TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சரத்தும் அவரது முறைகேடான இராணுவ நடவைக்கைகளும்

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக மேலும் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

அவர் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடான நடவடிக்கைகள் தொடர்பாக இப்போது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது. இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த போது இராணுவச் சட்டங்களுக்கு முரணாக அவர் நடந்து கொண்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளே தற்போது ஆரம்பமாகியுள்ளன.

அவற்றில் பிரிகேடியர் திலகரட்ணவுக்கு 62 வயது வரை சேவைநீடிப்பு வழங்கப்பட்டு வந்த விவகாரமும் ஒன்று. பிரிகேடியர் திலகரட்ண வவுனியாவில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் சிவில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர்.

ஆனால் அவருக்கு 62 வயது வரை சேவை நீடிப்பு வழங்குவதற்கு ஜெனரல் சரத் பொன்சேகா சிபார்சு செய்திருந்தார். அதன்படியே அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டு வந்தது.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ணவின் தந்தையே பிரிகேடியர் திலகரட்ண. தனது மருமகனின் தந்தைக்காக பக்கச்சார்பாக நடந்து கொண்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அத்துடன் சேவை நீடிப்பு வழங்கப்பட வேண்டிய அதிகாரிகள் பலருக்கு அது வழங்கப்படாமல் ஒதுங்கிச் செல்லும் நிலையும் உருவாக்கப்பட்டது. முன்னர் இராணுவச் சட்டப்படி 55வயது வரைக்குமே உயரதிகாரிகள் பதவி வகிக்க முடியும்.

ஆனால் அதை மீறும் வகையில் 62 வயது வரைக்கும் பிரிகேடியர் திலகரட்ண பதவியில் இருப்பதற்கு ஜெனரல் சரத் பொன்சேகாவே ஏற்பாடு செய்திருந்தார். இப்போது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு புதிய குற்றச்சாட்டாக இது முன்வைக்கப்பட்டு வருகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகாவினால் சேவைநீடிப்பு விண்ணப்பம் மறுக்கப்பட்ட ஓய்வுபெற நிர்ப்பந்திக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் பலரும் அரசாங்கத்தின் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளனர்.

அவர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தொடுக்கவோ அல்லது விசாரணைகளின் போது சாட்சியமளிக்கவோ தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோது புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருதலே முதன்மையான தேவையான இருந்தது.

எனவே அவர் மீதான விடயத்தில் அரசாங்கம் விட்டுக் கொடுப்புடனும் நெகிழ்வுப் போக்குடனும் இருந்து வந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவச் சட்டங்களை- அதன் ஒழுங்குமுறைகளை தாராளமாகவே மாற்றியமைக்க முற்பட்டார்.

அவர் பதவியேற்ற கையுடன் இராணுவக் கட்டமைப்பில் செய்த மாற்றங்களும் அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களும் சேவைமூப்பில் இருந்த அதிகாரிகளைப் புறக்கணிக்கும் வகையில் அமைந்திருந்தது.

இளம் அதிகாரிகளை முன்னுக்குக் கொண்டு வருவதிலும்- அவர்களை வைத்துச் சண்டையை மேற்கொள்வதிலும் ஆர்வம் காட்டியிருந்தார் ஜெனரல் பொன்சேகா.

வன்னியில் போருக்குத் தலைமையேற்க அவர் தெரிவு செய்த அதிகாரிகளில் பெரும்பாலானோர் அப்போது கேணலாகவோ அல்லது பிரிகேடியராகவோ தான் இருந்தனர்.

அத்துடன் அவர்களில் எவருமே 40 தொடக்கம் 45 வயதைத் தாண்டாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு பதவி உயர்வுகளையும் அதிகாரங்களையும் கொடுப்பதன் மூலம் சண்டையை விரைவுபடுத்தலாம்- வெற்றிகரமாக முடிக்கலாம் என்று ஜெனரல் சரத் பொன்சேகா கணக்குப் போட்டிருந்தார்.

ஆனால் அவர் அப்படி இளநிலை அதிகாரிகளை நியமித்த போது பொறுப்பு வாய்ந்த மூத்த அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டனர்.

போர்முனைச் செயற்பாடுகளில் இருந்த முற்றாகவே புறந்தள்ளப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலை காரணமாகவே பெருமளவு மேஜர் ஜெனரல்கள் சேவை நீடிப்புப் பெறாமலும்- பெற முடியாமலும் ஓய்வுபெற நேரிட்டது.

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகப் பதவியேற்கும் வரைக்கும் இலங்கை இராணுவத்தின் கட்டமைப்பல் ஒரு ஒழுங்குமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

அதாவது இராணுவத் தலைமையகப் பதவிகள், பிராந்தியப் படைத் தலைமையகங்களின் பதவிகள் மற்றும் டிவிசன்களின் கட்டளைத் தலைமை ஆகியவற்றுக்கிடையில் சீரானதொரு படிநிலை உயர்ச்சி காணப்பட்டது.

ஆனால் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகப் பதவியேற்றதும் இந்த நடைமுறை தலைகீழாக மாற்றப்பட்டது. இது குழப்பமானதொரு நிலைக்கு இராணுவக் கட்டமைப்பைக் கொண்டு சென்றது. அப்போதைய நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் நடவடிக்கைக்கு பெரியளவில் எதிர்ப்புக் கிளம்பவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மட்டும் குமுறிக் கொண்டு வெளியே போயினர்.

இராணுவத் தளபதியாக ஜெனரல் சரத் பொன்சேகா பதவியில் இருந்தபோது அவரது நிலை மட்டுமே ஸ்திரமானதாக இருந்தது. ஆனால் அவருக்கு அடுத்த நிலையான தொண்டர் படைகளின் தளபதி பதவி மற்றும் அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் உள்ள இராணுவத் தலைமை அதிகாரி, பிரதித் தலைமை அதிகாரி பதவிகளில் குழப்பங்கள் செய்யப்பட்டன.

சேவை மூப்பு அடிப்படையில் பின்னால் இருந்த அதிகாரிகள் இரணடாம் நிலைப் பதவியான தொண்டர் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டனர். அதேபோல தொண்டர் படைகளின் தளபதியாக இருந்த அதிகாரி பிராந்தியப் படைத் தலைமையத்துக்குக் கூட மாற்றப்பட்டார்.

‘போரை வெற்றிகரமாக நடத்துவதற்கு’ என்ற பெயரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால் அதற்கு முன்னர் அத்தகைய நிலை இருந்ததில்லை.

இராணுவத் தளபதி ஒருவர் ஓய்வுபெறும் போது அதற்கு அடுத்த பதவிநிலையில் இருப்பவர் அந்தப் பதவியை ஏற்றும் வகையில் காத்திருக்கும் படிநிலை உயர்ச்சி இருந்து வந்தது.

ஆனால் ஜெனரல் சரத் பொன்சேகா உருவாக்கி விட்ட மாற்றத்தின் விளைவாக இந்த சமநிலையில் குழப்பங்கள் ஏற்பட்டு விட்டன.
இந்தநிலை இன்னமும் மாற்றமடையவில்லை.

அதை முற்றாக மாற்ற முற்பட்டால் மேலும் குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால் அரசாங்கம் முள்ளில் விழுந்த துணியை பத்திரமாக எடுப்பது போலவே எடுக்க நினைக்கிறது.

குறிப்பாக சரத் பொன்சேகாவினால் மேல்நிலைக்குக் கொண்டு வரப்பட்ட அதிகாரிகள் பலரும் போரில் தீவிரமாகப் பங்காற்றியவர்கள்.
அவர்கள் உயர்ந்த நிலைக்கு தற்போது வந்துள்ளனர்- முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர்.

இவர்களை முன்னைய இடங்களுக்கு அனுப்பினால் வீண் பிரச்சினைகளை உருவாக்கும். அவர்கள் அவமதிக்கப்பட்டதான குற்றச்சாட்டுகள் வரும்.

இதனால் அரசாங்கம் பொறுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகா விளைவித்துள்ள இந்தக் குழப்பத்தினால் குறிப்பிடத்தக்க அதிகாரிகள் பலரும் இளம் வயதிலேயே ஓய்வுபெறும் நிலையை அடைந்து விடுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தில் மேஜர் ஜெனரல ஒருவர் ஆகக் கூடியது மூன்று வருடங்களே பணியாற்ற முடியும். அதற்குப் பின்னர் பதவியில் இருப்பதற்கு ஜனாதிபதியின் சேவை நீடிப்பைப் பெறவேண்டும்.

ஆனால் இவர்கள் அப்படி ஓய்வு வயதை அடையும் வரை சேவையில் இருப்பதற்கு பலமுறை சேவை நீடிப்புக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஜெனரல் சரத் பொன்சேகாவினால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு அரசாங்கம் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

அதேவேளை இவையெல்லாவற்றையும் அவருக்கு எதிரான சாட்சிகளாக்கி- குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

அரசாங்கத்தின் இந்த முயற்சிகளுக்கு ஜெனரல் சரத் பொன்சேகாவினால் ஓரங்கட்டப்பட்ட-ஒதுக்கப்பட்ட அதிகாரிகளின் ஆதரவு கிடைத்தால் அதுவே அவருக்குப் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கொழும்பிலிருந்து சத்திரியன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*