TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இத்தனைக்கும் பிறகும் இந்தியாவை நம்பலாமா? பாகம் 2

(கடந்த வாரக் கட்டுரையில் மியான்மார் என்றழைக்கப்படும் பர்மா என்பதற்குப் பதிலாக, பூட்டான் என்று இடம் பெற்றதற்கு வருந்துகின்றேன்)

இந்தியா இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையைத் தனது கையில் எடுத்தபோது ஈழத் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள். எமது அவலங்கள் தீரப் போகின்றது. இலங்கையின் இனவாதத்தீ அணைக்கப்படப் போகின்றது என்றெல்லாம் ஈழத் தமிழர்கள் நம்பினார்கள். ஆனால், இந்தியாவின் குறியோ வேறு விதமாக இருந்தது.

தனது தென்பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள சின்னஞ்சிறு நாடாக இருந்துகொண்டு, இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் இலங்கைக்குப் பாடம் படிப்பிக்க இதைவிட ஒரு சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை என்ற முடிவோடு ஈழத் தமிழ் இளைஞர்களைச் சுவீகாரம் செய்ய முடிவெடுத்தது.

சீனாவும், பாக்கிஸ்தானும் என இரு திசைகளிலும் பெரும் தொல்லைகளை உருவாக்கி வைத்திருந்த இந்தியா, தனது தெற்குப் பகுதியாவது தனது முழுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணியதே இலங்கைத் தீவின் இன முரண்பாட்டைக் கையில் எடுப்பதற்குக் காரணமாக இருந்தது. இலங்கைத் தீவில் சீனாவும், பாக்கிஸ்தானும் மட்டுமல்ல, அப்போது நட்பு நாடாக இல்லாதிருந்த அமெரிக்காவும் காலூன்றுவதற்கு மும்முரமாக முயற்சி செய்துகொண்டிருந்தது. சோவியத் சார்பு இந்தியா மீது அப்போது அமெரிக்கா பெரும் அதிருப்தியில் இருந்தது.

அமெரிக்காவின் நகர்வுகளை இந்தியா அச்சத்துடன் நோக்கியது. இந்தியாவின் பகையாளி நாடான பாக்கிஸ்தானுக்கு யுத்த தளபாடங்களை அள்ளி வழங்கியதுடன், வங்காளதேச யுத்தத்தின்போது இந்தியாவை மிரட்டும் நோக்கில் தனது ஆறாவது கடற்படை அணியையும் இந்து சமுத்திரப் பிராந்தியம் நோக்கி நகர்த்தியது. எனவே, இலங்கையில் கால் பதிக்க முனைந்த அமெரிக்காவையும் தடுத்து நிறுத்துவதற்காகக் கிடைத்த வரப்பிரசாதமாகவே இந்தியாவுக்கு ஈழத் தமிழர்களின் இன்னல் பழமாக நழுவி அதன் வாயருகே வந்து சேர்ந்தது.

சிங்கள அரசின்மீது அதிருப்தியும், கோபமும் கொண்ட தமிழ் இளைஞர்கள் திரட்டப்பட்டு தமிழகம் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களுக்கு இராணுவப் பயிற்சிகளும், ஆயுதங்களும் வழங்குவதாக உத்தரவாதமும் அளிக்கப்பட்டது. இந்தியாவின்மீது அளப்பரிய நம்பிக்கையும் பக்தியும் கொண்ட தமிழீழ இளைஞர்களை இந்தியா விடுதலைப் போராளிகளாக உருவாக்காது, தனது அடியாட்களாகவே உருவாக்கத் திட்டம் தீட்டியது. அதன்படி, தமிழீழத்திலிருந்து தமிழகக் கரைக்கு வந்து சேர்ந்த தமிழ் இளைஞர்களைப் பல குழுக்களாகப் பிரித்தது. ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாத, ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாதபடி இந்தக் குழுக்களுக்கு வௌவேறு இடங்களில் பயிற்சி முகாம்களும் அமைத்துப் பயிற்சி வழங்கியது. விடுதலைப் புலிகள், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, ஈரோஸ், ரெனா, ரெலா என வாயில் நுழைய முடியாத நீண்ட பட்டியல் கொண்ட அடியாட்கள் குழுவை உருவாக்குவதில் இந்தியா தீவிரம் காட்டியது.

இந்தியா ஈழத் தமிழர்களுக்கான தனது துரோகத்தை அங்கேயே ஆரம்பித்துவிட்டது. ஈழத் தமிழர்களது விடுதலை உணர்வுக்கு அங்கேயே சமாதிக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. தமிழீழ இளைஞர்களது சக்தி ஒன்றுபட்டுவிட்டால், ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமாகிவிடும். அப்படியே அந்த நெருப்பு அணைந்துவிட்டால், தனது இலங்கை மீதான அச்சுறுத்தல் ஆதிக்கத் திட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்ற அந்த ஈனத்தனமான எண்ணத்திற்கு ஈழத் தமிழினத்தைப் பகடைக் காயாக்குவதற்காகவே தமிழ் இளைஞர்களின் சக்தியைச் சிதறடிக்கும் முதல் நகர்வை மேற்கொண்டது.

தொடரும்.

நன்றி:ஈழநாடு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*