TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பொன்சேகா விவகாரம் அரசாங்கத்துக்கும் இராணுவ

சரத் பொன்சேகா விவகாரம் அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்றவரான ஜெனரல் சரத் பொன்சேகாவை – இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது சட்டவிரோதம் என்று ஒருபுறத்தில் வாதங்கள் இடம்பெற்றாலும், மற்றொரு புறத்தில் அவரை இராணுவ நீதிமன்றத்தில் வைத்து விசாரணை நடத்துவதில் அரசாங்கம் உறுதியோடு இருக்கிறது.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட இரண்டு குற்றப்பத்திரிகைகளையும் விசாரிப்பதற்கு இரு இராணுவ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தலைமையக நிதிப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஹர்ஷ வீரதுங்க தலைமையில் குவாட்டர் மாஸ்ரர் ஜெனரல் லலித் விஜேதுங்க, தொண்டர் படைகளின் தளபதியான மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக ஆகியோர் இந்த இராணுவ நீதிமன்றங்களின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

இரு இராணுவ நீதிமன்றங்களுக்கும் ஒரே அதிகாரிகள் குழுவே நீதிபதிகளாகக் கடமையாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி முதலாவது நீதிமன்றம் கடந்த 16ம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கூடியபோது ஜெனரல் சரத் பொன்சேகா அங்கு ஆஜராகியிருந்தார். பணியில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டிருந்த போதும் விசாரணைக்கு சரத் பொன்சேகா ஒத்துழைக்க மறுத்தார்.

இதன் காரணமாக அடுத்த மாதம் 6ம் திகதி விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 17ம் திகதி, ஆயுதக் கொள்வனவுகளில் மோசடிகள் செய்தது குறித்து இரண்டாவது நீதிமன்றத்தில் விசாரணைகள் ஆரம்பமாகின. அதன்போது சரத் பொன்சேகா தரப்பில் ஆஜரான சட்டத்தரணி இராணுவ நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருக்கும் அதிகாரிகள் ஏற்கனவே குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் என்ற வாதத்தை முன்வைத்தார்.

* மேஜர் ஜெனரல் ஹர்ஷ வீரதுங்க இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் உறவினர் என்பதால் அவர் பக்கச்சார்பாகச் செயற்படலாம் என்றும்- மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக தனது கடமையை ஒழுங்காகச் செய்யாதவர் என்பதால் ஏற்கனவே ஜெனரல் சரத் பொன்சேகாவினால் பதவிக்குறைப்பு செய்யப்பட்டவர் என்பதால் அவர் நீதியாக நடந்து கொள்ளமாட்டார் என்றும்- மேஜர் ஜெனரல் லலித் விஜேதுங்க இராணுவத்துக்கான பொருட்கள் கொள்வனவின் போது முறையற்ற ஏலம் நடத்தி மோசடி செய்தவர் என்பதாலும்- தன்னை விசாரிக்கத் தகுதியற்றவர்கள் என்று சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

சரத் பொன்சேகா தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிபதிகள் குறித்துத் தெரிவித்த ஆட்சேபனைகளை அடுத்து இந்த நீதிமன்ற விசாரணைகளும் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

முதலாவது நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதிகள் குறித்து தெளிவான எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இரண்டாவது நீதிமன்ற விசாரணையின் போதே நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால் இராணுவச் சட்டப்படி புதியவர்களை நியமிக்க வேண்டிய நிலை இராணுவத் தளபதிக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெனரல் சரத் பொன்சேகா மீதான விசாரணைக்கென அமைக்கப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் குழு நியமிக்கப்படவுள்ளது.

இராணுவ நீதிமன்ற சட்டங்களின் படி குற்றச்சாட்டுகளுக்குள்ளான ஒருவர் இராணுவ நீதிமன்ற நீதிபதிகளை மாற்றும்படி தகுந்த காரணங்களுடன் கோரமுடியும். ஜெனரல் சரத் பொன்சேகா தரப்பின் எதிர்ப்பை அடுத்து இரண்டாவது இராணுவ நீதிமன்றத்துக்குப் புதிய நீதிபதிகள் குழுவை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நியமிக்கவுள்ளார்.
ஏற்கனவே காத்திருப்பு உறுப்பினர்களாக நான்கு இராணுவ அதிகாரிகள் இந்த இராணுவ நீதிமன்றங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியின் துணைவேந்தர் மற்றும் தளபதியாக இருக்கும் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், தெற்குப் படைத்தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லலித் தவுலகல, யாழ்.படைகளின் தளபதியாக உள்ள மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, வன்னிப் படைகளின் தளபதியாக உள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஆகியோரே காத்திருப்பு உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த நான்கு பேர் கொண்ட குழுவில் இருந்தே புதிதாக மூன்று நீதிபதிகளும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இவர்களில் மேஜர் ஜெனரல் தவுலகல ஏற்கனவே ஜெனரல் சரத் பொன்சேகாவினால் ஓரங்கட்டப்பட்டிருந்தவர். அவர் குறித்தும் சரத் பொன்சேகா தரப்பில் இருந்து எதிர்ப்புக் கிளம்பலாம். அதுபோன்று மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க குறித்தும் சரத் பொன்சேகா தரப்பில் இருந்து எதிர்ப்புத் தெரிவிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது,

இப்படியாக சரத் பொன்சேகா தன் மீதான விசாரணைகளை தாமதப்படுத்தவோ அல்லது தடுக்கவோ இராணுவ நீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். சாதாரணமான ஒரு இராணுவ அதிகாரியாக இருந்தால் இராணுவ நீதிமன்றம் குறித்து ஒரு அளவுக்கு மேல் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது, ஆனால் சரத் பொன்சேகா அப்படிப்பட்டவர் அல்ல. அவர் உயர்பதவிகளை வகித்தவர். படை அதிகாரிகளின் பலவீனங்கள் அவர்களின் நிலை பற்றி நன்கு அறிந்தவர்.

எனவே அவர் எப்படியாவது தனக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகளைக் கொண்டு விசாரணை செய்யப்படுவதைத் தடுக்கவே முற்படுவார். ஏற்கனவே முதலாவது நீதிமன்றத்தின் நீதிபதிகள் குறித்து சரத் பொன்சேகா குற்றச்சாட்டுகளை முன்வைக்காததால் அந்த நீதிபதிகள் மாற்றப்படவில்லை. ஆனால் அடுத்தமுறை முதலாவது நீதிமன்றம் கூடும் போதே சரத் பொன்சேகா தரப்பில் இரண்டாவது நீதிமன்றில் சமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம்.

இது அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதேவேளை அரசாங்கமோ சரத் பொன்சேகாவுக்கு எப்படியாவது இராணுவ நீதிமன்றத்தின் ஊடாகத் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதற்கென சாட்சியங்களை அரசாங்கம் திரட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமாக இருந்து போர் பற்றிய தகவல்களை சேகரித்து எழுதி வந்த ஊடகவியலாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். சரத் பொன்சேகாவுக்கு அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்னொரு புறத்தில் சரத் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. சரத் பொன்சேகா ஆயிரக்கணக்கானோரை இராணுவ நீதிமன்றில் நிறுத்தியவர் தானே என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியிருப்பது இந்த விவகாரத்தில் அரசாங்கம் விடாப்பிடியாகவே இருக்க போகிறது என்பதற்கான அடையாளமாகவே தெரிகிறது.

மற்றொரு புறத்தில் சரத் பொன்சேகாவின் எழுத்துமூல பேட்டி என்று சனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய செய்தியும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதன்பின்னணியில் ஜேவிபி இருந்ததாகக் கூறும் அரசாங்கம் மற்றொரு பக்கத்தில் சனல்-4 தொலைக்காட்சிக்கும் சரத் பொனசேகாவுக்கும் இரகசியத் தொடர்புகள் இருப்பதாகவும் சந்தேகம் கிளப்பியுள்ளது.

ஏற்கனவே சனல்-4 தொலைக்காட்சிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் வெறுப்பு நிலை காணப்படுகின்ற நிலையில் சரத் பொன்சேகாவுக்கு சனல்-4 இற்கும் முடிச்சுப் போட முனைகிறது. சரத் பொன்சேகாவே புலிகள் கொலை செய்யப்படும் காட்சிகளை சனல்-4 இற்கு வழங்கியிருக்கலாம் என்பது போன்று ஒரு சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது.

இது சரத் பொன்சேகாவுக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தவே பயன்பட்டுள்ளது. சரத் பொன்சேகா விவகாரம் இப்போதைக்கு ஓயப் போவதும் இல்லை அவர் மீதான நடவடிக்கைகளின் விளைவுகள் குறுகிய கால சலசலப்பை கொண்டதாக அமையப் போவதும் இல்லை. இதையே தான் அண்மைய சம்பவங்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

கொழும்பிலிருந்து சத்திரியன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*