TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கோரும் மகிந்தா?

நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெறுவது இலகுவானதல்ல என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் ஏழாவது நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசு ‘மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் தேவை’ என்பதை முதன்மைப்படுத்தி களம் இறங்கியுள்ளது. இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கேற்ப பலமான வேட்பாளர்களையும் தேர்தல் வியூகங்களையும் வகுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் சிறிலங்காவின் தற்போதைய தேர்தல் முறையின்கீழ் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறமுடியாதென அரசியல் ஆய்வாளர்களும் பத்திரிகைகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

* இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பிரிவினை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சாதகமாக அமையக்கூடினும், அவர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியடைவார் என்பது இலகுவானதல்ல என அரசியல் ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிகளிடையே பொதுத் தேர்தலை எதிர்கொள்வது குறித்த விடயங்களில் பிளவுகள் ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியிடையே ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தலாம்.

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனதா விமுக்திப் பெரமுன ஆகிய இரு பிரதான எதிர்க்கட்சிகள் தற்போது வெவ்வேறு அணியாக இத்தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இச்செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் அரசியல் யாப்பை மாற்றவும், சர்வதேச முதலீடுகளைப் பெறவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மகிந்த ராஜபக்ச அரசு எதிர்பார்க்கின்றது.

சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான 40 பில்லியன் டொலர் பெறுமதியான முதலீடுகளைப் பெறுவதற்கு உறுதியான நாடாளுமன்றம் அவசியமான நிலையில், சிறிலங்காவுக்கான 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதில் காலதாமதத்தை ஏற்படுத்தப் போவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் தமக்கு வழங்கிய உறுதிமொழியை அடுத்து, புதிய நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் வரை இக்கடனுதவி வழங்குவதை தாமதப்படுத்தப் போவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கொழும்பு ஆய்வாளர்கள், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரு வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாகத் தெரிவித்திருந்ததுடன் இதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம் என்பதையம் வலியுறுத்தியிருந்தார்.

இதுபற்றி கருத்து வெளியிட்ட அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா இத்தேர்தலை சிறிலங்காவின் அரசியல் யாப்பு மாற்றத்திற்கான ஆணையாக முன்வைத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதன் மூலம் இந்த அரசியல் மாற்றங்களைச் செய்யவுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவது சாத்தியமற்ற ஒன்றென்பதைச் சுட்டிக்காட்டும் அவதானிகள், இது இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தை மேலும் இழுத்தடிப்பதற்கான ஒரு முன்னேற்பாடா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கின்றனர்.

காத்திரமான அரசியலமைப்பு மாற்றங்களைச் செய்தவற்கு தனது அரசு விருப்பம் கொண்டிருந்தபோதும், நாடாளுமன்றத்தில் தனது அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில், இனப்பிரச்சனைக்கான தீர்வு முயற்சிகளை தனது அரசால் நிறைவேற்ற முடியவில்லை என மேற்குலக நாடுகளை சமாதானப்படுத்தும் முயற்சியாகவும் ஆய்வாளர்கள் இதனையிட்டு சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் என்பதே தமது அரசின் வழி என கண்டியில் இடம்பெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றும் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். அவரின் இக்கூற்றுக்குள் நாட்டின் தேசிய இனங்கள், தேசியத் தனித்துவங்கள் என்பன மறுக்கப்பட்டுள்ளமையும் அவதானிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*