TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தாயை மறந்த தமிழர்கள் தமிழகத்தில் தமிழின் நிலை?

* உலகத் தாய்மொழி நாள் பெப்ரவரி 21 அன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் இந்த நாள் பல இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டது. உலகெங்கும் தாய்மொழியின் அவசியத்தைத் தெரிந்துகொண்ட அளவுக்குத் தமிழ்நாட்டில் அதன் முக்கியத்துவம் உணரப்படாமல் போனதற்குக் காரணம் என்ன?

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுப் போய்விட்டனர். நாட்டுக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்று நம்பி நாமும் சுதந்திரநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை நிலை என்ன? ஆங்கிலேயர் அகன்றுவிட்டபோதிலும் அவர்களது மொழியும் பண்பாடும் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் இப்போதும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து விடுதலை பெறுவது எப்போது?

நமக்கு அதிகாரப்படியான “அரசியல் விடுதலை மட்டுமே கிடைத்திருக்கிறது. சமுதாய,பொருளாதார,பண்பாட்டு விடுதலைகள் இனிமேல் தான் கிடைக்க வேண்டும். உலகில் எத்தனை ஆதிக்கங்கள் உண்டோ அத்தனைக்கும் நாம் அடிமைகளாகவே இருக்கிறோம். நாம் அடிமைகளாக இருக்கிறோம் என்பதைத் தெரியப்படுத்தி புரிய வைக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது.

மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனமாக இருந்த நிலை இன்று மாறிவிட்டது. மொழியே ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்துகிறது. மொழியின் வழியில் மாநிலங்கள் பிரிவினை செய்யப்பட்டதற்கும் அதனை எதிர்ப்பதற்கும் இதுவே காரணமாகும். மொழி இல்லையேல் இனமில்லை. நாடும் இல்லை. இதற்கான வரலாறும் இல்லையன்றோ?

உலகத்திலுள்ள கல்வியாளர்களும் சமூக ஆய்வாளர்களும் உளவியல் வல்லுநர்களும் தாய்மொழிக் கல்வியையே ஆதரிக்கின்றனர். அதுதான் இயற்கையானது. அதனைவிட்டு வேறு மொழியில் கற்பது செயற்கையானது. இது காலால் நடப்பதற்குப் பதிலாகக் கைகளால் நடப்பது போன்றதாகும்.

“குழந்தை தன் முதல் பாடத்தைப் படிப்பது தாயிடமிருந்துதானே! ஆகவே, குழந்தைகளின் மனவளர்ச்சிக்குத் தாய்மொழியையல்லாது வேறொரு மொழியை அவர்கள் மேல் சுமத்துவது நாட்டுக்குச் செய்யும் பெரிய பாவம் என்றே நான் கருதுகிறேன்%27 என்றார் காந்தியடிகள்.

காந்தியடிகளின் புகழ்பாடும் தேசத்தில் அவர் பேச்சைக் கேட்பதில்லை என்பது எவ்வளவு பெரிய ஏமாற்றம். வணக்கத்துக்குரியவர்களின் வார்த்தைகளை மறந்துவிடும் சமுதாயம் எப்படி முன்னேறும்? அசலைப் புறக்கணித்துவிட்டு போலிகளைப் பின்பற்றும் தலைமுறைகளுக்கு எதிர்காலம் ஏது?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகள் எல்லாம் தாய்மொழி மூலம் கல்வியறிவை வளர்த்துக் கொண்டவையே! அமெரிக்காவின் அணுகுண்டால் பெரும் பாதிப்புக்குள்ளான ஜப்பான் அதிக மக்கள் தொகையால் திணறிக் கொண்டிருந்த சீனா போராலும் புரட்சியாலும் பாதிக்கப்பட்ட ரஷ்யா என்னும் இந்த நாடுகள் இன்று சாதனைக்கு மேல் சாதனைகளைச் செய்து கொண்டிருக்கின்றன. அரசியலிலும் அறிவியலிலும் மேலை நாடுகளோடு போட்டியிடுகின்றன. இவை தவிர மேலைநாடுகளில் பிரான்ஸும் ஜேர்மனியும் தாய்மொழியையே பராமரிக்கின்றன.

கிரேக்க,ரோமநாட்டு அறிஞர்களிடமிருந்தும் ஜேர்மன் விஞ்ஞானிகளிடமிருந்தும் ஆங்கிலேயர் அறிந்துகொண்ட செய்திகள் பல. அவற்றையெல்லாம் அவர்கள் தங்கள் தாய்மொழியின் வாயிலோகவே கற்றுத் தெளிவடைந்தனர். அதனால் அவர்களும் உயர்வடைந்தனர். அவர்களது மொழியும் வளம் பெற்றது.

13 ஆம் லூயி என்ற பிரெஞ்சுப் பேரரசன் தன் மொழியைப் பேணி வளர்ப்பதற்காக 1525 ஆம் ஆண்டு பிரெஞ்சுக் கலைக்கழகத்தை உருவாக்கினார். ஆனால், வளமாக வாழ்ந்த பண்டையத் தமிழ்மக்கள் தம்மொழியை வளர்ப்பதற்காக 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே பல சங்கங்களை நிறுவியுள்ளனர்.

முடியுடை மூவேந்தர்களில் பாண்டியர்கள் தங்கள் தலைநகரங்களில் மூன்று சங்கங்களை நிறுவி தமிழ் வளர்த்ததை வரலாறு கூறுகிறது. இதுபற்றிய குறிப்புகளை “இறையனார் களவியல் நூலுக்கு நக்கீரர் எழுதிய உரைமூலம் அறியலாம்.

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்றும் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனித்தாவதெங்கும் காணோம் என்றும் பாரதி பாடிய பெருமைமிக்க நம் தாய்மொழியே!

தமிழ்மொழி பழைமையிலும் சொல்வளத்திலும் இலக்கணச் செழுமையிலும் செய்யுள் ஆளுமையிலும் பண்பாட்டுச் சிறப்பிலும் தலை சிறந்தது என்பது மொழிநூலார் கூற்றாகும். உலகத்தின் உயர்தனிச் செம்மொழிகளான கிரேக்கம்,எபிரேயம்,வடமொழி ஆகிய மூன்று மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் கலந்திருப்பதாக ரைஸ் டேவிட்ஸ் கூறியுள்ளார்.

உலக நாகரிகத்தின் அளவுகோலாக மதிக்கப்படுவது மொழியாகும். மிகப் பழைய நாகரிகமாகக் கூறப்படுவது சுமேரிய நாகரிகம். அதன் அடையாளமான சுமேரிய மொழி சொல்வளம் மிக்கது. ஆயினும் தமிழை நோக்க அம்மொழி இளமையான பிற்பட்ட மொழியாகவே கருதப்படும் என்றார் அறிஞர் எஸ்.ஞானப்பிரகாசர்.

வட இந்தியாவில் வாழ்ந்த மொகஞ்சதாரோ மக்கள் திராவிட மொழியையே பேசினர் என்றும் அவர்கள் பேசிய சொற்களில் பலவற்றை தமிழில் காணலாம் என்றும் ஆதலின் இப்போது வழங்கும் எல்லா மொழிகளிலும் தமிழே மிகப் பழமையானது என்றும் ஹீராஸ் பாதிரியார் குறிப்பிடுகிறார்.

இத்தனை சிறப்புகள் இருந்தாலும் இன்று இதன் நிலை என்ன? தமிழகத்தில் “எங்கும் தமிழ்,எதிலும் தமிழ் என்று அலங்காரமாகப் பேசப்படுகிறதே தவிர, எங்கே தமிழ்? என்று கேட்கும் நிலையே இங்கும் எங்கும் அன்றும் இன்றும் இதில் மாற்றமில்லை.

1956 இல் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1957 ஜனவரி 19 அன்று இச்சட்டம் ஆளுநரின் அனுமதியைப் பெற்றது. ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

வணிக நிலையங்களில் வைக்கப்படும் பெயர்ப் பலகைகளில் தமிழ் இடம்பெற வேண்டும் என்ற சட்டமும் சட்டமாகவே இருக்கிறது.

அரசு அலுவலகங்களிலும் நீதிமன்றங்களிலும் ஆங்கிலம்,பள்ளி கல்லூரிகளில் ஆங்கிலமே பயிற்சிமொழி. இசையரங்குகளில் தெலுங்கு,ஆலயங்களின் வடமொழி,மெத்தப் படித்த மேதாவிகளின் வீடுகளில் தமிழ் இடம்பெறுவது இல்லை.

அண்மையில் ஏற்றுக்கொண்டுள்ள சமச்சீர் கல்வியையும் தாய்மொழி வழியாகக் கொண்டுவர முடியவில்லை. தாய்மொழியை ஒரு பாடமாகப் படிப்பதற்கும் இங்கு எதிர்ப்புக்குரல் எழுகிறது என்றால் இதனை என்னவென்பது?

“தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை என்று பாரதிதாசன் கூறியிருப்பது இன்னும் உண்மைதான் என்பதை வருத்தத்தோடு ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

* 2003 யுனெஸ்கோ அறிக்கையின்படி இன்று உலகில் பேசப்படும் மொழிகள் சுமார் 6700 என்றும் இவற்றில் பாதிக்கும் மேல் 2100 ஆம் ஆண்டுக்குள் அழிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கையில் ஒரு மொழியின் அழிவுக்கான அறிகுறிகளாகச் சொல்லப்படும் 9 காரணிகளும் நமது தாய்மொழிக்கும் பொருந்துவதாக அமைந்திருப்பதுதான் மிகவும் வேதனையானது.

1952 ஆம் ஆண்டு வங்கதேசம் கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த காலம். அங்குள்ள மக்களின் தாய்மொழி வங்காளம்.பாகிஸ்தான் அரசு வங்காள மொழியை நீக்கிவிட்டு உருது மொழியைத் திணிக்க முயன்றபோது மொழிப்போர் வெடித்தது.

டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் அரசின் அடக்கு முறையை மீறி மாணவர்கள் கூட்டம் நடத்தினர். காவல்துறை கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் நான்கு மாணவர்கள் உயிர் இழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

இந்த மொழிப்போரில் உயிர்நீத்த இளைஞர்களின் நினைவாகவே இந்நாள் “உலகத் தாய்மொழி நாள் என்று 1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது.

இந்த மொழிப்போரைப் போலவே தமிழ் நாட்டிலும் “ஹிந்தி எதிர்ப்புப் போர் நடைபெற்றது. இதனால் தாய்மொழி பயனடையவில்லை. அந்நிய மொழியான ஆங்கிலமே பயனடைந்தது.

“ஒரு மொழி மக்களின் தொடர்பு இழந்துவிடுமானால் அது உயிருள்ள, வலுவுள்ள, மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு பொருளாக இருப்பதை விடுத்து தன் வீரியத்தையிழந்து உயிரற்ற செயற்கைப் பொருளாகிவிடும்’ என்று நேரு கூறுகிறார்.

1961 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1652 தாய்மொழிகள் இருந்தன. இதில் 14 மொழிகளைத் தேசிய மொழிகளென அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்டது. இதில் தமிழும் ஒன்று என்பது பெருமைக்குரியதாகும்.

தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும் என்று கோரும் நாம் தமிழகத்தில் தமிழின் நிலை என்ன என்று சிந்திக்க வேண்டாமா?

* உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறப்போகும் இந்த வேளையில் வாயளவில் இல்லாமல் செயலளவில் செய்ய வேண்டியதே தாய்மொழிக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். தாயை மறந்த தமிழ் மக்களை தாயே மன்னித்தாலும் தலைமுறை மன்னிக்காது.

தமிழகத்திலிருந்து ஆருடை நம்பி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*