TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழத் தமிழர் விடையத்தில் என்ன செய்யபோகிறது?

ஈழத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற போரின் இறுதிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் துணையுடன் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி மனிதாபிமானிகளினால் வரவேற்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்களோ பான் கீ மூனின் இந்த நடவடிக்கையினால் வெற்றி கொண்டாட முடியாது. காரணம் இந்த விசாரணைக் குழு எவ்வாறு இந்த விசாரணையை செய்து உண்மையான குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றும் என்பதைப் பொறுத்துத் தான் தமிழரின் வெற்றி தங்கியுள்ளது.

கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியே வந்துள்ளது. அத்துடன் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகவே கருதி அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். சிங்கள இராணுவக் காடையர்கள் பல ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்து தமிழினத்திற்கு சொல்லொணாத் துயரை விளைவித்த அரக்கர்களைப் பற்றி எதுவித கண்டனத்தையும் தெரிவிக்காமல் ஐக்கிய நாடுகள் சபை இருந்துள்ளது என்பது அவர்களின் கையாலாகத் தனத்தை உறுதிப்படுத்தியது.

ஐரோப்பியர்கள் பல அமைப்புக்களை உருவாக்கி அவைகளை உலக தர அமைப்புக்களாக உருவாக்கி தமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக கையாண்டார்கள். குறிப்பாக ‘லீக் ஒவ் நேசன்ஸ்’ என்ற அமைப்பை 42 நாடுகள் பங்களிப்புடன் உருவாக்கினார்கள். இந்த அமைப்பு முதலாம் உலகப் போர் முடிவடைந்தவுடனேயே ஆரம்பித்தார்கள். காரணம் இன்னுமொரு உலகப் போரைத் தவிர்ப்பதற்கு. ஆனால் இந்த அமைப்பினால் இரண்டாம் உலகப் போரை நிறுத்த முடியாமல் போய்விட்டது. அதன் விளைவே ஐக்கிய நாடுகள் சபை என்ற பெயருடன் அதன் முன்னய அமைப்புக்களின் அனுபவத்துடன் பயணிக்க ஆரம்பித்தது. குறிப்பாக உலக ஆதிக்க சக்தியாக அமெரிக்கா உயர்ந்தது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பிராங்க்ளின் ரூசெவேல்ட்டினால் 1942-ஆம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்ட பெயர் தான் ஐக்கிய நாடுகள் சபை. இந்த அமைப்பு 24 அக்டோபர் 1945 சட்டபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த அமைப்பு சில வல்லரசுகளின் கைப்பொம்மையாகவே இருந்து வந்துள்ளது. இந்த அமைப்பின் ஒரேயொரு பிரிவான சமூக, பொருளாதார அமைப்பு உலகின் பட்டி தொட்டியெல்லாம் சென்று வதைப்படும் மக்களுக்காக உதவி செய்கின்றார்கள். இதனால் ஐக்கிய நாடுகள் என்ற உலக அமைப்பின் பெயருக்கு நற்பெயர் பெற்றுத் தந்துள்ளது. மற்றும்படி ஐக்கிய நாடுகள் சபையினால் எந்த பலனும் உலக மக்களுக்கு இல்லை. குறிப்பாக அமெரிக்கா தலைமையில் சென்ற படைகள் இராக்கை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த பொழுது ஐ. நா சபை எதுவும் செய்யமுடியாமல் போய்விட்டது. ஆக ஐ.நா சபை அமெரிக்க வல்லாதிக்கத்தின் கைப்பொம்மையாக பாவிக்கப்பட்டது. ஈழத்தில் கொடுமை நடைபெற்று கொண்டிருந்த வேளை ஐ.நா சபை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

பான் கீ மூனின் இன்னொரு கண்துடைப்பு நாடகமா?

* புலம்பெயர் தமிழர் உலகம் அனைத்தும் அறவழிப் போராட்டத்தை முடக்கிவிட்ட வேளை வேறு வழியின்றி தமிழருக்கு இழைத்த கொடுமையை நேரில் பார்த்து நடவடிக்கை எடுப்பதென்ற ஒரு பாணியில் சிறிலங்கா சென்று வன்னியின் மயான பூமியை பார்வையிட்டார் பான் கீ மூன். இதில் வேடிக்கை என்னவென்றால் சிறிலங்காவின் மூத்த இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் அவருடன் சென்றார்கள். உலகைத் திசை திருப்ப வவுனியாவில் அடைத்து வைத்தவர்களை சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால் சிறிலங்கா அரசினால் சிறப்பாக போடப்பட்ட அகதி முகாமையே பான் கீ மூன் பார்க்க அனுமதிக்கப்பட்டார். நாட்டை விட்டு சென்றவுடன் சிறிலங்காவில் போர் ஓய்ந்து விட்டதாகவும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டதாகவும் ஒரேயொரு பிரச்சனை மட்டும் தான் சிறிலங்காவில் இருப்பதாகவும் அதாவது யுத்தத்தினால் இடம்பெயர்ந்து முகாங்களில் இருக்கும் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஐ.நா சபை நடவடிக்கை எடுக்கும் என்றும் பான் கீ மூன் கூறினார். இது போதாதென்று ஒரு புள்ளி விவரத்தையும் அதாவது 7,000 பொதுமக்கள் மட்டுமே இறுதிப் போரில் பலியானதாகவும் கூறினார்.

தென் கொரிய நாட்டின் முன்னாள் வெளி விவகாரங்கள் அமைச்சரான பான் கீ மூன் கண்டி சென்று புத்த விகாரைக்கும் சென்று சிங்கள பிக்குக்களின் ஆசீர்வாதங்களைப் பெற்று தமிழரைக் கொன்று குவித்த குற்றவாளிகளுடன் விருந்துண்டு விட்டுத் திரும்பி விட்டார். பின்னர் உலக நாடுகளின் அழுத்தங்களின் காரணமாக வேறு எதுவும் செய்வதறியாது சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்த விசாரணைக்குழுவை அமைப்பது தொடர்பில் தான் அழுத்தங்களை மேற்கொள்ளப்போவதாக பான் கீ மூன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை அண்மையில் சந்தித்த போது தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுக்களைத் தான் புறக்கணிக்கப்போவதில்லை என பான் கீ மூன் நவநீதம் பிள்ளையிடம் தெரிவித்திருந்தார். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கிவருகின்ற போதும், சிறிலங்கா அரசு மீது காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நவநீதம் பிள்ளை பான் கீ மூனுக்கு அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றார். இவர் ஒரு ஆப்பிரிக்கக் கண்டம் தந்த தமிழ் பெண்மணி. இவரின் செயல் ஒரு தமிழ் பழமொழியை நினைவூட்டிகின்றது‘தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்’ என்பதிற்கு இணங்க தன் இனம் ஒரு பேரழிவை சந்திக்கும் போது கொதித்தெழுந்த பெண்மணியே நவநீதம் பிள்ளை.

சிறிலங்கா மனித உரிமைகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர்கள் குழு ஒன்றை நியமிக்கவிருப்பதாக பான் கீ மூன் அறிவித்ததைத் தொடர்ந்து கொதித்தெழுந்த சிங்களப் பேரினவாதிகள் ஐக்கிய நாடுகள் சபையை வசைபாடினார்கள். சிறிலங்காவின் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் மற்றும் சிங்கள உறுமய போன்ற பேரினவாதிகள் ஐ.நா சபையை வசை பாடினார்கள். போதாததற்கு ஐக்கிய நாடுகளின் சட்ட யாப்பின் சரத்துக்களை அறியாமலேயே கொக்கரித்தார்கள்.

குறிப்பாக பான் கீ மூனிற்கு விசாரணை குழுவை சிறிலங்கா அனுப்ப எந்த அதிகாரமும் இல்லையெனவும் இவர்கள் நாட்டிற்குள் நுழைந்தால் உடனே கைது செய்து கூண்டில் அடைக்கவேண்டும் என்று தமக்கு தெரிந்த வன்முறைவாதத்தினால் கூறுகின்றார்கள் சிங்கள உறுமைய மற்றும் பல சிங்கள ஆதிக்க சக்திகள். பான் கீ மூனை போற்றிப் பேசிய இந்த சிங்கள வாதிகள் பின்னர் அவருக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கைதுக்குப் பின்னர் வந்த தீர்க்கதரிசனம் தான் மூனின் இந்த மாற்றத்திற்கான காரணம் என்று ஒரு சாரார் கூறுகின்றார்கள். இதனை உறுதிப்படுத்துமுகமாக தான் ஐ.நா சபையின் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த மாற்றத்தின் பின்னர் தான் சிறிலங்காவிற்கும் ஐ.நா சபைக்கும் இடையிலான உறவுநிலையில் முறுகல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

அண்மையில் பான் கீ மூன் ஜனாதிபதி மகிந்தவுடன் பேசியபோது மனிதஉரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்குழுவொன்றை அமைக்கப் போவதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தை இலங்கை அரசுக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியப்படுத்துவதற்கு தனது அரசியல் விவகார செயலாளர் லைன் பாஸ்கோவை விரைவில் கொழும்புக்கு அனுப்புவதாகவும் பான் கீ மூன் கூறியிருந்தார். இது மகிந்தாவிற்கு விரக்தியை ஏற்படுத்தியது. அவர் அதற்கு உடனடியாகவே தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அதைச் செய்ய முடியாத நிலையில் அந்த தொலைபேசி உரையாடல் முடிந்து போனது. அதன்பின்னர் தான் ஆரம்பித்தது ஐ.நா பொதுச்செயலருக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான மோதல்கள். நிபுணர்கள் குழு அமைக்கப்படுவது நாட்டின் சுதந்திரத்தையும் இறைமையையும் மீறுகின்ற நடவடிக்கை என்றது இலங்கை அரசு. பான் கீ மூன் ஐ.நா பிரகடனத்தை மீறுவதாகவும் அவர் தன்னிச்சையாகச் செயற்படுவதாகவும் குற்றம்சாட்டியது. இலங்கை விவகாரத்தில் நிபுணர் குழுவொன்றை அமைக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்றது. அதேவேளை ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர்களும் இடைக்கிடையே குழப்பமான தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். நிபுணர்கள் குழுவை அதிகாரபூர்வமற்ற வகையில் பான் கீ மூன் தெரிவு செய்து விட்டதாக ஒருமுறை கூறினார் அவரது பேச்சாளர். அதற்குப் பின்னர் அப்படி யாரையும் தெரிவு செய்யவில்லை என்றார். இதுபற்றி ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியது.

நிபுணர் குழு விவகாரம் குறித்து ஐ.நா செயலரின் பேச்சாளர்கள் முன்னுக்குப்பின் முரணான வகையில் செய்திகளை வெளியிட்டது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் ஐ.நா பொதுச்செயலர் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில் கடந்த வாரம் இலங்கை தொடர்பான ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்குழுவை அமைக்கும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை, விரைவில் அது அமைக்கபடும் என்றார் பான் கீ மூன். இந்த நிபுணர் குழு அந்த நாட்டின் இறைமையை மீறும் செயல் அல்ல என்றும் நிபுணர்கள் குழு எந்தவகையிலும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாது என்றும் கூறியிருந்தார் அவர். இது இலங்கை அரசுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம, நிபுணர்குழு அமைக்கும் முடிவைக் கைவிடாவிட்டால் ஐ.நாவுடனான உறவுகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையினால் வரையறுக்கப்பட்ட நான்காவது ஜெனீவா சட்ட வரைமுறை 12 ஆகஸ்ட் 1949 இயற்றப்பட்டது. இதன் மூன்றாவது சரத்து தெளிவாக கூறுகின்றது. எந்த வேறுபாடும் இன்றி எந்த குழுவும் தாம் ஆயுதத்தை மௌனிக்கச் செய்தால் அவர்களை மதித்து அவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யக் கூடாதென்று. விடுதலை புலிகள் தமது ஆயுதங்களை மௌனிக்கச் செய்த பின்னரும் சிறிலங்கா இராணுவம் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டு பல ஆயிரம் தமிழரை கொன்று குவித்தார்கள். அத்துடன் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் முக்கியஸ்தர்களான நடேசன் மற்றும் புலித்தேவனை அவர்களின் குடும்பங்களின் முன்னே சுட்டுக் கொன்று இந்த உலக சட்ட சரத்தை மீறினார்கள். இப்படியாக பல உலக சட்ட விதிமுறைகளை மீறி ஒரு விடுதலைப் போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் முடித்ததாக வெற்றிக் களியாட்டம் ஆடினார்கள் சிங்கள ஆதிக்க சக்திகள்.

இப்பொழுது எழும் கேள்வி என்னவென்றால் இந்த விசாரணைக் குழு பான் கீ மூனால் நியமிக்கபடுவது ஒரு கண்துடைப்பு செயலா அல்லது இந்த விசாரணை எந்தவொரு இடையூறும் இன்று செயல்பட்டு உண்மையான கொலைகாரர்களை உலக நீதி முன் நிறுத்துவார்களா? நிச்சயம் சிங்கள தேசம் இந்த நடவடிக்கைகளை ஒரு போதும் சம்மதிக்காது. உலக அழுத்தங்களுக்காக சிறிலங்கா இந்தக் குழுவை அனுமதித்து சிறிலங்கா எந்த குற்றமும் செய்யவில்லை என்பதை இந்தக் குழு மூலமாக அறிவித்து காலத்தை இழுத்து தமிழரின் கோபம் தணிய இந்தக் குழு செயல்படுமா என்பது காலம் தான் சொல்ல வேண்டும். அதற்கு மகுடம் வைத்தால் போல் சிங்களவர்கள் தமது போராட்டத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக நடத்தி ஐக்கிய நாடுகள் சபையை தம் பக்கம் இழுக்க பல வேலைகள் திரைமறைவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சிறிலங்க-ரஷ்ய-சீன கூட்டணி ஐ.நா சபையின் முயற்சியை முடக்குமா?

* சிங்கள அரசு தமது விசுவாசிகள் மூலமாக ஐ. நா சபையின் நடவடிக்கையை முறியடிக்க பல பிரயத்தனங்களை எடுத்திருக்கின்றார்கள். குறிப்பாக மூனின் கடந்த வார அறிவித்தலின் பின்னர் தமக்கு வேண்டப்பட்ட 16 க்கும் மேற்பட்ட சிங்கள பேரினவாதிகளைக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை ஐ.நா சபையின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு எதிராக அமெரிக்காவில் இலங்கை அரசாங்கத்தினால் அரங்கேற்றப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேருக்கும் உணவு பொதி மற்றும் 100 டொலர்கள் பணமும் வழங்கப்பட்டது. பின்னர் இவர்களுக்கு ஐ.நா சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித்த கோகன்ன தமது வாசஸ்தலத்தில் வைத்து விருந்துபசாரம் வழங்கியுள்ளார்.

இதனிடையே ஈழத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை ஆராய ஐக்கிய நாடுகள் செயாலாளர் நாயகம் நியமிக்க உத்தேசித்துள்ள நிபுணர்கள் அடங்கிய குழுவுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவ நாடுகளாக அங்கம் வகிக்கின்றன. மொத்தம் 15 நாடுகளை உறுப்பினராக கொண்ட பாதுகாப்பு சபையில் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளாகவும், 10 தற்காலிக உறுப்பு நாடுகளாகவும் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் தெரிவுசெய்யப்படுவர். இந்த 15 நாடுகளில் ஒன்பது நாடுகள் ஆமோதிக்க வேண்டும். இரு வேறு விடயங்களில் இந்த ஒன்பது வாக்குகளையும் பாவிக்கலாம். சில விடயங்களுக்கு இந்த 15 நாடுகளில் ஏதாவது ஒன்பது நாடுகள் வாக்களிக்கலாம். ஆனால் உலகப் பாதுகாப்பு மற்றும் மிக முக்கிய விடயங்களுக்கு இந்த 15 நாடுகளில் ஒன்பது நாடுகளின் அமோக வெற்றி இருக்க வேண்டும். அதிலும் நிரந்தர உறுப்பு நாடுகளின் குறிப்பாக இந்த ஐந்து நாடுகளின் ஆதரவு தேவை. இல்லை என்றால் பாதுகாப்பு சபை எந்தவொரு நடவடிக்கைகளையும் செயல்படுத்த முடியாது. விசாரணை சபையை நியமிப்பதென்பது ஒரு இலகுவான விடயம் ஆனால் ஒரு இறைமையுள்ள சிறிலங்கா என்ற நாட்டுக்கெதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்க இந்த நிரந்தர உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை.

ரஷ்யா, சீனாவைத் தவிர பிற மூன்று நிரந்தர உறுப்பு நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா கடுமையான அழுத்தங்கள் ஐ.நா சபை மீது திணித்துக் கொண்டிருக்கின்றது என்பது தான் நம்பகரமான செய்தி. இதனை ரஷ்ய பிரதமர் விளடீமிர் பூட்டின் மற்றும் சீனத் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றார்கள். பான் கீ மூன் அறிவித்த அந்த குறித்த நிபுணர்கள் குழுவை அமைத்து அதன் அறிக்கையை பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்தால், சீனாவும், ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடிக்க திட்டமிட்டுள்ளார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் ரஷ்யா எப்படி சீனாவுடன் தோழமை கொண்டுள்ளதோ அதை விட நல்ல உறவை இந்தியா பல தசாப்தங்களாக ரஷ்யாவுடன் வைத்துள்ளது. ஆக ஈழத் தமிழருக்கு எதிராக நடக்கும் திரை மறைவு ராஜதந்திர களத்தில் இந்தியாவும் சீனா, ரஷ்யா, சிறிலங்கா நாடுகளுடன் கைகோர்த்துள்ளார்களா என்பது தான் இப்பொழுது எழும் கேள்வி. உண்மையிலயே இந்தியா ஈழத் தமிழர் மீது கரிசனை வைத்துள்ளது என்றால் ரஷ்யா சிறிலங்காவிற்கு அளிக்கும் ஆதரவை இந்தியாவினால் நிறுத்த முடியும். அதேவேளை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இந்த செயற்பாடு குறித்து அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கும் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தியா நினைத்தால் சிறிலங்காவை கூண்டில் நிறுத்த முடியும். இந்தியாவின் முதல் எதிரியான சீனாவிடம் தோழமை கொண்டு செயல்படும் சிறிலங்காவை ஏன் இந்தியா இன்னும் ஆதரித்து இந்திய மக்களுடன் அறவிடப்பட்டும் வரிப்பணத்தை சிறிலங்காவிடம் கொடுப்பதென்பது இந்தியா தமிழினத்திற்கே துரோகம் செய்கின்றது. ஏறத்தாழ ஏழு கோடி தமிழ் மக்கள் தமது இறைமையான நாடு இந்தியா என்று இன்றும் போராடும் பொழுது அவர்களின் தொப்புள்கொடி உறவுகள் வேண்டி நிற்கும் நீதியை மேற்குலகம் வாங்கித்தரப் போராடும் போது இந்தியா வெறும் மௌனியாக இருப்பதாக காட்டிக்கொண்டு திரைமறைவில் ரஷ்யாவை தூண்டி சிறிலங்காவிற்கு உதவியாக இருக்கச் செய்வதானது நிச்சயம் இந்தியா மிகவும் கொடிய துரோகத்தை தமிழர்கள் மீது திணிக்கின்றது என்பதை அவர்கள் வெகு விரைவிலேயே உணருவார்கள்.

ஐ.நா சபையின் நாயகம் அறிவித்திருக்கும் சர்வதேச விசாரணைக் குழு ஈழத் தமிழரின் உண்மையான இழப்பை அம்பலப்படுத்தி அவர்களுக்கு நேர்ந்த மனித அவலத்தை உலக சட்ட வரைமுறையின் கீழ் விசாரணை செய்து குற்றவாளிகளை சர்வதேச கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்று தர மேற்குலகின் ஆக்க பூர்வமான செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ரஷ்ய-சீனா-சிறிலங்க கூட்டணியைத் தோற்கடித்து நீதியை நிலைநாட்ட புத்தரை மற்றும் காந்தியை உலகத்திற்கு தந்த பாரத தேசம் முன்வருமா அல்லது தமிழரை மீண்டும் புதை குழிக்குள் தள்ளும் நிலை வருமா என்பதைக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

கனடாவிலிருந்து சதீஸ்குமரன்

மின்னஞ்சல்: [email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*