TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இனங்களுக்கிடையிலான உறவுகளின் தற்போதைய நிலை

கிழக்கில் இனங்களுக்கிடையிலான உறவுகளின் தற்போதைய நிலை

இலங்கையின் இனங்களுக்கிடையேயான பிரிவினை என்பது அரசியலில் மாத்திரம் எடுத்துக்காட்டப்படுவதாகக் கருதப்பட முடியாது. சமூக ரீதியாவும் கூட வேறான சமூகங்களைச் சார்ந்த அதன் அங்கத்தவர்கள் சார்பான முறையில் ஒருமைப்படாது தமக்குள்ளேயே வாழும் வகையிலேயே காணப்படுகின்றனர். இதன் காரணமாக அரசாங்கம் குறித்த மையங்களில் இன ரீதியாக மக்கள் குவிந்து வாழும் நிலைமையினை அனுமதிக்க விரும்பாத ஒருபோக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.

அவ்வாறான ஒரு நிலைமையினை பல்கலைக்கழக அமைப்பிலும் காணக்கூடியதாகவுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் கிராமத்தில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இனங்களிடையே ஒருமைப்பாடு இல்லாமை காரணமாக ஒரு பிரச்சினை எழுந்துள்ளது.

யுத்தம் காரணமாக (1990 களில்) கிழக்குப் பிரதேச முஸ்லிம் மாணவர்கள் மட்டக்களப்புக்குச் சென்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வகுப்புகளுக்கு சமுகம் அளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டதன் காரணமாகவே தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தோற்றமுற்றது. இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரான காலஞ்சென்ற எம்.எச்.எம்.அஷ்ரப் 1995 ஆம் ஆண்டில் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் தோன்றுவதற்கான சூத்திரதாரியாகவிருந்தார். அது முதலாக கிழக்குப் பிரதேச முஸ்லிம் மாணவர்களுக்கான பல்கலைக்கழகமாக அது திகழ்ந்து வருகின்றது.

இருந்த போதிலும் அண்மைக் காலமாக அரசாங்கம் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்களையும் அனுப்பிவைக்க ஆரம்பித்துள்ளது. புதிதாக எதனையும் செய்ய முற்படும்போது ஏற்படும் வழமையான பதற்றங்கள் மாணவர் ஒன்றியத்தின் ஒரு பிரிவினருக்கும் புதிதாக அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்குமிடையே ஏற்பட்டுள்ளது.

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பல்கலைக்கழகம் மூடப்பட்டது. மூடப்பட்ட தினத்திற்கு அடுத்த நாள் நான் அம்பாறைக்குச் செல்ல நேரிட்டது. அப்போது இம் மோதலுக்கு மூன்று வகையான காரணங்கள் கூறக் கேள்விப்பட்டேன்.

1. முதலாவது விளக்கத்தின்படி மாணவர்கள் ஒன்றியத்திற்கு சில சிங்கள மாணவர்கள் தெரிந்து எடுக்கப்பட்டமையினை சில சிரேஷ்ட மாணவர்கள் ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக மோதல் ஏற்பட்டது என்பதாகும்.

2. இரண்டாவது விளக்கத்தின்படி சில சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள் மதுவருந்தியதனை முஸ்லிம் மாணவர்கள் எதிர்த்ததன் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது எனப்பட்டது.

3. மூன்றாவது விளக்கம் அரசியல் போட்டியாளர்களிடையேயான கருத்து பாகுபாடுகளினால் ஏற்பட்ட மோதல் என்பதாகும்.

ஏற்கனவே இருந்த அரசியல் போட்டிகள் பொதுத் தேர்தல் காரணமாக மும்முரமடைந்துள்ள நிலையில், திருமதி பேரியல் அஷ்ரப் ஏனைய இனங்களிடையே கொண்டிருந்த பிரபல்யத்தினைப் பாதிக்கச் செய்து அவரது செல்வாக்கினைக் குறைப்பதற்காக ஏற்பட்ட மோதல் என்பதே இந்த மூன்றாவது வகையினதான விளக்கமாகும்.

தேசியத்தின் அடிப்படையிலான அரசியலுக்கு வளமான தளமாகவே கிழக்குப் பிரதேசம் அமையும் என்பதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தல் சான்று பகருவதாகவுள்ளது. தேர்தல் தொகுதியிலுள்ள வாக்காளர்களிடம் தம்மால் ஆற்றக்கூடிய தொண்டுகள் எவையெவை என முன்வைக்க முடியாது.

ஆனால், எதிர்கால வாய்ப்புகளையே நோக்கமாகக் கொண்ட வேட்பாளர்கள் அதுவும் நாட்டின் வேறு பகுதிகளில் இருந்து அங்கு வந்து குதித்தவர்கள்,மாவட்டம் சார்ந்த ஆர்வங்களுக்கு அப்பாற்பட்ட தேசியத்துவ போர்க்குரலை எழுப்பத் தலைப்பட்டுள்ளனர். “நாங்கள் துட்டகெமுனு சிங்களவர்கள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பானது சிங்கள வாக்காளர்களை நீங்கள் எந்தக் கட்சியை ஆதரித்தாலும் சரி ஆனால், முற்றாக சிங்கள வேட்பாளர்களுக்கே வாக்களியுங்கள் என வற்புறுத்தும் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தமையினை நான் அங்கு கண்டேன்.

சிங்கள வாக்குகளை சிதறவிடாது ஒன்று சேர்த்து அம்பாறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கான சிங்களப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவது இவ்வாறான கோரிக்கையினை முன்வைத்தமைக்குக் காரணமாகும்.

அம்பாறை ஊடக அமைப்பு மாகாண மட்டத்தில் செயற்படும் ஊடக நிறுவனங்களின் நிருபர்களுடன் ஏற்பாடு செய்திருந்த உரையாடலின் மூலம் அம்பாறையில் நிலவும் இனங்கள் தனிமைப்பட்டுக் காணப்படும் நிலைமை வெளித் தெரியவந்தது. பத்திரிகையாளர்கள் ஒரு குழுவாக அமர்ந்தபோது கலந்து சிதறிப்பரவி அமராது பிரிக்கப்பட்டவர்களாகவே அமர்ந்தனர். உரையாடலை ஏற்பாடு செய்திருந்தவர்களும் பத்திரிகையாளர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து ஒரே நேரத்தில் இரண்டு கலந்துரையாடல்களும் நடைபெறும் வண்ணம் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஒன்று சிங்களம் பேசுபவர்களுக்கு, மற்றையது தமிழ் பேசுபவர்களுக்கு. நான் உரையாற்றுவதற்கு முன்னர் அம்பாறை நிலைவரங்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக ஒரு முஸ்லிம் பத்திரிகையாளரிடம் அம்பாறை நிலைவரங்களைப் பற்றி விசாரித்தேன். அவர் சுற்றிலும் பார்வையைவிட்டு தனது குரலைத் தாழ்த்தி நாம் பேசுவதனை மற்றவர்கள் கேட்கக்கூடியதாயிருந்தால் அது பாதுகாப்பற்றது எனக் கூறினார்.

கருத்தரங்கத்தில் சிங்களப் பத்திரிகையாளர்களுக்கு நான் உரையாற்றுவதற்கான நேரம் வந்தபோது அவர்களால் சுதந்திரமாக அவர்களது கருத்துகளை வெளியிடும் (பேச்சு சுதந்திர) சூழல் உள்ளதா அல்லது அவர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படலாம் என்னும் உணர்வோடு உள்ளனரா என வினாவினேன்.

பத்திரிகையாளர்களில் ஒருவர் உடனடியாக தாம் அச்சுறுத்தல்களுக்குள்ளாகலாம் எனப் பதிலளித்தார். அத்துடன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடந்தவை என்ன என்பது பற்றிக் கூற ஆரம்பித்தார். நாம் முதலில் சற்று குழப்பமுற்றுப் போனேன். எனது வினாவை அவர் பிழையாக விளங்கிக் கொண்டார் என்பதை உணர்ந்தேன். நான் கேட்டபோது, எனது மனதில் அச்சுறுத்தல் பற்றிய வினா கொல்லப்பட்ட லசந்த விக்ரமதுங்க மற்றும் காணாமல்போனவர்களான பிரஹித் எக்னாலிகொட வலிமைமிக்க அரசாங்க அமைச்சர்களால் தாக்குதலுக்குள்ளாகியவர்கள் போன்றவர்கள் பற்றியதாகும்.

எவ்வாறாயினும் விரைவாகவே எனக்கு பத்திரிகையாளர் என்ன கூறவந்தார் என்பது விளங்கிவிட்டது. அவர் ஒரு சமூகத்திற்கும் மற்றையதற்கும் இடையிலான அச்சுறுத்தல் பற்றிப் பேச வெளிப்பட்டிருந்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டிருந்த சம்பவம் பற்றிக் கூறியபோது அம்பாறையில் முஸ்லிம் சமூகமே பெரியளவினதாக இருப்பதாகவும் அதனால் முஸ்லிம் சமூகம் ஏனையோர் மீது தன்னாதிக்கம் செலுத்தி அச்சுறுத்தி வருவதாகவும் கருத்துத் தெரிவித்தார்.

இத்தகைய அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டு சிங்கள மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் முஸ்லிம்களாயிருப்பதால் எவரொருவரும் இதுபற்றி அவர்களுக்காகப் பேச முன்வரவில்லை என்றும் கூறினார்.

இந்தக் கலந்துரையாடலின்போது ஏன் சிங்கள வாக்காளர்களை சிங்கள வேட்பாளர்களுக்கே வாக்களிக்கும்படி தூண்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன என்பதற்கான காரணம் தெளிவாகியது. அம்பாறை மாவட்டத்தில் சிங்களவரது விகிதாசாரம் அநேகமாக முஸ்லிம்களின் அளவினை அண்மித்ததாக இருந்தபோதிலும் பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும்போது சிங்களவர்களை விட முஸ்லிம் பிரதிநிதிகள் அதிகளவினராகி விடுகின்றனர் என்றும் அதற்குக் காரணம் சிங்கள வாக்காளர்கள் திருமதி பேரியல் அஷ்ரப் போன்ற முஸ்லிம் வேட்பாளர்களுக்கு தமது வாக்குகளை அளித்து சிங்கள வாக்குகளை சிதறடித்து விடுகிறார்கள் என்றும் எடுத்துக்காட்டினார்.

பெரும்பாலும் முஸ்லிம்களையே கொண்ட தமிழ் பேசும் முஸ்லிம் பத்திரிகையாளர்களிடம் நான் கலந்துரையாடியபோது இன ரீதியாக முனைவுபடுத்தப்பட்டுள்ள ஒரு நிலைமையில் எதிர்பார்க்கக்கூடிய வகையில் அவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட மனக்குறைகள் காணப்படுகின்றமையினையே கேட்டறிய முடிந்தது.

தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் நில குடியேற்றத் திட்டங்கள் தொடர்பான கொள்கைகள் சிங்களவர்களுக்கு சார்பாக நடைமுறைப்படுத்தப்பட்டதனால் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன ரீதியான விகிதாசாரம் இப்போது மாற்றமுற்று மொத்த சனத்தொகையில் சிங்கள சனத்தொகையின் விகிதாசாரம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டினார். இதனால் பாரம்பரியமாக அப்பிரதேசங்களில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் அனுபவித்து வந்த நிலவுரிமை தொடர்பான வாய்ப்புகள் தகர்க்கப்பட்டு அவை இப்போது சிங்களவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

இவற்றிற்கு உதாரணமாக அம்பாறையில் கடல்கோளால் பாதிக்கப்பட்ட நுரைச்சோலை எனும் இடத்தில் முஸ்லிம் மக்களுக்கு உதவுவதற்காக சவூதிஅரேபிய அரசாங்கம் வழங்கிய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினை எடுத்துக்காட்டினார். அத்திட்டத்தின் கீழ் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் அவற்றில் ஒரு பங்கினை கடல்கோளால் பாதிக்கப்படாத சிங்களவர்களுக்கும் கொடுக்கும்படி அரசாங்கம் வற்புறுத்தியுள்ளதாக கூறினார்கள்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான இவ்வாறான விமர்சனங்கள் கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில் அரசின் வெற்றிக்குச் சாதகமாக இல்லாது போகலாம். மறுபுறுத்தில் முஸ்லிம் பத்திரிகையாளர்கள் உள்ளூரில் உள்ள சிங்கள சமூகத் தலைவர்களைப் பற்றி நல்லார்வ வரவேற்புடன் கருத்துத் தெரிவித்தனர்.

அத்தலைவர்கள் அம்பாறை பிரதேச உள்ளூர்வாசிகளாகவும் வெளிப்பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட அரசாங்க அரசியல்வாதிகள் போலன்றி வேறுபட்டவர்கள் எனவும் அபிப்பிராயப்பட்டனர். ஒரு பத்திரிகையாளர் பதுறுகலை கோவிலின் பௌத்த பிக்கு கடல்கோளால் பாதிக்கப்பட்ட சிங்கள,தமிழ் மக்களைப் பகிரங்கமாகத் தனது கோவிலுக்கு அழைத்ததுடன், சிங்கள மக்களே அவர்களை வரவேற்குமாறு ஏற்பாடு செய்தமையினையும் நினைவுகூர்ந்து பாராட்டுத் தெரிவித்தார். அம்பாறையில் உள்ள இன்னுமொரு பௌத்த பிக்கினையும் இவ்வாறான காரியங்களுக்கு உதாரணமாக எடுத்துக் காட்டினார். அப்பிக்கு நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தில் கடல்கோளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு வீடுகள் வழங்குவதனை தடைசெய்யும் சிங்களத் தலைவர்களை குற்றஞ்சாட்டியுள்ளார். தான் இந்த வீடுகளை முஸ்லிம் மக்களுக்குக் கொடுப்பதனை எதிர்க்கப்போவதில்லை என்றும் பாதிப்புக்குள்ளாகிய முஸ்லிம் மக்கள் எங்கு செல்வார்கள் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் அரசாங்கம் போராடி வெற்றி பெற்றதன் பின்னர் இலங்கையில் முரண்பாடுகள் நீங்கி யுத்த ரணங்கள் ஆற்றப்படும் என்னும் நியாயபூர்வமான எதிர்பார்ப்பினைக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் இக்கருத்துத் தொடர்பாக இப்போது பிளவு ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாகவிருந்த முரண்பாடுகள் இப்போது ஓய்ந்துவிட்டபோதிலும் கடந்த காலங்களில் நிலவிய பிரிவுகள் இப்போதும் உயிர்த்துடிப்புடன் இருக்கத்தான் செய்கின்றன. முரண்பாடுகள் காரணமாக ஏற்பட்டிருந்த வன்முறை,சந்தேகம்,பிரிவுபட்டுள்ளமை என்பன சமூக, அரசியல் வாழ்வில் பதிக்கப்பெற்றுள்ளன. சமூகங்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகளை எவ்வாறு தொடர்ந்தும் அரசியல் தலைவர்கள் தமது இனக்குரோத நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதனை அம்பாறைக் கருத்தரங்கம் தெளிவுபடுத்திற்று. எனவே, யுத்தம் முடிவுற்ற இக்காலப்பகுதியில் சமாதானத்தைக் கட்டியெழுப்புதலும் முரண்பாடுகளை நீக்கி சமரசத்தை ஏற்படுத்துதலும் அத்தியாவசியமான தேவைகளாகும். துரதிர்ஷ்டவசமாக பிரதான அரசியல் அமைப்புகளின் தேர்தல் கொள்கை விளக்கங்களை எடுத்துப் பார்த்தால் அவற்றில் முரண்பாடுகளின் நிலைமாற்றம் பொறுத்து அரசியல் உடன்பாடு இல்லாதிருப்பதனையே காணக்கூடியதாகவுள்ளமை கவலைக்குரியதாகும்.

தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுத்துதல், முரண்பாடுகளை நீக்குதல் என்பன தொடர்பான முயற்சிகளின்போது ஏற்படும் பல சவால்களில் குறிப்பாக வேறான இனப் பிரிவினர்களிடையே மற்றைய இனத்தவர்களைப் பற்றிய சிறந்த புரிந்துணர்வினை ஏற்படுத்துதல் மிக முக்கியமான சவாலாகக் காணப்படுகின்றது.

1. எவ்வாறாயினும் இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியாகக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளது கூட்டுடன் சதித் திட்டம் உருவாக்கப்படுகிறது என்னும் அரசியல் பிரசாரம் பலமடைந்து வருவதனையும் காண முடிகிறது.

கடந்த காலத்தில் நிலவிய மனக்குறைகளை அரசியல் ரீதியாக ஏற்று அதன் மூலமாக முரண்பாடுகளை அகற்றவும் காயங்களை ஆற்றவும் வாய்ப்புகள் பற்றாக்குறையாகவும் வெகு தூரத்திலேயே காணப்படுவதாகவும் உள்ளன. இப்போதுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கான பொதுவான தீர்வுகளைக் கொண்டு வருவதற்காக இரு தரப்பினரும் இணைந்து செயற்படும் அணுகுமுறையினை மேற்கொள்வதனை அடைதல் பெரிதும் கடினமாகவே இருக்கும். அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் செயற்பாட்டு முறைகளையே அவர்களைப் பின்பற்றும் சமூகங்களின் அடிமட்ட அங்கத்தவர்களும் திரும்பவும் செய்யும் நிலைமை காரணமாக மென்மேலும் மக்கள் பிளவுபடுவதனையும் இன ரீதியாக முனைவாக்கம் கொண்ட வாக்களிப்பு பங்குகளையுமே ஊக்குவிப்பதாக உள்ளன. அரசியல் அதிகாரத்திற்காக அரசியல் தலைவர்கள் ஏற்படுத்திய காயங்களை கட்டுப்படுத்தி சுகப்படுத்துவதற்கு சமூக குழுக்கள் மிகக் கடுமையாக பாடுபட வேண்டியதே காலத்தின் தேவையாயுள்ளது.

கொழும்பிலிருந்து எமது கட்டுரையாளர் ஆதித்யன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*