TamilSpy

பொழுது போக்கு இணையம்…

யாரறிவார் வன்னிப் பெருந்துயரை (சி.என்.என்)

ஒரு பத்து நாளைக்கு முன்னர், யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த சி.என்.என் தொலைக்காட்சிக்காரர்கள் வன்னி அகதிகளைச் சந்திக்க விரும்பினார்கள். இதற்காக உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர் மூலமாக அவர்கள் கொக்குவில் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அது தாவடி தெற்கு அல்லது கொக்குவில் வடக்குப் பகுதி.

அங்கே அவர்கள் முதலில் சந்தித்தது வன்னிப் போரின்போது இரண்டு கால்களையும் இழந்திருந்த மகேஸ்வரன் (45) என்பவரை. மகேஸ்வரன் நான்கு பிள்ளைகளின் தந்தை. அவருடைய மூத்த மகனும் வன்னியில் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார். இறந்த மகன் திருமணமானவர். அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்த பிள்ளைக்கு நான்கு வயது. அடுத்ததற்கு இரண்டு வயது. எல்லோரையும் இப்போது மகேஸ்வரன்தான் கவனிக்க வேணும்.

‘இரண்டு கால்களும் இல்லாத நிலையில், இரவல் வீட்டில் இருந்து கொண்டு எப்படி இவ்வளவு பேருக்கும் வழிகாணமுடியும்’ என்று கேட்டார்கள் சி.என்.என் ஆட்கள்.

வன்னி அனுபவங்களைக் கேட்டார்கள். கால்கள் எப்படி இழந்தன என்று கேட்டார்கள். மகன் எப்படி, எங்கே இறந்தார் என்று கேட்டார்கள். முகாம் வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார்கள். முதல் என்ன தொழில் செய்தீர்கள் என்று கேட்டார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் மெல்லிய தொனியில் அமைதியாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் மகேஸ்வரன். அவரைச் சுற்றி அவருடைய மனைவி, பிள்ளைகள், மருமகள், பேரக் குழந்தைகள், இன்னும் சில அயலவர்கள்.

எல்லாவற்றையும் அமைதியாகப் பதிவுசெய்து கொண்டிருந்தது கமெரா. அது ஒரு மத்தியானப் பொழுது. இப்போது மகேஸ்வரன் குடும்பம் எப்படி இருக்கிறது என்பதை ஒரு விவரணச் சித்திரமாக்குவது நிகழ்ச்சித் தயாரிப்பாளரின் நோக்கம். எனவே அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், என்ன சமைக்கிறார்கள், எப்படிச் சமைக்கிறார்கள், மகேஸ்வரன் தன்னுடைய தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்கிறார், அந்தக் குழந்தைகளின் விளையாட்டுகள், பெண்கள் என்ன செய்கிறார்கள் என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து பதிவாக்கிக் கொண்டிருந்தார் ஒளிப்பதிவாளர்.

மத்தியான வெய்யிலில் அவர்கள் வெளியே அடுப்பைப் பற்றவைத்துத்தான் சமைத்தார்கள். அன்று வீடு மெழுகியிருந்தது. எனவேதான் வெளியே சமையல். சமையல் முடிந்ததும் சாப்பாடு. அதையும் பதிவாக்கினார்கள். இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு அவர்கள் பலதடவைகள், பல இடங்களிலும் பதில் சொல்லியிருக்கிறார்கள். முதலில் முகாமில் படையினரின் கேள்விகள். பிறகு படைப் புலனாய்வாளர்களின் கேள்விகள், விசாரணைகள்;. அதற்குப் பின்னர், முகாமிலேயே அரச அதிகாரிகளின் கேள்விகள். பின்னர், பிரதேச செயலர் பிரிவுகளில் இதே கேள்விகள். அதற்குப்பிறகு, ஐ.நா அதிகாரிகள், ஊழியர்களின் தகவல் சேகரிப்புக்கான கேள்விகள், பதிவுகள். எல்லா இடங்களிலும் பதில் சொல்லிச் சொல்லியே களைத்துப் போய், அலுத்துப் போயிருந்த மகேஸ்வரனிடம் இப்போது சி.என்.என் வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் மகேஸ்வரன் முழுதாகவே சோர்ந்து விட்டார்.

அப்போது சி.என்.என் ஐச் சேர்ந்த அந்தப் பெண் ஊடகவியலாளர் மகேஸ்வரனைக் கேட்டார், ‘அரசாங்கம் உங்களுக்கு ஏதாவது உதவி செய்திருக்கிறதா? அல்லது வேறு யாரெல்லாம் உதவியிருக்கிறார்கள்? இனி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? எப்படி இந்தக் குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்று திட்டமிட்டிருக்கிறீர்கள்? என்ற சில கேள்விகளை.

ஒரு கணம் கனத்த அமைதி. முகத்தைத் திருப்பி எங்கோ கொஞ்சநேரம் வெறித்துப் பார்த்தார். பிறகு சட்டென மகேஸ்வரன் விம்மி, விம்மி அழத்தொடங்கினார். அது சாதாரண அழுகை இல்லை. பேரழுகை. இந்தப் பூமியைக் கரைத்து விடுவதைப் போன்ற அழுகை. கண்களிலிருந்து நீர் கொட்டிக்கொண்டேயிருந்தது. மகேஸ்வரனுடன் சேர்ந்து மனைவி அழுதார். அவருடைய பிள்ளைகள் அழுதன. மருமகள் அழுதார். பேரக்குழந்தைகள் அழுதன. சுற்றி நின்ற அயலவர்கள் அழுதனர். உள்ளுர் ஊடகவியலாளர் கூட விம்மத் தொடங்கினார். அது விவரிக்கவே முடியாத ஒரு சோகச் சூழலாகியது.

கமெரா எல்லாவற்றையும் பதிவு செய்தது. சிறிது நேரத்தில் அழுகை மெல்ல ஓய, மகேஸ்வரன் சொன்னார், ‘அரசாங்கம் முகாமில சாப்பாட்டைத் தந்தது. அதுக்கு மேல ஒண்டையும் செய்யேல்ல. சாப்பாட்டோட மட்டும் வாழுறதுக்கு மாடு ஆடுகளாலதான் முடியும். நாங்கள் மனிசர். மனிசருக்கு வேற தேவையளும் இருக்கு. ஆனா அதுக்கு வழியில்லை.

‘மீளக் குடியமரேக்க இருவத்தைஞ்சாயிரம் ரூபா தந்தார்கள். அதை வைச்சு என்னதான் செய்ய முடியும்? வெளிநாட்டில இருக்கிற ஆரோ ஒரு எழுத்தாளர் உதவி செய்தது எண்டு பத்தாயிரம் ரூபா தந்தார்கள். மற்றும்படி ஊராக்கள் ஒன்றிரண்டு பேர் சின்னச் சின்ன உதவியைச் செய்தினம். அவ்வளவுதான். ஆனால்….’

மகேஸ்வரன் மீண்டும் அழத் தொடங்கினார். ‘இனி நாங்கள் என்ன செய்யிறது. இந்தக் குடும்பத்தை இனி எப்பிடித்தான் காப்பாற்றுவன்? என்னாலை என்னதான் செய்ய முடியும்? பாருங்கோ இந்தப் பிள்ளைகளை… இதுகள் கேட்கிறதை எல்லாம் எப்பிடி நான் வாங்கிக் குடுக்க முடியும்? இதுகளுக்கு என்ன பதிலைத்தான் சொல்லுவன்…..?’

அவர் குலுங்கிக் குலுங்கி அழுதார். அந்த அழுகைக்கு யாராலும் பதிலைச் சொல்ல முடியவில்லை. ஆனால் ஒன்று அங்கே இருந்த அந்தக் கமெரா எல்லாவற்றையும் பதிவாக்கியது. அது உலகமெல்லாம் அந்த அழுகையைக் கொண்டு செல்லப் போகிறது. மகேஸ்வரனின் விம்மலை அது உலகத்தின் திசையெல்லாம் மொழிபெயர்க்கப் போகிறது. அந்தக் குடும்பத்தின் கதையை, அந்தக் குடும்பத்தைப் போல வன்னிப் போரில் பாதிக்கப்பட்டிருக்கிற ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான குடும்பங்களின் கதைகளை உலகெங்கும் சொல்லப் போகிறது என்று நினைத்தேன்.

இதைப்போல எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கிறது இந்த உலகம். இதைப் போன்ற எத்தனையோ பேரின் கண்ணீரைக் கண்டிருக்கிறார்கள் இந்த உலகின் மனிதர்கள். கருணை, அன்பு, மனிதாபிமானம், நீதி, நியாயம் என்று என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டு, இவை ஒவ்வொன்றின் பேராலும் கொடிகளை நாட்டிக்கொண்டிருக்கின்றன பல அமைப்புகள். ஆனால் கண்ணீர் தீரவில்லை. பாதிப்புகள் குறையவில்லை. கொடுமைகளும் அநியாயங்களும் நின்றுவிடவும் இல்லை. என்றாலும் உலகத்துக்கு இதையெல்லாம் சொல்லாமலிருக்க முடியாது. எனவே இவர்கள் சொல்லட்டும்.

அந்தச் சி.என்.என் காரப் பெண்ணுக்கு மனதுள் நன்றி சொன்னேன். அவள் எல்லா நிலைகளுக்கும் அப்பால் சலனங்களில்லாமல் தன்பாட்டில் தன்வேலையைச் செய்து கொண்டிருந்தாள். ஆனால், அவளின் இதயமும் இந்தத் துயரத்தைப் பதிந்து கொண்டும் அதில் கரைந்து கொண்டுமேயிருந்திருக்கும். அது நிச்சயம் என்பதை அந்தப் பெண்ணின் கண்கள் காட்டிக்கொண்டிருந்தன. அதுவொரு முற்றிலும் மாறுபட்ட சூழலாக மாறிக் கொண்டிருந்தது. கனத்த அமைதி. கனத்த மனங்கள்.

இப்படிப் பதிவு செய்து கொண்டிருந்த போது மகேஸ்வரனின் மனைவி சொன்னார், மறுநாள் தங்கள் மகனின் முதலாவது ஆண்டு நினைவு நாள் என்று. அதற்காகத்தான் அவர்கள் வீட்டை மெழுகியிருக்கிறார்கள். அந்த நினைவு நாளில் மகனுக்கு எதையாவது சமைத்துப் படைக்க அவர்கள் விரும்பினார்கள். அதற்கான ஆயத்தங்களும் மெல்ல நடந்து கொண்டிருந்தன.

அவர்களின் – அந்தப் பெண்களின் உழைப்பில்தான் அந்தக் குடும்பத்தின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் பீடி சுற்றுகிறார்கள். ஒரு நாளைக்கு ஐநூறு பீடிகள் சுற்ற வேணும். ஐநூறு பீடி சுற்றினால்தான் இருநூறு ரூபாய் கிடைக்கும். ஐநூறு பீடியையும் சுற்றி முடிக்க ஒரு நாள்பொழுது வேணும். காலை எட்டு ஒன்பது மணிக்கு சுற்றத் தொடங்கினால், மாலை ஐந்தரை, ஆறு மணியாகும் என்றார்கள். இடையில் சமையல், வீட்டுவேலைகளையும் பார்க்க வேணும்.

இப்படி பீடி சுற்றிச் சேகரித்த காசில்தான் அவர்கள் அந்த முதலாண்டு நினைவுக்குச் சமைக்கிறார்கள். மகேஸ்வரனின் மருமகள் – மகனின் மனைவி – மெலிந்து ஓடாகியிருந்தாள். அவளுடைய முகத்தில் இனிமேல் சிரிப்போ மகிழ்ச்சியோ காணமுடியாது என்பதாக அது சோகத்தில் இறுகிவிட்டது. அவளுக்கு மூன்று சகோதரிகள், திருமண வயதைக் கடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்தே வந்திருக்கிறார்கள். எனவே யாரும் யாருக்கும் உதவ முடியாத நிலை.

இவர்களைப் பற்றிய பதிவுகளைச் செய்து கொண்டு வெளியேறும் போது அன்று பின்னேரமாகி விட்டது. ஆனால், அதற்கு முன்னரே இதுமாதிரி ஏராளம் பாதிப்புகளோடு பலர் அங்கே வந்திருந்தார்கள். அவர்களும் வன்னி அகதிகளே. ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஏராளம் கதைகள்.

ஒரு பெண் தன்னுடைய பதின்னான்கு வயதுப் பெண்ணை அழைத்து வந்தாள். அது அவளின் இரண்டாவது பெண். மூத்தவள் பதினைந்து வயதில் மணமாகி இரண்டு வயதை நெருங்கும் பிள்ளைக்குத் தாயாகி விட்டாள். இந்த இரண்டாவது பெண் – ஒரு பள்ளி மாணவி. ஆனால், அவளுடைய முள்ளந்தண்டில் ஒரு முழு அளவிலான துப்பாக்கி ரவை அப்படியே இருக்கிறது.

அந்த ரவையைக் காட்டும் எக்ஸ்ரே யை அவள் வைத்திருந்தாள். அவர்களின் கையில் ‘எக்ஸ்ரே றிப்போர்ட்’ இருக்கு. முள்ளந்தண்டில் ரவை இருக்கு. அதை எடுக்க முடியாமல் அவர்களுடைய மனதில் வேதனை இருக்கு. இது ஏதோ சினிமாக் கவிதை போல இருக்கே என்று தயவு செய்து எண்ணிவிடாதீர்கள்.

இந்த எக்ஸ்ரே றிப்போர்ட்டைப் பார்த்த அந்தச் சி. என்.என் காரர்கள் சற்று அதிர்ந்து விட்டார்கள். அதைவிட அவர்களுடன் வந்திருந்த இரண்டு சிங்கள ஊடகவியலாளர்கள் நிச்சயமாக கலங்கியே போனார்கள். இந்தப் பெண்ணின் இன்னொரு பிள்ளை வன்னியில் இறந்து விட்டது. மொத்தம் ஆறுபிள்ளைகளில் மூன்று பேர்தான் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றார் மஞ்சுளா என்ற அந்தப் பெண்.

இதைவிட இந்தக் குடும்பங்கள் இருக்கின்ற அதே இடத்தில், பக்கத்து வீட்டில், இன்னொரு பத்தொன்பது வயதுப் பெண் இரண்டு கால்களையும் ஒரு கண்ணையும் இழந்த நிலையில் இருக்கிறாள். ஏதோ ஒரு தொண்டு நிறுவனம் கொடுத்திருக்கும் தள்ளுவண்டியில் கழிகிறது அவளுடைய வாழ்க்கையும் பொழுதுகளும்.

கூலி வேலை செய்து வாழ்ந்தவர்கள், இப்போது யாழ்ப்பாணத்தில் மிகவும் சிரமப்படுகிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் மூத்த பெண் – அவளுக்கு வயது 22 – தைப்பதில் கொஞ்சம் கெட்டிக்காரி. அவள் தையல் செய்துதான் இப்போது குடும்பத்தின் செலவில் பாதியை ஈடுசெய்கிறார்கள். ஆனால், அதற்கான தையல் இயந்திரம் அவர்களிடம் இல்லை. யாரோ தெரிந்தவர்களிடம் கேட்டு உதவியைப் பெற்றுத் தைக்கிறாள்.

குடும்பத்தின் நிலைமையைக் கருதிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டதாகச் சொல்லிச் சிரித்தாள். அது அவளாக உருவாக்கிய சிரிப்பு. அதனுள்ளே கொழுந்து விட்டுக் கொண்டிருக்கிறது தீராத வேதனை. தங்கையை விடவும் தன்னுடைய நிலைமை பரவாயில்லை என்றாள் அவள். ஆனால், தங்கைக்காகவே அவள் கவலையாக இருக்கிறாள். அவளுக்காகவே இரவும் பகலுமாக இவள் தைத்துக் கொண்டுமிருக்கிறாள்.

அந்தச் சி.என்.என் குறூப் இரண்டு நாட்கள் அந்தச் சுற்றாடலில் நின்று இரவு பகலாக செய்திகளைத் திரட்டினார்கள். படங்களைப் பிடித்தார்கள். எல்லாத் துயரங்களையும் சாட்சியாக நின்று பதிவாக்கினார்கள். போகும்போது தம்மால் முடிந்த அளவுக்கு சிறிய தொகைப் பணத்தையும் உதவியாகக் கொடுத்துவிட்டுப் போனார்கள்.

விடைபெறும்போது அந்த அமெரிக்கப் பெண் சொன்னாள், ‘உண்மையாகவே வன்னியில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுத்தானிருக்கிறார்கள். அதை விடக் கொடுமையானது இந்தப் பாதிப்புகளை எல்லாம் உலகம் இன்னும் கவனிக்காதிருப்பதுதான்’ என்று.

கூட வந்திருந்த சிங்கள ஊடகவியலாளர்கள் சொன்னார்கள், ‘இந்தப் பாதிப்புகளை நிச்சயம் சிங்கள மக்கள் பார்க்க வேணும். இதையெல்லாம் அவர்கள் அறிய வேண்டும்’ என.

நான் நினைத்தேன், அதெல்லாம் சரிதான், ஆனால், அதற்கு முன்னர், தமிழர்கள் இதையெல்லாம் அறிய வேணும். இதைப் போல பல நூறு கதைகளும் மனிதர்களும் என் தகவல் சேகரிப்பில் இருக்கிறார்கள். கண்ணீரோடும் பெருகிக் கொண்டேயிருக்கும் துக்கத்தோடும்.

சொல்லுங்கள், இதையெல்லாம் அறிந்து கொண்டு எப்படி என்னால் தூங்கமுடியும் என்று? அமைதியாக இருக்க முடியுமென்றும்.

தமிழ்கதிர்இணையம்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*