TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தாயகம் எதிர்கொள்ளும் அபாயம் நிறைந்த நிலவிழுங்கல்

உயிரோடு போராடிய தமிழ் மக்கள் தற்போது வாழ்வோடு போராடும் சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர். போர் நடைபெற்ற காலத்தில் நில விழுங்கல் நடவடிக்கை ஆயுத முனையில் முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறு விழுங்கப்பட்ட நிலத்தினை முழுமையாய் தமிழ் மக்களிடம் இருந்து பிரித்தெடுப்பதற்கான அதி தீவிர முனைப்புக்கள் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இரண்டு வகைளில் முன்னெடுக்கப்படுகின்றன. ஒன்று உடனடியான அபகரிப்பு மற்றையது நீண்டகால அடிப்படையில் படிப்படியாக நிலம் விழுங்கல் நடவடிக்கைகள்.

முதலாவது வகையின் அடிப்படையில் உடனடியான அபகரிப்பு அல்லது நிலம் விழுங்கல் நடவடிக்கைகளை நோக்கினால் தமிழர் தாயகத்தின் கடற்கரையோரங்கள் சூறையாடப்படுகின்றன. பாதுகாப்பு என்ற காரணங்களைக் கூறிக் கொண்டு பல நூறு ஏக்கர் நிலப்பரப்புக்கள் கையகப்படுத்தப்படுகின்றன. அவற்றில் கடற்படைத் தளங்கள் அமைக்கப்படும். அதனை அண்டிய பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயம் ஆக்கப்படும்.

இதேபோன்று படை முகாம்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மக்களது பல ஏக்கர்கள் நிலப்பரப்புக்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
இதேபோன்று மன்னாரின் முசலிப் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 600 ஏக்கர் நிலப்பரப்பு வலிந்து அபகரிக்கப்பட்டு முஸ்லிம் மக்களே அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதே போன்று மன்னாரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட மற்றொரு பகுதியில் 1000 ஏக்கர் நிலப்பரப்பு அபகரிக்கப்பட்டு அங்கு ஆயிரம் கடற்படையினரின் குடும்பங்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றவண்ணம் உள்ளன.

இதனைவிடவும் யாழ்ப்பாணத்தில் சிங்களவர் காணிகளை பணம் கொடுத்துக் கொள்வனவு செய்கின்ற நடவடிக்கையும் தீவிரம் பெற்றுள்ளது. உண்மையில் இந்த நடவடிக்கைகளில் தென்னிலங்கையில் மிக உயர்ந்த தொழில் அதிபர்கள் முதல் சாதாரண மக்கள் வரையில் ஆர்வம் காட்டிவருகின்றனர். யாழ். நகரப்பகுதி மற்றும் யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளை அண்மித்த பகுதிகளில் காணப்படும் கடைத் தொகுதிகள், மற்றும் பெறுமதி மிக்க வெற்றுக் காணிகளைக் கொள்வனவு செய்கின்ற அதேவேளை யாழ்ப்பாணத்தின் கிராமப்புறம் முதல் நகர் வரையான பகுதிகளில் காணப்படும் வீட்டு வளவுகள், காணிகளைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன. இதன் அடிப்படையில் பல காணிகள், கடைகள் விற்பனையாகியும் உள்ளன.

நீண்ட காலத்தை நோக்கிய நிலம் விழுங்கல் நடவடிக்கை என்பதுவும் தீவிரமாக முன்னெடுக்கப் பட்டுவருகின்றது. இதனை முன்னெடுப்பதற்கும் நுட்பமான வழிமுறைகள் கையாளப்படுகின்றன. பிரதானமாக தமிழர் தாயகப் பகுதிகளில் தென்னிலங்கையின் தனியார் வங்கிகளின் ஆதிக்கம் என்பது தற்போதைய சூழலில் மிகவும் அதிகரித்துள்ளது. இந்த வங்கிகள் மக்களுக்கு இலகு கடன்களை மிகப் பெறுமதியான தொகைகளை வழங்குகின்றன. கடன்களுக்கு பொறுப்பாக மக்களினுடைய காணி உறுதிகள் பெறப்படுகின்றன. இது உண்மையில் நீண்ட காலத்தை இலக்குவைத்த நகர்வாகவே பார்க்கவேண்டியது. காரணம் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மக்களால் மிக அதிகமான கடன் தொகையை மீளச் செலுத்தி முடிப்பது என்பது எந்தளவிற்குச் சாத்தியம்? அவர்கள் அவ்வாறு தமது கடனை மீளச் செலுத்தத் தவறும் பட்சத்தில் அந்தக் காணிகளை அபகரித்துக் கொள்வதே அந்த வங்கிகளின் பிரதான நோக்கமாக உள்ளமையை அவதானிக்கலாம்.

இதனைவிடவும் தமிழர்தாயகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சிங்கள மொழியே முதன்மையாகக் கொண்டதாக பெயர்ப்பலகைகள் அமைக்கப்படவேண்டும். படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் சிங்களவர்களுக்கே சொந்தமானவை இதனை கவனத்தில் கொண்டு தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் என்ற அச்சுறுத்தல் செயற்பாடுகள் தற்போது மன்னார் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை பௌத்த விகாரைகள் ஒவ்வொரு இடத்திலும் நிறுவப்படுகின்றன. அவ்வாறு நிறுவப்படுகின்ற பௌத்த விகாரைகளையும், படையினரின் நினைவாக அமைக்கப்பட்டு வருகின்ற நினைவுச் சின்னங்களையும் காலப்போக்கில் காரணங்காளகக் காட்டி தமது என்று உரிமை கோரும் ஆபத்து தற்போது தாயகத்தில் உணரப்பட்டுள்ளது.

எண்பதுகளில் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலையின் கொக்குளாய், கொக்குத்தொடுவாய் உட்பட்ட பகுதிகள் இன்னமும் மக்களின் பார்வைக்குக் கூட அனுமதிக்கப்படவில்லை. அந்தப் பகுதிகள் முற்று முழுதாக

மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அடையாளம் காணப்படாத அளவிற்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை தெரிந்ததே.

அதேபோன்று திருகோணமலையில் மிக வேகமாக இடம்பெற்றுவருகின்ற நிலவிழுங்கல் நடவடிக்கைகள் திருகோணமலை தேர்தல் தொகுதியில் ஒரு தமிழர் பிரதிநிதித்துவமே சாத்தியம் என எதிர்வு கூறப்படுகிறது. அவ்வாறான நிலையில் தற்போதைய தேர்தலுக்கான போட்டி நிலையால் அது கூட கேள்வி ஆகலாம் என்ற அபாயம் எழுந்துள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றமை மூலம் அங்கு காணப்படுகின்ற தமிழ் மக்களின் விகிதாசாரம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை அவதானிக்கலாம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தமிழர் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளமுடிந்திருந்தது.

இதனைவிடவும் அம்பாறை மாவட்டத்தில் சிங்கள, முஸ்லிம் பெரும்பான்மை அதிகரிப்பானது தமிழ் மக்களது நில அளவு அல்லது அவர்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பின் விகிதாசாரம் என்பது மிக குறைந்த அளவிலேயே காலப்போக்கில் மாறக்கூடிய அபாயம் உணரப்படுகின்றது.

இணைந்த வடக்கு கிழக்கு, தமிழர்களின் தாயகம் என ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டாலும் கூட தமிழர்களது பெரும்பான்மையில்லாத பிரதேசங்களாக மாறிக்கொண்டிருக்கும் தமிழர்களின் நிலங்களால், தமிழர்களது தலைவிதியை தமிழர்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் என விடப்பட்டாலும் கூட, அவ்வாறு தமிழர்களது அரசையோ அல்லது தமிழர்களது நிர்வாகத்தையோ ஏற்படுத்தமுடியாத நிலையே உள்ளது. இதனை அனைத்து தமிழர்களும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

எல்லாமும் இழந்து நிற்கும் மக்கள் இன்னும் இருக்கும் எஞ்சிய எல்லாவற்றையும் இழக்கும் அபாயத்தை நோக்கியே நகர்வதாகவே தற்போதுள்ள தாயக அரசியல் முன்னெடுப்புகள் இருக்கின்றன. தமிழர்கள் தங்கள் பலம் என்ன தமது பலவீனம் என்ன என்பதை புரிந்துகொண்டு சாத்தியமான அரசியல் நகர்வுகளை ஒருமுகப்பட்டு எடுப்பதன் மூலமே தமிழர்களது ஆட்சியை தமிழர்களது தேசத்தில் ஏற்படுத்தமுடியும். அதனை புரிந்துகொள்வார்களா?

எழில்க்கண்ணன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*