TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழத்தமிழர், இலங்கைத் தமிழர், தாய்நாட்டுத் தமிழர்

ஈழத்தமிழர், இலங்கைத் தமிழர், தாய்நாட்டுத் தமிழர்– இவர்களின் அரசியல் நிலை என்ன?.

ஈழத்தமிழரின் அரசியல் நிலைப்பாடும், அதனோடு சமாந்தரமாக வரப்போகும் பொதுத் தேர்தலும், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் எத்தனையோ அரசியற் கொக்குகளுக்கும், இனவாத நாரைகளுக்கும் கனவிலும் எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு தருணத்தை அளித்துள்ளன.

இலங்கை பூராவும் தமிழரை ‘ஆதரிக்கும்’ தொனியில் வீட்டுக்கு வீடு ஒரு கட்சி உண்டாகுமா எனத் தோன்றுகிறது. ‘பனையால் விழுந்தவனை மாடேறி விழக்கியது’ போல சிங்கள பௌத்த தீவிரவாதத்தின் அணுகுமுறைகளும், ‘எரிகிற வீட்டில் புடுங்குவது ஆதாயம்’ எனச் சில சுயநலவாத தமிழ்த் துரோகக்கும்பல்களின் கூகு குரல்களும், பாராளுமன்ற இருக்கைகள் ஏதோ பரம்பரைச் சொத்து எனப் பாசாங்கு செய்யும் பிரமுகர்களும், மேலும் இத்தனை காலமும் வெளிநாடுகளில் மதில்மேற் பூனைகளாக இருந்துவிட்டு, இதுதான் தருணம் எனக் களமிறங்கும் சில சுயஇச்சையான அரசியற்வாதிகளும், இவ்வரசியற் சூதாட்டத்தில் தத்தம் காய்களைத் துல்லியமாக நகர்த்த முற்படுகின்றனர்.

பாவம் திருவாளர் பொதுசனம்! முன்பிருந்தே அரைவாசிக்கும் மேலாக வாழ்க்கையை வெறுத்து, எல்லாவற்றையும் பறிகொடுத்து நடைப்பிணமாக இயங்கும் இவர்களுக்கு இதுதான் இன்றைய அரசியல்வாதிகள் கொடுக்கும் பரிசு என்றால் யாரால்தான் விதியை வெல்ல முடியும்? தமிழீழத்திற்காகத் தமது இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களுக்கும், அப்பாவித் தமிழர்களுக்கும் தமிழினம் என்ன கைம்மாறு செய்யக் காத்திருக்கிறது?

மேற்கூறப்பட்ட கேள்விகளுக்கு விடை காண்பது என்பது ஒரு குதிரைக் கொம்பு எனப் பலர் நினைக்கலாம். ஆனால், ஆம்! எம்மால் விடை காண முடியும்; அத்தோடு விதியை வெல்லவும் முடியும்; என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஈழத்தமிழர், இலங்கைத்தமிழர், தாயகத் தமிழர் ஆகியோருடன் புலம் பெயர் தமிழரும் சேர்ந்து இயங்கினால் அடையமுடியாதது ஒன்றுமில்லை எனத் துணிவாகக் கூறலாம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழக் கோரிக்கையை உலகளாவியரீதியில் வாக்கெடுப்பைத் தமது செலவில் நடாத்திய புலம் பெயர் மக்களின் நடைமுறைச் செயற்பாட்டுத் திறனும், கட்டமைப்பு வலிமையும், 12 மணி நேரத்திற்குள் (ஒர் இணையத்தளத்தின் வேண்டுக்கோளுக்கிணைய) ஒரு பாதிக்கப்பபட்ட ஈழத்தமிழனின் குடும்பத்திற்குப் பதினெட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிரித்தானியப் பவுண்களைத் (£ 18,000) திரட்டிய இன உணர்வுடன் கூடிய பணவலிமையும், அயர்லாந்து நீதிமன்றத்தில் வென்ற பின்னர், சர்வதேச நீதி மன்றத்தை நோக்கி மனித உரிமை மீறல், போர்க் குற்றம் இனஅழிப்பு ஆகிய மாபெரும் குற்றங்களுக்கு இலங்கை அரசைக் கூண்டில் நிறுத்தும் மனோவலிமையுடன் கூடிய சமயோசித புத்தியும், முத்துக்குமாரன் முதல் முருகதாசன் வரை நீண்டு செல்லும் தியாக உணர்வுமாகிய அனைத்தையும் கொண்ட தமிழினத்தால் சாதிக்க முடியாதது என ஒன்றுமிருக்க முடியாது எனலாம். ஆனால் வெறுமனே உணர்ச்சி வசப்படுவதன் மூலமோ அல்லது ‘எல்லாம் முடிந்து விட்டது’ என்ற போலி எண்ணத்தாலும், கையாலாகாத்தனத்தாலும் எழும் சோர்வுணர்ச்சியாலோ நாம் எமது இலட்சியங்களை அடைய முடியாது.

திடமான கொள்கையின் அடிப்படையில், பொருள், இடம், காலத்திற்கேற்ப சமயோசிதமும், எமது தலைமை வழிகாட்டியது போன்று என்றும் விலைபோகாத விசுவாசமும்தான் இன்று எமக்குத் தேவையாகும்.

ஈழத்தமிழரின் நிலை:

இன்று ஈழத்தமிழர் (இலங்கைத் தமிழரும்கூட) இலங்கையரசின் அரசியல் யாப்பின் கீழ்த் திணிக்கப்பட்ட நிலையில் வாழ்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். அவற்றிற்கும் மேலாக அவசரகாலச் சட்டமும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும், தமிழ் மக்களை நசுக்கும் இய்ந்திரங்களாகப் பாவிக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் வாக்காளரும் வேட்பாளரும் ஓரே தோணியில்தான் முடங்கியுள்ளார்கள் எனலாம். இலங்கையின் அரசியல் யாப்பின்கீழ் ‘தமிழீழம்’ எனும் ‘பிரிவினைவாதம்’ தடைசெய்யப்பட்டது உண்மை.

ஆனால் எத்தகைய தடைச்சட்டங்கள் இருந்தாலும் தமிழர்கள் ஓர் தனிப்பட்ட இனம் என்பதையும் அவர்களின் சுயநிர்ணய உரிமை , சுயாட்சி, மொழியுரிமை என்பவற்றையும் தடை செய்ய முடியாது. எனவே, நடைமுறையில் தற்போது தமிழீழம்தான் தமது குறிக்கோள் என வெளிப்படையாகக் கோரமுடியாத அரசியல்வாதிகள், ஏனைய கோட்பாடுகளை ஒளிவு மறைவின்றி தயங்காமல் எடுத்துக்கூறவேண்டிய கடமைப்பாடு அவர்களுக்கு உண்டு. அதனடிப்படையில் எல்லா வேட்பாளர்களும் ஒன்றுகூட வேண்டும்.

தமிழர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தமது மூலாதார அபிலாட்சைகளைப் புறந்தள்ளிவிட்டு, இலங்கை அரசோ, இந்தியாவோ அல்லது வெளிநாடுகளோ திணிக்க முயலும் அரைகுறைத் தீர்வுகளை முற்றாக நிராகரிப்பார்கள். நீண்ட கால் அரசியல் நோக்கில், அவர்களுக்கு இதைவிட வேறு வழி இருக்க முடியாது. அத்துடன் அரசில்வாதிகள் அகதிமுகாம்களில் அடைக்கப்பட்டு பல்வேறு வதைகளிற்குள்ளாகியிருக்கும் எமது தமிழுறவுகளை மீட்டெடுப்பதற்குத் தமது அரசியல் வலுவை உள்நாட்டிலும் (எதிர்க்கட்சிகளின் உதவியுடன்) வெளிநாட்டு அரசு சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடனும் அணுக வேண்டும். இலங்கை அரசுக்குச் சாமரை வீசுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என்ற பழைய உண்மையை தமிழ் மக்கள் நினைவு கூறவேண்டும். அப்படி ஏதாவது சலுகைகள் கிடைத்தாலும் தமது சுதந்திரத்தை இழந்தபின் பாரதியின் கூற்றின்படி ‘கண்களை விற்றுச் சித்திரம் வாங்கினால் கைக்கொட்டிச் சிரியாரோ’ என்பது போன்றே தமிழரின் நிலைமை ஆகிவிடும்.

பொருளாதார ரீதியில் இன்று ஈழத்தமிழர்கள் பலர் தமது வெளிநாட்டு உறவுகளின் பணவலுவில் தங்கியிருப்பதைப் பார்க்கலாம். எனினும், இத்தகைய நிலையிலிருந்து கூடியளவு அவர்கள் விடுபட்டுத் தமது சொந்தப் பொருளாதாரக் கட்டமைப்பில் சிறிதுசிறிதாகக் கவனம் செலுத்த வேண்டும். அரசியல் சூழ்நிலை ஸ்திரத்தன்மையடையும் வரை வெளிநாட்டுறவுகளின் சேமிப்புகளை, வெளிநாட்டிலேயே பாதுகாப்பாக பேண முடியுமானால் அது எல்லா வகையிலும் பயனளிக்கக்கூடிய ஒரு நடைமுறையாகும்.

இன்று ஈழத்தமிழர்களை ஆயிரமாயிரமாகப் போரில் இலங்கையரசு அழிக்க உதவிய ஆயுதக் கொள்வனவிற்கு எமது புலம் பெயர்த் தமிழ் மக்கள் வருடக்கணக்கில் அனுப்பிய வெளிநாட்டுச் செலவாணியும் ஒரு முக்கியக் காரணமெனலாம். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல இத்தனைக் காலமாக அனுப்பப்பட்ட பணத்தொகை கொஞ்சநஞ்சமாக இருக்க முடியாது. எனவே இதை மனதிற்கொண்டு தமிழ் மக்கள் அனைவரும் செயல்பட வேண்டியது அவசியம். இன்று ஐரோப்பிய ஒன்றியமே இலங்கைக்கு வரிச்சலுகைகளை நிறுத்திய சமயத்தில், எமது மக்கள் தமது பணத்தை இலங்கைக்கு அனுப்புவது கீழ்த்தரமானதும் வெட்கப்பட வேண்டியதுமுமான விடயமாகும். பொருளாதாரத் துறையில் இயற்கையாகவே பரீட்சார்த்தமுள்ள ஈழத்தமிழருக்கு எப்படித் தமது பொருளாதார வளர்ச்சியைப் பேணுவது என யாரும் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை.

ஈழத்தமிழரல்லாத இலங்கைத் தமிழரின் நிலை :

மேற்கூறிய பாகுபாடு சற்றுக் குறுகிய நோக்கிலேயே அமைந்துள்ளது. இதை உற்று நோக்கினால், மலையகத் தமிழர், இஸ்லாமியத் தமிழர், ஏனைய தமிழர் என எல்லாத் தரப்பினரையும் இதில் அடக்க முடியும்.

பூகோள ரீதியில், மலையகத் தமிழர்கள் ஒரு தனித்துவமான நிலையில் உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது. அவர்கள் தங்கள் அரசியலை ஸ்திரப்படுத்தி, சுயநலமற்ற அரசியல் தலைவர்களை இனங்கண்டு தெரிவு செய்வார்களேயானால் அதுவே ஒரு பெரிய சாதனையாக அமையும். அத்தோடு நில்லாது, அவர்களது வாக்கு வலிமையை அரசாங்கத்திடம் பேரம் பேசும் வகையில் மாற்றியமைத்து, இலங்கையரசின் தற்போதைய உறுதியற்ற பலவீனமான அரசியல் தளத்தைத் தமக்குச் சாதகமாக மாற்ற முடியுமானால் அதுவே அவர்களுக்கு உகந்ததாகும். மலையகத் தமிழர்களின் பலம் என்றும் எமது பலம் என்பதைத் தமிழ் மக்கள் உணர வேண்டும். நிபந்தனையின்றி ஆளும் கட்சிகளிடம் அமைச்சர் பதவிகளுக்காக விலைபோகும் அரசியல்வாதிகளால் மக்களுக்கு ஏதேனும் நன்மை பெறமுடியுமா என்பதை மலையக மக்கள் உணரத் தொடங்கினால், அதுவே அவர்களது வருங்காலத்தில் ஒரு திடமான அரசியல் நிலைப்பாட்டிற்கு வழிவகுக்கும்.

இலங்கை சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலான பொழுதும், இத்தனை காலமும் இலங்கை அரசு தனது முழு வலுவையும் தமிழின அழிப்பிலேயே கவனம் செலுத்தியதால், இஸ்லாமிய சமூகம் பெரிய பாதிப்பினை இன்னும் அடையவில்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் இலங்கை அரசின் யாப்பின் மூலம், பௌத்த மதம், அரசியல் மதமாக்கப்பட்டு ‘சிங்களம் மட்டும்’ அரச மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்ட தற்போதைய சூழ்நிலையில், இஸ்லாமியத் தமிழ்ச் சகோதரர்கள் தொடர்ந்தும் தமது உரிமைகளைப் பாதுகாக்க முடியுமா என்பது மிகப்பெரும் கேள்வியாக உள்ளது.

அத்துடன் போர்ச்சூழலில் பெரிதாகச் சிங்கள இனம் பாதிப்படைந்து வந்த நிலையில், வணிகத் துறையில் பலரும் பொறாமைப்படக்கூடிய நிலையில் முன்னேறியுள்ள இஸ்லாமியர்களின் வளர்ச்சியை இனியும் சிங்களம் பொறுக்குமா என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் இராணுவ ஆக்கிரமிப்பினால் தமது சொந்தக் கானிகளை இழந்த இஸ்லாமியத் தமிழர்கள் அவற்றை கபளீகரம் செய்த இலங்கை அரசிடமிருந்து மீட்கும் பொருட்டுச் சட்ட நடவடிக்கைகளையோ, அல்லது எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்த அரசியல் நடவடிக்கைகளையோ முன்னெடுக்க வேண்டிய தேவையும் உருவாகிறது. இத்தகைய தேவையெழும்போது அவர்களுக்குக் கைகொடுக்க வேண்டிய கடமை ஏனைய தமிழ்ச்சகோதரர்களுக்கும் உண்டு. அதே சமயத்தில் ஏனைய தமிழ் மக்களும், இஸ்லாமியத் தமிழர்களும் ஒன்று சோந்து தாம் தெரிந்தெடுத்த வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலமே இலங்கையில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சியின் வலுவை உடைக்க முடியும்.

ஏனைய தமிழர்கள் என்ற வகையில் முக்கியமாகக் கொழும்பு, கண்டி போன்ற நகரங்களில் வேரூன்றியுள்ளவர்களும், மற்றும் ஏனை சிங்களப் பிரதேசங்களில் நிலை கொண்டுள்ளவர்களும் அடங்குவர். இவர்கள் தற்போதைய தமது பொருளாதார வலு எனும் மாயையில் மூழ்கியிருப்பது வருத்தம் தருவதாகும். இதுவரை புலிகளின் எதிர்ப்பின்போது இவர்களை உதாசீனம் செய்த பௌத்த சிங்களப் பேரினவாதம், இனித் தங்களைத் தட்டிக்கேட்க ஆளில்லாதபோது இவர்களது பொருளாதார மேலாதிக்கத்தை இனிமேலும் சகிக்க வேண்டுமா என்ற கேள்வி எழும் நேரம் அணுகிவருகிறது.

அத்தோடல்லாது தற்போது மேற்கு நாடுகளினதோ அல்லது ஐ.நா.வினதோ நிலைப்பாடுகளை இலங்கையரசு பொருட்படுத்தாத இந்நேரத்தில், இன்னுமொரு 1958 அல்லது 1983 திரும்பிவரமாட்டாது என எந்தவித உத்தரவாதமும் இல்லாத நிலை உருவாகிறது. கொழும்பில் இருந்த சில தமிழர்கள் ‘இவ்வளவு காலமும் புலிகளின் பலத்தினால் தமிழர்கள் இலங்கையில் தப்பினார்கள். ஆனால் இனி என்னவாகும்?’ என ஆதங்கத்துடன் காணப்படுகிறார்கள். ஆனால் அரசியல் என்பது வெறும் ஆதங்கத்துடன் முடிந்துவிடக்கூடிய ஒரு விடயமில்லை. அந்த ஆதங்கத்தின் அடிப்படையில் நகர்வுகள் நடைமுறைப்படுத்தும் போதுதான் தக்க பயனை எதிர்பார்க்கலாம். எனவே இந்த நிலையில் இருக்கும் தமிழ் மக்கள், தமது பொருளாதார அடித்தளத்தைத் தாம் இருக்கும் பலவீனமான அடித்தளங்களில் இருந்து பலமான தளங்களுக்கு (அவை வெளிநாடுகளில் இருந்தாலும் ஏற்றுக் கொண்டு!) மாற்ற வேண்டும்.

உகாண்டாவில் முன்பிருந்த வர்த்தகர்கள் அங்கு இத்தகைய பிரச்சினையை மனதில் கொண்டு, கலவரங்களுக்கு முன்பே தமது பொருளாதார அடித்தளத்தை முக்கியமாக ஐக்கிய இராட்சியத்தினுள்ள வங்கிகளுக்கு மாற்றியதன்மூலம் தமது இழப்புகளைச் சமாளித்தனர் என்பது வரலாற்று உண்மை. சுpங்கள அரசு தமிழ்ப்பிரதேசத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாகக் கூறினாலும், அங்கு தமிழர்கள் அரசியல் ஸ்திரத்தன்மை அடைவதை ஏற்கப்போவதில்லை. அத்துடன் இந்த நொண்டிச்சாட்டுடன் மேலும் வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதன்மூலம் தமது ஊழல் சக்கரத்தை மேலும் பலமுறை சுழற்றும் வாய்ப்பினையும் எதிர்நோக்கலாம். எனவே இலங்கை அரசின் ‘இறால் போட்டுச் சுறாப் பிடிக்கும்’ இத்தகைய நடவடிக்கைகளின்மீது தமிழ் மக்களும், எமது அரசியல்வாதிகளும் விழிப்போடு நோக்குவது அவசியம்.

அரசியல் கோணத்தில், மேற்கூறிய தமிழ் மக்கள் யாவரும் தமக்கு நம்பிக்கையூட்டும் தமிழ் அரசியல்வாதிகள் வேட்பாளராக அமையாதவிடத்து, இலங்கையில் நடைபெறும் சர்வாதிகார அடித்தளத்திற்கு எதிரான அரசியலமைப்புகளை ஆதரிக்க வேண்டும். பௌத்த சிங்கள இனவாத அரசினடமிருந்துஎந்தத் தமிழரும் என்றும் ஒன்றும் பெறப்போவதில்லை எனும் அடிப்படையில் இலங்கையில் வாழும் எல்லாத் தமிழ் மக்களும் இயங்கியே ஆக வேண்டும்.

தாய்நாட்டுத் தமிழர் : தாய்நாட்டுத் தமிழரின் மனோநிலையை அப்துல் ரகுப், முத்துக்குமார் தொடங்கித் தம்முயிரை அர்ப்பணித்த 18 மாவீரர்களின் வரலாற்றில் இருந்து அறியலாம். இத்தகைய தியாகங்களை மழுங்கடிப்பதற்கு ஊழல் வழியில் சென்று ஆட்சியைக் கைப்பற்றிய சில அரசியல் தலைவர்கள் பதீரதப்பிரயத்தனம் எடுக்கலாம். ஆனால் எத்தனையோ தியாகங்களுக்குத் தம்மைத் தயார்படுத்தியிருக்கும் தமிழ் மக்களின் நீறுபூத்த நெருப்புப்போல் பரந்து நிற்கும் உணர்ச்சி அலையில் இத்தகைய போலித்தலைவர்கள் கரைந்து விடுவதுடன் ஒரு புதிய அரசியலமைப்பு விரைவில் உண்டாகும்.

இந்தி எதிர்ப்பு மூலம் தனது அத்திவாரத்தை அமைத்த தற்போதைய அரசு, அதை முற்றாக மறந்து, ஈழத்தமிழரின் இனப்படுகொலைக்குப் பங்காளர்களாக மாறியதுடன் தமது குடும்ப நலனுக்காக மக்களின் தமிழ்த்தேசிய உணர்வை மழுங்கடித்து வடஇந்தியர்களின் அடிவருடிகளாகப் பணியாற்றுகின்றனர். ‘அடைந்தால் திராவிட நாடு அன்றேல் சுடுகாடு’ என்ற கோட்பாட்டைக் கைவிட்டு மாநில சுயாட்சிக்கு மாறி, அதிலிருந்து நழுவி மத்தியக்கூட்டாட்சிக்குச் சென்று அங்கு தாம் புரிந்த ஊழல்களிலிருந்து தப்பிக்கும் பொருட்டு தமிழர்களின்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைகளைச் சர்வதேசங்கள் விசாரணை செய்யும் நேரத்தில், தமிழினத்தையே காட்டிக்கொடுத்து, அதன் பரிசாகத் தமது குடும்ப ஆட்சியை நிறுவியும், தமிழின உணர்வாளர்களை சிறைக்குள் தள்ளியும், பார்ப்பனர்களின் தமிழழிப்புக் கனவை நிறைவேற்றுவதுடன் அதை மறைப்பதற்கு வெளிப்பூச்சாக ஒரு செம்மொழி மாநாட்டை நடாத்த முற்படும் கலைஞரின் சுற்றுமாற்றைச் சரித்திரம் ஒருபோதும் மன்னிக்க மாட்டாது.

தமிழ் நாட்டு மக்கள் தமது கட்சி பேதங்களை மறந்து, தமிழ் உணர்வாளர்கள் காட்டிய வழியில் ஒருங்கிணைந்து தமது ஆக்கபூர்வமான அரசியலமைப்பை விரைவில் அமைக்க முன்வரவேண்டும். இந்நடவடிக்கையின் மூலம் இயற்கையாகவே தற்போது நிலவிவரும் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சி ஆகிய சீர்க்கேடுகளைக் களைந்தெறிந்து, மத்திய அரசின் அடிவருடிகளான திராவிடக்கட்சிகளைப் புறந்தள்ளி, ஒரு மாற்று அணியை உடனே உருவாக்க வேண்டும்.

புலம் பெயர் தமிழரின் பணி : புலம்பெயர் தமிழரின் இன்றைய பங்களிப்பு அனைவரையும் பெருமைக்குள்ளாக்குவதொன்றாகும். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தனித்தமிழீழமே ஈழத்தமிழர்களுக்கு ஒரே தீர்வு என முழக்கமிட்டு, அதைச் சர்வதேச சமூகத்திடம் ஜனநாயக ரீதியில் நிலைநிறுத்திய பெருமை அவர்களையே சாரும். அத்தோடல்லாது நீதித்துறையில், இலங்கைத் தமிழர் மேல் சிங்களஅரசினால் நடாத்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை ஆகியவற்றைச் சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டுவர எடுக்கப்படும் முயற்சிகள் போற்றப்பட வேண்டியவை. புளுP+ என ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய வரிச்சலுகையைத் தடை செய்வதற்காகப் போராடியது அவர்களின் ஒரு பெருமுயற்சியாகும். எனினும் இலங்கையில் உள்ள சட்டதிட்ட அழுத்தங்கள் யாவும் புலம்பெயர் தமிழர்களுக்கு இல்லாத நிலையில், அவர்களே தமிழீழத் தேரை இழுத்துச் செல்ல வேண்டியவராகவுள்ளனர்.

2008 மாவீரர் நாளுரையில் இந்தக்கருத்து வெளிக்கொணரப்பட்டது பலருக்கு நினைவிருக்கலாம். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் புலம்பெயர்த் தமிழ்மக்கள் வெற்றிகரமாக நிறைவேற்றினர். எனினும், தமிழ் மக்கள் தமது வாக்குவலுவையும், அரசியல் திண்மையையும் உபயோகித்து, தம்மை வழிநடத்த முன்வருவபவர்கள் எவரும் அவர்களின் குறிக்கோளிலிருந்து விலகாது பார்த்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து இயங்குவதால், இத்தகைய தலைவர்களின் குடியுரிமைப் பலவீனங்களையோ கொள்கையில் திடத்தன்மையின்மையையோ பாவித்து பல அரசுகள் இவர்களைத் தமது கைப்பொம்மைகளாக நடத்த முயலும் ஆபத்தும் ஏற்படலாம். எனவே தமக்கு, முன் வைக்கப்பட்ட இயக்கங்களை நோக்கும்போது, அவற்றின் கொள்கைகளையும், அவற்றின் தலைமைகளையும், அத்தகைய தலைமைகளின் சரித்திர வாழ்க்கை வரலாறுகளையும் ஆராய்ந்து முடிவெடுத்தல் வேண்டும்.

பொருளாதார ரீதியில், புலம்பெயர் தமிழரின் தயவில் எத்தனையோ உறவினர்களும், நண்பர்களும் இலங்கையில் தங்கியிருப்பதை ஒளிக்கவோ, மறுக்கவோ முடியாது. இவர்களின் பொருளாதாரத் தேவைகள் நியாயமானவை எனினும், இத்தேவைகளை இலங்கைக்குள் உள்ளடக்கக்கூடிய ஒரு பணச் சுற்றின் மூலம் பூர்த்தி செய்தால், இலங்கை அரசின் வெளிநாட்டுச் செலவாணியைக் கட்டுப்படுத்தலாம். வேளிநாட்டுப் பணத்தை அந்தந்த நாடுகளிலேயே சேமித்து, அரசியல் சூழல் ஏற்றதாக அமையும் பொழுது, இலங்கைக்கு கொண்டுவந்தால், அது தமிழர்களின் தார்மீகப்ப போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும். அத்தோடு, தற்போது அமுல்படுத்துப்படும் இலங்கைப் பொருளாதாரப் புறக்கணிப்புப் போராட்டத்தில் பங்கெடுத்து, இலங்கை விமான சேவைப் புறக்கணிப்பு, சுற்றுலாப் புறக்கணிப்பு, பொருட் புறக்கணிப்பு ஆகியவற்றை ஊக்கமுடன் செயற்படுத்த வேண்டும்.

எனவே ‘இன்னும் பிழைப்பன் மன்னன் விழிக்கின்’ என்று மனோன்மணிய ஆசிரியர் கூறியதுபோல, தமிழ் மக்கள் தமது இலட்சியங்களை அடைவது அவர்களின் மனோபலத்திலும், திடமான காத்திரமான நடவடிக்கைகளிலும்தான் தங்கியுள்ளது. சர்வதேச அரசியல் நிலைமை எமக்குச் சாதகமாக மாறிவரும் இத்தருணத்தில், தமிழ் மக்கள் அதையுணர்ந்து சரியான பாதையில் செயற்படுவதே அவர்களின் குறிக்கோளை அடையும் வழியாகும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*