TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மாறிவரும் சர்வதேச சூழ் நிலையும் மாறாத தமிழ்த்துவமும்

கடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவும் அதனை தொடர்ந்தும் சிறிலங்கா அரசின் அகங்கார போக்கும் சர்வதேச மட்டத்தில் சில மாற்றங்களை தமிழர் தரப்புக்கு சார்பாக திரும்புவது போன்ற நிலைப்பாடுகளை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

அதேவேளை பல பிரிவுகளாக தமிழர் தரப்புகள் பிளவுண்டு மீண்டும் 1980 களை நினைவூட்டுகின்றமையும் தமிழர்களின் கசப்பான பக்கங்களே. இவைபற்றிய அலசல்களாக விரிகின்றது இப்பத்தி.

உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டுக்காக பிரித்தானிய முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டமையும் அதன் பிரதிநிதிகளை அந்நாட்டு பிரதமர் சந்தித்தமையும் சாதாரண விடயங்களல்ல. அனைத்து எதிர்பார்ப்புக்களையும் தொலைத்த ஒரு இனத்திற்கு இவ்வாறான வெளிச்சங்கள் மீண்டும் தம்மால் எழுந்துநிற்கமுடியும் என்ற ஊக்கத்தை கொடுக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் பிரித்தானிய அமைச்சர் மிலிபாண்ட் தீடிரென முடிவெடுத்து இம்மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்பதையும் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னரே இதற்கான தனது விருப்பை வெளிப்படுத்தியிருந்தார் என்பதையும் மாநாட்டுத்தகவல்கள் தெரிவிக்கின்றது.

மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அதனை தெரியப்படுத்திய அவருக்கு சிறிலங்கா அரசு தரப்பு உடனடியாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தி தனது சிங்கள மேலாண்மை இன்னும் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது.

இவ்வாறு வெளிப்படையாக தமது நாட்டு அரச அமைச்சரை கண்டித்தற்கு பழிவாங்க பிரித்தானிய பிரதமர் முடிவெடுத்தார். அதனால்தான் உடனடியாகவே உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு முடிவெடுத்தார்.

மாநாட்டு நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடக்கப்படாத இச்சந்திப்பை சாத்தியமாக்கியவர்கள் வேறுயாருமல்ல. சிங்கள மேலாண்மையை நிலைநிறுத்தும் சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சவும் அதன் வெளிநாட்டு அலுவல்களுக்கான அமைச்சர் ரோகித போகல்லாவே என்பதை தமிழ் மக்கள் அறிந்துகொள்ளவேண்டும். அவ்வாறான புரிதலே எதிர்காலத்தில் தமிழர் தரப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை திட்டமிட உதவும்.

இதேவேளை தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் இலங்கைத்தீவில் தொடரும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு ஒரு குழுவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளார். இவ்வாறான குழுவை நியமித்து தமது அரசுக்கு ஆலோசனை வழங்குவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் இது தமது இறையாண்மையை மீறிய செயலாகும் என உடனடியாக தனது அதிருப்தியை வெளியிட்டது.

இதன் தொடர்ச்சியாக பான் கீ முன்னை நேரடியாகவே தொடர்புகொண்ட மகிந்த ராஜபக்ச தனது கவலைகளை வெளியிட்டிருக்கிறார். அப்போது சமாளிப்பதிலேயே கெட்டிக்காரரான பான் கீ மூன் குறித்த குழுவானது உங்களுக்கு ஆலோசனை வழங்காது எனவும் தனக்குத்தான் ஆலோசனை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ இனிமேல் சிறிலங்காவில் நடைபெற்றுவரும் அரசின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான குழுவொன்று ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டுள்ளது என்பதும் அது ஏதோ ஒன்றை செய்துகொண்டிருக்கத்தான் வேண்டும் என்பதும் அது சிறிலங்கா அரசுக்கு நல்ல செய்தியாக இல்லையென்பதும் வெளிப்படையான விடயமாகும்.

அமைக்கப்பட்ட குழுவானது நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதையும் முக்கியமாக கண்காணிக்கவுள்ளது.

அரசியல் ரீதியாக தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தை கூர்மைப்படுத்தவேண்டிய இக்கட்டத்தில் இவ்வாறான சர்வதேச மாற்றங்கள் தமிழர் தரப்புக்கு சில ஆறுதலான வார்த்தைகளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவற்றை தாண்டி பயணிக்கவேண்டிய தூரமும் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

இவ்வாறு சர்வதேச மாற்றங்கள் ஒருமுகப்பட்டு சிறிலங்கா அரசுக்கு எதிராக திரும்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தாயகத்தில் நடைபெற்றுவரும் தமிழர் தரப்பின் பிளவுகள் வெந்த புண்ணில் வேல் பாய்வது போல தமிழ் மக்களின் மனதை வாட்டுகின்றது.

1980களில் ஒரே நோக்கத்திற்காக புறப்பட்ட போராளிகள் வெவ்வேறு விடுதலை இயக்கங்களை ஆரம்பித்ததும் அதனால் பிரிந்து நின்ற இவ்வியக்கங்களை சிறிலங்கா அரசும் இந்திய புலனாய்வுத்துறையும் தமது தேவைக்கேற்ப பயன்படுத்தமுற்பட்டமையும் வரலாறு.

அவ்வாறான நிலையை நோக்கி மீண்டும் தமிழர் தரப்புகள் செல்கின்றனவா என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கும் சம்பவங்களே அண்மைக்காலத்தில் நடந்துவருவதை காணக்கூடியதாகவுள்ளது.

ஒரே திசையில் பயணித்து தமிழர்களின் விடுதலைக்காக போராடவேண்டிய தமிழர் தரப்புகள் தமது உண்மையான எதிரிகள் யார் என்பதை இனங்கண்டு கொள்வதில் தற்போது தடுமாறுவதுதான் விந்தையாக இருக்கிறது. நடப்பதோ சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கான தேர்தல். அதன் நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகளாக இருந்து எதையும் சாதிக்கபோவதில்லை என்பதும் இத்தமிழர் அமைப்புக்களுக்கு தெரிந்தும் இந்த தேர்தல் மூலம் இவர்கள் பிளவுபட்டு நிற்பதுதான் இன்னும் வேடிக்கை.

இத்தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் தலைவர்களே தமிழர்களின் அடுத்தகட்ட அரசியலில் தலைமை தாங்கி செல்லவேண்டும் என்பது வெளிப்படை எனினும் இரண்டு பிரிவாக பிளவுபட்டு நிற்பதன் மூலம் தமிழர் தரப்பின் ஒட்டுமொத்த பலத்தை சிதறடித்துவிட்டமை வரலாற்றின் ஒரு கறையாகவே இருக்கும்.

மாறுகின்ற சர்வதேச நிலைப்பாடுகள் தமிழர் தரப்புக்கு ஒளிக்கீற்றுக்களாக ஆறுதல் அளிப்பது போல புலத்துதேசத்தில் காணப்பட்ட முரண்பாடுகளை வெற்றிகொண்டு படிப்படியாக ஒரு நேர்கோட்டுக்கு வந்துகொண்டிருப்பது போல தாயகத்திலும் தமிழர் தரப்புகள் ஒருமுகப்படுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்பபோம்.

கொக்கூரான்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*