TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கை மீண்டும்

இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கையை மீண்டும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தமிழ் மக்கள்.

கடந்த மாதம் 9 ஆம் திகதி கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் மீண்டும் கூடி அவசரகாலச்சட்டத்தை நீடித்துள்ளது.

கடந்த மே மாதம் போர் நிறைவுபெற்று விட்டதாக அரசாங்கம் தெரிவித்த பின்னர் ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் அவசர காலச்சட்ட நீடிப்பை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்வது அரசாங்கம் மீதான விமர்சனங்கள் அனைத்துலக மட்டத்தில் அதிகரித்துள்ளது.

இலங்கையில் நடைமுறையில் உள்ள அவசரகாலச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என ஏறத்தாழ 300,000 ஈழத்தமிழ் மக்களை கொண்டுள்ள கனடா கேட்டுக் கொண்டுள்ளது. அவசரகாலச்சட்டத்தின் நடைமுறை தான் இலங்கையில் நடைபெற்றுவரும் பெருமளவான வன்செயல்களுக்கு காரணம் என மேற்குலகம் நம்புகின்றது.

கனடாவின் இந்த அறிவித்தலின் பின்னர் அமெரிக்காவும் தனது வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் இலங்கையில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அது மட்டுமல்லாது கடந்த வாரம் ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு குழு ஒன்றை அமைப்பது தொடர்பில் மேற்கொண்ட கருத்தும் இலங்கை அரசுக்கு மிகப்பெரும் சங்கடமாக அமைந்துள்ளது.

எனினும் பான் கீ மூன் மீதான நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்து நெடுநாளாகிவிட்ட நிலையில் இந்த அறிக்கை தமிழ் மக்கள் மத்தியில் அதிக கவர்ச்சியை ஏற்படுத்தவில்லை. மேலும் பான் கீ மூன் தனது பதவிக்காலத்தின் நீடிப்புக்காகவே தற்போது ஒரு அறிக்கையை விடுத்துள்ளதாக தென்னிலங்கை பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான விவகாரத்தில் ஆசிய நாடுகள் ஒரு புறமாகவும், மேற்குலக நாடுகள் மறுபுறமாகவும் அணிவகுத்துள்ளன. மேற்குலகம் ஒரு சிறு அழுத்தத்தை இலங்கை அரசு மீது ஏற்படுத்த முனைந்தாலும் அவற்றை உடனடியாகவே நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை ஆசிய நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

உதாரணமாக இலங்கை மீதான பொருளாதார அழுத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் ஆரம்பமாகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் நிறுத்தம் பார்க்கப்பட்டது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் அதனை அறிவித்து சில வாரங்கள் கடந்த நிலையில் இலங்கை அரசுக்கு ஐப்பான், சீனா, இந்தியா ஆகிய நாடுகள் கடந்த வாரம் ஏறத்தாழ 600 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளன. கடந்த புதன்கிழமை சீனா, இலங்கை அரசுக்கு 290 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியிருந்தது. ஆச்சரியப்படும் விதமாக அதே நாள் இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியும் இலங்கைக்கு 67.8 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கி யிருந்தது.

அதன் பின்னர் கடந்த வியாழக் கிழமை (11) ஐப்பான் அரசு இலங்கைக்கு 250 மில்லியன் டொலர் கடன் உதவியை வழங்கியுள்ளது. இலங்கை அரசுக்கு படைத்துறை, பொருளாதார மற்றும் அரசியல் வழிகளில் சீனா உதவிகளை மேற்கொண்டு வருகையில் அதற்கு போட்டியாக இந்தியாவும் களமிறங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (6) இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார செயலாளர், இலங்கை அரச தலைவரின் தேர்தல் வெற்றி தொடர்பில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், குறிப்பிட்ட சில தமிழ் கட்சிகளையும் சந்தித்து விட்டுச் சென்றுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பிள்ளையானை சந்தித்து அவரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்த நிருபமா ராவ் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், மாவை சேனாதி ராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து சம்பந்தனை தேர்தலின் பின்னர் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் இந்த நகர்வுக்கான காரணம் என்ன? தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என இந்தியா தெரிவித்து வரும் கருத்துகளில் உண்மை உள்ளதா? என்ற கேள்விகள் அதிக மக்களில் மனங்களில் எழலாம். ஆனால், உண்மை என்பது மறுதலையானது. நிருபமா ராவின் செயற்பாடுகள் இந்தியாவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளன.

அதாவது, தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு வழங்க திட்டமிட்டுள்ள அதிகாரங்களற்ற மாகாணசபையைத் தான் இந்தியா தீர்வாக முன்வைக்கப்போகின்றது. கிழக்கையும் வடக்கையும் தனி அலகுகளாக நிரந்தரமாக நிறுத்திவிட இந்தியா முயல்கின்றது. பொதுத்தேர்தல் நிறைவுபெற்றதும், வடமாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. அங்கும் அரசுக்கு சார்பான ஒருவர் நிறுத்தப்படுவார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எவ்வாறு தமிழ்க் கட்சிகள் போட்டியிட முடியாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டதோ அவ்வாறான ஒரு சூழ்நிலை வடக்கில் ஏற்படுத்தப்படலாம்.

வடக்கிலும் கிழக்கிலும் அமைக்கப்படும் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களற்ற தீர்வுகள் வழங்கப்பட்டு விட்டதாக இலங்கை அறிவிக்கும் போது அதனை வரவேற்பதற்கு இந்தியா தற்போதே தயாராகி விட்டது. இந்த அறிவிப்பின் மூலம் இலங்கை தொடர்பான மேற்குலகத்தின் நகர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இந்தியா முயன்று வருகின்றது. தற்போது சீனாவின் அழுத்தங்களினுள் சிக்கிக்கொண்டுள்ள இந்தியா, புதிதாக மேற்குலகத்தின் மூலம் மற்றுமொரு அழுத்தம் தனது கொல்லைப்புறத்தில் வருவதை விரும்பவில்லை. மேற்குலகத்துடன் அனுசரித்துப் போகும் போக்கை அண்மைக்காலமாக இந்தியா கொண்டுள்ள போதும், அவர்களை தூரத்தில் வைத்து பார்க்கவே இந்தியா விரும்புகின்றது.

ஆனால், இந்தியாவினதும், இலங்கையினதும் இணைந்த நடவடிக்கைகளில் இருந்து தமிழ் இனம் தமது உரிமைகளை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் அவர்கள் முன் தற்போது எஞ்சியிருப்பது இரு வழிகள் தான். எதிர்வரும் பொதுத்தேர்தலில் கொள்கைப்பற்றுள்ள தேசியவாதிகளை ஆதரிக்க வேண்டும். இரண்டாவது புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஊடாக மேற்குலகத்துடன் ஏற்பட்டுள்ள பிணைப்புகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் நாம் இரு நன்மைகளை எட்ட முனையலாம். அதாவது, மேற்குலகத்தின் ஆதரவுகளைப் பெறுவதன் ஊடாக எமது உரிமைகள் தொடர்பில் அனைத்துலக மட்டத்தில் ஒரு நியாயமான தீர்வை வேண்டி நிற்கமுடியும், எந்த அழுத்தங்களுக்கும் உட்படாத சூழலில் இயங்கிவரும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் கொள்கைகளை அனைத்துலகம் புறம்தள்ள முடியாத நிலையை ஏற்படுத்தலாம்.

இரண்டாவதாக தற்போதைய நடவடிக்கைகளில் இந்தியா தோல்வி கண்டால் மீண்டும் ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச அது முற்படும், ஆனால், அப்போது நாம் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்படாது, எமது நிகழ்ச்சி நிரலுக்குள் இந்தியாவை கொண்டுவரமுடியும்.
அதற்கான உதாரணத்தை இலங்கை அரசு பல முறை எமக்கு கற்றுத் தந்துள்ளது. அதாவது, இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு இலங்கை, இந்தியாவின் காலடிக்கு ஒருநாளும் செல்வதில்லை. அது சீனா, பாகிஸ்தான் என ஓடுவதுண்டு. அவ்வாறு எதிர்த்தரப்பிடம் ஓடும் இலங்கையை அரவணைத்துக் கொள்ள இந்தியா தான் பல தடவைகள் இறங்கி வந்ததுண்டு.

இந்த கருத்தைத் தான் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் சி.வரதராஜன் முன்வைத்துள்ளார். அதாவது “இந்தியத் தரப்போடு பேசவேண்டும் என்பதில் எமக்குக் கருத்துவேறுபாடு இல்லை. ஆனால், நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் தோற்றுப் போய்விட்டோம் என்ற அடிப்படையில் இந்தியாவிடம் சரணாகதி அடையமாட்டோம். எமக்கு என்ன தேவை என்பது தொடர்பாக இந்தியாவோடு பேசுவோம். மாறாக இந்தியாவின் மனதை நோகடிக்கக்கூடாது இந்தியா எமக்குத் தர விரும்புவதையே நாம் அவர்களிடம் கேட்கவேண்டும் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் நாம் இல்லை’ என தெரிவித்துள்ளார். எனவே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலும் இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கையை முறியடிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை எமக்கு வழங்கப்போகின்றது. அதனை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் சரியாக பயன்படுத்துவதன் ஊடாக தற்போது இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முனைவாக்கத்தை எமக்கு சாதகமாக்கி எமது உரிமைகளை பெற்றுவிடலாம் என்பதை நாம் நிராகரிக்க முடியாது.

-வேல்ஸிலிருந்து அருஷ்

நன்றி்:வீரகேசரி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*