை அடிபணிய வைக்கும் போக்குடைய ஒரு சிறிய தீவான சிறிலங்காவினால் செய்ய முடியுமென்றால் ஏறத்தாழ எட்டுக் கோடி மக்களைக் கொண்ட தமிழர்களினால் சிறிலங்காவை அரச பயங்கரவாத தேசமாக அறிவித்து தமிழரின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழ் ஈழ தனியரசை நிறுவ எப்படி முடியாமல் போகும்? சிறிலங்கா செய்து முடித்திருப்பதாக அறிவித்திருக்கும் ஈழப் போர் ஒரு இனத்தின் அனைத்து வளர்ச்சியையும் தடை போடும் என்பது தான் உண்மை.

தமிழருக்கு ஒரு நாடு உருவாகினால் அதன் பலனை தமிழ் நாட்டில் இருக்கும் பல கோடி மக்கள் அனுபவிப்பார்கள் என்பது தான் உண்மை. அதனிலும் மேலாக அவர்களின் அடையாளத்தை உலக அளவில் எடுத்தியம்பி தமிழரின் தொன்மையான வாழ்வியலை பிற இனத்தினரும் அறிய வழி வகுக்கும் என்பது தான் உண்மை. மேலும் சோழன் ஏற்றிய புலிக்கொடியை உலக அரங்கில் இந்த நூற்றண்டிலேயே நாம் பார்க்கும் பலன் கிடைக்கும் என்பதை பல தமிழர் அறிந்தும் அறியாமலும் உள்ளார்கள்.

சோழன் என்றால் யார் என்று கேட்பவர்களும் தமிழர்களுக்கும் புலிக்கொடிக்கும் என்ன உறவு என்று கொக்கரிப்பவர்களும் தமிழருக்குள்ளேயே இருக்கின்றார்கள் என்பது தான் உண்மை.தமிழர்கள் முன் இப்பொழுது இருக்கும் வேள்வி என்னவென்றால் நான் பெரிது நீ பெரிது என்று எண்ணாமல் அனைத்துத் தமிழரும் ஒன்றாக இணைந்து காலத்திலும் புலத்திலும் கைகோர்த்து அமைதி வழியில் பல நடவடிக்கைகளை எடுத்து சிறிலங்காவை சட்டக்கூண்டில் ஏற்றி உலக வரைமுறையின் கீழ் எப்படி ஒரு இனச்சுத்திகரிப்பு ருவாண்டாவில் நிகழ்ந்ததோ அதைப் போன்ற ஒரு நிலை சிங்களத் தேசத்தினால் கட்டவீழ்த்தி விடப்பட்டு ஈழத் தமிழினம் அழிக்கப்பட்டது என்பது தான் உண்மை. இதனை மனதில் நிலைநிறுத்தி அனைத்துத் தமிழரும் தம்மால் முடிந்த வழிகளில் போராட்டங்களை முன்னெடுத்து சிறிலங்காவை பயங்கரவாத நாடாகப் பிரகடனப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்பது தான் பேரவா.

தமிழர் அனைவரும் ஒன்றை மட்டும் மனதில் நிலை நிறுத்தி செயல்பட வேண்டும். அதாவது கிரேக்க தேசத்து மன்னன் அலெக்ஸ்சாண்டர் உலகையே தன் வசம் கொண்டு வரவேண்டும் என்ற ஆசையுடன் பல ஆயிரம் வீரர்களுடன் குதிரைப் படையின் அணிவகுப்புடன் மேற்கு ஆசியா ஊடாக இன்றைய பாகிஸ்தான் வரை சென்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா தான் முழு உலகம் என்ற சிந்தனையுடன் சென்று போருஸ் என்ற இந்திய மன்னனின் யானைப் படையின் வீரமிகு போரின் ஊடாக தோற்கடிக்கப்பட்டார்.

அலெக்ஸ்சாண்டர் தனது ஈரானிய மனைவியின் தலையீட்டின் ஊடாக போருஸ் தான் தோல்வியை தழுவியதாகவும் அலெக்ஸ்சாண்டர் வெற்றியாளனாகவும் பிரகடனப்படுத்தப்பட்டார். பின்னர் தனது இளம் வயதிலையே மரணிக்க அவரின் பணியாளர்களிடம் அவர் சொல்லி விட்டுச் சென்ற வார்த்தைகள் மட்டும் இன்றும் பொன் எழுத்துக்களால் பதியப்பட்டவை. அதாவது அவர் கூறிய வார்த்தையில் ஓன்று என்னவென்றால் ‘தனது உடல் சுமந்த பெட்டியை தாயகம் எடுத்துச் செல்லும் பொழுது தனது இரு கைகளையும் சவப்பெட்டியினூடாக வெளியே தெரியும்படி விட்டுச்செல்லும்படி’.

அந்த பாதையினூடாக வந்தது அந்தத் தேசங்களைக் கைப்பற்றி ஆள, பின்னர் தனது இறப்பின் பின்னர் எடுத்துச் செல்வது ஒன்றுமில்லை என்பது தான் இதன் பொருள்.ஆக எப்படி அலெக்ஸ்சாண்டரின் இறுதி வார்த்தைகள் உண்மையானதோ அதை மீண்டும் உள்வாங்கி நாம் நமது என்று எண்ணாமல் நாம் தமிழர் என்று எண்ணி செயல்படுவோமேயானால் பல வெற்றிகளை நாம் சாதிக்க முடியும். தமிழருக்கு நேர்ந்த துயரை மற்ற இன மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களின் ஆதரவுடன் போர்க்காலத்திலும் பார்க்க இப்பொழுது நாம் பல வேலைத்திட்டங்களை இராசதந்திர ரீதியாக செய்ய வேண்டும்.

உலகில் உள்ள ஏறத்தாழ எட்டுக்கொடி தமிழ் மக்களும் ஒரே கொள்கையுடன் வெளி வருவார்களேயானால் நிச்சயம் புலிக் கொடி ஐக்கிய நாடுகள் சபை முன் ஏற்றப்படும். தமிழரின் இரத்தத்தை ஆறு போல் ஓட வைத்து ரசித்த சிறிலங்காவை கூண்டில் நிறுத்தி உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை உலகறியச் செய்து தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம் என்ற பல கால வேட்கையை நிலைநாட்ட உலகத் தமிழரினால் நிச்சயம் முடியும்.

அனலை நிதிஸ் ச. குமாரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*