TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பொன்சேகா மீதான இராணுவ விசாரணை: கைவிடுவதற்கு

பொன்சேகா மீதான இராணுவ விசாரணை: கைவிடுவதற்கு முனைகிறதா அரசாங்கம்?

இராணுவச் சட்டங்களின் கீழ் கைதாகி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதை அறிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா கைதான விதம், அதன்பின்னர் அவர் மீது இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை அரச தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ, அரசியலில் ஈடுபடும் நோக்கில் இராணுவ சேவையில் இருந்த போது- ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவி, அந்தஸ்தை தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்தால் தான் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருந்தார்.

அதாவது இராணுவத்தில் இருந்தபோது அரசியல் கட்சிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியதற்காகவே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அரசாங்கத்துககு எதிரான நடவடிக்கையாக- அரசைக் கவிழ்க்கும் முயற்சியாகவே அது பார்க்கப்பட்டது.

அதுமட்டுமன்றி முன்னதாக அவர் மீது அதிகாரத்தைப் பலவந்தகமாக கைப்பற்ற சதி செய்ததாகவும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை குடும்பத்துடன் கொலை செய்ய எத்தனித்ததாகவும் சரத் பொன்சேகா மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அந்தக் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகின. அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியான கருத்துகள் அனைத்துமே சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகளையே பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் மீது இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற வினா எழுந்த போது இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவர் மீது ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அரசாங்கம் கூறியிருந்தது.

மொத்தத்தில் இராணுவச் சட்டத்தின் கீழ் சரத் பொன்சேகாவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படுவதையே அரசாங்கம் விரும்பியது. அது அவருக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுக் கொடுக்கின்ற சுலபமான வழியாகவும் இருக்கும்.

இராணுவச் சட்டத்தின் கீழ் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டால் உயர்நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற முடியும் என்றும் அரசாங்கம் கூறியிருந்தது.

அத்துடன் சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தினால் குறைந்தது 5 வருட சிறைத்தண்டனையை பெற்றுக் கொடுக்க முடியும் என்று கூறியிருந்தார் கோத்தாபய ராஜபக்ஸ.

இன்னொரு பக்கத்தில் ஊடகங்கள் சில, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்றும்- ஏன் மரணதண்டனைக்குக் கூட சாத்தியமுள்ளதாகவும் எழுதித் தள்ளின.

இவையெல்லாம் சரத் பொன்சேகா மீது இராணுவச் சட்டம் பாயப் போகிறது என்ற பிம்பத்தையே உருவாக்கி வைத்திருந்தது. இந்த நிலையில் கடந்தவாரம் திடீரென அமைச்சர் பீரிஸ், அவர் மீது சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாக அறிவித்தார்.

அமைச்சர் பீரிசின் கருத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத ஊடகங்கள் பல குழப்பமான தகவல்களை வெளியிட்டன.சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படமாட்டார் என்பது போலவும், அவர் மீது சிவில் நீதிமன்றத்திலேயே வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்தச் செய்தியில் பாதிதான் உண்மை.

சிவில் நீதிமன்றத்தில் அவர் மீது இரு வாரங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது- அது உண்மை. ஆனால் இராணுவ நீதிமன்ற விசாரணை கைவிடப்படவில்லை. அதுகுறித்த முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை.

முதற்கட்டமாக சரத் பொன்சேகா மீது சிவில் நீதிமன்றத்தில்- இரண்டு சட்டங்களின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன. ஆயுதக் கொள்வனவுகளில் மோசடி செய்து நாட்டுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது

மற்றும் மோசடிகளுக்கு துணை போனது, இராணுவத்துக்குள் பிளவை ஏற்படுத்த முயன்றது, படையில் இருந்து தப்பியோடிய படையினரை பாதுகாப்புக்காக வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் இலங்கைத் தண்டனைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்படவுள்ளன.

அந்நியச் செலாவணி மோசடிகளில் ஈடுபட்டதாக அந்நியச் செலாவணி மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்குத் தொடுக்கப்படவுள்ளது.

அதேவேளை, சரத் பொன்சேகா மீதான இராணுவத் தரப்பின் விசாரணைகளும் தொடரப் போகின்றன. அதன் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இருந்தால், இராணுவச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்தது, ஜனாதிபதியை குடும்பத்துடன் கொலை செய்ய சதி செய்தது போன்ற குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசதரப்பு சற்று பின்வாங்குவதாகவே தெரிகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி அரசாங்கம் அவர் மீது வழக்குத் தொடுப்பதில் தீவிரமாக இருந்த போதும்- இப்போது சற்றுத் தயக்கம் காண்பிக்கிறது.

ஆனால் இராணுவச் சட்டத்தின் கீழ் சரத் பொன்சேகா மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சியையோ- திட்டத்தையோ அரசு கைவிட்டு விட்டதாக அர்த்தம் கொள்ள முடியாது.

அதேவேளை, சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தும் முடிவில், அரசாங்கம் ஏன் தயக்கம் காண்பிக்கிறது என்பது கேள்விக்குரிய விவகாரமே.

சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தும் வகையில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் அவர் மீதான குற்றச்சாட்டுகளை தொகுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவரது வாக்குமூலம் பெறப்பட்டதுடன், வேறு சில அரசியல் பிரமுகர்களினதும் வாக்கு மூலங்களும் பெறப்பட்டன. குறிப்பாக அரசதரப்புக்குத் தாவிய சிலரும், தற்போது எதிர்க்கட்சிகளுடன் செயற்படும் முக்கிய பிரமுகர்கள் சிலரும் கூட இதுதொடர்பாக வாக்குமூலம் அளித்திருந்தனர்.

ஆனால் சரத் பொன்சேகா மீது இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் அதை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதிக்குள் செய்து முடிக்க வேண்டும்.

அதாவது இராணுவ நீதிமன்றத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி- விசாரணை நடத்தி- தண்டனையை இந்தக் காலப்பகுதிக்குள் அறிவிக்க வேண்டும்.

அதற்கு அப்பால் அவர் மீது இராணுவச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. அதற்கு கால அவகாசம் போதுமா என்ற கேள்வி உள்ளது.

ஏனெனில் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்களை- குறுகிய காலத்துக்குள் திரட்டி இராணுவ நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது ஒன்றும் சுலபமான காரியமல்ல.

அதேவேளை இராணுவச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமைமீறல் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றமே அவரை விடுதலை செய்ய முடியாது என்று கூறிவிட்டது.

அது இராணுவச் சட்;டத்தின் படி அவர் மீதான நடவடிக்கைகள் சரியானதென்ற பார்வையில் உயர்நீதிமன்றம் இருப்பதை வெளிப்படுத்துகிறது.

உயர்நீதிமன்றத்தை திருப்திப்படுத்தும் வகையில் தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது சரத் பொன்சேகாவுக்குப் பாதகமான விடயமாகும்.

ஆனாலும் அரசாங்கம் இப்போது அவரை சிவில் நிதிமன்றத்தில் நிறுத்த எடுத்துள்ள முடிவு- அரசைக் கவிழ்க்கச் சதி செய்தது, ஜனாதிபதியை குடும்பத்துடன் படுகொலை செய்ய முயன்றது போன்ற குற்றச்சாட்டுகளை அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளது எல்லாமே சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

சரத் பொன்சேகா மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்த பின்னர் பல சோதனைகளைச் சந்திக்க ஆரம்பித்தது. உள்நாட்டில் சந்தித்த விளைவுகள்- வெளிநாட்டில் இருந்து வந்த அழுத்தங்கள் என இதை இருவகைப் படுத்தலாம்.

உள்நாட்டில் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தன. இது பொதுத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் அரசுக்கு தோன்றியிருக்கலாம்.

அடுத்து சரத் பொன்சேகா விடயத்தில் அரசு கடுமையாக நடந்து கொள்வதாக பௌத்த பீடங்கள் கருதுகின்றன. இதன்விளைவாக பௌத்த பிக்குகள் மத்தியில் பிளவுகள் தோன்றியிருக்கிறது.

மேலும் அரசு பௌத்த பீடாதிபதிகளையே மிரட்டத் தொடங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளன. சரத் பொன்சேகா விவகாரத்தை ஆராய அவசர மகாசங்கக் கூட்டத்தை நடத்தப் போவதாக பௌத்த பீடாதிபதிகள் கூடட்டாக விடுத்த அறிக்கையின் விளைவே இது.

* இப்படி உள்நாட்டில் அரசுக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் சில விடயங்கள் நடந்தேறின. அதேவேளை சரத் பொன்சேகா விடயத்தில் ஆரம்பத்தில் அடக்கி வாசித்த வெளிநாடுகள் இப்போது தமது வாயைத் திறந்து அதிருப்தி வெளியிடத் தொடங்கியுள்ளன. தெற்காசியப் பிராந்தியத்துக்கா அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் ஆகியோர், சரத் பொன்சேகா விடயத்தில் தெரிவித்துள்ள கருத்துகள் அரசாங்கத்தை அதிர்ச்சியடையச் செய்திருந்தன.

இதனால் தான் இலங்கை விவகாரத்தில் தலையிட அமெரிக்காவுக்கு உரிமையில்லை என்று காட்டமான அறிக்கையை வெளியிட்டது இலங்கை அரசு.

இன்னொரு பக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இடைநிறுத்தியது. இப்படி வெளிநாட்டு அழுத்தங்கள் அதிகரித்து அரசாங்கம் தனது முடிவில் இருந்து பின்வாங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஆனால் சரத் பொன்சேகா விடயத்தில் அரசாங்கம் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்ள முனையாது என்றே கருதப்படுகிறது. அவர் மீது வலுவான ஆதாரங்களை திரட்டி சிவில் நீதிமன்றத்தில் ஆகக் கூடிய தண்டனையை பெற்றுக் கொடுக்க முனையலாம்.

அல்லது முதற்கட்டமாக சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விட்டு இராணுவ நீதிமன்ற விசாரணையை கொஞ்சம் பொறுமையாக மேற்கொள்ளலாம்.

எது என்னவென்றாலும் இராணுவ நீதிமன்ற விசாரணையை ஆரம்பிப்பதற்கு அரசுக்கு இரண்டு மாத அவகாசங்கள் கூடக் கிடையாது. எனவே சரத் பொன்சேகா மீது இராணுவ சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை பெரும்பாலும் கைவிட அரசு முனையலாம்.

கொழும்பிலிருந்து சத்திரியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*