TamilSpy

பொழுது போக்கு இணையம்…

“இலங்கை இராணுவ வரலாற்றில்” முதல் முறையாக

“இலங்கை இராணு வரலாற்றில்” முதல் முறையாக அதன் முதன்மைத் தளபதியாக இருந்த ஒருவர் இராணுவ நீதிமன்றத்தில்? அனுமதிக்குமா இராணுவத்தரப்பு.

இலங்கை இராணுவத்தின் வரலாற்றில் அதன் தளபதியாக இருந்த ஒருவர் முதல்முறையாக இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த வருடம் இதே காலப்பகுதியில் வெற்றிகரமான ஒரு தளபதியாக அரசாங்கத்தினால் மதிக்கப்பட்டு வந்த ஒருவர்.

ஆனால் இப்போது அவர் மீது இரண்டு இராணுவ நீதிமன்றங்களில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

கடந்த 16ம், 17ம் திகதிகளில் இந்த இராணுவ நீதிமன்றங்கள் உத்தியோகபூர்வமாக விசாரணைகளை ஆரம்பித்திருந்தன. ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூன்று இராணுவ அதிகாரிகளைக் கொண்ட- இரண்டு இராணுவ நீதிமன்றங்கள் ; (courts martial) அமைக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜயசூரியவின் பரிந்துரைக்கு அமைய- முப்படைகளினதும் பிரதம தளபதியான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்த இரு இராணுவ நீதிமன்றங்களுக்குமான நீதிபதிகளை நியமித்துள்ளார்.

இராணுவச் சட்டங்களை மீறிச் செயற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கடந்த மாதம் 8ம் திகதி இராணுவப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா, கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அங்கு ஜெனரல் சரத் பொன்சேகா மீத விசாரணைகள் நடத்தப்பட்டதுடன்- அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய சாட்சியங்களின் தொகுப்பு தயாரிக்கப்பட்டது. இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க 22 நாட்கள் 35 பேரிடம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்த சாட்சியகங்களின் தொகுப்பு தயாரிக்கப்பட்டது.

இது இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து அவர் இராணுவ நீதிமன்றத்தை நியமிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்குப் பரிந்துரை செய்திருந்தார்.

இதையடுத்தே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இரு இராணுவ நீதிமன்றங்களை அமைத்துள்ளார்.

இரண்டு இராணுவ நீதிமன்றங்களிலும் நீதிபதிகளாக ஒரே அதிகாரிகள் குழுவே பணியாற்றவுள்ளது.

இந்த இராணுவ நீதிமன்றத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் எச்.எல்.வீரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இராணுவத்தின் வரவுசெலவு மற்றும் நிதி முகாமைத்துவப் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றுகிறார்.

இராணுவ நிதீமன்றத்தின் ஏனைய உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் ஏ.எல்.ஆர். விஜேதுங்க, மேஜர் ஜெனரல் டி.பி.ஆர்.பி. ஜெயதிலக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேஜர் ஜெனரல் ஏ.எல்.ஆர். விஜேதுங்க இயந்திர பொறியியல் பிரிவின் தளபதியாகவும், குவாட்டர் மாஸ்டர் ஜெனரலாகவும் பதவி வகிப்பவர்.

அதேவேளை மேஜர் ஜெனரல் டி.பி.ஆர்.பி. ஜெயதிலக சிங்கப் படைப்பிரிவின் பிரதம தளபதியாக இருப்பவர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இருந்து இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்.

இந்த இராணுவ நீதிமன்றத்துக்கு சட்ட உதவிகளை வழங்க கடற்படையைச் சேர்ந்த ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ.ஜே.எஸ்.பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவருமே அண்மையில் தான் மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றவர்கள்.

இவர்களில் யாருமே மூத்த மேஜர் ஜெனரல்கள் அல்ல. கடந்த வருட நடுப்பகுதிக்குப் பின்னரே- அதாவது ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகப் பணியாற்றிய காலத்துக்குப் பின்னரே மேஜர் ஜெனரலாகப் பதவிஉயர்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இராணுவ நீதிமன்றங்களின் விசாரணைகள் கடற்படைத் தலைமையகத்திலேயே இடம்பெறவுள்ளன. ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த ஏழு குற்றச்சாட்டுகளும் இரண்டு இராணுவ நீதிமன்றங்களிலும் விசாரணைக்கு எடுக்கப்படும்.

சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டமைக்கு எதிராக ஒரு இராணுவ நீதிமன்றத்திலும், இராணுவத்துக்கான ஆயுத தளபாடக் கொள்வனவு மற்றும் இராணுவ விதிமுறைகளை மீறியமைக்கு எதிராக மற்றொரு நீதிமன்றத்திலும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

கடந்த 16ம் திகதி ஜெனரல் சரத் பொன்சேகா மீது முதலாவது இராணுவ நீதிமன்றில்- சேவையில் இருந்து கொண்டே அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

* இராணுவச் சட்டத்தின் 124வது பிரிவின் கீழ் ஒரு குற்றச்சாட்டும், 102 (1)வது பிரிவின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளுமாக மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகள் குறித்த முதலாவது இராணுவ நீதிமன்று விசாரணைகளை மேற்கொள்ளும்.

நேற்று 17ம் திகதி இரண்டாவது நீதிமன்றின் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இராணுவ சட்டங்களை மீறியும், உரிய அதிகாரிகளின் ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாமலும் ஆயுத தளபாடங்களைக் கொள்வனவு செய்தது தொடர்பாகவே இந்த நீதிமன்றில் விசாரணைகள் நடைபெறவுள்ளன.

ஜெனரல் சரத் பொன்சேகா மீது இராணுவச் சட்டத்தின் 109 (ஈ) பிரிவின் கீழ், நான்கு குற்றச்சாட்டுகள் இந்த நீதிமன்றில் சுமத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட இராணுவ நீதிமன்று தொடர்பாக- ஜெனரல் சரத் பொன்சேகா தரப்பு ஏதேனும் உறுதியானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான ஆட்சேபனையைத் தெரிவித்தால்- மாற்று ஏற்பாடாக செயற்படுவதற்கு வசதியாக மேலும் மூன்று இராணுவ அதிகாரிகள்; -காத்திருப்பு உறுப்பினர்களாக (Waiting Members) நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் யார் என்ற விபரத்தை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. தேவைப்பட்டால் மட்டுமே அவர்களின் விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும்.

ஜெனரல் சரத் பொன்சேகா மீது இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்த முடியாது என்றும், அவரை விசாரணை செய்ய அவரது தரத்துக்கு சமமான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என்றும் எதிரக்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியின் பதவித் தரத்துக்கு (Rank) சமமான- சேவையில் இருக்கின்ற அதிகாரிகளையே இந்த இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்க முடியும். எனினும் அவ்வாறு சமமான தரத்தைக் கொண்ட அதிகாரிகள் சேவையில் இல்லாத நிலையில் அதற்குக் குறைவான தரத்தைச் (Law Rank) சேர்ந்த அதிகாரிகளை இராணுவ நீதிமன்றத்துக்கு நியமிக்க முடியும்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஈடான பதவித் தரத்தில் இராணுவத்தில் எந்த அதிகாரியும் இல்லை. விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் றொசான் குணதிலக மட்டுமே இருக்கிறார்.
முன்னதாக முன்னாள் இராணுவத் தளபதிகளான ஜெனரல் சாந்த கொட்டேகொட மற்றும் ஜெனரல் றொகான் தளுவத்தை போன்றோர் இராணுவ நீதிமன்றத்துக்கு நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அவர்கள் சேவையில் இல்லாதபோது இராணுவ நீதிமன்றில் நீதிபதியாகப் பணியாற்ற முடியாது.

தற்போது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக திரட்டப்பட்டுள்ள சாட்சியங்களின் தொகுப்பு இராணுவ நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் போது அவருக்கும் வழங்கப்படும்.

ஜெனரல் சரத் பொன்சேகாவைப் பழிவாங்குவதற்கு அரசாங்கம் முற்படுவதாகவும் ஒருதலைப்பட்சமான தீர்ப்பை வழங்குவதற்காகவே அவர் மீது இராணுவ நீதிமன்றில் விசாரணைகள் நடத்தப்படவிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழாமல் இல்லை.

ஆனாலும் இந்த விசாரணைகள் ஒருதலைப்பட்சமானதாக இருக்காது என்கிறது அரசாங்கம். ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் வாதிடுவதற்கு- தான் விரும்பும் சட்டத்தரணி ஒருவரை நியமிக்கவும், விசாரணைகளின் போது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணைகளைச் செய்வதற்கும், தனக்காக வாதிடுவதற்காக தான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காக தனது நண்பர் ஒருவரை முன்மொழியவும் முடியும்.

அதைவிட இராணுவ நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்திலோ உயர் நீதிமன்றத்திலோ மனுத்தாக்கல் செய்யலாம்.

எனவே ஜெனரல் சரத் பொன்சேகா தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபிக்க முடியுமானால் அதைச் செய்வதற்கு எத்தனையோ வழிகள்- வசதிகள் இருப்பதாகக் கூறுகிறது அரசாங்கம்.

இலங்கை இராணுவத்தைப் போன்று ஒழுக்கம் நிறைந்த இராணுவம் உலகில் இல்லை என்றும்- அது உலகின் மிகச்சிறந்த இராணுவம் என்றும் அண்மைக் காலங்களில் அரசியல்வாதிகள் சூட்டிய புகழாரத்துக்கு இந்த விசாரணைகள் களங்களத்தை ஏற்படுத்தப் போவது உறுதி.

அதாவது நாட்டின் முன்னாள் இராணுவத் தளபதியே இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்படுவது அத்தகையதொரு நிலையைத் தான் வெளிப்படுத்தப் போகிறது.

சத்திரியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*