TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இத்தனைக்கும் பிறகும் இந்தியாவை நம்பலாமா? பாகம் 1

விடுதலைப் புலிகளின் ஆயுதபல இழப்பிற்குப் பின்னர் தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரலை இந்தியா நோக்கி நகர்த்துவதற்குச் சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.

அதற்கு, ‘இந்தியாவின் ஆதரவு இல்லாமல் எமது பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் தொடங்கிப் பலரும் நியாயம் கற்பிக்க முயன்று வருகின்றார்கள். ‘இந்தியாவின் ஆதரவு இல்லாமல் எமது பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது’ என்று அடித்துக் கூறி, தமிழீழ மக்களை மீண்டும் இந்தியப் புதைகுழிக்குள் கொண்டு செல்ல முயலும் இந்த இந்திய தாசர்களின் எண்ணக் கருத்துக்கள் உண்மையானவைதானா? இந்தியாவைத் தவிர்த்து ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதா? என்று கேள்விகளுக்கு விடை தேட வேண்டிய அவசியம் எமக்கு உள்ளது. உண்மையாகவே, இந்தியாவிற்கு ஈழத் தமிழர்கள்மேல் கரிசனை உண்டா? என்பதை நாம் முதலில் ஆராயவேண்டும். அதன் மூலம், இந்தியா ஈழத் தமிழர்களின் நண்பனா? எதிரியா? என்று முடிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயமும் எமக்கு உள்ளது.

இந்தியாவின் ஈழத் தமிழர் குறித்த நிலைப்பாடு என்பது அதன் நலன் சார்ந்ததே தவிர, ஈழத் தமிழர்களின் நலன் சார்ந்ததாக எப்போதுமே இருந்ததில்லை. சுதந்திர இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை என்பது ஒரு நீண்டகாலக் கண்ணோட்டம் கொண்டதாக எப்போதும் இருந்ததில்லை. தன்னைச் சுற்றியுள்ள எந்த நாடுகளுடனும் அது நீண்டகால நல்லுறவையும் கொண்டிருக்கவில்லை. சீனாவுடன் ஒரு யுத்தத்தையும், பாக்கிஸ்தானுடன் மூன்று யுத்தங்களையும் புரிந்த இந்தியாவால் இன்றுவரை அந்த நாடுகளுடன் சமமரசம் செய்து கொள்ளவே முடியவில்லை.

பாக்கிஸ்தானின் பலத்தைச் சிதைத்து, தனக்கான பாதுகாப்பு அரணை ஏற்படுத்தும் முயற்சியில் அதனால் உருவாக்கப்பட்ட வங்காள தேசமும் அதன் பிடியிலிருந்து நழுவியே வருகின்றது. இந்தியாவின் வட-கிழக்கு எல்லைப்புறத்திலுள்ள குட்டி நாடான மியான்மார் என்றழைக்கப்படும் பூட்டான் சீனாவின் செல்வாக்கிற்குட்பட்ட இராணுவ சர்வாதிகார ஆட்சிக்குள் சென்றுவிட்டது. இந்தியாவின் கிடுக்குப் பிடியில் இருந்த நேபாளம் கம்யூனிச ஆதரவு நிலையை எடுத்து சீனா பக்கம் சாய்ந்து வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற இன முரண்பாடுகளுக்கூடாகத் தனது நலன்களை நிவர்த்தி செய்யத் தமிழர்களைத் தெரிவு செய்யும்வரை இலங்கைத் தீவின் ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் வைத்தியங்களையே அடிக்கடி செய்து வந்தனர்.

சீனாவுடனான இந்திய யுத்தத்தின்போது சிங்கள அரசு சீனாவுக்கே ஆதரவு வழங்கியது. பாக்கிஸ்தானுடனான இந்திய யுத்தத்தின்போது பாக்கிஸ்தானிய யுத்த விமானங்கள் கொழும்பில் எரிபொருளை நிரப்பிக்கொண்டு இந்தியா மீதான தாக்குதலுக்கான பறப்புகளை மேற்கொண்டது. இந்தியா சோவியத் யூனியனுடன் நெருக்கத்தைப் பேணிய காலத்தில் அமெரிக்காவுடன் நட்புப் பாராட்டிய சிங்கள அரசு, அமெரிகாவின் உளவு பார்க்கும் வகையிலான இடத்தை வழங்கவும் முன் வந்தது. இந்த நிலையில்தான், இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளாகளும், இந்திய உளவுத் துறையான ‘றோ’வும் மண்டையைக் கசக்கி சிறிலங்கா அரசுக்கு எதிரான வியூகத்தை வகுத்துச் செயற்பட ஆரம்பித்தது.

கலாச்சார ரீதியான பிணைப்பும், தமிழகத்துடனான தொப்பிள்கொடி உறவும் கொண்ட ஈழத் தமிழர்கள் மத்தியில் சிங்கள அரசு மீதான அதிருப்தியைப் பயன்படுத்தி இலங்கை அரசியலில் உள்ளே நுழைவது அவர்களுக்கு வசதியான பாதையாக இருந்தது. இலங்கைத் தீவில் உருவான சிங்கள – தமிழ் இன முரண்பாடு இந்தியாவால் ஊதிப் பெருக்கப்பட்டது. சிங்கள அரசுகளின் தவறான இனப் பாகுபாடு சிந்தனையும், முரட்டுத்தனமான அணுகுமுறையும் இந்தியாவுக்கு வரப் பிரசாதமாக அமைந்தது. ஏற்கனவே, இலங்கைத் தீவில் றோகண விஜயவீரவின் ஜே.வி.பி.யினரால் அறிமுகம் செய்யப்பட்ட ஆயுதப் புரட்சி சிங்கள அரசின் அரச வன்முறைக்குள்ளான தமிழ் இளைஞர்களையும் அந்தப் பாதையை நோக்கி நகர்த்தியது.

சிங்கள அரசின் காவல் துறையையும், படைத் துறையையும் நெருங்க முடியாததான பிரமிப்பில் வைத்திருந்த மாய விம்பம் ஜே.வி.பி.யினால் நொருக்கப்பட்டது, தமிழ் இளைஞர்களுக்கும் நம்பிக்கையை வளர்த்தது. ஜே.வி.பி.யின் ஆயுதப் புரட்சியை அடித்து நொருக்க சிங்கள தேசத்திற்கு ஓடோடிச் சென்று படைபல உதவியை வழங்கிய இந்தியா தமிழீழ இளைஞர்களுக்கு ஆயுதம் வழங்க முடிவு செய்தது அவிழ்க்க முடியாத முடிச்சு அல்ல. அன்றைய சிங்கள அரசுத் தலைவியாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் உதவும்படியான அழைப்பை இந்தியா நிராகரித்திருந்தால் அந்த இடத்தில் பாக்கிஸ்தானோ, சீனாவோ தரையிறங்கியிருக்கும் என்பதே உண்மை நிலையாக இருந்தது.

சிங்கள அரசைத் தன்னுடைய பிடிக்குள் கொண்டு வருவதற்காக ஏற்கனவே பல முயற்சிகளையும் விட்டுக் கொடுப்புக்களையும், சரணடைதல்களையும் இந்தியா பரீட்சித்துப் பார்த்து ஏமாந்திருந்தது. மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக, இலங்கைத் தீவின் மலை முகளுகளில் வேர்வையையும், இரத்தத்தையும் சிந்தி, இறுதியில் உடலையும் தாம் வளர்த்தெடுத்த தேயிலைச் செடிகளுக்கே உரமாக்கி வாழ்ந்த மலையகத் தமிழர்களது குடியுரிமை பறிக்கப்பட்டு, நாடற்றவர்களாக ஆக்கப்பட்ட போது இந்தியா கோபம் கொள்ளவில்லை. அந்த மக்களது எதிர்காலத்தைப்பற்றிய எந்தவித அக்கறையுமின்றி சிங்கள அரசைத் தாஜா செய்வதற்காக இந்தியா அதனுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டது.

மலையகத்தில் வாழும் இந்திய பூர்வீகத் தமிழர் குறித்த இந்த மோசமான அவல நிலையிலும் தனது பிராந்திய நலனையே இந்திய அரசு சிந்தித்தது. மலையகத் தமிழர்களையோ, அவர்களது பிரதிநிதிகளையோ கலந்தாலோசனை மேற் கொள்ளாமலேயே இந்த ஒப்பந்தம் இந்திய – சிங்கள அரசுகளுக்கிடையே நிகழந்தது. அதன் பின்னர், பிறிதொரு சந்தர்ப்பத்தில் இலங்கையை தாஜா செய்வதற்காக தமிழ்நாட்டின் பகுதியான கச்சதீவை தமிழக மக்களையோ, அதன் மாநில அரசையோ கலந்தாலோசிக்காமலேயே சிங்கள அரசுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தது. ஆனாலும், சிங்கள அரசுகள் எல்லாமே பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினவேயொழிய, நட்பை நீடிக்க விரும்பவில்லை.

சிங்கள மக்களுக்கு இந்தியா குறித்த அச்சம் மன்னர் காலத்திலிருந்தே மனதில் வளர்ந்து வந்தது. சின்னஞ்சிறு இலங்கையின் தென் பகுதியில் மட்டுமே வாழும் ஒரு சிறு இனக் குழுமமான தங்களை இந்தியா என்ற பூதம் விழுங்கி விடுமோ என்ற அச்சம், ஈழத் தமிழர்களின் இந்திய ஆதரவு நிலைப்பாட்டால் அதிகரித்துச் சென்று, அதுவே ஈழத் தமிழர்கள் மீதான துவேசமாக வெளிவர ஆரம்பித்தது. அன்றைய காலத்தில், ஈழத் தமிழர்களுக்கு காந்தியை, நேருவை, பகவத் சிங்கை, இந்திரா காந்தியைத் தெரிந்த அளவிற்கு சிங்களத் தலைவர்களையோ, அறிஞர்களையோ தெரிந்திருக்கவில்லை. ஒவ்வொரு ஈழத் தமிழர்கள் வீட்டிலும் இந்தியத் தலைவர்களது படங்கள் சிரித்துக்கொண்டு தொங்கின. இதுவே, சிங்கள – தமிழ் முரண்பாட்டின் அடிப்படைகளாக இருந்தன. இலங்கைத் தீவில் பெரும்பான்மையாக இருந்த சிங்கள மக்கள், இந்திய பின்னணியுடன் வாழும் ஈழத் தமிழர்கள்மீது அச்சம் கொண்டு, அதனால் ஏற்பட்ட சுய பாதுகாப்பு அச்சம் காரணமாக ஈழத் தமிழர்கள் மீது வன்முறைகளைப் பரீட்சிக்க ஆரம்பித்தார்கள். இந்த இன முரண்பாட்டின் பின்னணியிலும் இந்தியாவே உள்ளது.

இந்த இன முரண்பாட்டினூடாகப் பயணித்து இலங்கைத் தீவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்ற இந்தியா ஈழத் தமிழர்களை இரக்கத்துடன் பார்க்க முற்பட்டது. இன முரண்பாடுகளைக் களைவதற்கு முயற்சி செய்யாமல் அதை வளர்த்து விடுவதையே குறியாகக் கொண்டது. சிங்கள இனவாதத் தீயினால் தாக்குண்ட தமிழீழ இளைஞர்களை ஆரத் தழுவி அரவணைத்தது. சிங்கள அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது தர்மமே என்று கீதா உபதேசம் செய்தது. பாக்கிஸ்தானிலிருந்து வங்காள தேச மக்களை விடுவித்தது போல், தம்மையும் இந்தியா விடுவிக்கும் என்று தமிழீழ இளைஞர்களும் இந்தியக் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டனர். இந்தியா ஆதரவு கொடுத்தது, ஆயுதம் கொடுத்தது, பயிற்சி கொடுத்தது. தமிழீழ மண் நம்பிக்கையோடும் நன்றியோடும் இந்தியாவைப் போற்றிப் புகழ்ந்தது. ஆனால், இந்தியா தனது கோரச் சதியை அங்கேதான் ஆரம்பித்தது.

தொடரும்.

நன்றி:ஈழநாடு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*