TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ரெஜிக்கு இன்டர்போல் பிடியாணை, ஐ.நா

ரெஜிக்கு இன்டர்போல் பிடியாணை, ஐ.நா வளாகத்துக்குள் கிருபாகரனுக்கு கொலை அச்சுறுத்தல் எவரிடம் கேட்பது நீதி?.

தமிழர் புனர் வாழ்வு கழகத்தின் நிறைவேற்று பணிப்பளாராக இருந்த ரெஜியை தற்போது சர்வேதேச காவல் துறையினர் தேடி வருகின்றனர் ..

ஐ.நா வளாகத்திலேயே அண்மையில் தமிழர் மனித உரிமைக் கழகத்தின் செயலர் சிங்கள பேரினவாத அரசின் கைக் கூலிகளால் அச்சுறுத்தலுக்கும் அவமானகரமான சூழலுக்கும் உள்ளாக்கப் பட்ட சேதி தமிழ் இனத்துக்கே உலக அரங்கில் விடுக்கப்பட்ட மிரட்டலாகும். தமிழர் மனித உரிமைக் கழகத்தின் செயலர் திரு. வி. கிருபாகரன் தமிழ் மக்களின் மனித உரிமைக் குரலாக கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஐ.நா.வில் திகழ்ந்து வருபவர்.

அவர் அங்கு தமது தனிமனித தேவையின் நிமித்தம் செயற்பட்டு வந்தவர் அல்ல. ஒட்டு மொத்தத் தமிழினத்துக்கும் இழைக்கப் பட்டுவரும் அநீதிகளை உலக அரங்கில் தக்க புள்ளி விபர ஆதாரங்களுடன் சிங்கள அரசுக்கு எதிராகப் புட்டுப் புட்டு வைத்து சிங்களப் பேரினவாத அரசின் இனவெறி மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை வெளியிட்டு அரசின் முகத்திரைகளை அவ்வப்போது கிழித்து அம்பலப் படுத்தி வந்நவர்.

அவரது வலிமைமிகுந்த இத்தகைய நடவடிக்கைகளால் பல தடவைகள் அவமானமும் சங்கடமும் அடைந்த சிங்கள அரசு இப்பொழுது அவரின் உயிருக்கும் தன்மானத்துக்கும் சுய கௌரவத்துக்கும் ஆபத்தையும் ஊறையும் விளைவிக்கும் வகையில் செயற்பட இறங்கி உள்ளது. இலங்கை அரசின் புலிகளுக்கும் தமிழினத்துக்கும் எதிரான போராட்ட வடிவங்களில் ஒன்றுதான் தமிழ் புத்தி ஜீவிகளை அச்சுறுத்தியும் கொலை மிரட்டல் மற்றும் கடத்தல் கொலைகளினாலும் தமிழினத்தின் சகல உரிமைக் குரல்களையும் இல்லாமல் செய்து விடும் தந்திரம்.

இதனை திருவாளர்கள் யோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் மகேஸ்வரன் பேன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மாமனிதர் குமார் பொன்னம்பலம் மற்றும் சிறந்த உலகப் புகழ் பெற்ற இராணுவ மற்றும் போரியல் ஆய்வாளர் தராகி சிவராம் உள்ளிட்ட பதினேழுக்கும் மேற்பட்ட ஊடகவாளர்களின் அரச பயங்கரவாதப் படுகொலைகள் எமக்கு நினைவு படுத்துகின்றன.

தமிழரின் ஒற்றுமை இன்மையும் தூர நோக்கற்ற சிந்தனையும் இக் கொலைகள் பற்றிய சரியான கண்டனமோ எதிர்ப்பு நடவடிக்கையோ எடுக்காத மெத்தனத்தை வளர்த்து விட்டது. உண்மையில் இன்றும் கூட தமிழருக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளைச் சர்வ தேச அரசு சார்பற்ற தொண்டர் நிறுவனங்களான இன்னர் சிற்றிப் பிரஸ் மற்றும் ஐ.நா. உலக மனித உரிமைக் கழகங்கள் கண்டிக்கும் அளவுக்குக் கூடத் தமிழர் தரப்பு அமைப்புகள் மற்றும் தமிழர் தேசியக் கூட்டமைப்பும் செய்யவில்லை என்பதே கசப்பான உண்மைகளாக உள்ளன.

வேறு எந்த இனமும் தமிழ் இனம் போல் சூடு சுரணை அற்று இப்படி நடந்து கொள்வதில்லை. அதனால்தான் அந்த இனங்கள் தலை நிமிர்ந்து நடப்பது போல் எம்மால் தலை நிமிர்ந்து வாழ முடியாது போய்விட்டது.

எமது ஒற்றுமை இன்மை எம்மை மிகவும் இழி நிலைக்குத் தள்ளிவிட்டது. அராஜக முறையில் நடந்து கொள்ளும் சிங்கள அரசுக்கும் மக்களுக்கும் இத்தனை வன்மமும் மன ஓர்மமும் இருக்கும் போது அவற்றுக்கு முகம் கொடுக்கும் எமக்கு உறுதியான உண்மையும் நீதி நியாயம் போன்ற அறம் போன்ற நெறி முறைகள் இருந்தும் எதிர்த்துப் போராட இயலாது இருப்பது ஏன்? போராட்டம் என்றால் ஆயுத வழியும் புலிப் படையின் வீரம் மட்டும்தான் என்கிற குறுகிய மனப்பான்மையா எம்மிடம் வளர்த்து விடப் பட்டுள்ளது? ஏன் என்னை அடிக்கிறாய்? அல்லது நீ யார் என்னை அடிப்பதற்கு என்று கேள்வி கேட்பது கூட ஒரு போராட்ட வடிவம்தான்.

1905ல் யாழ்ப்பாண இளைஞர் மகாசபை தமிழருக்கு ஆட்சியில் அதிக பங்கு ணே;டும் என ஆங்கிலேய அரசைக் கேட்டதும் மகாத்மா காந்தி வல்லவாய் பட்டேல் பால கங்காதர திலகர் போன்ற இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை அழைத்து எமது விடுதலை குரலை எழுப்பியதே ஒரு போராட்டம்தான்.

1956ல் காலிமுகத் திடலில் சிங்களச் சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்துக்கு எதிரில் சத்தியாக்கிரகம் நடத்தியதும் பின்னர் 1961ல் தமிழரசுக்கட்சி தந்தை செல்வா தலைமையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சத்தியாக்கிரகம் சட்டமறுப்பு இயக்கம் நடத்தியதும் எமது இன விடுதலைப் போராட்டத்தின் வடிவங்கள்தான்.

* இன்று உலகமே எமது ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதம் என சிங்கள அரசுடன் இணைந்து அழித்து விட்ட நிலையில் திரு.கிருபாகரன் போன்றோரின் ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்ட போராட்ட வடிவங்களை உலக அரங்காகிய ஐ.நா. வளாகத்திலேயே சிங்களம் வலிந்து வம்புக்கு இழுக்கும்போது நம் இனம் சும்மா இருக்க முடியுமா? நாம் எமது ஒருங்கிணைந்த எதிர்ப்பை உலக அமைப்புகளுடன் அணிதிரண்டு உலக அரங்கில் முன்னெடுக்காது விடுவோமானால் எமது வட்டுக் கோட்டைத் தீர்மான வாக்கெடுப்புகளோ நாடு கடந்த அரசை அமைப்பதோ வெறும் கனவாகவே ஆகிவிடும் ஆபத்து உருவாகி விடும்.ஈழத் தமிழினத்தின் அரசியல் தலைமை தறிகெட்டு நிலைமாறித் தடுமாறித் திசைமாறிப் போய்க் கிடக்கிறது.

ஆயுதப் போராட்டம் ஆணி வேரற்று அறுந்து போய்க் கிடக்கிறது. அதனை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பல் வேறு கூறுகளாகிக் கூறுபட்டுத் தமிழினத்தின் அழிவை அம்பலப்படுத்தி நிற்கிறது.இந்நிலையில் உலகெங்கும் உள்ள தன்னார்வ தமிழர் அமைப்புகள் மட்டுமே தமிழ் இனத்தின் போராட்ட அமைப்புகளாகப் பணி ஆற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அதில் முதன்மையாகத் திகழும் தமிழர் மனித உரிமைக் கழகம் இன்று சிங்கள அரசின் தாக்குதலுக்கு இலக்காகி நிற்கிறது.

அதன் செயலர் திரு.கிருபாகரன் மீதான சிங்களத்தின் தாக்குதல் என்பது உலக அளவில் தமிழரின் இருப்புக்கும் உரிமைக் குரலுக்கும் விடுக்கப்பட்டுள்ள சவாலாகும் இதனை ஈழத் தமிழினம் சரியாகப் புரிந்து கொண்டு சர்வதேச அளவில் சிங்கள அரசை கண்டித்து சரியான பதிலடியை முன்னெடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாது இது கிருபாவுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல் எனக் கூறித் தமிழினம் எதுவும் செய்யாது தனது மெத்தனத்தனத்தை வளர்க்குமானால் தமிழினத்தின் விடுதலைப் போரின் இறுதிக் கட்டத்துக்கு நாமே சிங்களத்துக்கு வழி சமைத்தவர்களாகி விடுவோம் எனவே உலகில் உள்ள சகல தமிழர் அமைப்புகளும் ஏனைய சர்வதேச அமைப்புகளின் ஆதரவுடன் உலக அளவில் திரு கிருபாகரன் போன்றோரின் உயிருக்கும் சுய கௌரவத்துக்கும் பாதுகாப்பு தரவேண்டிய பொறுப்பைச் சர்வதேச சமூகத்துக்கு நினைவு படுத்தி அவர்களின் ஆதரவை பெற முன்வர வேண்டும். இதனைத் தமிழினம் செய்யுமா? அல்லது தனது இயலாமையைத் மெத்தனம் அல்லது மிதவாதம் எனக் கூறித் தப்பித்துக் கொள்ளுமா?

த. எதிர்மன்னசிங்கம்

Related Posts Plugin for WordPress, Blogger...
  • unnami thmilan says:

    டக்ளசுகளும், கருணாக்களும் எப்போதும் தமிழின துரோகிகள், அவ்வாறானவர்களை முதலில் தமிழ் தலைவர்கள் என்றுசொல்லுவதை நிறுத்துங்கள். பிரபாகரன் தமிழ் த(தொ)லைவர்களை கொலைசெய்தது இப்படியான
    Ex டக்ளசுகள்,Ex கருணைகள் மட்டுமே, இவ்வளவு இனப்படுகொலைக்கும் எதிரி மட்டும் காரணம் அல்ல துரோகிகளின் முக்கிய பங்கே ஆகும். தமிழன் தமிழனை அளிக்க நினைக்கும் போது , தண்டனை வழங்க பட்டே தீரும், அதற்கு பிரபாகரன் தேவையில்லை.

    April 3, 2010 at 15:17

Your email address will not be published. Required fields are marked *

*