TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சரத் பொன்சேகா கைதும் பொதுத் தேர்தலும்

இலங்கை உயர் நீதிமன்றம் பெப்ரவரி 08 இல் இராணுவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட தோல்வி கண்ட எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு விடுத்த வேண்டுகோளை கடந்த செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. இந்தக் கைதின் சட்டபூர்வ நிலையை சவால் செய்து பொன்சேகாவின் மனைவி அனோமா தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மனு சம்பந்தமாகவே இந்த விசாரணை நடந்தது.

ஜனவரி 26 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தோல்வியடைந்த பொன்சேகா, ஏப்ரல் 08 இல் நடக்கவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடத் தயாராகின்றார். இந்த மனு மீதான அடுத்த விசாரணை ஏப்ரல் 26 ஆம் திகதிக்கு குறிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசார காலத்தில் விளைபயனுள்ள வகையில் அவரது வாய் அடைக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 12 இல் நடந்த ஆரம்ப விசாரணையில் மனு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது. இலங்கையின் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் குழு,சட்ட மா அதிபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை நிராகரித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணை பதில் பிரதம நீதியரசராகப் பதவியேற்ற ஷிரானி பண்டாரநாயக்க தலைமையிலான வேறு மூன்று நீதிபதிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்டது. அரசுக்குச் சொந்தமான டெய்லி நியூஸ் பத்திரிகையின்படி டி சில்வா வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

சட்ட மா அதிபரிடம் இருந்து எதிர் மனுவின் பிரதி வழக்குக்கு முதல் நாள்தான் தனக்குக் கிடைத்ததாகவும் பதில் மனுவை தயார் செய்ய தனக்குக் காலம் தேவை என்றும் பொன்சேகாவின் சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ் முறைப்பாடு செய்தார். சத்தியக் கடதாசிகளை வாசிக்க அவருக்கு 10 நிமிடங்கள் வழங்கப்பட்ட போதிலும் விசாரணைகள் இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்காக வரையறுக்கப்பட்டுள்ளதாகவுள் பதில் மனுக்களைப் பெற்றுக்கொள்ள என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

முதலாவது விசாரணையில் ஓப்பீட்டளவில் ஒரு கனிஷ்ட சட்டத்தரணியே சட்ட மா அதிபருக்காக சமுகமளித்தார். ஆயினும் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணையின்போது சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் முதலாவது பிரதிவாதியான இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியவின் சார்பில் சமுகமளித்திருந்தார். ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோதாபய ராஜபக்ஷவும் பல உயர்மட்ட இராணுவத் தளபதிகளும் ஏனைய பிரதிவாதிகளாவர்.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை இராணுவச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய முடியாது எனத் தெரிவித்து பொன்சேகா சட்ட விரோதமாக கைதுசெய்யப்பட்டுள்ளதாக அஸீஸ் வாதிட்டார். பொன்சேகா கைதுசெய்யப்பட்டு இரு வாரங்களின் பின்னரும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். பொன்சேகா நிபந்தனைகளுடன் அல்லது நிபந்தனைகளின்றி விடுவிக்கப்பட வேண்டும். அவரது பாதுகாப்பும் நலனும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். மற்றும் அவரது சட்டத்தரணிகளுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவரைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அஸீஸ் இடைக்கால நிவாரணத்துக்கான அவரது வேண்டுகோளை வலியுறுத்தினார்.

கடைசித் தீர்ப்புக்கு முன்னதாக விடுதலை செய்வதை சட்ட மா அதிபர் எதிர்த்தார். குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரச்சினையைத் தட்டிக்கழித்த அவர்,”ஆதாரங்களின் தொகுப்பு பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் மூன்று வாரங்களுக்குள் அது முழுமைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். அதன் பின்னரே அந்தக் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை முன்னெடுப்பதா அல்லது இராணுவ நீதிமன்றத்தில் தண்டனை கொடுப்பதா என இராணுவத் தளபதி தீர்மானிப்பார்.

சட்ட மா அதிபர் பீரிஸ் சில சிறு சலுகைகளை வழங்கினார். பொன்சேகாவின் வைத்தியர், அவரது சட்டத்தரணிகள் மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் அவரைச் சந்திக்க முடியுமென நீதிமன்றத்தில் உறுதிமொழியளித்தார். சட்டத்தரணிகளைப் பொறுத்தளவில் அவர்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட வேண்டும். ஏப்ரல் 08 இல் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் பட்டியலில் பொன்சேகாவிடம் கைச்சாத்துப்பெற அவரது சட்டத்தரணிகளை பீரிஸ் அனுமதித்தார். பொன்சேகா ஜனநாயக தேசியக் கூட்டணி என அழைக்கப்படும் புதிதாக அமைக்கப்பட்ட கூட்டணியில் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

இந்த வழக்கின் அரசியல் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டும் வகையில் ஜூரிகளின் சர்வதேச ஆணைக்குழுவில் (ஐ.சி.ஜே.) இருந்து ஒரு பிரதிநிதியான,அவுஸ்திரேலிய வழக்குரைஞர் பில்லி புர்வெஸ் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணிக்க வந்திருந்தார். “இந்த விவகாரத்தில் ஐ.சி.ஜே. அக்கறை காட்டுவதோடு, நீதிமன்ற நடவடிக்கைகள் நீதியானதும் நேர்மையானதுமாக நடக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க விரும்புகிறது%27 என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பொன்சேகாவின் கைதை ராஜபக்ஷ அரசாங்கம் கையாளும் முறை தொடர்பாக வாஷிங்டன் திருப்தியடையவில்லை என தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் பிளேக் பி.பி.சி.க்கு இந்த வாரம் தெரிவித்தார். “நாங்கள் எதிர்பார்த்திருக்கக் கூடியதைவிடக் குறைவானதாகவே இருப்பதாக நான் நினைக்கின்றேன். ஆனால், அவர் மீது உரிய காலத்தில் குற்றஞ்சுமத்தப்படுவதை உறுதி செய்யுமாறு நாம் இலங்கை அரசாங்கத்திடம் நிச்சயமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்

அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான உக்கிரமான உள்மோதல்கள் பெரும் வல்லரசுகளுக்கிடையிலான பகைமை பிணைந்திருக்கும் முறையை பிளேக்கின் கருத்துகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தில் சீனாவை நோக்கி அதிகம் நகர்ந்துள்ளதாக ஒபாமா நிர்வாகம் கருதுகிறது. இலங்கைக்கு ஆயுதங்களை விற்று நிதி மற்றும் அரசியல் உதவியையும் செய்த பெய்ஜிங்,பிரதியுபகாரமாக பொருளாதார மற்றும் மூலோபாய சலுகைகளையும் பெற்றுக்கொண்டது.

அமெரிக்கா இந்தக் கைதுதொடர்பான தனது அதிருப்தியை எச்சரிக்கையுடன் வெளிப்படுத்துவது,ஜனநாயக உரிமைகள் பற்றிய அக்கறையினால் அல்ல. மாறாக, இந்த விவகாரத்தை ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கவும் சீனாவின் செல்வாக்கை கீழறுக்கவும் ஒரு வழிமுறையாக வாஷிங்டன் நோக்குகிறது. பொன்சேகா அமெரிக்க நலன்களுக்கு மிகவும் இணங்குபவராகவும் கூட அது நோக்கலாம். தேர்தல் பிரசாரத்தின்போது இலங்கையில் “சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை ராஜபக்ஷ கீழறுத்துவிட்டதாக ஜெனரல் விமர்சித்தார்.

அரசியலமைப்பை மாற்றக்கூடியவாறு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்பார்ப்பதாக ஆளும் கூட்டணி தெரிவித்துள்ளது. ராஜபக்ஷ ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு பரந்த அதிகாரங்கள் உள்ளன என்ற உண்மை ஒருபுறம் இருக்க அவர் ஏற்கனவே எதேச்சத்திகாரமான தனது ஆட்சியைப் பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றார்.

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத வழிமுறைகளின் பிரதான இலக்கு,தொழிலாள வர்க்கமே அன்றி, அரசாங்கத்துடன் அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டிராத எதிர்க்கட்சிகள் அல்ல. கடந்த மே மாதம் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த யுத்தம் நாட்டைப் பெரும் கடனுக்குள் தள்ளியுள்ளது. நிதி நெருக்கடியைத் தவிர்த்துக்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற ராஜபக்ஷ நெருக்கப்பட்டார்.

தேர்தலையடுத்து அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வயிற்றிலடிக்கும் நடவடிக்கைகளை அமுல்படுத்தவும் மற்றும் பொதுச் செலவையும் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மோசமாக வெட்டித் தள்ளவும் நெருக்கப்படும். ராஜபக்ஷ தவிர்க்க முடியாமல் வெடிக்கவுள்ள வெகுஜன எதிர்ப்பின் மீது பாய்வதற்குத் தயாராகுவதன் பேரில் எதிர்க்கட்சியைப் பலவீனப்படுத்தவும் மற்றும் தனது சொந்த நிலைமையைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஆவலாக உள்ளார்.

உலக சோசலிச இணையத்தளத்திலிருந்து

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*