TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இந்தியா என்ற அடித்தளம் உருக்குலைந்த பிரமாண்ட

இந்தியா என்ற அடித்தளம் உருக்குலைந்த பிரமாண்டத்தைக் கண்டு அஞ்சுவதும், அதைத் தொழுவதும், அதனிடம் ஈழத் தமிழினத்தை அடகு வைத்து இலாபம் பார்க்க முயல்வதும் கடைந்தெடுத்த ஈனத்தனம்!.

தமிழ் தேசியம் வேறு, கட்சி அரசியல் வேறு என்பதைத் தற்போதும் சிலர் மறுதலித்து வருகின்றனர். தமிழ்த் தேசியம் என்பது தமிழர்களுக்கானது. அதில், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு இடம் என்பதே கிடையாது.

தமிழ்த் தேசிய நலன் சார்ந்து எதையும் இழக்க, எதையும் எதிர்கொள்வதற்கான தியாக சிந்தனை உள்ளவர்களே தமிழ்த் தேசிய சிந்தனை வாதிகளாக இருக்க முடியும். தற்போதைய இலங்கைத் தீவின் தேர்தல் களத்தில் கட்சிகள் சார்ந்த நிலை எடுத்துள்ள சிலர் தம்மைத் தேசியவாதிகளாக அடையாளம் காட்ட முற்படுவது வேடிக்கையானதே. இது பாலுக்கும் காவல், மீனுக்கும் தோழன் என்ற நிலையை ஒத்தது. ஒரு கட்சி சார்ந்து நிலைப்பாடு எடுப்பவர்கள் அந்தக் கட்சி சார்பான நிலையை எடுத்துக் கூறலாமே தவிர, தேசிய அரசியலுக்கான இலவச ஆலோசனைகள் கூறுவது ஆரோக்கியமானதாக அமையாது.

கனடிய தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் திரு. தங்கவேல் நக்கீரன் அவர்கள் வெளியிடும் கருத்துக்களும் அத்தகையதே. அந்தக் காலத்துத் தமிழரசுக் கட்சி சிந்தனை ஊடாகத் தற்போதைய தமிழ்த் தேசிய உணர்வு மீதான மிதவாதத் தாக்குதலைத் தொடுப்பதையே தனது அரசியலாக வெளிப்படுத்துகிறார். அதற்காக அவர் முன் வைக்கும் காரணங்களும் அவரைப் போலவே தெளிவற்றதாக இருப்பதை உணர முடிகின்றது. அந்தக் காலத்து தமிழரசுக் கட்சியினர் போலவே, தற்போதும் தமிழ்க் காங்கிரஸ் மீதான தனது காழ்ப்புணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்துகிறார்.

கடந்த காலங்களின் அரசியல் நகர்வுகளையும், அரசியல் முடிவுகளையும் பல பத்து வருடங்கள் கடந்து விமர்சிப்பதும், அதற்குப் புதுப் புது விளக்கங்கள் கொடுப்பதும் அரசியல் விவேகமாகக் கருத முடியாது. அந்தந்தக் காலங்களின் நிலமைகளுக்கேற்றவாறு, அன்றைய அரசியல் தலைமைகள் எடுத்த அத்தனை முடிவுகளுக்குப் பின்னாலும் தமிழீழ மக்கள் அணிவகுத்து நின்றதை மறந்துவிடலாகாது. அத்தனை அரசியல் நகர்வுகளும் ஏதோ ஒன்றை எமக்குக் கற்றுத் தந்து, இலக்கை நோக்கி எம்மை நகர்த்தியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களைப்போலவே அப்போது தலையாட்டிவிட்டு, இப்போது தேசியத் தலைவர் அவர்களது தேர்தல்ப் புறக்கணிப்பை விமர்சிப்பது நேர்மையான அரசியலாக இருக்க முடியாது.

கடந்த சிறிலங்கா அதிபர்த் தேர்தலில் தமிழ் மக்கள் மகிந்தவுக்கு எதிரான தங்கள் கோபத்தைப் பதிவு செய்தார்கள் என்பதற்கும் அப்பால் அவர்களில் பெரும் வீதமான தமிழர்கள் அந்தத் தேர்தலைப் புறக்கணித்தார்கள் என்ற புள்ளிவிபரக் கணக்கையும் கட்சி அரசியல் சார்ந்து நக்கீரன் அவர்கள் மறுப்பது வேடிக்கையானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் வரித்துக்கொண்ட கொள்கையை இந்திய அரசிடம் கையளித்துவிட்டு, இறுதியாக தமிழ்த் தேசிய உணர்வாளாகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வரை, புதிய அணி ஒன்றை உருவாக்கும் அவசியம் திரு. கஜேந்திரகுமார் அவர்களுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை. இறுதிவரை, கூட்டமைப்புத் தலைமையை நேர்படுத்த முயற்சித்து, அதில் தோல்வி கண்ட நிலையிலேயே புதிய அணி உருவானது. அது எத்தனை இடத்தில் போட்டியிடுகின்றது என்பது அல்ல முக்கியம். அது எந்தக் கொள்கைக்காகக் களம் இறங்கியது என்பதே முக்கியம்.

வட – கிழக்கில் வெற்றி பெறும் கட்சியோடு மகிந்த பேசப்போவதாக அறிவித்ததை முதன்மைப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இப்போதும் சிங்கள தேசத்திடமிருந்து பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைக்க முயல்வது அவர்களது சந்தர்ப்பவாத அரசியலையே மீண்டும் உணர்த்துகின்றது. இந்தத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெற வைப்பதன் மூலம் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பலம் மூலம் உருவாகிவரும் தமிழீழ மக்களுக்கான மேற்குலக ஆதரவுக்கு செக் வைப்பதற்கு இந்தியா முயல்கிறது என்பதே உண்மை. மாறாக, மேற்குலகு இந்தத் தேர்தல் மூலம் ஈழத் தமிழர்கள் எதைத் தெரிவிக்க விரும்புகிறார்கள் என்பதையே எதிர்பார்த்துள்ளது.

தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே உருவாகிய முரண்பாடுகளுக்கான அடிப்படையை திரு. நக்கீரன் அவர்கள் தெளிவாகவே ஒப்புக் கொண்டுள்ளார்.

நாங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தெற்றாசியப் பிராந்திய வல்லரசு இந்தியாதான். இந்தியாவை ஓரங்கட்டிவிட்டு தமிழ் மக்கள் சார்பாக எந்த நாடும் தலையிடாது என்ற நக்கீரன் அவர்களது கருத்திலிருந்து நான் முரண்படுகின்றேன். தெற்காசியப் பிராந்திய வல்லரசு இந்தியாதான் என்பதை தெற்காசிய நாடுகள் எவையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதே உண்மை நிலை. தெற்காசியா என்ற கூட்டுக்குள் பாக்கிஸ்தான், வங்காள தேசம், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், இலங்கை ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கியது. இதில், பாக்கிஸ்தான் இந்தியாவின் எதிரி நாடாகவே உள்ளது.

வங்காள தேசம் தற்போது இந்திய ஆதரவு நிலையில் இல்லை. நேபாளம் இந்தியப் பிடியிலிருந்து நழுவி சீனா பக்கம் சாய்ந்து வருகின்றது. இந்திய எதிர் நிலையில் இருந்த இலங்கையைத் தன் பிடிக்குள் கொண்டு வரவே ஈழத் தமிழர்களை இத்தனை அழிவுகளுக்குள் தள்ளியது. எஞ்சியிருக்கும் சின்னஞ்சிறு பூட்டனும், மாலைதீவும், நக்கீரன் அவர்களும் இந்தியாதான் தெற்காசியாவின் வல்லரசு என்று ஏற்றுக் கொண்டால், அதற்கு நாம் ஒன்றும் கூறுவதற்கு இல்லை.

உலக அமைப்புக்களின் கணிப்பீட்டின்படி, உலகில் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் தொகையில் 50 வீதமானவர்கள் இந்தியாவில்த்தான் உள்ளார்கள் என்ற நிலையில், சிங்கள தேசத்திற்கு வாரி வழங்கும் இந்தியாவின் வல்லாதிக்க கோமாளித்தனத்தை எப்படிப் புகழ்வதோ அறியேன். இந்தியாவின் மிரட்டல் அரசியலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவே சிங்கள தேசம் சீனாவை தளத்தில் இறக்கியுள்ளது. அம்பாந்தோட்டையில் கால் பதித்த சீனா பருத்தித்துறைவரை ஊடுருவியுள்ளது இந்தியாவின் வல்லரசுக் கனவுக்கு மட்டுமல்ல, அதனது சுய பாதுகாப்பிற்கும் ஆபத்தை உருவாக்கியுள்ளது.

முள்ளிவாய்க்கால் இறுதிக் களத்தில் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, மூன்றரை இலட்சம் மக்களும் சிக்கியிருந்த நிலையில், அவர்களைக் காப்பாற்ற முயன்ற மேற்குலகின் நகர்வுகளைத் தடுத்து நிறுத்தியதை நக்கீரன் அவர்கள் இந்தியாவின் வீரப்பிரதாபமாகச் சித்தரிக்க முயல்கிறாரா? இத்தனை கொடூரமான இந்தியாவை இனியும் ஈழத் தமிழர்கள் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா? பிரமாண்டங்களைக் கண்டு மனிதன் அஞ்சி நடுங்கிய, அதனை வழிபட்ட காலங்கள் தற்போது இல்லை. முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட மனிதனால்தான் நிலவில் கால் பதிக்க முடிந்தது. முடியும் என்ற நம்பிக்கையே அமெரிக்க அதிபராக பராக் ஒபாமாவைப் பதவியில் அமர்த்தியது.

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இந்தியா என்ற அடித்தளம் உருக்குலைந்த பிரமாண்டத்தைக் கண்டு அஞ்சுவதும், அதைத் தொழுவதும், அதனிடம் ஈழத் தமிழினத்தை அடகு வைத்து இலாபம் பார்க்க முயல்வதும் கடைந்தெடுத்த ஈனத்தனம். தந்தை செல்வா அவர்கள் முன்நகர்த்திய தமிழ்த் தேசிய சிந்தனையை அமிர்தலிங்கம் இந்தியாவின் கரங்களுக்குள் கொண்டு சென்று முள்ளிவாய்க்காலில் பேரழிவை ஏற்படுத்தியது போலவே, சம்பந்தன் குழுவினரும் தற்போதைய ஈழத் தமிழர்களின் இறுதி அபிலாசைகளையும் இந்தியக் கரங்களுக்குள் புதைத்து முற்றாக முடிவுரை எழுதும் துரோகத்தை முறியடிப்பது ஒவ்வொரு ஈழத் தமிழனின் கடமையாக உள்ளது.

புலம்பெயர் தமிழர்களின் பலம் சிங்கள தேசத்தையும், இந்திய வல்லாதிக்க சக்தியையும் மட்டுமல்ல புலம்பெயர் இந்தியதாசர்களுக்கும் கிலியையே மூட்டி வருகின்றது. புலம்பெயர் தமிழர்கள் ஏதோ தனி இனம் போலவும், அவர்கள் ஈழத் தமிழர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டவர்கள் போலவும் சிலர் சித்தரிக்க முயல்வது வேடிக்கையானது. ஈழத் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, மவுனிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்காகப் பேசுவதும், போராடுவதும் புலம்பெயர் தமிழர்களின் கடமை யாரும் நிராகரித்துவிட முடியாது. நக்கீரன்களுக்கு அது கசப்பாக இருந்தாலும், புலம்பெயர் தமிழர்களிடம் வரலாறு ஒப்படைத்துள்ள கடமையிலிருந்து அவர்கள் தவற முடியாது.

எதிரியை விடவும் துரோகிகள் ஆபத்தானவர்கள். சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள். எனவே, இந்தியத் துரோகத்தின் பிடியிலிருந்து விடுபட சிங்கள தேசத்துடன் இணக்கப்பட்டிற்கு வந்தாலும் தவறில்லை என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. மேற்குலகின் அனுசரணையோடு சிக்களத்தை வழிக்குக் கொண்டவர முடியாவிட்டால், சீனாவின் உதவியைப் பெற்றுக்கொண்டு முன்னேறுவதும் தவறு என்று கூற முடியாது. தனது வர்த்தக நலனை மட்டுமே முன்நிறுத்தி இலங்கைத் தீவில் கால் பதித்துள்ள சீனாவுக்கு இலங்கைத் தீவில் அமைதி உருவாகுவது அவசியமாகவே உள்ளது. அந்த சமன்பாட்டினூடக இந்தியத் துரோகத்தை தடுத்து நிறுத்த முயல்வதும் ஈழத் தமிழர்களின் சாணக்கியமாக அமையலாம்.

நாங்கள் இந்தியாவை நம்பியதால் ஏமாற்றப்பட்டோம். இந்தியாவை நம்பியதால் அழிக்கப்பட்டோம். இந்தியாவை நம்பியதால் நிர்க்கதியானோம். இந்தியாவை நம்பியதால் எதிர்காலத்தையே இழந்தோம். இன்னமும் இந்தியாவை நம்பித்தான் ஆகவேண்டும் என்று களத்தில் பலம் கேட்டு நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி இன்னொரு முள்ளிவாய்க்காலுக்குப் பயணிக்க ஈழத் தமிழர்கள் தயாராக இல்லை.

நன்றி: ஈழநாடு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*