TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பொதுத்தேர்தலில் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில்

பொதுத்தேர்தலில் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் சிறீலங்கா

இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை கடந்தவாரம் இடைநிறுத்தியிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். 2004ம் ஆண்டு சுனாமிப் பேரலைகள் இலங்கைத் தீவைத் தாக்கிய போது அழிவுகள் மட்டும ஏற்படவில்லை.ஜிஎஸ்பி பிளஸ் என்ற அதிஷ்டமும் இலங்கைக்கு அடித்தது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய அந்த வரிச்சலுகையினால்- நலிந்து போய்க் கொண்டிருந்த ஆடைத்தயாரிப்புத் தொழில் மீளவும் களைகட்ட ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட பத்து இலட்சம் ஆடைத் தொழிலாளர்களின் உற்பத்திகள் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையின் மூலம் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைப் பெற்று வந்தன.

இலங்கைக்கு வருடாந்தம் கிடைத்து வந்த பெருமளவு அந்நியச் செலாவணிக்கு காரணமாக இருந்தது இந்த ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை.

இலங்கையில் நிலவும் மோசமான மனிதஉரிமைகள் சூழலைக் காரணம் காட்டி, இந்த வரிச்சலுகையை இடைநிறுத்த நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் பலமுறை எச்சரித்திருந்தது.

குறிப்பாக கடந்த வருடம் போர் தீவிரமடைந்த போது இலங்கை அரசை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இந்த வரிச்சலுகையைக் காண்பித்தே மிரட்டியது.

அதற்குப் பின்னர், இந்தச் சலுகையை இடைநிறுத்தப் போவதாக கடந்த வாரம் அறிவிக்கும் வரை எத்தனையோ முறை இதுதொடர்பான எச்சரிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டது.

இப்போது தான் முறைப்படியாக- ஆறு மாதங்களுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிச்சலுகை இழக்கப்பட்டால், இலங்கையில் சுமார் பத்து இலட்சம் தொழிலாளர்களின் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்படும் என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.அத்துடன் நாட்டின் பொருளாதாரமும் படுத்துவிடும் என்று எச்சரிக்கப்பட்டது.

அப்போதெல்லாம் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை நீடிக்க வேண்டாம் என்று ஐதேக கூட வேண்டுகோள் விடுத்திருந்தது.பின்னர் வரிச்சலுகையை நீடிக்குமாறு அது ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது இந்த வரிச்சலுகையை ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், அதன்பின்னரே அதை நிரந்தரமாக நிறுத்துவதா அல்லது சலுகையை தொடர்வதா என்று தீர்மானிக்கப் போகிறது.

ஐ.நாவின் மனிதஉரிமை சாசனங்களுக்கு ஏற்ப இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய மூன்று விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி வந்தது ஐரோப்பிய ஒன்றியம்.

ஆனால் இலங்கை அரசாங்கம் அதற்குச் செவிசாய்க்கத் தவறிய நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்ட ஒரு தண்டனை போலவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தத் தடையை வைத்து இலங்கையில் மனிதஉரிமைகளைப் பாதுகாக்கின்ற சூழலைத் தோற்றுவிக்கலாம் என்று நம்புகிறது ஐரோப்பிய ஒன்றியம்.

ஆனால் இலங்கை அரசோ ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்குவது நாட்டின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறது.

உண்மையில் நாட்டின் இறைமைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கிதோ தெரியவில்லை.

அரசாங்கம் இதை ஊதிப் பெருப்பித்துப் பூதாரகாரப்படுத்தியுள்ளது என்பதே உண்மை.ஐரோப்பிய ஒன்றியத்தின் சலுகைகளுக்காக நாட்டை விலைபேசி விற்க முடியாது என்றெல்லாம் அரசதரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியாகின்றன.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கூறியிருக்கிறார் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால்.

இது முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டது தான் என்றும்- இதனைச் சமாளிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சர் பீரிசும் இதையே தான் சொல்லியிருக்கிறார்.

முன்கூட்டியே இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்டது என்றால் இதுவரையில் அரசாங்கம் எதற்காக- ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை கிடைக்கும் என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டி வந்தது என்பது கேள்வியாக உள்ளது.

இப்போதும் கூட இந்தச் சலுகையைப் பெறுவதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுவதாகவே அரசாங்கம் கூறுகிறது. நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்காத சலுகை என்றால்- எதற்காக அது என்று தூக்கி எறிந்து விட்டுப் போயிருந்திருக்கலாமே.

அப்படிச் செய்யாமல் அரசாங்கம் இப்போதும் திரைமறைவில் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. இலங்கையின் ஆடைத்தொழிற்துறை தான் இந்தத் தடையால் பெரிதும் பாதிக்கப்படப் போகிறது.

கிட்டத்தட்;ட இலங்கையின் ஆடைத்தயாரிப்புகளில் 60 வீதமானவை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கே அனுப்பபப்டுகின்றன.கடந்த ஆண்டில் 7.08 பில்லியன் டொலர் பெறுமதியான ஆடைத் தயாரிப்புகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்கே இலங்கை ஏற்றுமதி செய்திருந்தது.

ஜிஎஸ்பி பிளஸ் மூலம் இலங்கைக்கு வருடாந்தம் 136 மில்லியன் டொலர் வருமானம்; கிடைத்து வந்தது. இந்த வருவாயை இழக்கும் நிலை இலங்கைக்கு ஏற்பட்டிருப்பதை சாதாரண விடயமாகக் கருதமுடியாது.

ஜிஎஸ்பி பிளஸ் இடைநிறுத்தத்தால் இலங்கையின் ஆடைத் தயாரிப்புத் தொழில்துறை பெரிதும் பாதிப்படையப் போவது உறுதி.

காரணம், இதுவரை ஐரோப்பிய சந்தைகளில் இலங்கையின் ஆடைத்தயாரிப்புகளுடன் போட்டியிடுவதற்கு ஏனைய நாடுகளுக்கு ஒரு தடையாக இருந்தது விலை நிர்ணயமே.

அதாவத ஜிஎஸ்பி பிளஸ் சலுகை இலங்கைக்கு கிடைத்ததால் குறைந்த விலைக்கு அவற்றை விற்க முடிந்தது.

இதனால் விற்பனையை அதிகரித்து இலாபத்தை அதிகம் சம்பாதிக்கவும்- அதிகளவானோருக்கு தொழில்வாய்ப்புக் கொடுக்கவும் முடிந்தது.

ஆனால் இப்போது விலை விடயத்தில் ஏனைய நாட்டுத் தயாரிப்புகளுடன் போட்டி போட வேண்டியிருப்பதால், இலாபம் குறைவடைவதுடன் உற்பத்தியிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

அது ஒட்டுமொத்த ஆடைத்தயாரிப்புத் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.ஆனாலும் அரசாங்கம் என்னவோ இது பொருளாதாரத்தைப் பாதிக்காது என்று கதை விடுகிறது. அதைச் சமாளிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறுகிறது.

வட்டி வீதத்தை குறைத்துள்ளதாகவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும், நாணயமாற்று வீதத்தை நிலைப்படுத்தியிருப்பதாகவும் அரசாங்கம்சொல்கிறது.

இவை நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றும் முயற்சிகளே தவிர, ஆடைத் தயாரிப்புத்துறையில் ஈடுபட்டுள்ள இலட்சக்கணக்கான மக்களைப் பாதுகாப்பதற்குரிய நேரடி நடவடிக்கையாக இருக்க முடியாது.

தொழில் இழப்பு, வருமான இழப்பு போன்றவற்றை அந்தத் தொழிலாளர்களே சந்திக்கப் போகின்றனர். இதை அரசாங்கம மறைத்துக் கொண்டு நாட்டின் பொருளாதாரம் பற்றிப் பேசுகிறது.

இதற்குக் காரணம் ஜிஎஸ்பி பிளஸ் இழப்புக்கு அரசே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால், பொதுத்தேர்தலில் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற அச்சம் தான். இதனால் தான் ஜிஎஸ்பி பிளஸ் இழப்பின் தாக்கத்தை வெளிபடுத்த அரசு தயங்குகிறது.

பொதுத்தேர்தலுக்குப் பிறகே இதன் தாக்கம் எப்படிப்பட்டது என்பது வெளியே வரும். அது தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கொழும்பிலிருந்து சத்திரியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*