TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழரின் உரிமைகளை நசுக்கும் மகிந்த சிந்தனாவாதம்

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று அரசாங்கம் சாதிக்க நினைப்பது என்ன?

* தமிழ்த் தலைமையைப் பலவீனப்படுத்துவதும், தான் நினைக்கும் அரைகுறையான ஒரு தீர்வை வழங்குவதும் தான் அரசாங்கத்தின் திட்டம் என்பது தெரிகின்றது. என விசனம் வெளியிட்டுள்ள தினக்குரல் நாளிதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கையில், பலவீனமான ஒரு தமிழ்த் தலைமை தன்னுடைய இந்த முயற்சிகளை நடைமுறைச் சாத்தியமாக்க உதவும் என்பது அரசின் கணிப்பு, அதற்காகவும், ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றியமைத்து அதிகாரத்தில் தொடர்வதற்காகவும்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது எனக் குறிப்பிடும் தினக்குரல் ஆசிரியர் பகுதியில்,

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை கீழ் வருமாறு

நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதுதான் தம்முடைய இலக்கு எனவும், அதன் மூலமாக அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்குத் தான் திட்டமிட்டிருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்.

சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் ஸ்ரேட் ரைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே இதனை மீண்டும் தெரிவித்திருக்கும் மகிந்த ராஜபக்ஷ, இனநெருக்கடியைத் தீர்ப்பதற்காக எவ்வாறான அணுகுமுறை தன்னிடம் உள்ளது என்பதையும் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

முக்கியமாக வடக்கு கிழக்கு இணைக்கப்படாது, மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது என்பதை மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியிருக்கின்றார்.

ஆக, இன நெருக்கடிக்கான நியாயமான ஒரு தீர்வைப் பொறுத்தவரையில், தற்போதைய ஆட்சியாளர்களிடமிருந்து எதனையும் எதிர்பார்க்க முடியாது என்பதைத்தான் ஜனாதிபதியின் இந்தப் பேட்டியும் உணர்த்தியிருக்கின்றது.

அப்படியானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் எதிர்பார்ப்பது எதற்காக என்ற கேள்வி எழலாம். அதேவேளையில், இனநெருக்கடி தொடர்பான அரசாங்கத்தின் அணுகுமுறை எவ்வாறானதாக அமைந்திருக்கும் என்பதும் ஆராயப்பட வேண்டிய ஒரு விடயமாகவே இருக்கின்றது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவைச் சந்தித்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்த கருத்து ஒன்று இவ்விடத்தில் கவனத்துகுரியதாக இருக்கின்றது.

இனநெருக்கடிக்குத் தீர்வொன்றைக்காண வேண்டுமானால், அது மகிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே முடியும் எனத் தெரிவித்த ஹக்கீம், சிங்கள மக்களுடைய ஏகோபித்த ஆதரவைக் கொண்ட ஒருவராக மகிந்த ராஜபக்ஷ இருப்பதுதான் இதற்குக் காரணம் எனவும் தன்னுடைய கருத்துக்கான நியாயத்தை விளக்கியிருக்கின்றார்.

இன நெருக்கடிக்கு நியாயமான ஒரு அரசியல் தீர்வைக்காண விரும்பினால் மகிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே அதனைச் செய்ய முடியும் என ஹக்கீம் அடித்துக்கூறியிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

கடந்த காலங்களில் இனநெருக்கடிக்குத் தீர்வைக்காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் இனவாதக் கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாகவே கைவிடப்பட்டது. தற்போதைய நிலையில் இனவாதம் பேசக்கூடிய கட்சிகள் அனைத்தும் மகிந்தவுடனேயே உள்ளன, அல்லது செயலிழந்துபோயுள்ளன. அத்துடன் சிங்கள மக்களுடைய ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றுக்கொண்ட ஒருவராகவே மகிந்த இருக்கின்றார். இந்த நிலையில் மகிந்தவினால் முன்வைக்கப்படும் தீர்வு ஒன்றுக்கு எதிராக மக்களைத் திரட்டிக்கொண்டு வீதியில் இறங்கிப் போராடக்கூடியளவுக்குப் பலம்வாய்ந்தவர்களாக சிங்களத் தலைவர்கள் யாரும் இல்லை.

ஜெனரல் சரத் பொன்சேகா தடுத்துவைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக மக்களை அணிதிரட்டி பலம்வாய்ந்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்கக்கூடிய நிலையிலேயே எதிர்க்கட்சிகள் இல்லை. இந்த நிலையில் அரசியல் தீர்வுக்கு எதிராக மக்களைத் திரட்டும் நிலையில் யாரும் இல்லை.

இதனால்தான் இனநெருக்கடிக்கு நியாயமான தீர்வு ஒன்றைக்கொடுக்க வேண்டுமாயின் அது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒருவரால் மட்டும்தான் முடியும் என்பதை ஹக்கீம் வெளிப்படுத்தியிருந்தார்.

இனநெருக்கடிக்கான தீர்வொன்றை முன்வைப்பதற்கான ஆதரவை சிங்கள மக்களிடமிருந்து மகிந்த ராஜபக்ஷ பெற்றிருக்கின்றார் எனக் குறிப்பிடும் மற்றொரு தமிழ் அரசியல் தலைவர், மகிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும் சிங்களப் பெரும்பான்மையின மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடுகின்றார்.

அதாவது, சிறுபான்மையினரின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய எந்தவொரு தீர்வையும் முன்வைக்கக்கூடிய சக்தி அல்லது அதிகாரம் மகிந்த ராஜபக்ஷவிடம் உள்ளது. இது கடந்த கால அரசியல் தலைவர்கள் எவரிடமும் இல்லாத ஒன்று!

தன்னுடைய இரண்டாவது பதவிக் காலத்துக்கும் தெரிவு செயப்பட்டுள்ள நிலையில், இனநெருக்கடிக்கு நியாயமான தீர்வொன்றைக் கொண்டுவருவது மகிந்த ராஜபக்ஷவுக்குக் கடினமான ஒன்றாக இருக்கப்போவதில்லை என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் உண்மையாக இருந்தாலும் கூட, இனநெருக்கடி தொடர்பாக மகிந்த ராஜபக்ஷவின் உண்மையான அணுகுமுறை என்ன என்பதிலேயே இதற்கான பதில் தங்கியிருக்கின்றது.

இனநெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பது உண்மைதான். ஆனால், நியாயமான தீர்வு ஒன்றை அரசாங்கம் முன்வைத்தால் தமிழ், முஸ்லிம் கட்சிகள் மட்டுமன்றி ஐ.தே.க. கூட அதற்கு ஆதரவளிக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். இருந்தபோதிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இலக்கு வைப்பது இனநெருக்கடிக்குத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்காகவல்ல!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதை நோக்கமாகக்கொண்டே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற அரசாங்கம் திட்டமிடுகின்றது. அல்லது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இரண்டு பதவிக்காலங்களுக்கு அதிகாரத்திலிருக்க முடியும் என்ற அரசியலமைப்பு விதிமுறையை மாற்றியமைத்து அதனை மேலும் ஒரு பதவிக்காலத்துக்கு அதிகாரத்திலிருப்பதற்கு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் சாவதற்கு ஆளும் கட்சி முயற்சிக்கலாம்.

இனநெருக்கடியைப் பொறுத்தவரையில் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுக்கொண்டவராக மகிந்த இருப்பதால் அவரால் எந்தவொரு தீர்வையும் நடைமுறைப்படுத்த முடியும் என ஹக்கீம் தெரிவித்திருந்தாலும், அதற்கு மறுபக்கம் ஒன்றும் உள்ளது. அதாவது இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றைக் கொண்டுவருவதில் மகிந்த ராஜபக்ஷவுக்குக்குள்ள விருப்பமே அது.

இனப்பிரச்சினைத் தீர்வு, ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பு என்பவற்றை பிரதானமாக முன்வைத்தே சந்திரிகா குமாரதுங்கவும் அதிகாரத்துக்கு வந்தார். 1994 ஆம் ஆண்டுத் தேர்தலில் 62 வீதமான மக்களின் ஆதரவுடன் சந்திரிகாவினால் அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடியதாக இருந்த போதிலும், தன்னுடைய 11 வருட ஆட்சிக் காலத்தில் அவரால் இந்த இரண்டில் எதனையுமே சாய முடியவில்லை. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை என்பது இதற்குக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வின் ஆதரவைப் பெற்று அதனைச் சாவதற்கான எந்தவொரு முயற்சியையும் சந்திரிகா பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஆக, சந்திரிகாவின் விருப்பமின்மையே இதற்கு உண்மையான காரணமாகக் கூறப்பட வேண்டும்.

தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரும் மகிந்த ராஜபக்ஷ இனநெருக்கடித் தீர்வில் எவ்வாறான அணுகுமுறையைக் கையாள்வார் என்ற கேள்வி எழுகின்றது.

தன்னுடைய முதலாவது பதவிக்காலத்தை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று இரண்டாவது பதவிக்காலத்தை உறுதிப்படுத்துவதிலேயே மகிந்த செலவிட்டார்.

போரில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குள்ள ஒருவராக வந்திருக்கும் மகிந்த ராஜபக்ஷ தமிழர்களுக்கு சலுகைகளைக் கொடுத்து அந்தச் செல்வாக்கை இழந்துவிடத் தயாராக இல்லை என்பதைத்தான் அவருடைய அண்மைக்காலக் கருத்துக்களின் மூலமாக உணர முடிகின்றது.

இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக என மகிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டு விட்டது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அது வெளியிடப்படவில்லை. எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய பேச்சுக்களில் அதனை அடிப்படையாகக் கொள்வதற்கு அரசாங்கம் முன்வருமா என்பது தெரியவில்லை.

தற்போதைய நிலையில் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் மூன்று விடயங்கள் எதிர்காலப் பேச்சுக்கள் எவ்வாறானதாக இருக்கும் என்பதையும் இனநெருக்கடி தொடர்பில் அரசின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதையும் ஓரளவுக்கு உணர்த்துவதாக இருக்கின்றது.

* ஒன்று ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்ட மகிந்த சிந்தனை பகுதி 2 இல், 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலேயே தீர்வு அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இரண்டு காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்கப்போவதில்லை என்பதை அண்மைக்காலப் பேட்டிகளில் மகிந்த ராஜபக்ஷ தெளிவாகத் தெரிவித்துவருகின்றார்.

இதனை விட பொதுத் தேர்தலில் தெரிவாகும் தமிழ்த் தலைமையுடன் பேசப்போவதாகவும் அவர் தெரிவித்துவருகின்றார். ஆனால், புலிகள் கேட்டதை அவர்கள் கேட்கக்கூடாது என பேச்சுக்களுக்கு இப்போதே ஒரு நிபந்தனையையும் வைக்கின்றார்.

தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதையும், மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில், மகிந்த ராஜபக்ஷவின் இந்த அறிவிப்பு தமிழ்த் தரப்பினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

ஆக, தமிழ்த் தலைமையைப் பலவீனப்படுத்துவதும், தான் நினைக்கும் அரைகுறையான ஒரு தீர்வை வழங்குவதும் தான் அரசாங்கத்தின் திட்டம் என்பது தெரிகின்றது. பலவீனமான ஒரு தமிழ்த் தலைமை தன்னுடைய இந்த முயற்சிகளை நடைமுறைச் சாத்தியமாக்க உதவும் என்பது அரசின் கணிப்பு, அதற்காகவும், ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றியமைத்து அதிகாரத்தில் தொடர்வதற்காகவும்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது எனக் கூறலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*