TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஆரோக்கியமற்ற ஆபத்தான ; அபத்தமான போக்கு…

சிறீலங்கா என்ற தேசத்தின் “சனநாயகம்’ மீது ஏற்கனவே நம்பிக்கையிழந்திருந்த தமிழர்கள் மட்டுமல்ல பெரும்பாலான உலக சனநாயக அரசுகள், மனித உரிமை அமைப்புக்கள் உட்பட சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவருமே அதிருப்தியுற்றிருக்கிற தருணம் இது.

இதன் நிமித்தம் அதன் தேர்தல் நடைமுறைகளின் மீதும் சன நாயக செயற்பாடுகள் மீதும் தமிழர் தரப்பு நம்பிக்கை கொள்வதும் – பங்காளிகளாக மாறுவதும் ஏற்புடைய ஒன்றாக இல்லாத போதும் காலத்தின் (வி)சித்திரங்களில் ஒன்றாக தமிழர்தரப்பு பங்காளிகளாக மாறவேண்டி இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

எமது இந்த கண்ணோட்டம் அந்த (வி) சித்திரம் குறித்ததல்ல. மாறாக நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலை முன்னிறுத்தி இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய ஊடகவெளியில் உருவாகி வரும் ஒரு புதிய அபாயகரமான – அபத்தமான போக்கை சுட்டிக்காட்டுவதேயாகும்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளிற்குப் பின் இன்றைய ஈழ அரசியற் களத்தில் ஒரு ஊடகத்தின் பணியின் கனதியை விளக்குவதற்கு அகராதியில் புதிதாக ஒரு வார்த்தையைத்தான்; தேட வேண்டும். ஒரு இனப்படுகொலையைச் சந்தித்து மரத்துப்போன, பேதலித்த கூட்டு உளவியலுக்குள் சிக்கி வெற்று மனிதர்களாகியிருக்கும் ஒரு மக்கள் சமூகத்தை வழிநடத்த வேண்டிய பெரும் பொறுப்புக்குள் சிக்கித் திணறிக்கொண்டிருக்கின்றன தாயகத்தைக் களமாகக் கொண்ட தமிழ் ஊடகங்கள்முள்ளிவாய்க்கால் படுகொலைகளிற்குப் பின் தமது இயலாமையின் போதாமையின் காரணமாக அடிபணிவு அவல அரசியலைக் கையிலெடுத்திருக்கும் சில தமிழ் அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல சில சிங்கள தலைவர்களும் கூட தமிழ் ஊடகங்களின் இந்தத் தடுமாற்றத்தை தமக்கு சாதகமாக்க முற்படுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது.

ஏனெனில் நடைபெற இருக்கிற தேர்தலில் உதயன் – சுடரொளி நிர்வாகி சரவணபவன், வீரகேசரி செய்தி ஆசிரியர் சிறீகஜன், தினக்குரல் ஊடகவியலாளர் ஐங்கரநேசன் போன்றவர்களின் பெயர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் காணக்கிடைக்கிறது.விளைவாக எமக்கு சில சந்தேகங்கள் தோன்றுகின்றன.
01. அவர்கள் அந்தந்த ஊடகங்களின் அனுசரணையுடன்தான் போட்டியிடுகிறார்களா?

02. தொடர்ந்தும் தமது பதவிகளில் நீடிக்கிறார்களா?

03. இவர்களின் தேர்தல் பிரவேசம் குறித்து ஏன் அவர்களோ அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்களோ தமது விளக்கத்தைப் பதிவு செய்யவில்லை?

04. ஒரு வேளை தேர்தலில் தோல்வியுற்றால் மீண்டும் தமது பதவிகளை சுவீகரித்துக் கொள்வார்களா?

இப்படியான பல கேள்விகள் இன்னும் இருக்கின்றன. இவை ஊடக அறம் தொடர்பானதும் அவற்றின் நடுநிலைத் தன்மை தொடர்பானதுமான பல சிக்கலான தோற்றவியற் பண்புகளை தமிழ்த் தேசிய ஊடக வெளியில் உருவாக்குகின்றன. இது ஆரோக்கியமானதல்ல.

ஒரு இனப்படுகொலையைச் சந்தித்து தமக்கான அரசியல் வெளியை இழந்து தவிக்கும் ஒரு மக்கள் கூட்டத்தை வழி நடத்த வேண்டிய தமிழ் ஊடகங்களின் இத்தகைய நடவடிக்கைகள் வேதனைக்குரியவை.

நாம் உடனடியாக ஒரு ஆயுதப்போராட்டத்தை நடத்த முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை சிறீலங்கா என்ற தேசத்திற்குள் நாம் எமக்கான தனித்துவமான அரசியலைச் செய்ய முடியாது என்பதும். எனவே ஊடகங்கள்தான் அரசியல் சார்பும் பக்கச் சார்புமின்றி மக்களை வழி நடத்த வேண்டிய பெரும் பொறுப்பை சுமந்து செல்ல வேண்டியவைகளாக இருக்கின்றன.

சிங்கள ஏகாதிபத்தியத்தை மட்டுமல்ல அடிபணிவு அவல அரசியலைக் கையிலெடுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களின் அரசியல் செயற்பாடுகளையும் கண்டிக்கும் உரிமையும் கடமையும் தமிழ்த் தேசிய ஊடகங்களிற்கே இருக்கின்றன. ஆனால் மேற்படி ஊடகங்களின் – ஊடகவியலாளர்களின் வெளிப்படையான அரசியல் பிரவேசம் தமிழ்த் தேசிய ஊடகவெளியில் உருவாகி வரும் ஒரு புதிய அபாயகரமான – அபத்தமான போக்காக நாம் கருதுகிறோம்.

உதாரணத்திற்கு 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல துண்டங்களாக உடைந்திருப்பதும் அவற்றின் ஒரு பிரிவு தன்னை “கூட்டமைப்பு” என்று கூறிக்கொள்வதும் எத்தகையது? யார் இந்த உரிமையைக் கொடுத்தது? மற்றவர்களை நீக்கும் அதிகாரத்தை யார் அதன் தலைவருக்கு கொடுத்தது? மக்களிடம் அதற்கான ஆலோசனை – கருத்துக்கள் ஏதும் பெறப்பட்டதா? உடைந்துபோன துண்டங்களாக ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டி போடும் சூழலில் தமிழ் மக்களை ஒருவரின் பின் எப்படி அணி திரளச் சொல்ல முடியும்? புலம் பெயர் வானொலியின் உரையாடலில் நாகரிகம் ஏதுமின்றி மக்களுக்கு பதிலளிக்க முடியாமல் தொடர்பைத்துண்டித்த ஒருவர் எப்படி மக்களின் தலைவராக இருக்க முடியும்? இவை எமது கேள்விகள்.

ஆனால் அதற்கான விளக்கத்தை அவர்தன்வசம் வைத்திருக்கக்கூடும். பிரச்சினை அதுவல்ல. இத்தகைய ஒருவரின் பின் ஒட்டுமொத்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஊடக நிர்வாகி ( திரு சரவணபவன்: உதயன் – சுடரொளி) தன்னை வேட்பாளராக்குவது எத்தகையது? இனி இந்த ஊடகங்களில் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்? தமிழ்த் தேசியத்தையா? அல்லது “சம்பந்த” புராணத்தையா? பல இன்னல்களுக்கு மத்தியிலும் ஊடகச்சமர் புரிந்த பாரம்பரியம் மிக்க ஒரு ஊடகமான “உதயன்” இந்த நிலைக்குத் தரம் இறங்கியது வேதனைக்குரியது.

உடனடியாக சம்பந்தப்பட்ட ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் ஒரு தன்னிலை விளக்கத்தைப் பதிவு செய்ய வேண்டும். முடிந்தால் வேட்பாளர்கள் பட்டியலில் இருந்து தமது பெயரை நீக்க முன்வர வேண்டும். ஊடகம், சனநாயகம், கருத்துச் சுதந்திரம் குறித்து அக்கறையுளள்ளவர்கள் அனைவரினதும் கருத்து மட்டுமல்ல வரலாறு இடுகிற கட்டளையும் கூட. தவறான ஊடகக் கலாச்சாரத்திற்கு துணைபோகும் அபத்தத்திலிருந்து வெளியேறுவோம்.

நன்றி:ஈழம் இ நியூஸ்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*