TamilSpy

பொழுது போக்கு இணையம்…

உலகத் தமிழ் செம்மொழி மாநாடும் அதற்கான அவசியமும்

தமிழ் நாடு அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கருணாநிதிக்கு பல அனுகூலங்களை பெற்றுத் தரும் என்பது மட்டும் உண்மை. அதற்கான தேவை கருணாநிதிக்கு என்றும் இல்லாதவாறு இப்பொழுது தேவை.

தேர்தல் நெருங்கும் அதேவேளை தான் நிச்சயம் அடுத்த முதல்வராக வருவதற்கான சாத்தியக்கூறுகள் அருகிவரும் வேளையில் குறிப்பாக அவரின் வயது தேர்தலில் முன்னையப் போல செய்ய இடம் தராது. அத்துடன் தான் வாழும் காலத்திலயே தனது பிள்ளைகளை அரசியலில் நிரந்தர இடம் பெற்றுத் தந்துவிட வேண்டும் என்ற காரணத்தினாலும் குறிப்பாக அவரின் தனயன் ஸ்டாலினை எப்படியாவது வரும் தேர்தலில் தனது கட்சியை வெற்றிபெற வைத்து ஸ்டாலினை முதல்வராக்க கருணாநிதி ஏற்கனவே திட்டம் வகுத்துள்ளார்.

அதற்கு அவருக்கு பல உலகத் தமிழ் மாநாடு போன்ற மேடைகள் தேவை காரணம் தனது பிள்ளைகளை இந்த மேடைகளில் பெருமையாகக் கூறி பத்திரிகைகளில் முதற் பக்க செய்திகளாக வரவைத்து தமிழ் நாட்டின் மக்களை சென்றடையவைத்து ஸ்டாலின் மற்றும் அவரின் மற்றப் பிள்ளைகளையும் அரசியலில் ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுத் தர உறுதிபூண்டுள்ளார்.

அதற்கேற்ப தனது சாணக்கிய வேலைத்திட்டங்களை அமுல்படுத்த ஏற்கனவே நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். விளம்பரப்பலகைகளில் இந்த மாநாட்டை தமிழின் தொன்மையை விளம்பரப்படுத்துவதற்குப் பதில் தனது மற்றும் தன் பிள்ளைகளின் பெயர்களை முன்நிறுத்தியுள்ளார். இந்த மாநாட்டின் செயற்குழு முன்னணி உறுப்பினர்களாக ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஏற்கனவே முதல் இடம் பிடித்து விட்டார்கள். கவிஞர் என்ற பெயரில் அவர் பிற முன்னணி தமிழ் கவிஞர்களைப் பின் தள்ளிவிட்டார்;.

ஏன் பேராசிரியர்களுக்கு இல்லாத முன்னணி பல வழக்குகள் இருந்தும் அவைகள் எல்லாம் கிழித்து எறியப்பட்டு இன்றும் தான் ஒரு நிரபராதி என்ற தோரணையில் சென்னை மாநகர முதல்வராக இருந்து பின்னர் கருணாநிதியினால் துணை முதல்வர் பதவியுடன் மேலும் சில அமைச்சர் பதவிகளையும் தன்னகத்தே வைத்து வலம் வரும் ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பது தான் உண்மை. மேலும் தமது விளம்பரங்களில் இந்த மாநாட்டைப் பற்றி விளம்பரம் செய்யும் போது சொல்வது என்னவென்றால் செம்மொழியாம் தமிழ்த் தாய்க்கு முத்தமிழ்த் தலைமகனாம் கலைஞர் எடுக்கும் ஒரு விழா இது உலகத் தமிழர் கூடும் திருவிழா. இதை விட வேறு என்ன வேண்டும் கலைஞரை பற்றி அறிந்து கொள்ள.

ஆய்வு தேவை தானா?

இந்த மாநாட்டின் பின்னணியைப் பற்றிய ஓர் ஆய்வு நிச்சயம் எமக்குத் தேவை. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில், 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் கோவையில் 9வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் என்று கருணாநிதி அறிவித்தார். குறிப்பாக உலகத் தமிழ் மாநாடுகள் அனைத்தும் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில் தான் நடத்தப்படுகின்றன என்பது வழக்கம். ஆக உலகத் தமிழ் மாநாடு எதுவாயினும் அதை அறிவிக்க வேண்டியது சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மன்றம் தான். ஆனால் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் ஆதரவு இல்லாமலே தமிழ் நாடு அரசு உலகத் தமிழ் மாநாடு இந்த ஆண்டு ஜனவரி நடைபெறும் என்று அறிவித்தது.

பின்னர் எதிர்கட்சிகளின் எதிர்ப்பிக்கு பின்னர் இந்த மாநாட்டை பின்போடுவதாக அறிவித்தார்கள். அதற்கான காரணம் அவர்கள் கூறியது என்னவென்றால் அதாவது தமக்கு ஆய்வாளர்களின் கட்டுரைகள் வரத் தாமதம் ஆவதனால் கால அவகாசம் தேவையெனவும் பின்னர் அடுத்த திகதி அறிவிக்கப்படும் என்று கூறினார்கள். மேலும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதா இந்த பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கினார். தனது அறிக்கைகளில் அவர் கூறியதில் பல உண்மைகள் இருந்தது. அந்த அறிக்கைகளில் அவர் கூறியதாவது:

“உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் துன்பத்தில், துயரத்தில் உறைந்து போயிருக்கிறார்கள்…1966ம் ஆண்டு முதல் உலகத்தமிழ் மாநாட்டை நடத்திய மலேசியத் தமிழர்கள் இன்று அந்த நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாக தரம் தாழ்த்தப்பட்டிருப்பதை உணர்ந்து சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். 2008 ஆம்ஆண்டு, தங்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், மலேசியத் தமிழர்கள் தெருக்களுக்கு வந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்த போது, அந்தநாட்டு அரசாங்கத்தால் கொடூரமான முறையில் நசுக்கப்பட்டனர்…. அதைப்போன்று ஈழத் தமிழர் பல சொல்லனாத் துயரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களின் துயரை சொற்களால் வர்ணிக்க முடியாதவை…இந்த மக்கள்தான் 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர்கள்….இதற்கு முன், 1968ம் ஆண்டு அண்ணா ஆட்சி புரிந்த காலத்திலும், 1981ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி புரிந்த காலத்திலும், 1995ம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்த காலத்திலும் தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றன. ஐந்து முறை முதல்வராகப் பொறுப்பேற்று, 15 ஆண்டுகளுக்கும் மேல் முதல்வர் பதவியை வகித்துக் கொண்டு, தமிழ் மொழியின் பாதுகாவலர் என்று கூறும் கருணாநிதிக்கு ஒரு உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற நினைப்பே இதற்கு முன் வரவில்லை… கடைசி முயற்சியாக இந்த மாநாட்டை நடத்துகிறார் கருணாநிதி.”

மேலும் ஜெயலலிதா கூறியிருப்பது என்னவென்றால் “கருணாநிதியால் நடத்தப்பெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பது, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் உலகத்தமிழ் மாநாடு வரிசையில் இடம் பெறாததால், இந்த மாநாட்டில் அதிமுக கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனவே திமுக அரசால் நடத்தப்படும் இந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை அதிமுக புறக்கணிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” அதைப் போன்றே உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மதிமுகவும் பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் வைகோ இதைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது கடிதத்தில் கூறியிருப்பது: “தற்போது நடந்திருப்பது என்னவென்றால், 9வது உலகத் தமிழ் மாநாடு கைவிடப்பட்டுவிட்டது. சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மன்றம் ஓரம் கட்டப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டது. சட்டமன்றத் தேர்தல்கள் வரும் சமயத்தில், தானும் தமிழ்நாட்டில் ஒரு தமிழ் மாநாட்டை நடத்தினேன் என்று வரலாற்றில் பதிவதற்கும் தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு இந்த மாநாட்டை பயன்படுத்துவதற்கு கருணாநிதி எண்ணியுள்ளார் என்பது தான் உண்மை.”மலேசியத் தமிழர் மற்றும் ஈழத் தமிழர் இன்றும் சொல்லனாத் துயரத்தை அனுபவித்துகொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக ஈழத் தமிழர் தமது தமிழர் என்ற அடையாளத்தையே முன் எப்பவும் இல்லாதவாறு இன்று மகிந்த அரசின் சிங்கள இனவெறி கொள்கைகளினாலும் தமிழர் தாயக பிரதேசங்களை வெகு விரைவிலே சிங்கள மயப்படுத்துகின்றார்கள். தமிழரின் கிழக்குப் பகுதியில் செறிவாக வாழ்ந்து வந்த தமிழினம் ஓரங்கட்டப்பட்டு அவர்கள் இன்று அகதி முகாம்களிலும் அகதிகளாகவும் உலகில் வாழும் போது சிங்கள அரசோ தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்கி தமிழ் ஊர்களின் பெயர்களை சிங்கள பெயர்களாக மாற்றி தமிழர் பகுதிகளெல்லாம் சிங்களப் பகுதிகள் என்று உலக நாடுகளிடம் சொல்லி தமிழ் ஈழ நாட்டுக்கான கோரிக்கையையும் அவர்களின் சுதந்திர வேள்வியையும் மழுங்கடித்து தமிழன் என்ற இனமே இலங்கையில் இல்லை என்ற பாணியில் வேலைத்திட்டங்களை மகிந்த செய்து கொண்டிருக்கும்போது கருணாநிதியோ தமிழ் செம்மொழி மாநாட்டை நடாத்துகின்றார்.

தமிழ் நாட்டில் இயங்கும் தமிழ் பள்ளிக்கூடங்கள் ஏதோ ஆதி திராவிடர்களுக்கும் மற்றும் வறுமையில் வாடும் தமிழ் குடும்பங்களுக்கும் என்ற பாணியில் இயங்கிக்கொண்டிருக்கின்றது. பதிலுக்கு ஆங்கில வழி பள்ளிகளோ ஆஹா ஓஹோ என்ற பாணியில் சென்று கொண்டிருக்கின்றது. பல தமிழ்ப் பெற்றோர்கள் தமது காணியை விற்றோ கடன்பட்டோ தமது பிள்ளைகளையும் ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்த்து விடவேண்டும் என்ற பாணியில் தொடருகின்றது. அத்துடன் மெட்ராஸ் என்ற மாநிலத்தை தமிழ் நாடு என்று அண்ணாவினால் பெயர் மாற்றம் பெற்றும் தமிழ் வழி கல்விகள் சட்டத்துறையிலோ, மருத்துவத்துறையிலோ ஏன் பொருளியலிலோ அல்லது வர்த்தகத்திலோ இல்லை.

ஆக கருணாநிதி இன்று வரை தமிழ் தமிழ் என்று கொக்கரித்தும் ஏன் அரச அரியாசனத்தை தன் வசம் வைத்திருந்தும் ஏன் புது டெல்லியில் தனது கட்சியின் ஆதரவுடன் இயங்கும் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு இருந்தும் தமிழ் நாட்டிற்கோ தமிழ் மொழிக்கோ எந்த விமோசனமும் இல்லை. ஏதோ தான் தமிழை செம்மொழியாக மத்திய அரசினால் அங்கீகாரம் பெற்று விட்டதாகத் தம்பட்டம் அடிக்கும் கருணாநிதி அந்த மொழிக்கான உண்மையான இருப்பை இந்தியாவின் பிற மாநிலங்களிலோ அல்லது தமிழ் நாட்டிலோ இன்னும் சீர் செய்யவில்லை என்பது தான் உண்மை.

எத்தனை குடும்பங்கள் தமிழ் நாட்டில் சுத்த தமிழில் உரையாடுகின்றார்கள் என்றால் பூச்சியம் என்று தான் சொல்லவேண்டும். ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன் கூறியது போன்று தமிழ் நாட்டுத் தமிழர் பேசுவது தமிழில்லை மாறாக அவர்கள் தமிங்கிலம் பேசுகின்றார்கள். இப்படியான தோரணையில் கருணாநிதி செம்மொழி மாநாட்டை நடாத்துகின்றார். இதற்கும் ஈழத்து புத்தி ஜீவிகள் குறிப்பாக யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் க. சிவத்தம்பி முன்னின்று கருணாநிதியின் நேரடி வேண்டுகோளிற்கு இணங்க செயலாற்றுகின்றார். ஆக இந்த செம்மொழி மாநாடு தமிழின வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவப்போவது இல்லை மாறாக கருணாநிதியின் சுய சரிதைக்கும் அவரின் பிள்ளைகளின் அரசியல் இருப்புக்கும் இப்படியான மாநாடுகள் நிச்சயம் உதவும். இப்படியான மாநாடுகளினால் நிச்சயம் உலகத் தமிழருக்கோ அல்லது தமிழ் மொழிக்கு ஒரு எள்ளளவேனும் பயன் இல்லை என்பது தான் உண்மை.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல்

இந்த செம்மொழி மாநாடு இன்னும் மூன்று மாதத்தில் நடைபெற இருக்கின்றது. இதற்கான வேலைகளை இருட்டிப்பாக்கி தமிழ் நாடு அமைச்சர்களும் கருணாநிதியின் பிள்ளைகளும் முழு மூச்சுடன் களம் இறங்கியுள்ளார்கள். ஈழத் தமிழர் அனுபவித்த துன்பம் ஹிட்லர் காலத்தில் யூதர்களும் கூட இவ்வளவு துன்பம் அடைந்ததில்லை. அவர்கள் கொல்லப்பட்டார்களே தவிர, உடலாலும் உள்ளத்தாலும் இவ்வளவு கொடுமைகளுக்கும் இழிவுகட்கும் ஆளானதில்லை. மாந்த இனமே கொதித்தெழ வேண்டிய பேரவலம். ஆயினும் மிகக் கொடிய, இரக்கமற்ற, மனித நேயமற்ற கல் நெஞ்சங்களும் அரசியல் சூழ்ச்சிகளும், தன்னல வெறிகளும் இனப்பகைமையும் இதன் பின்னிருந்து வேலை செய்வதால் உலகமே வாய் மூடிக்கிடக்கின்றது.

இந்த அவலத்தை நீக்குவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில்தான் இன்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஒன்றை நடத்தப்போவதாகத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். ஈழ நெருப்பு இன்னும் அடங்கவில்லை. ஆனால் தமிழ் நாட்டிலோ களியாட்ட மாநாடு கூட்டப்படவிருக்கின்றது. ஆனால் இந்த களியாட்ட மாநாட்டிற்கு பெயர் உலக முதல் தமிழ்ச் செம்மொழி மாநாடு. இது தமிழ் நலம் கருதி மேற்கொள்ளப்படவில்லை.

உள்நோக்கம் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் விடுதலைப் போரில் தோல்வி அடைந்ததற்குக் காரணமே இந்திய அரசு தன் தமிழின வெறுப்பாலும் அரசியல் சூழ்ச்சிகளாலும், மகிந்த தொடங்கிய போரைத் தானே முன்னின்று நடத்தியது தான். ஏன் மகிந்தாவின் சகோதரர்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளே ஒப்புக்கொண்டார்கள் விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தை தாம் இந்தியாவிற்காகவே தான் நடத்தியதாக. இந்திய அரசு ஈழத்தமிழரை ஒழிக்க முன் வந்ததற்கு ஏற்பட்ட துணிச்சல் கலைஞர், இந்திய அரசுக்கு நூற்றுக்கு நூறு துணை நின்றதால் வந்ததுதான்.

கலைஞர் நினைத்திருந்தால் இந்திய அரசு ஈழப்போரில் மகிந்தவிற்கு உதவாமல் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். தமிழக முதல்வர் மத்திய அரசில் தாம் பெறும் சொந்த நலன்களுக்காக ஈழத் தமிழினத்தை இந்திய அரசுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று அனைவராலும் அறிய முடியும். ஆகா கருணாநிதியின் இனவுணர்வற்ற, இரக்கமற்ற காட்டிக்கொடுப்பும் இரண்டகத் தன்மையும் இன்று பலராலும் பழித்துரைக்கப்படுகின்றன. இந்த நிலையில் தான் செம் மொழி மாநாடு அவரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈழ மக்கள் விடுதலையை அழித்ததில் தம் பெயர் கெட்டுப்போன நிலையில் மக்களைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் தான் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையிளையிலே தமிழுக்குச் செய்யவேண்டிய அடிப்படை ஆக்க வேலைகள் இன்னும் செய்யப்படவில்லை. தமிழகத்திலேயே தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை. தமிழ் பயிற்று மொழியாக இல்லை. தேவையற்ற ஆங்கில வெறியும் ஆங்கில வணிகமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. வேற்று மொழியாளரின் வேட்டைக் காடாகத் தமிழகம் கிடந்து கொடிய சுரண்டல்களுக்கு உட்பட்டு திண்டாடுகின்றது. உயிர் நிலையான அடிப்படை வேலைகள் எல்லாவற்றையும் செய்யாமல் வெறும் பகட்டான மேற்பூச்சு வேலைகளிலேயே ஈடுபட்டுவருவது தமிழக முதல்வரைப் பல்லாண்டுக் காலமாய்ப் பிணித்துள்ள ஒரு பெருநோய் எனலாம். இப்பெருநோயின் மற்றுமொரு அறிகுறிதான் நடக்கவிருக்கும் செம் மொழி மாநாடு என்பதில் கடுகளவும் ஐயமில்லை!

ஆக ஈழத் தமிழரின் அவலத்தில் குளிர்காய எத்தனிக்கும் கருணாநிதிக்கும் அவர்தம் நயவஞ்சக சூத்திரதாரிகளை இனம் கண்டு ஈழத் தமிழினம் அவர்களை நிராகரித்து இவர்களின் பல கால அவாக்களின் ஒன்றான அதாவது தானே உலகத் தமிழரின் ஏகோபித்த முத்தமிழ் காவலனாகவும் உலகத் தமிழரின் தலைவனாகவும் பதவியைப் பெற இன்னும் கலைஞர் போன்ற பதவி மோகம் கொண்ட அரசியல்வாதிகளை ஈழத் தமிழர் மட்டும் நிராகரிப்பது மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழினமே நிராகரிக்க வேண்டும் என்பதே அனைவரினதும் அவா. இதுவே நாம் முத்துக்குமார் போன்ற பல மானமுள்ள தமிழ் உணர்வாளர்கள் தங்கள் உயிரையே தீக்கு இரையாக்கியுள்ளோருக்கும் மேலும் பல ஆயிரம் உயிர்களை தியாகம் செய்த தமிழ் ஈழப் போராளிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் நாம் செய்யும் இறுதி மரியாதையாக இருக்கும்.

அனலை நிதிஸ் ச. குமாரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*