TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஊடகவியலாளர்களுக்கு ஈ-மெயில் ஊடாக அச்சுறுத்தல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களுக்கு ஈ-மெயில் ஊடாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்புக்கெதிரான பிரச்சாரத்தை உடன் நிறுத்துங்கள்
இலங்கை அரசின் சதித்திட்டத்திற்கு துணைபோகாதீர்கள்
தனிநபர்களின் விருப்புவெறுப்புகளுக்கு இடமளியாமல்
தமிழ்மக்களின் பொதுநலனில் கவனம் செலுத்துங்கள்
அழிந்தது இழந்தது போதும். இனியும் இடமளிக்க வேண்டாம்

என்ற மொட்டைக் கடிதப் பாணியிலான எச்சரிக்கை டென்மார்க்கிலிருந்து குகன் தம்பிப்பிள்ளை எனபவரால் தயாரிக்கப்பட்டு, சுவிசிலிருந்து துரைரட்ணம் இராமசாமி என்பவரால் தமிழ்த் தேசிய சார்பு ஊடகங்களுக்கு மின் அஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக இவர்கள் மேற்கொண்டுவரும் எச்சரிக்கை அச்சுறுத்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்களை இலங்கை அரசின் சதித் திட்டத்திற்குத் துணை போபவர்களாகச் சித்தரிக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் கூட்டமைப்பின் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான நிலை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு திருப்திகரமான எந்தப் பதிகல்ளையும் கொடுக்காமல், ஒற்றுமை என்ற பெயரில் எங்களை ஒட்டுமொத்தமாக சிங்கள நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள் கூட்டமைப்பினர் கூட்டங்கள் போட்டுக் கூறித் திரிவதும், அதற்காக அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதும் அரசியல் சார்ந்த, ஊடகம் சார்ந்த தர்மமாக இருக்காது என்பதே எனது தாழ்மையான கருத்து.

ஒற்றுமையாக முன்பு ஒரு காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் சிங்கள நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த அனுபவம் ஈழத் தமிழர்களுக்கு இருக்கிறது. தமிழீழ ஆணையுடன் கூட்டமாக சிங்கள நாடாளுமன்றம் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணி எதையெல்லாம் தமக்காகப் பெற்றுக் கொண்டது, அந்தத் தமிழாகளுக்கு எதைப் பெற்றுக் கொடுத்தது என்பதைத் தமிழ் மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான், கூட்டமைப்பு தன் சுயத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தினுள் தள்ளப்பட்டுள்ளது.

எல்லோரும் ஒன்றாகப் போவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உவப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. அதில் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கும், அதற்கான கால எல்லை எது? அது முடியாவிட்டால், செய்யக் கூடிய பரிகாரம் என்ன? என்பதெல்லாம் தமிழ் மக்களுக்குத் தெரிந்தே ஆக வேண்டும் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களது விருப்பம் யாராலும் நிராகரிக்கப்பட முடியாதது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.

மிதவாதத் தமிழ்த் தலைமைகளின் முப்பதாண்டு கால தகிடுதத்தங்களும், வாய் வீரமும்தான் தமிழீழ மக்களை இந்தியக் கரங்களில் சேர்த்து முள்ளிவாய்க்காலில் அழிய வைத்தது என்பதை யாராலும் நிராகரிக்க முடியாது. அதே போன்றே சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு மீண்டும் தமிழீழ மக்களை இந்தியக் கொடுங் கரங்களில் சிக்க வைப்பதற்கு நாங்கள் உடந்தையாவதற்கும் நாங்கள் தயாராக இல்லை.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் கிடைத்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியத் தலைமையைக் கைப்பற்ற ஓடித் திரிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த மக்களுக்காகப் போராடிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைப் புறக்கணித்ததன் காரணத்தை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்தியா அதை விரும்பவில்லை. அதற்கு அனுமதிக்கவில்லை. இந்தியாவின் கட்டளைப்படியே கூட்டமைப்பில் எஞ்சியிருந்த தமிழ்த் தேசிய உணர்வாளர்களான கஜேந்திரன், பத்மினி, கஜேந்திரகுமார் ஆகியோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தியாவில் அலுவலகம் அமைத்தபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப் போகின்றது என்பது எமக்கு நன்றாகவே புரிந்துவிட்டது.

இந்தியாவால் ஈழத் தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது. இந்தியாவிடமிருந்துதான் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும். ஆகையால், மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏற்படாமல் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து காப்பாற்ற வேண்டியது தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் எம்மைப் போன்ற ஒவ்வொருவரது கடமையாகவே உள்ளது.

இந்தியா எங்களிடம் வந்தபோது நாங்கள் இழந்தது கொஞ்சமாக இருந்தது.
இப்போது எங்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை, ஆனாலும்
இந்தியா வருகின்றது… ஏனென்றால் எங்களிடம் இன்னமும் உயிர்கள் மிச்சமிருக்கின்றது
சிங்கள தேசத்தை மிரட்டுவதற்கு எங்கள் இரத்தம் இன்னமும் அதற்குத் தேவைப்படுகின்றது!

நாங்கள் அழிந்தது போதும்! இந்தியாவிடம் எங்களை அடகு வைப்பதை நிறுத்திவிடுங்கள்!

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*