TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இந்தியாவின் இரட்டை வேடம் அம்பலம்

பெப்ரவரி 22 அன்று இந்திய நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டத் தொடர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் தொடங்கியது. பிரதிபா பாட்டீல் இந்தியில் நிகழ்த்திய அவரது உரையில் கூறியிருப்பதாவது:

“இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர்ந்து இணக்கமாகச் செயல்படும். மனித நேய அடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்வுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும். பாதிக்கப்பட்ட மக்களின் நெடுங்கால நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு ஆக்கபூர்வமான உதவிகளைத் தாராளமாக அளிக்கும்.” ஆக இந்த அறிக்கை மூலமாக ஒரு சாதாரண பாமரனாலயே அறியக்கூடும் இந்தியாவின் இரட்டை வேடம் என்னவென்று. பல விடயங்களை நாம் விவாதிக்கலாம். அதில் சில:

ஈழத் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவி அளிப்பது, அதே வேளை சிங்கள அரசாங்கத்துடன் சிநேகபூர்வமான நட்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பை மறைமுகமாக பிளவுபடச் செய்து அதற்கு புது டெல்லியில் ஒரு அலுவலகம் அமைத்துக் கொடுத்து, தமது நேரடி கண்காணிப்பில் அவர்களை வைத்துக்கொண்டு தமக்கு விசுவாசமான வரதராஜப் பெருமாளை வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியைப் பெற்று தருதல்; மற்றும் மகிந்த அரசிற்கு நேரடி ஆதரவு; அத்துடன் முன்னாள் இராணுவத் தளபதி பின்னாளில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்று பின்னர் மகிந்த அரசினால் இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் பொன்சேகாவிற்கு மறைமுக ஆதரவு.

தமிழருக்கு மனிதாபிமான உதவி, சிங்களவருடன் நட்பு இந்திய அரசியல் தலைவர்களினால் அறிவிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர் மீதான பாசம் ஒன்றும் அவர்கள் மீது கரிசனை கொண்டல்ல. ஈழத் தமிழர்கள் மீது தாம் ஏதோ அளவு கடந்த கரிசனை வைத்திருப்பதாக உலகையும் தமிழ் நாட்டு மக்களையும் ஏமாற்றுவதற்கு ஆயுதமாகவே ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்டிருப்பதாகவும் அவர்களின் மனிதாபிமான உதவிகளை எப்பொழுதும் இந்தியா செய்யத் தயாராக இருப்பதாகவும் மற்றும் பல மனிதாபிமான உதவித் திட்டங்களை இலங்கையில் நடாத்தி வருவதாகவும் சொல்லிக்கொண்டு மறு புறத்தே சிங்கள அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணுவதாகவும் சிறிலங்கா ஒரு அசைக்க முடியாத ஒரு நட்பு நாடாகவும் இந்தியா பார்ப்பதாகவும் கூறி வருவதை மிக நிதானமாக கவனிப்போமேயானால் இந்தியாவின் இரட்டை வேடத்தை வெகு இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற பழமொழிக்கேற்ப இந்தியாவின் நடவடிக்கை இருக்கின்றது. தனது பூகோள அரசியல் காய் நகர்த்தலுக்காக சிங்களவர்களையும் தமிழர்களையும் ஒரு பகடைக்காய்களாக இந்தியா தனது சுய வேலைத் திட்டங்களை செய்து வருகின்றது. ஆனால் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் இவர்களின் நடவடிக்கைகளுக்கு இரையாக்கப்படுகின்றார்கள். எப்போ சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற இந்தியாவின் எதிரி நாடுகளுடன் நேரடியான உறவுகளை சிறிலங்கா வளர்த்து பரஸ்பர உதவிகளைப் பெற்று பதிலுக்கு இந்நாடுகளின் இராணுவ கேந்திரத் தளமாக சிறிலங்கா மாறி விடுமோ என்ற ஆதங்கத்தில் இந்திய சட்ட வகுப்பாளர்களும் அதன் மூத்த அதிகாரிகளும் பல முரண்பாடான கொள்கை வகுப்புக்களை வகுத்துச் செயலாற்றம் கொடுக்கின்றார்கள் என்பது தான் மறுக்கப்பட முடியாத உண்மை.

அதில் ஒரு செயலாக்கம் தான் ஈழத் தமிழருக்கு மனிதாபிமான உதவி மறுபுறம் சிங்கள அரசாங்கத்துடன் நல்லுறவு. ஈழத் தமிழரின் இன்றும் ஆறாத வடுவாக இருப்பது நடந்து முடிந்த இனச் சுத்திகரிப்பு யுத்த வழிகாட்டி மகிந்த தலைமையிலான அரசாங்கமாக இருப்பினும் இதன் பின்னணி சூத்திரதாரிகள் பலர். இந்த சூத்திரதாரிகளில் முதன்மையானவர்கள் யார் என்றால் சோனியா காந்தி தலைமையில் இயங்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். இத்தாலியை பிறப்பிடமாக கொண்டு பின்னர் இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தியை காதலித்து கைப்பிடித்து இந்தியாவின் மூத்த அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சியை தானே தலைமையேற்று நடாத்தி வரும் சோனியா தனது கணவரின் இறப்பின் பின்னால் ஈழத் தமிழரின் அரசியல் மற்றும் இராணுவ பின்னடைவுகளுக்கு ஒரே காரணம் அவரின் கணவரின் கொலையின் சூத்திரதாரர்களாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் அகிலாவை குற்றவாளிகளாக அறிவித்தார்கள்.

சந்திரிகா குமாரதுங்க அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் போர் நடவடிக்கையில் அகிலா சாக பின்னர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் மட்டுமே உயிரோடு இருந்தார்கள் என்பதனால் இந்தியா ஒரு போரை மகிந்த அரசு ஊடாக நடாத்தி இவர்கள் இரண்டு பேரின் உயிரை எடுத்து தாம் போட்ட சபதம் நிறைவடைந்து விட்டதாக தம்பட்டம் அடித்து இந்திய மக்களின் ஆதரவைப் பெற்று காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை இரட்டிப்பாக்க சோனியா போட்ட திட்டம் நிச்சயம் அவர்களுக்கு சாதகமாகவே அமைந்துவிட்டது. எது என்னவாயினும் ராஜீவ் கொலையின் சூத்திரைதாரிகளை எப்படி சோனியா வஞ்சிக்க நடவடிக்கை எடுத்தாரோ அதே போன்றதொரு வஞ்சத்தை தமிழினமும் அவர்களை அழித்த வஞ்சகர்களையும் தண்டிக்க வேண்டி நிற்கின்றார்கள்.

இப்படியான ஒரு நிலை வரும் என்று எண்ணியோ என்னவோ இந்திய அரசியல்வாதிகள் தமிழர் மனங்களை வெல்ல வேண்டும், அத்துடன் சிங்கள அரசாங்கத்தையும் தம் வசம் வைத்து சிறிலங்கா இந்தியாவின் எதிரி நாடுகளுடன் நட்புறவை மற்றும் பொருள் அல்லது பண உதவிகளை பெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள ஒரே வழி சிறிலங்காவை தனது நட்பு நாடாக வைத்துக் கொள்வதுதான். ஏற்கனவே சிறிலங்காவின் இந்தியாவிற்கு விரோதமான செயல்களினால் இந்தியா நொந்து போய் உள்ளது. குறிப்பாக சிறிலங்கா மற்றும் சீனாவிற்கு இடையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார ஒப்பந்தங்கள். மகிந்தாவின் சொந்த ஊரான அம்பாந்தோட்டைத் துறைமுக கட்டுமானம் மற்றும் விமான ஊர்தி கட்டுமானம் போற்றவைகள். இவற்றிற்க்கு நன்கொடையாக சிறிலங்கா சீனாவிற்கு இந்த இடத்தில் பொருளாதார முன்னெடுப்புக்காகவும் மற்றும் போக்குவரத்திற்கு வசதியாகவும் இடம் கொடுப்பதென்று.

இந்த செய்தியானது நிச்சயம் இந்திய நடுவன் அரசை கதி கலங்க வைத்துள்ளது என்றால் மிகையாகாது. அத்துடன் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அதாவது ஈழத்தின் தலைநகரமான திருகோணமலையில் இருக்கும் துறைமுகத்தை எப்படியும் தனது ஆளுமையின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்று இந்தியா தொடந்தும் பல பிரயத்தனங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு இந்தியாவிற்கு தேவை ராஜீவ் மற்றும் ஜெயவர்தனாவுடனான இந்திய – சிறிலங்கா ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது என்னவென்றால் இந்தியாவின் அனுமதி இன்றி ஒருபோதும் பிற நாடுகளுடன் எந்தவொரு ஒப்பந்தமும் செய்யக்கூடாது குறிப்பாக திருகோணமலை துறைமுகம் சம்பந்தமாக.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒரே இலக்காக அங்கீகரித்தார்கள். பின்னர் குறிப்பாக மகிந்த ஆட்சி வந்தவுடனையே வடக்கு கிழக்கை இரு அலகுகளாக பிரித்து கருணா குழுவில் இருந்து பிரிந்த பிள்ளையானை முதலமைச்சராக போட்டு ஒரு மாஜி அரசாங்கத்தையே நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு வியப்பு என்னவென்றால் இந்த மாகாண அரசிற்கு எந்தவொரு அதிகாரமோ வழங்கப்படாமல் குறிப்பாக இந்த மாகாணம் இன்றும் ஒரு சிங்கள இராணுவ ஆட்சியின் கீழ் தான் இருக்கின்றது. இந்த நிலையில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒரு அலுவலகத்தை புது டெல்லியில் திறப்பதற்கான வேலைத்திட்டங்களை செய்து கொண்டுள்ளார்கள்.

கூட்டமைப்புக்கு புது டெல்லியில் அலுவலகம் பெருமாளுக்கோ ஈழத்தில் அலுவலகம்
கூட்டமைப்பின் முன்னணி உறுப்பினர்கள் சூசகமாகவே தெரிவித்திருக்கின்றார்கள் தமது ஒரு கிளை அலுவலகத்தை புது டெல்லியில் நிறுவ உத்தேசிருப்பதாகவும் அதற்கு வெகு சீக்கிரத்தில் இந்திய மத்திய அரசின் ஆணை கிடைக்குமென்று. இந்திய நடுவன் அரசிற்கும் மற்றும் அதன் உளவுத்துறைக்கும் ஏற்கனவே இந்த செய்தியைப் பற்றிய உண்மை தெரிந்திருக்கும் என்பதில் ஏதேனும் ஐயமில்லை. காரணம் அவர்களே கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களை சந்தித்த வேளை தெரிவித்திருந்திருப்பார்கள். கூட்டமைப்பினருக்கும் இதுவே இன்றைய தேவை காரணம் அவர்கள் இந்திய அரசின் பங்களிப்பின்றி எந்தவொரு அடுத்த கட்ட அரசியல் காய் நகர்த்தலையும் செய்ய முடியாது. அப்படி செய்தாலும் இந்தியா கூட்டமைப்பினரின் ஒவ்வொரு நடவடிக்கைளையும் முடக்கி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்பதும் கூட்டமைப்பினருக்கு தெரியும்.

எது எப்படியிருந்தாலும் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்த செய்தி கசிந்தவுடன் மறுதளித்துள்ளார்கள். குறிப்பாக சம்பந்தரோ மாவை சேனாதிராஜவோ இந்த செய்தியின் பின்னணியைப் பற்றி எவ்வித மறுதளிப்பையும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த செய்தியை ஊர்ஜிதப்படுத்தினார். பின்னர் செல்வம் அடைக்கலநாதன் இந்த செய்தியை மறுதளித்தார். ஆனால் ஓன்று மட்டும் நிச்சயம் அதாவது இந்திய மத்திய அரசு கூட்டமைப்பினருடன் நேரடித் தொடர்பைப் பேணி ஈழ மக்களின் அபிலாசைகள் என்னவென்று அறிந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எப்படி எடுக்கலாம் என்று இந்தியா சிந்தித்து செயலாற்றும் என்பது தான் திண்ணம். அடுத்ததாக இந்தியாவுக்கு கூட்டமைப்பினரை தமது கைகளுக்குள் வைத்திருந்தால் தான் அவர்கள் மூலமாக அடுத்த கட்ட அரசியல் வேலைத் திட்டங்களை செய்யலாம் என்பது இந்தியாவுக்கு நன்கே தெரியும்.

இப்பொழுது கூட்டமைப்பினர் முன் எப்போதுமில்லாத உக்கிர எதிர்ப்பை பல முனைகளில் இருந்து சந்தித்து கொண்டிருக்கின்றார்கள் குறிப்பாக கயேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னிச்சையாக கூட்டமைப்பில் இருந்து விலகி தனது விசுவாசிகளுடன் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளனர். இவைகள் அனைத்தையும் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக விரும்பவில்லை. உண்மையான நிலவரம் அறியாமல் பல ஈழத் தமிழர் உள்நாட்டிலும் மற்றும் புலம்பெயர்ந்து உள்ள தமிழர்கள் கூட்டமைப்பினர் மீது எதிர்ப்பை வாரி இறைக்கின்றனர். ஆக கூட்டமைப்பினர் நிச்சயம் மாபெரும் எதிர்ப்புக்களை எதிர்நோக்கியுள்ளார்கள். இவைகள் அனைத்துக்கும் உரம் சேர்ப்பாற் போல் அவர்களின் காரியாலயத் திறப்பு. நிச்சயம் ஈழத் தமிழர் கூட்டமைப்பினரின் இந்த முடிவை எதிர்ப்பார்கள் என்பது மட்டும் உண்மை.

ராஜதந்திர வரைமுறையின் கீழ் கூட்டமைப்பினர் செய்பவைகள் சரியானதாக இருப்பினும் பாமர தமிழ் பேசும் மக்கள் இந்தியாவுடனான நேரடி உறவை விரும்பமாட்டார்கள் குறிப்பாக கூட்டமைப்பினரின் டெல்லி காரியாலயம் ஈழத் தமிழரின் சுய மரியாதையை பணயம் வைப்பதாக இருக்கும். காரணம் ஈழத் தமிழரின் போராட்டம் இந்தியாவின் ஆதரவுடனயே முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென்று சில ஈழத் தமிழர் இன்றும் நம்புகின்றார்கள். இவைகளுக்கு மகுடம் சூட்டுவதாகத் தான் இந்திய அரசின் தற்போதைய செயற்பாடுகள் இருக்கின்றது. இந்தியாவின் பல கால அவா என்னெவென்றால் குறிப்பாக ராஜீவ் காந்தியினால் கையொப்பமிடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்த நகலின் படி வடக்கு கிழக்கை இணைத்து தனக்கு விசுவாசமான ஒருவரை முதல்வர் ஆக்குவதே.

பல காலகட்டங்களில் இந்திய உளவுப்படை முன்னாள் வடகிழக்கின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளை கொழும்புக்கு அனுப்பி எப்படியாயினும் இலங்கை அரசியலில் ஒரு முக்கிய பொறுப்பைப் பெற்றுத் தரவேண்டும் என்ற நோக்குடன் பல வேலைத் திட்டங்களை செய்தார்கள். ஆனால் அவைகள் அனைத்தும் காற்றோடு போய்விட்டன எந்தப் பலனுமில்லை. இன்று விடுதலைப் புலிகள் இல்லாது இருக்கின்றதாக கூறப்படும் ஒரு காலப்பகுதியில் பெருமாளை ஈழத்துக்கு அனுப்பி அவரை மீண்டும் முதல்வராக்க பல முனைப்புகளை இந்தியா எடுத்திருக்கின்றது என்பது தான் உண்மை. ஈ.என்.டி.எல்.எஃப்பினர் ஈழத்தில் தரையிறக்கப்பட்டுள்ளனர் இந்திய அரசின் இன்னுமொரு மறைமுக ஆக்கிரமிப்பு நடவடிக்கை சமீப நாட்களாக கசியத் தொடங்கி இருக்கின்றது.

இது ஒரு மாபெரும் சதி வேலை இந்திய நடுவன் அரசினாலும் அவர்களின் உளவுத்துறையினராலும் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. அதாவது இந்தியா தனது நேரடி நெறிப்படுத்தலிலும் அவர்களின் ஆயுத மற்றும் பண உதவியாலும் புலிகளின் முன்னாள் கோட்டையான கிளிநொச்சியில் ஈ.என்.டி.எல்.எஃப் அமைப்புக்கு முகாம் அமைப்பு வேலைகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த அமைப்பு பரந்தன் ராஜன் தலைமையில் பல ஆண்டுகளாக இந்தியாவில் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த அமைப்பு இந்தியாவினால் உருவாக்கப்பட்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் செயலாற்றி மக்களால் விரட்டியடிக்கப்பட்டு பின்னர் இந்திய இராணுவத்துடன் ஈழத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் நிலைகொண்டிருந்தனர்.

தமிழ் நாட்டில் ஈழத் தமிழர் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்குடன் செயலாற்றிக் கொண்டிருந்தார்கள் குறிப்பாக பணம் மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றங்களை செய்திருந்தாலும் இவர்கள் இந்தியாவின் செல்லப்பிள்ளைகளாகவே பராமரிக்கப்பட்டார்கள். இவர்கள் இந்திய உளவுத்துறை மற்றும் தமிழ் நாட்டு காவல்துறையுடன் மிக நெருங்கிய உறவை வைத்து பல இரகசிய வேலைகளை செய்து வந்தார்கள். இப்போது புலிகள் இல்லாததாகக் கூறப்படும் காலத்தில் ஈழத்திற்கு அனுப்பி இவர்கள் மூலமாக பல நாசகார வேலைகளை இந்தியா செய்ய எண்ணியுள்ளது.

இது அவர்களின் சமீபகால நடவடிக்கைகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கும். கிளிநொச்சியில் இருந்து வரும் செய்திகளின்படி கிளிநொச்சியில் ஜெயந்தி நகர் பகுதியில் முன்னர் சர்வதேச ஆங்கில பாடசாலையாக இயங்கிய கட்டடத்தினையே இவ்வாறு முகாம் அமைப்பதற்காக இராணுவத்தினரும், அந்த குழு அங்கத்தவர்களும் துப்புரவாக்கி வருகின்றனர். இந்த காணியும் கட்டடமும் குருகுலம் சிறுவர் இல்லம் மற்றும் குருகுலம் ஆச்சிரமம் ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்துள்ளது. மேலும் அங்கு தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற மக்களிடம் இராணுவத்தினரும், ஈ.என்.டி.எல்.எஃப் குழு உறுப்பினர்களும் கலந்துரையா -டியுள்ளனர்.

இதனால் அறிந்து சொல்லும் பாடம் என்னவென்றால் நிச்சயம் இந்தியா ஈழத்தில் ஒரு அமைதியை கொண்டு வருவதற்கான ராஜதந்திர வேலைகளை விட்டுவிட்டு இந்த நாசகார குழுக்கள் மூலமாக பெருமாள் மற்றும் தனக்கு விசுவாசமான ஈ.என்.டி.எல்.எஃப்னர் போன்ற குழுக்கள் மூலமாக ஈழத் தமிழர்களின் அரசியல் வேள்வியை மழுங்கடித்து ஒரு மாயத் தீர்வை இலங்கையின் இறையாண்மையின் கீழ் கொண்டு வந்து ஈழத் தமிழர்களின் அணையாத ஈழத் தீயை அணைத்து விடலாமென்று இந்தியா கங்கணம் கட்டி நிற்கின்றது. எதிர்வரும் புதிய அரசாங்கம் இந்தியா நிர்ப்பந்திக்கும் ஒரு தீர்வை வைக்க தவறுமாயின் மீண்டும் சிறி லங்காவில் ஒரு கிளர்ச்சியை இந்த ஈ.என்.டி.எல்.எஃப் ஊடாக நடாத்தவோ ஈழத்தில் ஒரு இயல்பற்ற தன்மையை இந்தியா கொண்டு வரும் என்பது தான் ஈழத் தமிழர்களின் அச்சம்.

இந்த அமைப்பின் செயல்பாட்டிற்கு நிச்சயம் இளைஞர்கள் தேவை. அதற்கான படைச் சேர்ப்பு நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுவார்கள் என்பது உண்மை. இந்திய இராணுவம் ஈழத்தில் இருந்த காலத்தில் இந்த கூட்டுக் குழுக்கள் பல ஆயிரம் தமிழ் இளைஞர்களை சேர்த்தார்கள். குறிப்பாக பல சிறுவர்களை இணைத்து அவர்கள் தப்பி விடுவார்கள் என்ற பயத்தில் அவர்களின் தலை மற்றும் புருவ முடிகளை எடுத்து பல மனித உரிமை விரோத நடவடிக்கைகளை செய்தார்கள். இவைகள் அனைத்தும் இந்திய இராணுவத்தின் ஒப்புதலுடனையே நடைபெற்றது.
ஆக ஈ.என்.டி.எல்.எஃப் குழு ஈழத்தில் தரையிறக்கம் செய்யப்படிருப்பதானது அடுத்த கட்ட நாசகார வேலைத்திட்டங்களுக்கு இந்தியா அடித்தளம் போட்டுக்கொண்டிருக்கின்றது.

காலம் கனியும் போது இவர்கள் மூலமாக ஈழத் தமிழரின் ஈழக் கனவை அடியோடே அழித் தொழிக்க இந்தியா காய் நகர்த்தும். எது எப்படியாயினும் ஈழத் தமிழரின் விடுதலையை ஒரு போதும் இந்தியா விரும்பவில்லை. தமது பூகோள அரசியல் காய் நகர்த்தலுக்காக ஈழத் தமிழினம் பலிக்கடாய் ஆக்கப்படுவார்கள் எனபது தான் உண்மை. இவற்றுக்கு சோரம் போகும் ஈழத் தமிழ் அரசியல்வாதிகளும் ஒட்டுக்குழுக்களும் தங்களுக்கே தாமே வேட்டு வைக்கின்றார்கள். இந்தியாவின் இரட்டை வேடத்தை இனியாவதும் தமிழ் இனம் உணந்து செயலாற்றுவார்களா என்பது தான் பல கோடி ரூபா பெறுமதியான கேள்வி. இதற்கான பதிலை இந்த சோரம் போகும் தமிழர் தான் சொல்ல வேண்டும். எது எப்படியாயினும் நிச்சயம் இதற்கான பதிலை காலம் சொல்லும்.

அனலை நிதிஸ் ச. குமாரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*