TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சிங்களம் தர விரும்புவதற்குச் சாட்சியாக நிற்பதற்கா

சிங்களம் தர விரும்புவதற்குச் சாட்சியாக நிற்பதற்கா இந்தியத் துரோகத்தால் இத்தனையும் இழந்தோம்?

முள்ளிவாய்க்கால் வரை தமிழ்த் தேசியம் பேசிய சில ஊடகர்கள், தற்போது இந்தியச் சதியின் பேரழிவால் தமிழீழ மக்கள் மத்தியில் பொங்கி மேலெழுந்துவரும் இந்திய எதிர்ப்பைத் தணிப்பதற்காகத் தங்கள் எழுத்துச் சித்துக்களைத் திருப்பி விட்டுள்ளார்கள்.

‘ஓநாய்கள் என்றால், ஆடுகளைக் கொல்லத்தான் செய்யும். ஆடுகள் எப்படியும் ஓநாய்களுடன் சமரசம் செய்து தங்கள் இழப்புக்களைக் குறைத்துவிடலாம்| என்பதுதான் இவர்களது ஒட்டு மொத்த அணுகுமுறையாகவும் உள்ளது. ‘இந்தியா இல்லாமல் தெற்காசியாவில் எதுவுமே நடக்காது…. இந்தியாவைத் தவிர்த்து தமிழீழப் பிரச்சினையில் மேற்குலகு கூடத் தலையிட முடியாது…. இந்தியாவை நாம் எமக்காகக் கையாள்வது அவசியம்… இந்தியாவைத் தேசியத் தலைவர்கூடக் கையாண்டார்… என்றெல்லாம் ஏதேதோ கூறி வருகின்றார்கள். ஆனாலும், அவர்கள் காட்டும் கற்பனாபுரியில் நாங்கள் மணற்கோட்டை கூடக் கட்ட முடியாது என்பது பல பத்து ஆண்டுகளாக நாங்கள் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள்.

1) ‘இந்தியா இல்லாமல் தெற்காசியாவில் எதுவும் நடக்காது’ என்ற கூற்றில் உண்மை இருக்கிறதா? என்று முதலில் பார்ப்போம். இந்தியா என்றதொரு பெரிய நாடு இருக்கும்போது… என்ற பிரமிப்பை அகற்றிவிட்டு, சாதாரண ஒரு தெற்காசிய நாடாக இந்தியாவை இப்போது பார்ப்போம். இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த நாடும் அதன் பிரமாண்டத்தைப் பார்த்து அச்சம் கொண்டது கிடையாது. இந்தியாவிடமிருந்து பிரிந்து சென்ற பாக்கிஸ்தான் இன்றுவரை இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டுதான் இருக்கின்றது. பாக்கிஸ்தானின் இரு திசை அச்சுறுத்தலை முறியடிப்பதற்காக, இந்தியாவால் துண்டாடித் தனி நாடாக்கப்பட்ட பங்களாதேஷ் இப்போது இந்தியாவின் பங்காளி நாடாக இல்லை. பர்மா என்ற மியான்மார் சீனாவின் செல்வாக்கிற்குட்பட்ட இராணுவ ஆட்சியுடன் இந்தியாவை அச்சுறுத்துகிறது. இந்தியாவால் பொத்தி வளர்க்கப்பட்ட உலகின் ஒரே இந்து மன்னராட்சி நாடாக இருந்த நேபாளம் தற்போது இந்தியாவை விட்டு விலகி, சீனா பக்கம் சாய்ந்து வருகின்றது. எப்போதுமே இந்திய எதிர்ப்பு நிலையைக் கொண்டிருந்த சிறிலங்கா, இந்தியா விரித்த வலையில் இந்தியாவையே சிக்க வைத்துவிட்டு, சீனாவுக்கு கடை விரிக்க ஆரம்பித்துவிட்டது. இங்கே குறிப்பிடப்படும் அத்தனையும் இந்தியாவை மீறி தெற்காசியாவில் நிகழ்ந்துவிட்டது. நிகழ்ந்து வருகின்றது.

2) இந்தியாவைத் தவிர்த்து தமிழீழப் பிரச்சினையில் மேற்குலகு கூடத் தலையிட முடியாது…. என்ற வாதம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. இந்தியா மீது ஈழத் தமிழர்கள் கொண்டிருந்த பாசம் அவர்களை முள்ளிவாய்க்கால் வரை துரத்திச் சென்று கொடூரமாகக் கொன்றெழித்தது. அப்போதும் இந்தியாவை நோக்கித்தான் அவர்கள் அவலக் குரல்களை எழுப்பினார்கள். அவர்கள் எப்போதோ குரல் எழுப்பியிருக்க வேண்டும், இந்தியாவை நோக்கியல்ல சீனாவை நோக்கி! அங்கேயும் விடுதலைப் புலிகளை, தமிழகம் மீது தேசியத் தலைவர் அவர்கள் கொண்டிருந்த பாசமும் நம்பிக்கையும் தடுத்து நிறுத்தியது. அங்கேதான் விடுதலைப் புலிகள் பெருந் தவறு இழைத்துவிட்டார்கள் என்று இப்போது ஈழத் தமிழர்கள் மனம் வெதும்புகின்றார்கள்.

இந்தியாவின் பூரண அச்சுறுத்தலுக்குள் இருந்த சிங்கள தேசம் இப்போதுதான் சீனாவைக் கால் பதிக்க அனுமதித்தது. எங்கள் தமிழீழம் விரும்பியிருந்தால், திருகோணமலைத் துறைமுகத்தை எப்போதோ சீனாவுக்குக் கொடுத்திருக்கலாம். அங்கேதான் நாங்கள் பெரும் இராஜதந்திரத் தவறிழைத்துள்ளோம். இது காலமாகிப் போன கதை. ஆனால், அது தமிழகத்தைக் காப்பாற்ற தமிழீழம் கொடுத்த பெரு விலை என்பதைத் தமிழக மக்களாவது உணர்ந்து கொள்ள வேண்டும். ஆக, நாங்கள் இந்தியாமீது கொண்டிருந்த காதல், பக்தி, மரியாதை எல்லாமே இந்தியாவால் பறித்தெறியப்பட்டுப் பரிதாபகரமாக நிற்கிறோம். முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின்னரும் மேற்குலகின் மனிதாபிமான அணுகுமுறைக்குக்கூட இந்தியாதான் இன்றுவரை தடையாக உள்ளது. ஆக, இந்தியா என்ற விஷச் செடியின்கீழ் தமிழீழ மக்கள் வாழ்வதற்குக்கூட முடியாது என்பதை அனைவரும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியம். அத்தனை மாநிலங்களிலும் மக்கள் மத்தியில் உள்ள பிளவுகளும், ஏற்றத் தாழ்வுகளும் பூதாகரமாகி வருகின்றன. மாவோயிஸ்டுக்களுடனும், நாக்சலைட்டுக்களுடனும் யுத்தம் புரிய வேண்டிய கட்டாய சூழ்நிலை பல மாநிலங்களில் உருவாகி வருகின்றது. இந்த நிலையில் பாக்கிஸ்தானிலிருந்து தீவிரவாதமும், சீனாவின் இந்தியாவை உடைத்துப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற வைராக்கியமும் எம்மால் உணர்ந்துகொள்ளப்பட வேண்டிய விடயங்கள். ரஷ்ய வல்லரசே கண்முன்னால் இடிந்து பிளந்ததை நாம் மறந்துவிட முடியாது. இன்னொன்றையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த அயல், வெளி நாடுகளின் அரசியலிலும் மூக்கை நுழைத்து அடி வாங்கி அவமானப்படாத சீனா, தற்போதைய பொருளாதார பெரும் வளர்ச்சியுடன் தனது கம்யூனிச இறுக்கத்தைப் படிப்படியாகத் தளர்த்திக் கொண்டே வருகின்றது. எதிர் காலத்தின் கால ஓட்டத்தில் சீனா மேற்குலகுடன் இணைந்து பயணிக்கத் தன்னைத் தயார்படுத்தியே வருகின்றது. ஆகவே, மேற்குலகு – சீன உறவு மேம்படும் நிலையை எமக்குச் சாதகமாகக் கொள்வதே தற்போதைய இராஜதந்திர அணுகுமுறையாக இருக்கும்.

3) இந்தியாவை நாம் எமக்காகக் கையாள்வது அவசியம்… என்பதை சிங்கள தேசத்திடமிருந்து தமிழீழ மக்களும் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழீழம் என்ற சொல்லினூடாக உள்ளே நுழைந்து தலைவலியாக இருந்த இந்தியாவைக் கொண்டே தமிழீழம் என்ற சொல்லை நீக்க வைத்த சிங்களத்தின் ராஜதந்திரத்தை நாம் பாராட்டாமல் இரக்க முடியாது. தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி கூட தற்போது இலங்கைத் தமிழர்கள் என்றே அழைக்க வேண்டிய பச்சோந்தித் தனத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆக, தமிழீழம் என்ற சொல்லையே நீக்க முன்நிற்கும் இந்தியாவை எப்படிக் கையாள்வது என்பது புரியாத புதிராகவே உள்ளது. இந்தியாவை எமக்காகக் கையாண்ட காலங்களில் எமக்கு இருபது வருடங்களுக்கு மேலான அனுபவங்கள் உண்டு. இந்தியா எம்மைக் கையாண்ட காலங்களில் எமக்கு ஐம்பது வருடங்களுக்கு மேலான அனுபவங்கள் உண்டு. இந்தியாவை நாம் இனியும் எமக்காகக் கையாள்வது என்பது, நாம் எம்மையே புதைகுழிக்குள் புதைத்துக் கொள்வதற்கு ஒப்பானதாகும்.

இறுதி யுத்த காலத்தைக் கண்ணீரோடு நினைவு கூர்ந்து பாருங்கள். விடுதலைப் புலிகள் யுத்தம் புரிந்தார்கள் என்பதற்கும் அப்பால், 350,000 தமிழ் மக்கள் கதறி அழுதார்களே! எங்களைக் காப்பாற்றுங்கள் என்று. புலம்பெயர் தேசங்கள் எங்கும் பத்து இலட்சம் மக்கள் வீதிகளில் இறங்கி அழுது போராட்டம் நடாத்தினார்களே! முத்துக்குமாரில் ஆரம்பித்து முகம் தெரியாத எத்தனையோ பேர் தம்மைத் தாமே எரித்து உணர்வூட்டினார்களே! தமிழகத்து மக்கள் ‘இந்திய அரசே! எங்கள் தொப்பிள்கொடி உறவுகளைக் காப்பாற்று! என்று போராடினார்களே! என்ன நடந்தது…? இந்தியா என்ன செய்தது…? நினைக்கவே நெஞ்சம் கொதிக்கின்றது. பிறக்காத குழந்தை ஒன்று தாயின் வயிற்றைக் கிழித்த செல் ஓட்டையினால் தன் கையை வெளியே நீட்டிக் காப்பாற்றக் கோரிய அந்தக் கோரக் காட்சியை மறக்க முடியுமா? நாராயணனும், மேனனும் கொழும்பிற்குப் பறந்து சென்று ‘பிரச்சினை அதிகரிப்பதற்குள் யுத்தத்தைக் கெதியாக முடித்து விடுங்கள். வேண்டிய ஆயுதங்களும் பணமும் நாம் தருகிறோம்’ என்று ஊக்கம் கொடுத்தல்லவா திரும்பி வந்தார்கள்.

சிங்கள அரசு யுத்தத்தை நிறுத்த மறுத்தது என்பது ஒரு ‘இந்தியப் புலுடா’. இறுதி யுத்த களத்திலிருந்து மக்களை வெளியேற்ற மேற்குலகின் சில நாடுகள் எடுத்த முயற்சியையும் இந்தியா தடுத்து நிறுத்தியது. அங்குதான் நாம் இந்தியாவை நம்பிய தவறில் இருந்து பெரும் பாடங்கள் கற்றோம். இந்தியாவை நம்பியதால் சீனாவை நிராகரித்தோம்! இந்தியாவை நம்பியதால் பாக்கிஸ்தானைப் பகைத்துக் கொண்டோம்! இந்தியாவை நம்பியதால் நாம் உலகில் எமக்கான நட்பு நாடுகளை உருவாக்கத் தவறியோம். அதனால், கேட்பதற்கே யாருமில்லாமல் முள்ளிவாய்க்காவில் முடிந்தே போனோம்! ஊதிய ஊடகவியலாளர்கள் இவற்றை எல்லாம் மறந்து எழுதித் தொலைக்கலாம். தேசிய ஊடகவியலாளர்கள் எழுத உட்கார்ந்தால் இவற்றை எல்லாம் நினைக்காமல் எழுத முடியாது.

4) இந்தியாவைத் தேசியத் தலைவர்கூடக் கையாண்டார்… என்பது உண்மைதான். அவரால் எதைச் சாதிக்க முடிந்தது என்பதைத்தான் நாம் அவதானிக்க வேண்டும். இந்தியாவுடன் அவர் பல தடவைகள் முயற்சித்துப் பார்த்தார். பல இடங்களில் பணிந்தும் பார்த்தார். ஆனாலும் அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை. காந்திய பாதையில் திலீபனும் முயற்சித்துப் பார்த்தார். அவரால் தன்னைத்தானே பலியாக்க முடிந்ததே தவிர இந்திய இதயங்களில் இரக்கத்தை ஏற்படுத்த முடியவில்லையே? எதைச் செய்து இந்தியாவைக் கையாள்வது? எதைப் பெற்றுத்தருவதற்காக இந்தியாவைப் பயன்படுத்துவது? சிங்களம் தர விரும்புவதற்குச் சாட்சியாக நிற்பதற்கா இந்தியத் துரோகத்தால் இத்தனையும் இழந்தோம்? வேண்டாம், மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலுக்கு எங்கள் மக்களை அழைத்துச் செல்லாதீர்கள்.

5) முடிவாக, மேற்குலகின் அழுத்தங்கள் சிங்கள தேசத்தை இறுக்கி வருகின்றது. ஐ.நா.வின் அண்மைய அறிவிப்புக்களால் அலறித் தவிக்கின்றது. புலம் பெயர் தமிழீழ மக்கள் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் இந்த அழுத்தங்களை இன்னமும் பல மடங்குகள் அதிகரிக்கச் செய்யலாம். அதற்கான தருணங்களும் எம்மை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றது. உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு என புலம்பெயர் மக்கள் போராட்டம் விரிந்து செல்லட்டும். அதற்காக, தேசிய ஊடகவியலாளர்கள் மக்களைத் திரட்டும் பணிகளைச் செய்ய வேண்டும். எங்கள் நேசக் கரங்கள் எட்டுத் திக்கும் விரிந்து செல்லட்டும். எமக்கான இதயங்களை வென்றெடுக்கத் தொடர்ந்து உழைப்போம். அப்போது சிங்களம் எங்களோடு பேசியே தீரவேண்டும். ஏனென்றால், இலங்கைத் தீவில் சிங்களம் எங்கள் அயல் நாடு. அங்கே இந்தியாவுக்கு என்ன வேலை?

நன்றி:ஈழநாடு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • n.jayachandran says:

    “i never belive india never support to get tamil eelam , thay were belong to north indian,

    and ever support to singalam , for that thay get very soon from lanka through chaina,

    March 30, 2010 at 17:02

Your email address will not be published. Required fields are marked *

*