TamilSpy

பொழுது போக்கு இணையம்…

விடுதலைப்புலிகள் யார் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்?

இலட்சிய பயணத்தை உறுதியோடும் உண்மையோடும் முன்னெடுக்கும் விடுதலைப்புலிகளின் பின்னால் மக்களே அணி திரள்வார்கள் – வி.உருத்திரகுமாரன்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து அரசியல் ரீதியான வேலைகளில் ஈடுபடுதல் அவர்களுக்கான சட்ட ஆலோசனை வழங்கல் போன்ற பணிகளில் ஈடுபடுவதை அனுமதிக்கவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகளுக்கான தீர்ப்பு இவ்வருட நடுப்பகுதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இவ்விசாரணைகள் பற்றி பிபிசிக்கு வழங்கிய நேர்காணலிலேயே நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் வி. உருத்திரகுமாரன் மேலதிக விபரங்களை வெளியிட்டார்.

அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டங்களின் கீழ் பயங்கரவாத சட்டங்களின் கீழ் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்களுடன் இணைந்து அரசியல் வேலை செய்தல் சட்ட ஆலோசனை வழங்கல் என்பனவும் பயங்கரவாத நடவடிக்கைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ்விசாரணைகளில் தமிழர் தரப்பில் வாதாடிய வி. உருத்திரகுமாரன் அவர்களிடம் விடுதலைப்புலிகளின் உண்மையான அமைப்பு எதுவென கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் தற்போது செயற்குழுவொன்றை நிறுவி அவர்கள் செயற்படுவதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களால் இப்போது வெளிப்படையாக செயற்படமுடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது வெவ்வேறு பெயர்களில் அறிக்கைகள் வெளிவந்துள்ளனவே எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சரியான விடுதலைப்புலிகளின் பின்னால் மக்கள் தாமாகவே அணிதிரளுவார்கள் அப்போது உண்மையானது எதுவென நீங்களே அறிந்துகொள்வீர்கள் என பதிலளித்தார்.

இதே வேளை
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் – மனிதார்ந்த உதவிகள்: இடையில் திண்டாடுகின்றது அமெரிக்க நீதித் துறை

தீவிரவாதத்திற்கு எதிரான அரசின் போராட்டத்திற்கும் மனிதார்ந்த உதவி அமைப்புகளுக்கு அரசியலமைப்பு வழங்கும் உரிமைக்கும் இடையில் ஒரு சமநிலையை கண்டறிய முடியாமல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் திண்டாடி வருகின்றது.

வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களுக்கு “பொருள் உதவி” செய்வதை, அந்த உதவிக்குள் சட்டபூர்வமான மற்றும் முழுவதும் அமைதி முற்சிகளுக்கான பயிற்சிகள், ஆலோசனைகள் என்பன அடங்கி இருந்தாலும் கூட அமெரிக்காவின் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் ஒரு பகுதி தடை செய்கிறது.

சட்டத்தின் இந்தப் பிரிவு மனிதார்ந்த உதவிக் குழுக்களாலும் தனி நபர்களாலும் பெரும் சவாலைச் சந்தித்து வருகின்றது.

ஐக்கிய நாடுகள் சபைக்கு மனித உரிமைகள் முறைப்பாடுகளை எப்படி எடுத்து வருவது என்பது குறித்து துருக்கியில் ஒரு இயக்கத்திற்குப் பயிற்சி அளிப்பதில் மனிதார்ந்த உதவிக் குழுக்கள் ஈடுபட்டிருந்தன. அத்துடன் அமைதிப் பேச்சுக்களிலும் அந்த இயக்கத்திற்கு அவை உதவி வந்தன.

ஆனாலும், அந்த இயக்கம் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் 1997ஆம் ஆண்டு அமெரிக்காவினால் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

அதே போன்ற – உதவிகளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் வழங்க உதவிக் குழுக்கள் விரும்புகின்றன. ஆனால், அதுவும் தீவிரவாத அமைப்பு என 1997ஆம் ஆண்டே அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த விடயத்தில் இரு தரப்பினரும் சுட்டிக்காட்டும் சட்டபூர்வ நிலைப்பாடுகளை எப்படிக் கையாள்வது என்ற நிச்சயமற்ற நிலையில் அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் பலரும் இருக்கின்றனர் போன்று தோன்றுகிறது.

2001 செப்டெம்பர் 11ஆம் நாள் இரட்டைக் கோபுரத் தகர்ப்புத் தாக்குதலின் பின்னர் தீவிரவாதம் தொடர்பான குற்றவியல் சட்டம் குறித்து இப்போதே நீதிமன்றங்கள் தமது பார்வையை முதல் தடவையாகச் செலுத்துகின்றன.

“இது எனக்கு ஒரு சிக்கலான வழக்கு” எனத் தெரிவிக்கிறார் அந்தோனி கென்னடி. நீதிமன்ற தீர்ப்பை முடிவு செய்யும் பெரும்பான்மைக்கான தீர்க்கமான வாக்கை வழக்கமாகச் செலுத்தக் கூடியவர் அவர்.

இந்த வழக்கின் மறு தரப்பான உதவிக் குழுக்களின் பின்னணியில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் உள்ளார். இந்தச் சட்டம், பேச்சு சுதந்திரத்தையே குற்றமாக்குகின்றது என்கின்றன உதவிக் குழுக்கள்.

“எங்களுடைய பிரதிநிதிகள் அமைதிக்காக வெளிப்படையாக ஆலோசனை வழங்கக் கூடாது என வாதாடுவதற்காக அமெரிக்க அரசு கடந்த ஒரு தசாப்தத்தைச் செலவிட்டுள்ளது” என்று நீதிமன்றத்தில் கூறினார் டேவிட் கோல். உதவி அமைப்புக்கள், தனிநபர்களுக்காக வாதாடும் சட்டவாளர் அவர்.

இந்த வாதங்களை எல்லாம் நிராகரிக்கும்படி அமெரிக்க நிர்வாகம் நீதிமன்றத்திடம் கேட்டுள்ளது. தீவிரவாத அமைப்புக்களுக்கு வழங்கப்படும் எந்த உதவியாக இருந்தாலும் அவை, “அந்த அமைப்புக்கள் செய்கிற எல்லா நடவடிக்கைகளிலும் அவற்றைப் பலப்படுத்தும்” என சட்டமா அதிபர் எலினா காகன் (Solicitor General Elena Kagan) தெரிவித்தார்.

பொருள் ஆதரவு சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய காகன், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அது ஒரு “பரந்த ஆயுதம்” எனவும் தெரிவித்தார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பட்டியலில் பல அமைப்புக்கள் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அல்-குவைதா, ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஸ்பெயின் பாஸ்கி பிரிவினைவாதிகள், பெரு மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள், விடுதலைப் புலிகள் ஆகியனவும் அவற்றுள் அடக்கம்.

மனிதார்ந்த சட்ட உதவித் திட்டங்களைச் செயற்படுத்துவன உள்ளிட்ட உதவி அமைப்புக்கள், பொது மக்கள் உரிமைகள் சட்டவாளர் ரால்ஃப் பேர்டிக் (Ralph Fertig, a civil rights lawyer), மருத்துவர் நாகலிங்கம் ஜெயலிங்கம் ஆகியோர் குர்திஷ்டான் தொழிலாளர் கட்சி அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்க விரும்புகின்றனர்.

பி.கே.கே. என அறியப்படும் குர்திஷ் கிளர்ச்சியாளர் குழுவின் வன்முறைக் கிளர்ச்சி காரணமாக 22,000 உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன என்று அமெரிக்க அரசு கூறுகின்றது.

கடந்த வருடம் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகள் இயக்கம் 30 வருடங்களாக உள்நாட்டுப் போர் ஒன்றில் ஈடுபட்டிருந்தது.

இந்தச் சட்டம் மிகப் பரந்தளவானதாக இருக்கின்றது எனத் தெரிவிப்பவர்களில் நீதியரசர் சோனியா சோட்டோமேயரும் (Justice Sonia Sotomayor) அடங்குவார்.

“இந்தச் சட்டம் வரையறுப்பதின் கீழ், இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக இந்த உறுப்பினர்கள் கற்றுக் கொடுப்பதும் சட்ட மீறலாகவே கொள்ளப்படும்” என அவர் கூறுகிறார்.

காகன் அதற்கு இப்படிப் பதிலளிக்கிறார். “இணக்கப்பாட்டுக்கு வருவது எப்படி என்பது பற்றி அல்-குவைதாவுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக ஏராளமானோர் உலகம் முழுவதும் சென்றுகொண்டிருக்கவில்லை என்பதை இங்கு சொல்லிக்கொள்ள நான் விரும்புகிறேன்”.

பொது உடைமைவாதிகளைப் பணியில் இருந்து நீக்கிவிடும் அமெரிக்கச் செயல்பாட்டுக்கு (பனிப் போர் காலத்தில்) ஒப்பானதாக இந்த சட்டத்தை உதவிக் குழுக்களின் ஆதரவாளர்கள் பார்க்கிறார்கள். அமெரிக்கக் குடிமகன் ஒருவர் தனது பேச்சுக்காகவே சிறைக்குச் செல்ல நேரிடும் என அவர் இந்தச் சட்டத்தைக் குறிப்பிடுகிறார்கள்.

அனைத்துலகப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான மையத்தை வைத்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் சொல்கிறார், தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற அமெரிக்க அரசின் இலக்கைப் பகிர்ந்து கொண்டு செயல்படும் குழுக்களின் பணிகளுக்கு இந்தச் சட்டம் அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று.

“எங்கள் வேலை வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது. சில சமயங்களில் அதற்காக வன்முறையில் ஈடுபட்டுள்ள குழுக்களுடன் நேரடியாகத் தொடர்பாட வேண்டி இருக்கின்றது” என்று அறிக்கை ஒன்றில் கார்ட்டர் தெரிவித்துள்ளார்.

மறுபுறத்தில், இந்தச் சட்டம் தீவிரவாதத்துடன் சண்டையிடுவதற்குத் தேவையான அளவு அணுகுமுறையை மாத்திரமே கொண்டுள்ளது என அவமதிப்புக்களுக்கு எதிரான அமைப்புக் கூறுகின்றது. சட்டம் அரசியலமைப்பு வழங்கும் உரிமைகளை மீறவில்லை என்றும் அது தெரிவிக்கிறது.

இந்தச் சட்டம் அமெரிக்க சட்டப் புத்தகத்தில் 1996 ஆம் ஆண்டு முதல் இருக்கிறது. அதன் பின்னர் இரண்டு தடவைகள் திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. சட்டத்தை நியாயப்படுத்தும் அமெரிக்க அரச தரப்பு, பேச்சுக்கு எந்த எல்லைகளும் கிடையாது என்று கூறுகிறது. ஏனென்றால், தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவாக மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

உதாரணத்திற்கு நீதிபதி கென்னடிக்கு காகன் சுட்டிக் காட்டியது போன்று அந்தக் குழுக்கள் தமது ஆயுதங்களைக் கீழே வைக்கும்படியும் மக்களால் கேட்க முடியும்.

ஆனால், ஐக்கிய நாடுகள் சபையை எப்படி அணுகுவது மற்றும் உதவிகளை எப்படித் திரட்டுவது என்பன போன்ற ஆலோசனைகள் என்று வரும் போது அவை கட்டுப்பாட்டுக் எல்லையைத் தாண்டியவையாக உள்ளன என்கிறார் காகன்.

அதற்கான காரணத்தையும் அவரே விளக்குகிறார். “மிகவும் மதிப்பு வாய்ந்த திறன்களை நீங்கள் அவர்களுக்குப் பயிற்றுவித்தால் அவர்கள் அவற்றை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அது சட்டபூர்வமானதாகவும் இருக்கலாம் சட்டத்திற்குப் புறம்பானதாகவும் இருக்கலாம்”.

இத்தகைய இழுபறிகளுக்கு மத்தியில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை யூன் மாதத்தின் பிற்பகுதியில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamileelam News

Your email address will not be published. Required fields are marked *

*