TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தேர்தல் வாக்கொன்றின் விலை ஐம்பது சதம்

ஏழாவது பாராளுமன்றத்தைத் தீர்மானிப்பதற்கான பொதுத் தேர்தலுக்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிற நாட்களிடையே புதிய புதிய செய்திகள்,புதிய புதிய வாக்குறுதிகள் வெளிவந்து கொண்டிராமலுமில்லை.வாக்குறுதிகளே தேர்தல் விஞ்ஞாபனங்களாக மாறுகின்ற அளவுக்கு சமகாலத் தேர்தல்களின் முன்னோடி நிகழ்ச்சி நிரல்கள் அமைந்துள்ளமை அறிந்ததே.

இந்த நிலையில் விலை மதிக்க முடியாத தேருநர் ஒருவரின் வாக்கு அதிகூடுதலான விருப்பு வாக்குகளை அல்லது வெற்றி பெறத்தக்கதான வாக்குப்பிரதியைப் பெற்று கொள்ள வேண்டுமென்பதற்காக விலை பேசப்படுகின்ற அநாகரிக நிகழ்வுகள் சமகாலத்தில் நடவாமலுமில்லை.அற்புதம் என்னவென்றால் ஜனநாயகம் விலைபேசப்படுவது போன்று ஒவ்வொரு வாக்குக்கும் சட்டப்படியான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமையாகும்.அதாவது கட்சிகள் தாங்கள் கடந்த தேர்தலில்,பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கமைய(அதே கட்சி,அதே சின்னத்தில் இந்தத் தடவையும் போட்டியிட்டால்)தேர்தல் செயலகத்திடமிருந்து பணம் பெற்றுக் கொள்ளும் (ஒரு வாக்குக்கு 50 சதம்) உரித்துடையவையாகின்றன.

பாராளுமன்றத் தேர்தல் சட்டம் கட்சிகளுக்கு அரசு உதவியளித்தல்

பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் படி ஒரு அரசியல் கட்சி ஒரு பொதுத் தேர்தலின் போது பெறக்கூடிய ஒவ்வொரு வாக்குக்கும் பணம் பெற்றுக் கொள்ளக்கூடியவாறு ஏற்பாடுகள் உண்டு.ஒரு புதிய தேர்தலை,கடந்த தேர்தலில் போட்டியிட்டவாறு அதே கட்சி,அதே சின்னத்தின் கீழ் போட்டியிடுகையிலேயே பணம் பெறும் வாய்ப்புக் கிடைக்கின்றது.

பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 127 வது உறுப்புரை கூறுவதாவது:

பொதுத்தேர்தலொன்று தொடர்பாக அரசியல்கட்சி ஒவ்வொன்றும் மானியக்கொடையொன்று என்னும் வகையாக அரசிடமிருந்து நிதியுதவி பெறுவதற்கு உரித்துக் கொண்டுள்ளது.இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் நடத்தப்படும் முதலாவது பொதுத்தேர்தல் தொடர்பில் 1977ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அந்தப் பொதுத்தேர்தலில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளின் மொத்தத் தொகையின் 1%க்குக் குறையாத வாக்குகளைப் பெற்ற ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முதலாவது கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும் உரிமைக்குள்ளாகின்றது.

50 சதமும் மானியக்கொடைக்கான தகைமையும்:

மானியக்கொடையானது,தேர்தல் மாவட்டமொன்று தொடர்பில் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு நேர் முன்பதான கடைசிப்பொதுத் தேர்தலில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளின் மொத்தத் தொகையின் 1%க்குக் குறையாத வாக்குகள் கிடைத்திருந்ததுடன் எப்பொதுத் தேர்தல் தொடர்பாக அத்தகைய மானியக் கொடை செலுத்தப்படவேண்டியுள்ளதோ அப்பொதுத் தேர்தல் தொடர்பாக குறித்த மாவட்டம் சார்பில் ஒரு வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தால் மானியக்கொடை உரித்தாகின்றது.

முன்காணுவது போன்று தகைமை பெறும் ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியும் அத்தகைய கட்சியின் செயலாளரால் மானியக் கொடைக்கென ஆணையாளருக்கு விண்ணப்பம் செய்யப்படுவதன் பேரில் கடைசியாக இடம்பெற்ற பொதுத்தேர்தலில் குறித்த மாவட்டத்தில்,அத்தகைய கட்சியினால் பெறப்பட்ட வாக்கொன்றுக்கு ஐம்பது சதம் எனும் வீதத்தில் கணக்கிடப்பட்ட பணத்தொகையொன்றைப் பெறுவதற்கு உரித்துடையதாதல் வேண்டும்.

இத்தகைய கொடுப்பனவுகள் ஒவ்வொன்றும் வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்யும் காலப்பகுதியின் கடைசிநாளிலிருந்து 10 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் அலுவலக முறையான வங்கிக் கணக்குக்கு செலுத்தப்படுதல் வேண்டும் மானியக்கொடைக் கொடுப்பனவு தொடர்பாக ஏதேனும் பிணக்கு எழுமிடத்து அத்தகைய பிணக்கை ஆணையாளருக்கு ஆற்றுப்படுத்தல் வேண்டும்.அதன் மீதான அவரது முடிவு இறுதியானதாக அமையும்.

இந்த வகையில் 1977ம் ஆண்டு ஜூலையில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சி கைச்சின்னத்திலும் ஐ.தே.க யானைச்சின்னத்திலும் போட்டியிட்டன.1981 ம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின்படி,குறித்த இவ்விருகட்சிகளும் 77ல் பெற்றுக்கொண்ட செல்லுபடியான மொத்தவாக்குகளுக்கு ஏற்ப மானியக்கொடைக்கு உரித்தாயிருக்க வேண்டும்.அவ்வுரித்தை அவ்விரு கட்சிகளும் அடுத்த பொதுத்தேர்தல் நடைபெற்ற 1989 இல் பெற்றுக்கொண்டனவா என்பது தெரியவரவில்லை.1989 இல் பின்னடைந்து காணப்பட்ட சுதந்திரக்கட்சி அல்லது 77 முதல் ஆட்சியில் இருந்துவந்ததான ஐ.தே.க. பெற்றுக்கொண்டமைக்கான தகவல்களை அறியமுடியவில்லை.

எவ்வாறாயினும் 1989 இல் சுதந்திரக்கட்சி பெற்றிருக்கக் கூடிய செல்லுபடியான மொத்த வாக்குகளின் அடிப்படையில் 1994 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தலின்போது மானியக்கொடை பெற்றிருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் 89 இல் போட்டிபோட்ட சுதந்திரக்கட்சி மீண்டும் 94 இல் கைச்சின்னத்திலோ சுதந்திரக்கட்சி என்ற பெயரிலோவன்றி கதிரைச்சின்னத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற பெயரில் போட்டியிட்டிருந்தமையேயாகும்.ஆனால் முறையே 94 இல் பெற்றிருந்த வாக்குகளுக்கு 2000 ம் ஆண்டிலும் 2000ம் ஆண்டில் கிடைக்கப்பெற்றிருந்த வாக்குகளுக்கு 2001ம் ஆண்டிலும் பணம் பெறக்கூடியதாக பொ.ஐ.முன்னணிக்கிருந்த வாய்ப்பு 2004ல் இருந்திருக்காது.ஏனெனில் 2004 இல் பொ.ஐ.முன்னணி என்ற நாமம்ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு என்றும் கதிரைச்சின்னம் வெற்றிலைச்சின்னமாக மாறியமையுமாகும்.பொதுத்தேர்தல்களையும் ஐ.தே.க.வையும் பொறுத்தவரை 77,89,94,2000,2001 களில் யானைச்சின்னத்திலேயே போட்டியிட்டு வந்ததால் மானியத்துக்கான வாய்ப்பு தொடர்ச்சியாக இருந்திருக்கும்.

எது எவ்வாறிருந்த போதிலும் 2004 இல் ஆளும் கூட்டமைப்பு வெற்றிலைச் சின்னத்திலும் ஐ.தே.க.யானைச் சின்னத்திலும் போட்டியிட்டன. அதேபோன்று எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் இவ்விரு கட்சிகளும் அதே நாமங்களில் அதே சின்னங்களில் போட்டியிடுகின்றமையால்2004 இல் தத்தமது கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட செல்லுபடியான மொத்த வாக்குகளின் அடிப்படையில் ஆளும் கூட்டமைப்பும் ஐ.தே.க.வும் அரசின் சகாயத்தை தேர்தல் திணைக்களத்திடம் கோரும் உரித்துடையவையாகின்றன.

எவ்வாறாயினும், கடந்த 2004 பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டதால் ஜே.வி.பி.யால் இந்த மானியக் கொடுப்பனவுக்காக விண்ணப்பிக்க முடியாது.தற்போதும் கூட சின்னத்தைக் கைவிட்டு புதிய முன்னணியமைத்து கிண்ணச் சின்னத்தில் போட்டிபோடுகின்றமை தெரிந்ததே!

தேர்தல் திணைக்களத்தின் ஆலோசகர் கடந்த பொதுத் தேர்தலில் ஒரு அரசியல் கட்சியால் பெறப்பட்ட ஒவ்வொரு வாக்குகளுக்கும் ஐம்பது சதம் வீதம் பாராளுமன்றச் சட்டத்துக்கமைய விண்ணப்பிக்கப்படுமிடத்து செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த 2004 பொதுத் தேர்தலில் ஆளும் கூட்டமைப்பு 4,223,970 வாக்குகளையும் ஐ.தே.க. 3,5042,00 வாக்குகளையும் பெற்றிருந்ததன் பிரகாரம் ஐ.ம.சு.கூட்டமைப்பு இருபத்தொரு இலட்சத்து பதினோராயிரத்து தொளாயிரத்து எண்பத்தைந்து ரூபாவுக்கும் ஐ.தே.க. பதினேழு இலட்சத்து ஐம்பத்திரெண்டாயிரத்து நூறு ரூபாவுக்கும் உரித்தாகின்றன.

ஐ.தே.க. இந்தத் தடவை குறித்த மானியத் தொகையை பெற்றுக்கொள்வதற்காக எழுத்துமூலம் அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் திணைக்களத்திடம் பணம் கோரியிருப்பது இதுவே முதல் தடவை என்றும் தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் செயற்பாடுகளுக்காகவே பணம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதேவேளை, குறித்த சகாய நிதியை பெற்றுக் கொள்வதில்லை என ஐ.ம.சு.கூ. தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கு முன்னர் கட்சி இத்தகைய நிதிக்காக ஒருபோதும் விண்ணப்பித்ததில்லை எனவும், இந்தத் தடவையும் அத்தகைய நோக்கம் கிடையாது என்றும் கட்சியின் குரல் தரவல்ல அதிகாரியொருவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காசுகளுடன் உருண்டு புரளுகின்ற கூட்டமைப்புக்கு பணப் பற்றாக்குறை நிலவவில்லை என்றாலும் வரியிறுப்பாளர்களின் பங்களிப்புடனேயே தேர்தல்கள் நடத்தப்படுகின்றன என்ற உண்மைக்கு அப்பால் அளிக்கப்படுகின்ற ஒவ்வொரு வாக்குக்கும் பொது மகனும் பணம் செலுத்த வேண்டியுள்ளது என்பது சுவாரஷ்யத்தையும் ஒரு புறம் சோர்வையும் உண்டுபண்ணுகிறது. எல்லாவற்றையும் விட கவலையளிப்பதுஇலங்கையில் ஒரு வாக்கின் பெறுமதி ஐம்பது சதம் மாத்திரமே என்ற உணர்வாகும்.

பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின்படி வாக்குகளை கணக்கிட்டு பணம் வழங்குவது எவ்வாறிருப்பினும் இலங்கையில் தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு ஸ்திரமான ஜனநாயக கலாசாரம் ஆகியன இல்லாதவிடத்து செல்வாக்கு இழந்திருக்கக்கூடிய ஒரு அரசாங்கம் தோல்வியடையும் சாத்தியம் உள்ள போதிலும், எதிர்க்கட்சி வெற்றிபெறுவது அசாத்தியமாகவேயுள்ளது.

உடைவுக்குள்ளாகாத 17 ஆண்டுகால ஆட்சியானது ஜே.வி.பி. கலகம் காரணமாக 8789 காலப்பகுதியில் ஏற்பட்ட விளைவுகள், ஐ.தே.க. வை சுற்றியிருந்த சாதகமற்ற சூழ்நிலைகள், பல்வேறுபட்ட கொலைகள் போன்றன காரணமாக 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தோல்விக்குள்ளானது.

யுத்தத்தைத் தவறாக முகாமைத்துவம் செய்தமை, ஒவ்வாத சில பொருளாதார கொள்கைகள், ஒட்டு மொத்த நல்லாட்சிக்குக் குந்தகமான செயற்பாடுகள் 2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், சு.க. தலைமையிலான பொ.ஐ.மு. கூட்டினை தோல்வியடையச் செய்தன.

ஆடுகளம் கோணலாகவும் ஒரு பக்கம் சரிவாகவும் காணப்படுவதானால், எதிர்க்கட்சிகளால் தேர்தல்களை வெல்ல முடியாதுள்ளது. எதிர்க்கட்சிகளை தகர்த்தெறிவதற்காக கொழுத்தளவில் அரச வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய நடவடிக்கைகளில் ஏதேனும் பிழைகள் இருப்பதாக எண்ணும் அளவுக்கு வாக்காளர்களுக்கு எதுவும் தென்படுவதாகவும் தெரியவில்லை. இலங்கையில் தேர்தல்கள் ஏனைய நாடுகள் சிலவற்றிலும் இருப்பது போன்று முழுமையான ஜனநாயக பாரம்பரியங்களைக் கொண்டுள்ளதாக கூறுவதற்கில்லை.

பாடப் புத்தகங்களில் காணப்படுவதுபோன்று கொள்கை கோட்பாடுகளைக் கொண்டமைந்ததான போட்டியல்ல தேர்தல்கள், பிரபுத்துவ வாரிசுரிமைக்கான புதிய மாதிரிகளாயமைந்துவிட்ட தேர்தல் முன்னகர்வுகள் காலம் செல்லச் செல்ல தேர்தல்கள் மீதான பொதுவான நம்பிக்கையை சிதறடிக்கச் செய்துவிடலாம்.

கட்டுரையாளர் சுயாதீன தேசிய முன்னணியின் தலைவரும் சட்டத்தரணியுமாவார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*