TamilSpy

பொழுது போக்கு இணையம்…

“எங்கள் போற்றுதல் நடிப்பா இல்லை நிஜமா?”

மாவீரர் துயிலகங்களை – தூபிகளை அழித்து, மண்ணையும் கிளறி, எலும்புகளையும் குப்பையில் கொட்டும் சிங்களபேரினவாதம்

* இலங்கை அரசாங்கம் மாவீரர் துயிலகங்களையும், தூபிகளையும் இடித்துத் தரைமட்டமாக்கும் மனிதாயத்திற்கு எதிரான குற்றச்செயலை தன் அரசியற் செயற்திட்டமாகப் பகிரங்கமாக நிறைவேற்றி வருவதைத் தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெளிவாக்குகின்றன.

புலம்பெயர் தமிழினமே!

துடித்தெழாது துவண்டிருப்பதேன்?

தமிழகமே!

உலகத் தமிழினமே! உங்கள் இன உணர்வும் மௌனமானதேன்?

தமிழர் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டுத் திரண்டெழுந்தாலே இதனத் தடுக்கலாம்!

மாவீரர்கள் விதைக்கப்பட்ட இடங்களைக் கிளறி அவர்களின் எலும்புகளைக் கூட அள்ளிக் குப்பையில் கொட்டும் ஈனத்தமான செயலில் சிங்களம் இறங்கியுள்ளது.

தியாகி திலீபனின் நினைவுத்தூபியை மண்ணோடு மண்ணாக்கிய மகிந்தவின் காடையர்கள் அதனுடன் நிற்காது அங்கிருந்து 300 யார் தூரத்தில் உள்ள குப்பைத் தொட்டிக்குள் தூக்கி வீசித் தங்களின் இனவெறித்தனத்தை மேலும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறாகத் தமிழர்கள் மலர்தூவி வழிபடும் மாவீர்களின் துயிலகங்களையும், தூபிகளையும் அழித்தொழிக்கும் மனித வரலாறே வெட்கப்படும் செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், புலம்பெயர் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் இது குறித்துப் பெரிய அளவில் எந்தவிதமான கண்டனங்களையோ ஆர்ப்பாட்டங்களையோ செய்யாமல் இருப்பது இந்த வரலாற்றுத்துடைப்பு முயற்சிக்கு மௌன அங்கீகாரம் வழங்கும் வேதனைச் செயலாக உள்ளது.

யார் இந்த மாவீர்கள்?

* தமிழர் வாழத் தம் இன்னுயிரை ஈகம் செய்த தியாகிகள். நான் சாகலாம். நீங்கள் சாகலாம். ஆனால் நாங்கள் சாகக்கூடாது என்று தமிழினமாகத் தம்மையே மாற்றிய தமிழ் வீரர்கள். மானம் என்பது உயிரினும் மேலானது என்ற வள்ளுவன் வாக்கில் எழுந்த தமிழ்த்தேசியத்தின் உறுதிமொழிக்காகத் தம் இன்னுயிரையே அர்ப்பணித்த தமிழின மாணிக்கங்கள். மரணமில்லாத மனித குலம் ஒன்று இந்த மண்ணில் தோன்ற வேண்டும் என்ற இன்றையக் கவிஞனின் கூற்றுக்கு பொருளானாவர்கள். நாளும் பொழுதும் அவர்கள் புகழ் பாடும் தமிழினம் இன்று அவர்கள் துயிலகங்கள் நொறுக்கப்பட்டு அவர்கள் வித்துடல்களின் வேர்களான எலும்புகள் கூடச் சிங்களத்தால் கிளறி அள்ளிக் குப்பையில் கொட்டப்படும் நேரத்தில் என்ன செய்கின்றது?

மீண்டும் அந்த மண் மீட்கப்படும். அதே துயிலும் இல்லங்கள் மீண்டும் நிறுவப்படும். அவை மத வேறுபாடற்ற, சாதி வேறுபாடற்ற, கோயில்களாகும். மறைந்த போராளிகளின் உயிர்கள் அந்தக் கோயில் தெய்வங்களாகும்.

எம்முடனேயே பிறந்து – எம்முடனேயே வாழ்ந்து – எமக்காவே உயிர் கொடுத்தவர்கள் அவர்கள். அப்படிப் பட்டவர்களை தமிழ் மக்கள் ஒருபோதும் தமது இதயத்தில் இருந்து அகற்றி வி;ட முடியாது.

மாவீர்களைப் போற்றிய உங்கள் உள்ளங்கள் அவர்களின் தூபிகள் நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டு குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும்பொழுது உருகாதிருப்பதென்ன?

நாலுவார்த்தை நானிலத்திற்கு இந்தக் கொடுமை குறித்துப் பேசாமல் இருப்பதென்ன?
தமிழினமே!

உன் போற்றுதல் நடிப்பா இல்லை நிஜமா?

நீ பதில் சொல்ல வேண்டிய நேரமிது?

ஐக்கிய நாடுகளின் சாசனங்கள் மனித வரலாற்றின் பாரம்பரியத்தின் சின்னங்கள் பேணப்படல் வேண்டுமென வைத்துள்ள சர்வதேசச் சட்டங்கள் கூடத் தமிழனாகப் பிறந்த உனக்கு இல்லையா

அனைத்துலகிலும் அறிஞரென்றும் சட்டத்தரணிகள் என்றும் வைத்தியர்கள் என்றும் பொறியியலாளர் என்றும் வலம் வரும் தமிழினமே!

உந்தன் இனமானம் களைந்தெறியப்பட்டு உனக்காக உயிர் தந்த உத்தமர்கள் என்பு கூட குப்பைப் பொருளாக அள்ளிக் கொட்டப்படுகையிலே உன் தமிழ் இரத்தம் துடியாதிருப்பதென்ன?
புலம் பெயர் நாடுகளில் அலைஅலையாக மாவீரர் நாளில் எழுகின்ற மக்கள் பெருவெள்ளமே! உன் குரல் கூட இந்த ஈனச் செயல் குறித்து எழாதிருப்பதென்ன?

தமிழகத்தின் பத்துக்கோடி தமிழர்களே! தமிழின நல்வாழ்வு வேண்டி தன்னையே தந்தவர்கள் வித்துடல்களைக் கூடப் பாதுகாக்க இயலாத கையாலாகாத கூட்டமா தமிழன் என்ற கேள்விக்கு என்ன பதில்

கட்சி பேதங்களை மறந்து நாட்டெல்லைப் பிரிப்புக்களைக் கடந்து தமிழர்கள் ஒன்றாகி ஓங்கி இந்த மனிதக் கொடுமையை உலகுக்கும் தமிழர் வாழும் நாடுகளின் அரசுக்களுக்கும் ஓங்கிச் சொல்ல வேண்டிய நேரத்தில் இன்னுமேன் தாமதம்?

சுத்த வீரனுக்கு மரணம் ஒரு மலர்ச் செண்டு என்று தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் முழக்கமிட்ட தமிழகத்தின் முதலமைச்சர் அவர்களே!

இன்று சிங்களம் குப்பையாய்த் தமிழ் வீரமைந்தர்களை அள்ளி வீசி தமிழினத்தின் வீரவரலாறு கூட உலகவரலாற்றில் இருந்து மறைக்கப்படல் வேண்டும் என்னும் வேகம் கொண்டு நிற்கையிலே உங்கள் குரல் கூட எழாமல் போனது ஏன்?

ஐரோப்பிய கனடிய அவுஸ்திரேலியப் பாராளுமன்றத் தலைமைகளுடன் நிழற்படம் எடுத்து புலம்பெயர் மக்களிடம் தாயக மக்களுக்கு உலகின் ஆதரவை வென்று வருகிறோம் என நம்பிக்கை மொழி கூறும் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்!

* ‘வித்துடலைக் கூடச் சிங்களம் அள்ளி வீசும் மனிதாயமே வெட்கித்தலைகுனியும் இந்தச் செயற்பாடு குறித்து சர்வதேச நண்பர்களிடம் எடுத்துக் கூறி இது குறித்த அவர்களின் கருத்துக்களைப் பகிரங்கமாகப் பெற்றுத் தாருங்கள்.

புலத்து தமிழனே!

தங்கள் கிட்டிய குடும்ப உறுப்பினர்களைத் தமிழினத்தின் நல்வாழ்வுக்காக மாவீரர்களாகத் தந்த குடும்பங்களின் உறுப்பினர்கள் இந்த ஈனச்செயல் குறித்து நீயும் நானும் மௌனமாக இருப்பது கண்டு எத்தனை வேதனையுறுவார்கள் என்பதையாவது எண்ணிப்பார்த்தாயா?

அப்படியானால நீ வாழும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய இந்த மனிதாயமே வெட்கப்பட வேண்டிய செயலை உடனே பகிரங்கமாக்கு.

மனிதகுலத்தின் வரலாறுகள் நினைவுகள் பேணப்படல் வேண்டுமென்னும் சர்வதேச சட்டங்கள் அனைத்துலக மக்களுக்கும் உரியது என்றால் தமிழன் சர்வதேசக் குடிமகன் என்ற உரிமையும் அவனுக்கு இல்லையா என ஓங்கிக் குரல் எழுப்பு?

தமிழர்கள் உலகெங்கும் தங்கள் கருத்து நிலை வேறுபாடுகளை மறந்து திரண்டு எழுந்தால் தான் மனிதாயத்திற்கு எதிரான இலங்கையின் இந்தக் குற்றச் செயலை தடுத்து நிறுத்தலாம்.

தமிழர்களே! விழித்து எழுங்கள்! உடனே செயற்படுவோம்.

* காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை கல்லறை அல்ல உயிர் உள்ளவர் பாசறை….

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*