TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழ் மக்களின் ஒருமைப்பாடு சிதைக்கப்படுதல் நிறுத்தப்படுமா?

ஒரு மாறுபட்ட சூழல் தற்பொழுது தாயகத்தில் உணரப்பட்டுள்ளது. குருதி வெள்ளத்தில் மிதந்தும் வாழ்வில் சம்பாதித்தவை எல்லாவற்றையும் துறந்தும் இன்னமும் அசையாத பற்றுறுதியுடன் தாயகம் மீதும் தேசியத்தின் மீதும் அதீத நம்பிக்கை வைத்துத்தான் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். வாழ்ந்து வர முற்படுகின்றார்கள்.

மாறாக தற்போது தாயகத்தில் திணிக்கப்பட்டு வருகின்ற பிரிவினைவாதம் என்பது வரலாற்றில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த தலைப்பட்டு நிற்பதனை தாயகத்தில் வாழ்கின்ற மக்கள் என்றும் மன்னிக்கப் போவதில்லை. இது வெளிப்படையான பல விடயங்களை தாயகத்தில் அல்லல் சுமந்த மக்களின் சார்பில் வெளிப்படுத்த முற்படுகின்றது.

தாயகத்தில் வாழ்கின்ற மக்களைப் பொறுத்தவரையில் அனைத்துத் துன்பங்களையும் சுமந்த போதிலும் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அல்லது தமிழ் பேசும் மக்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் தமது கொள்கைகளை வரித்துக் கொண்டு வாழ்கின்றார்கள். இதன் பிரதிபலிப்பே கடந்த அரச தலைவர் தேர்தலில் அவர்கள் ஒருமித்து சொல்லிய செய்தியாகும்.

அந்த முடிவு கூட்டமைப்புக் கேட்டுக்கொண்டதால் அல்ல அது அவர்களாகவே எடுத்துக் கொண்ட முடிவு என்றும் இல்லை கூட்டமைப்பு எடுத்துக் கொண்ட முடிவினை ஏற்றே மக்கள் செயற்பட்டார்கள் என்றும் மாறுபட்ட கருத்து நிலைகள் உள்ளன. ஆனாலும் எது எவ்வாறு இருப்பினும் மக்கள் ஒருமித்த எடுத்த முடிவு என்பது உலகிற்கு ஒரு செய்தியை மீண்டும் சொல்லியே சென்றது.

இந்த ஒற்றுமையினைக் குலைக்கவேண்டும் என முடிவெடுத்த மகிந்த தரப்பு உடனடியாகவே அலரிமாளிகைக்கு நிகரான மாளிகையில் வாசம் செய்கின்ற, ஆயுத விடுதலை போராட்டத்தின் முக்கிய புள்ளியாக உலகம் சுற்றிய அந்த ஒருவரின் ஊடாக தாயகத்தில் புதிய கட்சிகளை சுயேட்சைக்குழுக்களை உருவாக்கி களத்தில் இறக்கி வாக்கினைச் சிதைக்க பேரம்பேசப்பட்டது.

குறித்த நபர் நிர்ப்பந்தத்தின் பேரில்தான் அவ்வாறு செயற்படுகின்றாரா அல்லது உண்மையில் மகிந்தவின் வலையில் வீழ்ந்துவிட்டாரா என்பதை காலம் வெளிப்படுத்தும்.

உண்மையில் வன்னி உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த, மக்களால் மதிக்கப்படக் கூடிய பலரிடம் குறித்த நபர், நேரடியாக அச்சுறுத்தல் பாணியிலான மிரட்டல் விடுத்தும் கூட அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை நிராகரித்தார்கள். எதிர்காலத்தில் அவர்களின் உயிர்களுக்குக் கூட அது அச்சுறுத்தலாக அமையலாம். ஆனாலும் அவர்கள் அனைவரும் அந்த செயற்பாட்டில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டதன் பிரதான நோக்கம் தாயகத்தில் மக்களின் வாக்குப் பலம் சிதைந்துபோகக்கூடாது என்பது மட்டும் தான்.

இந்த நிலையில் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு எதிரானது என கூறப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அரசியல் நகர்வு, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானதாகவே இயல்புநிலையில் கருதப்படும் என்பது புரிந்துகொள்ளப்பட்டிருக்கவேண்டும். உண்மையில் திருகோணமலையினையும், யாழ்ப்பாணத்தையும் மட்டும் தாயகமாகக் கொண்டு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள புதிய முன்னணி ஊடாக, தமிழர்களின் ஒருமைப்பாடு அல்லது அவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வு சிதைக்கப் படுவதாகவே தாயகத்தில் பார்க்கப்படுகின்றது.

தமிழர் தாயகத்தின் பிரதான பலங்களில் ஒன்று என்று கருதக்கூடிய யாழ்.பல்கலைக்கழக சமூகம் தற்போது இரண்டாக பிளவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிளவு ஈபிடிபி கட்சிக்காகவோ, அல்லது தனியான மாற்றுக் கொள்கைகளுக்காவோ நிகழவில்லை.

மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிக்கவேண்டும் என ஒரு அணியும், புதிய முன்னணியை ஆதரிக்கவேண்டும் என ஒரு அணியும் பிளவுபட்டுள்ளன. ஆனாலும் இந்தப் பிளவுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினையே ஆதரிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் வன்னியில் இருந்து கல்வி கற்க வந்திருக்கின்ற மாணவர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று எந்த இடத்திலும் பிளவுபடாத அல்லது தேசியக் கொள்கைகளில் இருந்து வழுவாத தமிழ்த்தேசியம் சார் புலம்பெயர் எழுத்தாளர்கள் அல்லது ஊடகர்கள் இரண்டு பிளவுகளாக மாறியிருக்கின்றார்கள். புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களில் ஆரம்பத்தில் நாட்டில் இருந்து வெளியேறியோரும், அண்மைய நெருக்கடிகளால் வெளியேறியோரும் அடக்கம்.

ஆனாலும் இரண்டு பிரிவினரும் காலங்காலமாக தேசியக் கொள்கைகளில் இருந்து ஒப்பீட்டளவில் விலகியதோ அல்லது வழுவியதோ கிடையாது. ஆனால் தற்போது எழுத்துகள் எதிர் எதிர் நிலை எடுத்துள்ளன. உண்மையில் எழுத்தாளன் என்பவன் கூடுதலாக உணர்வுகளுடன் ஒன்றிப்பவன் அல்லது உணர்வின்பாற்பட்டவன் என்பதனால் அவர்கள் தமது நியாயங்களை வலியுறுத்துவதற்கு என்றும் பின்நிற்க மாட்டார்கள் என்பது மட்டும் வெளிப்படையான விடயம்.

இந்த இடத்தில் புலம் பெயர் எழுத்தாளர்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. சின்னச் சின்ன விடயங்களுடன் நாங்கள் சிதைந்து போய்விட முடியாது. இனிவரும் காலங்களில் தான் முழுமையான பலம் பிரயோகிக்கப்பட வேண்டும். எதிர் எதிர் நிலைப்பாடுகளை விடுத்து மீண்டும் சேர்ந்து பயணிக்க முன்வரவேண்டும்.

இது எல்லாம் எதற்காக? எமக்குள்ளேயே பிரிவினைவாத அழுத்தங்களைப் பிரயோகிப்போர் தூர நோக்கம் கொண்டு செயற்படுபவர்களாக தெரியவில்லை. மாறாக மகிந்தவும் மகிந்தவுடன் சரணாகதி அரசியல் நடத்தும் அரசியல் குழுக்களும் நினைத்ததை சிரம்மேற்கொண்டு செய்ய முற்பட்டவர்களாகவே பார்க்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.

மிகமுக்கியமான விடயம் என்னவென்றால், எந்தவித பலனும் இல்லாத சிறீலங்காவின் நாடாளுமன்றக் கதிரைக்குப் போட்டி போடுபவர்களை பகடைக்காய்களாக வைத்து அவர்கள் கூறுபவற்றை மட்டும் வைத்துக் கொண்டு தமிழ் மக்களைப் பிரிப்பது என்பது மிக மோசமான விடயமாகும்.

அனைத்து தமிழ் தேசியத்தோடு பயணிக்கின்ற அனைத்து தமிழர் தரப்புகளும்அர்ப்பணிப்புடன் கூடிய முடிவினை முதலில் எட்டவேண்டும். அதன் பின்னர் கூட்டமைப்பு தடம் மாறினால் அதற்கான அடுத்தகட்டத்தைப் பற்றி சிந்திக்கலாம் அல்லது செயற்படுத்தலாம். அதனை விடுத்து எல்லாவற்றுக்கும் வியாக்கியானம் தேடுவது அல்லது சொல்வதுதானா தற்போது தேவைப்படுகிறது?

இவர்கள் குறிப்பிடுகின்ற கூட்டமைப்பு தொடர்பான விடயங்கள் அல்லது குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தெரியாதவையா? புதிதாக சில கண்டுபிடிப்புக்களை புதிய முன்னணி வெளியிட்டு வருகின்றது. வன்னி அழிவுகள் அனைத்திற்கும் கூட்டமைப்பே காரணம் எனக் கூறுகின்றார்கள்.

அந்தவேளையில் புதிய முன்னணியின் தலைவரும், அவருடைய தற்போதைய பரிவாரங்களும் சேர்ந்துதானே கூட்டமைப்புடன் இருந்தனர். அந்த வேளையில் ஏன் இவர்களால் ஒரு கூட்டினை அமைக்க முடியவில்லை?

வன்னி மக்களைச் சொல்லி மேடைகளில் கண்ணீர் விடும் அந்த பெருமைக்குரியவர்களால் சிறீலங்கா நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக எந்தவேளையிலும் செயற்பட மாட்டேன் எனச் சத்தியம் செய்து ஏற்றுக்கொண்ட நாடாளுமன்றக் கதிரைகளைத் தூக்கி எறிந்துவிட்டு வன்னிக் களத்திற்குச் சென்று அங்கிருக்கும் மக்களைத் தாங்கவோ, அல்லது ஆயுதங்களை ஏந்தவோ? அந்த மக்களுக்காக பிரிட்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரனைப்போல உண்ணாவிரதம் இருக்கவோ முடியவில்லை? (அந்த ஐந்து வருடங்களுக்காகவா? பொறுமை காத்தார்கள்?)

இந்தப் பதிவினைப் பார்க்கின்ற பொழுது நாங்கள் ஒரு பக்கச் சார்பான நிலைப்பாட்டினை எடுத்ததாக கருதலாம். ஆனால் உண்மையில் நாங்களும் வன்னியின் இறுதி நாள் வரையில் இரத்த நெடிலுடனேயே வாழ்ந்திருந்தோம். எங்கள் மக்களைப் பொறுத்த வரையில் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவாகின்ற நபர்களினால் எதனையும் சாதித்துவிட முடியாது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தவிடயம்.

ஆனாலும் எங்களின் பலம் வீண்போகக்கூடாது எங்களுக்கு இடையிலான மோதல்களைப் பயன்படுத்தி எதிர்சக்திகள் கூடுதல் வெற்றிகளை எமது பகுதிகளில் பெற்றுவிடக்கூடாது என்பதுடன் சர்வதேசத்தின் மத்தியில் எங்கள் பலம் மீண்டும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கமே தவிர நாங்களும் எங்கள் மக்களும் இன்னமும் முட்கம்பிகளுக்குள்ளும், வறுமைக் கொடூரத்திற்குள்ளேயுமே வாழ்கின்றோம்.

எங்களில் யாரும் கோடிக்கணக்கான பெறுமதி வாய்ந்த வாகனங்களையோ அல்லது குளிரூட்டி விமானங்களின் ஊடான பயணங்களையோ கனவுகளில் சுமக்கத் தயாரில்லை. காரணம் அனைவரும் வரும் போது மாற்றுடை இன்றியே வர அனுமதிக்கப்பட்டோம். குறிப்பிட்ட அளவானோர் ஆடைகள் எதுவும் இன்றியே வர நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். இன்மும் நாங்கள் தொலைத்த உயிர்களதும், அங்கங்களதும், உழைப்புக்கான உடைமைகளதும் இழப்புக்களில் இருந்து நாங்கள் மீளவில்லை. இந்த நிலையில் நாங்கள் ஒருமைப்பாடு பற்றி கவலை கொள்வதற்கு தகுதி அற்றவர்களா?

புதிய முன்னணிக்கு எதிரான கருத்தோட்டம் இந்தக் கட்டுரையூடாக உணரப்படுவதற்கான காரணத்தில் சில விடயங்களை இந்தப் பத்தியில் குறிப்பிடுகின்றோம். முன்னணியின் புதிய கொள்கைவிளக்க அறிக்கையின் ஊடாக யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எவருக்கும் வாக்களிக்கவேண்டாம் என அழுத்தம் திருத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் உட்பொருள் என்ன? தமிழ் தேசிய வாதிகளை அல்லது செயற்பாட்டாளர்களை இனங்கண்டு கொள்ள இவர்கள் என்ன கருவிகளைக் கைக்கொண்டுள்ளார்கள்? தமிழ் தேசியக் கூட்டமைப்புச் சார்பில் யாழ்.தேர்தல் தொகுதி மாவட்டத்திற்கு உட்பட்ட கிளிநொச்சி மாவட்டம் சார்பில் சிவஞானம் சிறீதரன் என்கின்ற கிளிநொச்சி மகாவித்தியாலய (கனிஸ்ர) அதிபர் தேர்தலில் குதித்துள்ளார். அவர் குடும்ப ரீதியாக பல்வேறு படிமுறைகளில் தமிழ்த் தேசியத்துடனேயே பயணித்துவருபவர் அவருடைய மனைவியின் சகோதரரே பிரிகேடியர் தீபன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று சொல்லும் உரிமையை எந்தத் தமிழ் மக்கள் புதிய கூட்டணிக்குக் கொடுத்தது?

சரி அது நிற்க திரு கந்தையா சிறீதரன் அவர்களுக்குப் போட்டியாக புதிய முன்னணி நிறுத்தியுள்ள நபர் யார்? திருலோகமூர்த்தி என்கின்ற நபர். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய தலைவர் ஆனந்தசங்கரி அவர்களின் புண்ணியத்தால் சமாதான நீதவான் நியமனம் பெற்றவர். சரி நியமனம் பெற்றாலும் பறவாய் இல்லை. அவரிடம் உறுதிப்படுத்தல் கடிதம் ஏதாவது யாராவது கேட்டு சென்றால் அவர் கேட்கின்ற தொகை 500 ரூபா, இதனை விடவும் அவர் ஒரு மரண விசாரணை அதிகாரியும் கூட. மரணச் சான்றிதழ் பெற எத்தனிப்பவர்கள் அதனை வைத்து ஏதாவது நிறுவனத்திடம் பணம் ஏதாவது பெறலாம் என்றுதான் அதிகமானோர் மரணச் சான்றிதழ் பெறச் செல்வார்கள். அவர் அவர்களிடமும் பணம் கறக்க பின்நிற்பதில்லை. இந்த நிலையில் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறி புதிய கூட்டணி நியமித்துள்ள சில நபர்களைக் கொண்டே அவர்களின் தூர நோக்குடன் கூடிய தேசிய சிந்தனை தெரிகின்றதா?

இந்தக் கட்டுரையின் நோக்கம் இன்னமும் காலம் இருக்கிறது. முடிந்தால் உரியவர்கள், தமிழர்களின் தலைவிதி மீது அக்கறை கொண்டவர்கள் தலையிட்டால் சமரசத்திற்கு வரலாம். அல்லது வர வைக்கலாம். அதுவே ஒவ்வொரு தாயகம் வாழ் தமிழ் ஆன்மாக்களதும் வேண்டுகோள் ஆகும் என்பதுதான்.

இறுதியாக,

மிகப் பெறுமதி வாய்ந்த அந்த உயரிய பெயரின் அர்த்தம் புரிந்த எவரும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தி பிழைப்பு நடத்தவோ அந்த இடத்தினை நினைத்துக் கனவு காண நினைப்பதனையோ எவராலும் மன்னிக்க முடியாது. அவ்வாறான ஒரு நிலைப்பாட்டிற்கான அடித்தளங்களாக மக்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தவும் அதன் மூலம் தமக்கான ஆதாயங்களைத் தேடிக்கொள்ளவும் முயற்சித்தால் அதற்கான பதில்கள் மக்களாலேயே வழங்கப்படும் என்பது மட்டும் உறுதியான விடயம்.

இராவணேசன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*