TamilSpy

பொழுது போக்கு இணையம்…

முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பிறகு

முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பிறகு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் சந்திக்கப் போகும் பேரிழப்பாக இந்தப் பொதுத்தேர்தல் அமையப் போகிறது.

வெண்ணெய் திரளும் நேரத்தில் தாழியை உடைக்கும் தமிழ்க்கட்சிகள்

* ‘வெண்ணெய் திரளும் நேரத்தில் தாழியை உடைத்தது போல’ என்ற உவமானத்தின் நிலையில் தமிழினம் நின்று கொண்டிருக்கிறது. ஒருபக்கத்தில் இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற நிலை- தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று வெளிநாடுகள் சொல்லத் துணிந்துள்ள சூழ்நிலை.

* மறுபக்கத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறிக் கொண்டு தமிழ்க்கட்சிகள் ஒவ்வொன்றும் தமிழரின் பிரதிநிதித்துவத்தை கூறுபோட்டு விற்கத் துணிந்து விட்ட அவலம்.

அதாவது சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்ககு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றுக்கான அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ள- வெண்ணெய் திரண்டு வரும் சூழலில்- தமிழ்க்கட்சிகள் தாழியை உடைப்பதிலேயே கவனமாக இருக்கின்றன. தமிழ்; அரசியல்கட்சிகள்- சுயேட்சைக்குழுக்கள் என்று முட்டிமோதும் அணிகள் பல பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ளன. தமிழ் மக்களிடத்தில் அதிக செல்வாக்குள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சிதைவுகளுக்குக் கணிசமான பங்கை வகித்திருப்பது தான் வேதனை.

வேட்பாளர்கள் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடைப்பிடித்த அணுகுமுறை தமிழ் மக்களை முகம் சுழிக்க வைத்திருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் தெரிவில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் நெருக்கடியைச் சந்தித்தது.

அதற்குக் காரணம், களையெடுப்பு என்ற பெயரில் கடந்த பொதுத்தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களை ஓரம் கட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தான்.
ஒவ்வொருவர் மீதும் ஒவ்வொரு குற்றச்சாட்டைச் சுமத்தி- கூட்டமைப்பு பெரும்பாலானவர்களை வெளியேற்றி விட்டது.

கடந்தமுறை யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் ஆறு பேருக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன்விளைவாகக் கூட்டமைப்புக்குள் மற்றொரு உடைவு ஏற்பட்டு தமிழ்க் காங்கிரஸ் செயலாளர் கஜேந்திரகுமார் தலைமையில் தனித்துச் செயற்படும் நிலை ஏற்பட்டது.

மற்றொரு பக்கத்தில் சிவாஜிலிங்கம், சிறிகாந்தா தலைமையில் புதிய கூட்டமைப்பு உருவாகியுள்ளது. இவை போதாதென்று ஏராளமான கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பிரதேசங்களில் தேர்தல் கடைவிரித்திருக்கின்றன.

* கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முற்றிலும் முரண்பாடுகளைக் கொண்ட ஐதேகவும் ஜேவிபியும் கூட்டணியமைத்து சரத் பொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்தின. இந்த இரு கட்சிகளினதும் அடிப்படைக் கொள்கைகள் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கொண்டவை.

* ஆனாலும் மகிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதி பதவியை விட்டு துரத்த வேண்டும் என்ற பொதுநோக்கத்துக்காக ஒன்றாக இணைந்து கொண்டன. எனினும், தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற வகையிலானதொரு அரசியல் தீர்வுக்காக- பொதுநோக்கத்தின் அடிப்படையில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணையத் தயாராக இருக்கவில்லை.

இந்தளவுக்கும் தமிழ்க் கட்சிகள் எதையாவது கேட்டால், இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வைக் காண்பதே தமது இலட்சியம் என்றெல்லாம் வாய் கிழியக் கூறுவார்கள். அப்படி ஒரே கொள்கையுடன் இருந்தாலும் ஒன்றிணைவுக்கு தமிழ்க்கட்சிகள் தயாராக இல்லை. அது பலம்வாய்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரி- அதிக செல்வாக்கில்லாத சிறிய கட்சியாக இருந்தாலும் சரி- இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் நிலையில் இல்லை. தமக்கு வெற்றி வாய்பபு கிடையவே கிடையாது என்று கருதிய கட்சிகள் கூட தேர்தலில் போடடியிடுகின்றன.

தமக்கென நிலையான கொள்கையை- தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிடக் கூட திராணியற்ற கட்சிகள் கூடப் போட்டியிடுகின்றன. வாக்குகளைப் பிரிக்க வேண்டும்- தமக்கு விருப்பமில்லாதவர்களுக்கு ஆசனங்கள் கிடைப்பதை தடுக்க வேண்டும் என்ற நினைப்புத் தான் இதற்குக் காரணம்.

அதிகளவு கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தமிழர் பகுதிகளில் போட்டியிடுவதன் விளைவாக அம்பாறையிலும் திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் வன்னியிலும் தமிழருக்குக் கிடைக்கக் கூடிய ஆசனங்கள் பறிபோகக் கூடிய ஆபத்து தோன்றியுள்ளது. இன்னொரு பக்கத்தில் தமிழர் தரப்பில் வலுவான சக்தியொன்றை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்த இரு சதிகளுக்கும் பெரும்பாலும் எல்லாத் தமிழ்க்கட்சிகளுமே ஏதோ ஒரு வகையில் துணை போகின்றன- பங்களிப்புச் செய்கின்றன. தமிழ்க்கட்சிகள் மத்தியில் இன்றைய நிலையில் ஒற்றுமை என்பதற்கு இடமேயில்லை என்று ஆகிவிட்டது.

ஒரு பொதுநோக்கத்துக்காக தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை வலியுறுத்துவதற்காக- ஒன்றிணைவதற்குக் கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தமிழ்க்கட்சிகள் தவறிவிட்டு விட்டன. இந்தக் குற்றச்சாட்டில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலோ அல்லது வேறெந்த தமிழ்க் கட்சிகளினாலோ தப்பிக் கொள்ள முடியாது,

இந்தத் தேர்தலில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து கணிமானளவு ஆசனங்களை வென்றிருந்தால் அது நிலையான அரசியல்தீர்வு ஒன்றுக்கு நிச்சயம் பிள்ளையார் சுழி போட்டிருக்கும். காரணம் என்னவென்றால் ஆளும்கட்சி பலமானதொன்றாக மாறியுள்ளது. அதற்கு பொதுத்தேர்தலில் அரசியல்தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கான பலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைச் செய்விப்பதற்கான சர்வதேச அழுத்தங்களும் கைகூடி வரத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின், தெற்காசிய பிராந்தியத்துக்கான பிரதி வெளிவிவகாரச் செயலாளர் றோபேட் ஓ பிளேக் அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இன்னொரு பக்கத்தில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரும் இதையே கூறியிருக்கிறார். பிரித்தானிய பிரதமரும் இந்த விடயத்தில் தாம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அழுத்தங்களைக் கொடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

இப்படி சர்வதேச சமூகம், தமிழ் மக்களுக்கு நிலையான அரசியல்தீர்வு ஒன்றை வழங்க வேண்டிய நிலையை நோக்கி இலங்கை அரசைத் தள்ளிக் கொண்டிருக்கிறது. இந்த சர்வதேச அழுத்தங்களில் இருந்து அரசாங்கத்தால் முற்றிலும் விடுபட முடியாது.

அதை அலட்சியம் செய்தால் அரசாங்கத்துக்குப் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே எப்படியாவது தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைக் காணும் முயற்சியில் அரசாங்கம் இறங்கலாம்.

அது நீதியானதாகவோ- நியாயமானதாகவோ இருக்கும் என்றில்லாவிட்டாலும்- அதற்கான அடிப்படை முயற்சிகளில் இறங்குவது தவிர்க்க முடியாததாகலாம். இந்தநிலையில் தமிழ்க்கட்சிகள் வலுவானதொரு நிலையில் ஒன்றுபட்டு நின்றிருந்தால் அது அதிகாரங்களை- உரிமைகளை போராடிப் பெறுவதற்கு வாய்ப்பாக இருந்திருக்கும்.

ஆனால் அந்த வாய்ப்புகளையெல்லாம் உடைத்து நொருக்கி விட்டு ஆசனங்களைப் பங்கு போடத் தயாராகி விட்டன.

* தேர்தலுக்குப் பிறகு கூட்டு வைத்துக் கொள்ளலாம் ஒன்றிணைந்து செயற்படலாம் என்று கூறுவதெல்லாம் வெறும் பம்மாத்து.

அதற்குப் பிறகு யார் யார் அரசுக்குக் காவடி எடுக்கலாம் என்றும், எந்த அமைச்சை கேட்டுப் பெறலாம் என்றும்- எப்படி அதிக சலுகைகளை- வசதிகளை பெறலாம் என்றும் தான் முண்டியடிப்பார்களே தவிர- அரசியல்தீர்வுக்காக ஒன்றுபடும் நிலை இருக்காது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பிறகு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் சந்திக்கப் போகும் பேரிழப்பாக இந்தப் பொதுத்தேர்தல் அமையப் போகிறது.

கபிலன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*