TamilSpy

பொழுது போக்கு இணையம்…

1999 – சபிக்கப்பட்ட இனத்தின் இன்னொரு கதை

இன்று கனேடியா வாழ் ஈழத்தமிழர்களால் தயாரித்து இயக்கிய 1999 படத்தைத் தியேட்டரில் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். அவுஸ்திரேலியாவில் தமிழகத்துச் சினிமாக்கள் வருவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், எமது ஈழத்துப் படைப்புக்களைப் பொறுத்தவரை, லண்டனில் தயாரான “கனவுகள் நிஜமானால்”, கனடாவில் தயாரான “தமிழச்சி”, ஈழத்தில் எடுக்கப்பட்ட “ஆணிவேர்” வரிசையில் 1999 படமே ஈழத்துப் படைப்பாகத் திரையைத் தொட்டிருக்கிறது. இவற்றில் “ஆணிவேர்” படத்தை நான் இங்கே திரையிட அவாக் கொண்டு எதிர்கொண்ட சிரமங்களை எல்லாம் ஒரு தொடராகவே எழுதலாம். ஒரு படத்தைத் திரையிடும் மோசமான அனுபவத்தை முதன்முறையாக (கடைசியுமாகவும் என்றும் சொல்லிவைக்கலாம்)எனக்குச் சம்பாதித்துக் கொடுத்தது “ஆணிவேர்” படத்தை இங்கே திரையிட்ட போது நான் சந்தித்த அனுபவங்கள். அதில் இருந்து நான் பெற்ற பாடம், எங்கள் மண்ணின் கதை சொல்லும் படைப்புக்களை ஊக்குவிக்க வேண்டும் என்று உணர்ச்சிப் பிழம்பாகப் பேசுபவர்களை ஒரு எல்லைக்கு மேல் நம்பக் கூடாது என்பதுதான். 1999 படத்தைப் பேச வந்து விட்டு ஆணிவேரைப் பற்றிப் பேசுகிறாரே என்று நீங்கள் முணுமுணுக்க முன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன்.

1999 படத்தினை எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அலோசியஸ் ஜெயச்சந்திரா திரையிடவேண்டும் என்று முனைப்புக் காட்டியபோது எனது ஆணிவேர் பாலபாடத்தை அவருக்குக் காதில் போட்டு வைத்தேன். அவருக்குத் துணையாக இங்கே சிட்னியில் இருக்கும் இந்தியத் தமிழர்களின் அமைப்பான “சிட்னி தமிழ் மன்றம்” கை கொடுத்தது ஒரு நல்ல முன்னுதாரணம் என்று சொல்ல வேண்டும். காரணம் பேசும் மொழி ஒன்றாக இருந்தாலும் ஈழத்தமிழருக்கு பல அமைப்புக்கள், இந்தியத் தமிழருக்குச் சில அமைப்புக்கள் என்று “என் வழி தனி வழி”யாகப் போகும் புலம் பெயர் சூழலில் இப்படியான நம்மவர் முயற்சிகளுக்கு தமிழக உறவுகளும் இணைந்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். சிட்னியில் 2 காட்சிகள் ஏற்பாடாகியிருந்தன. இரண்டுக்கும் நல்ல வரவேற்பு கிட்டியிருந்தது.

புலம்பெயர் ஈழத்தமிழர்களது படங்களைப் படங்களைப் பார்த்து நிரம்பிய அனுபவத்தோடு, என்னைத் தயார்படுத்திக் கொண்டே இந்தப் படத்தையும் பார்க்கத் தொடங்கினேன். காரணம், நம்மவர் தொழில்நுட்பத்தில் தம்மை விருத்தி செய்த அளவுக்குக் கதை சொல்லும் பாணியிலும், திரைக்கதை அமைப்பிலும் பல படிகளைக் கடக்கவேண்டும் என்பதை இதுநாள் வரை வெளிவந்த பல புலம்பெயர் தமிழர்களது சினிமாக்கள் உறுதிப்படுத்தியிருந்தன. குறும்படங்கள் பல சின்னத்திரை நாடகங்களோடு போட்டி போட, நம்மவர் சினிமாக்களோ அஜித், விஜய் போன்றவர்களின் ந(ர)கல் வடிவங்களாக இருக்கும் போக்கும் ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து நிலவும் வழமை. ஆங்காங்கே அத்தி பூத்தாற்போல நல்ல குறும்பட முயற்சிகளும் வராமல் இல்லை. புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் கனடா வாழ் உறவுகள் முழு நீள சினிமாக்கள் பலதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவை ஒருவாரமோ இரண்டு வாரமோ கனேடியத் திரையரங்குகளை மட்டும் முத்தமிட்டு விட்டு காணாமல் போய் விடும்.

இப்படியாக இன்னொரு நம்மவர் படம் தானே என்ற ஒரு தயார்படுத்தலோடு தான் 1999 படத்துக்கும் போனேன். வெண் திரை அகலக்கால் பதிக்கப் படம் ஆரம்பமாகின்றது. எடுத்த எடுப்பிலேயே இரவு நேரத்துக் கனேடிய நகரப் பெருந்தெருக்கள் வழியே காமெரா துரத்தக் கூடவே மேற்கத்தேயப் பின்னணி இசையும் பயணிக்க முகப்பு எழுத்தோட்டம் வருகின்றது. ஆகா, ஆரம்பமே கைதேர்ந்த தொழில்நுட்ப உத்தியோடு எடுக்கப்படுகிறதே என்ற உசார் மெல்ல வந்து ஒட்டிக் கொள்ள அவநம்பிக்கை மெல்லக் கழன்று கொள்கின்றது.
படத்தின் முதற்காட்சியில் வரும் கொலையை மையப்படுத்தி நகர்கின்றது தொடர்ந்து வரும் காட்சிகள். அந்த விறுவிறுப்பும், பார்வையாளனைக் கட்டிப் போடும் கதை நேர்த்தியும் படம் முடியும் வரை நிறைந்து நிற்கின்றது. அதுதான் 1999 படத்தின் பலம்.

இந்தப் படத்தின் கதையைப் பற்றி நான் பேசப்போவதே இல்லை, ஏனென்றால் அது இனிமேல் பார்க்கப் போகின்றவர்களுக்குச் சுவாரஸ்த்தை இழக்கச் செய்து விடும். ஆனால் இந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்புக்களையே பகிர்கின்றேன். ஈழத்தின் உள்நாட்டுப் போரால் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உலகெங்கும் ஏதிலிகளாகச் சிதறி பரந்த ஈழத்தமிழினம், கனடாவில் மட்டும் பெரும்பான்மை சமூகத்தை உள்வாங்கிக் கொண்டது. ஆனால் இந்தப் புலம்பெயர் வாழ்வு வரமா, சாபமா என்பதில் ஒரு வெட்டுமுகமே 1999 படம் சொல்லும் செய்தி. குறிப்பாக எமது அடுத்த தலைமுறையில் ஒரு சிலர் தறிகெட்டு , வன்முறை நோக்கிக் குழுக்களாகப் பிரிந்து இலக்கற்ற வாழ்வை புலம்பெயர் சூழலில் அமைத்துக் கொள்ள முற்படும் போது அதன் தொடர்பிலான அவல வாழ்வியலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சூழல் அவர் தம் பெற்றோருக்கும், ஏன் அந்தச் சமூகத்துக்கும் கூட வந்தமைந்து பெருத்த சுமையாக மாறி, பெரும் விலை கொடுக்கும் முடிவைத் தந்து விடுகின்றது. இதுவே 1999 படத்தின் திரைக்கதை சொல்லும் சேதி.

கே.எஸ்.பாலசந்திரன் போன்ற மூத்த கலைஞர்களோடு இளைஞர்கள் பலரை முக்கிய பாத்திரங்களை ஏற்க வைத்து இயக்கியிருக்கிறார் லெனின் எம்.சிவம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை வேண்டாத இடங்களில் கதையைத் திருப்பாமல் சொல்ல வந்த விஷயத்தைச் சுற்றியே கதைக்களத்தை அமைத்திருக்கின்றார். அந்த வகையில் கதை, திரைக்கதை ஆகியவை இரண்டுமே இப்படத்துக்குப் பெரிய பலமாக அமைந்திருக்கின்றது. 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடக்கும் கதை, அதே காலகட்டத்தில் நானும் புலம்பெயர்ந்த சூழலில் வாழ்ந்த போது நடந்த விஷயங்களை மீண்டும் இரைமீட்டிப் பார்க்கும் சந்தர்ப்பமாகப் பல காட்சியமைப்புக்கள் இருக்கின்றன. புலம்பெயர் சூழலில் அவதானிக்கும் விடயங்களை வைத்து வசனங்களை அமைத்திருப்பதும் அவற்றை ஈழத்தமிழ் பேசும் பாங்கில் சமரசமில்லாது வைக்கப்பட்டிருப்பதும் சிறப்பு, கூடவே அவற்றை நேர்த்தியாக வெளிப்படுத்தும் நடிகர்களும் சபாஷ் போட வைக்கிறார்கள். அந்தந்தப் பாத்திரங்கள் எப்படி எப்படியெல்லாம் தம் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என்பதை மிகையில்லாமல் காட்சி அமைப்பிலும், வசன அமைப்பிலும் அடக்கியிருக்கிறார் இயக்குனர். இப்படத்தினைத் தந்ததன் மூலம் புலம்பெயர் வாழ்வியலின் விரிந்த தளங்களை இம்மாதிரி முயற்சிகள் மூலம் எதிர்காலத்தில் தரவிருப்பவர்களுக்கு நம்பிக்கையூட்டுகின்றார்.

நான் அதிகம் பிரமித்துச் சிலாகிக்கும் விடயம் A.அருள்சங்கரின் படத்தொகுப்பு. ஒவ்வொரு காட்சிகளையும் வெவ்வேறு கேணங்களில் எடுத்து அவற்றை முன்பின்னாகப் பொருத்தி அமைத்த இந்தப் பாணி புதியதொரு அனுபவத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இப்படி முழுமையான புதிய தொழில்நுட்ப உத்தியோடு படத்தொகுப்பை அமைத்ததை இதுவரை நான் எந்தத் தமிழ் சினிமாவிலும் பார்க்கவில்லை. இதை நான் இங்கே மிகையாகச் சொல்லி வைக்கவில்லை. 1999 படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களைப் பட்டியலிட்டால் முதலில் வருவது அருள் சங்கரின் நேர்த்தியான படத்தொகுப்பு தான்.
இந்தப் படத்தை உலகத்தரத்துக்கு நகர்த்திச் செல்வதில் முதலில் நிற்பது படத்தொகுப்புத் தான்.

ராஜ்குமார் தில்லையம்பலம் பாடல்களுக்கு இசையமைத்துப், பின்னணி இசை வழங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் எழுத்தோட்டத்தின் பின்னணி இசைக் கோர்ப்பாகட்டும், இளைஞர் குழு எடுக்கும் பரபரப்பான முடிவுகளின் காட்சி அமைப்புக்களின் பின்னால் ஒலிக்கும் இசையாகட்டும் மிகவும் சிறப்பாக, சினிமாவுக்கேற்ற இசை நெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பா, மகன் உரையாடல் காட்சிகள் போன்ற உணர்ச்சிபூர்வமான காட்சிகளின் பின்னால் அடக்கி வாசிக்கும் புல்லாங்குழல் ரக இசை மிகவும் அன்னியப்பட்டு தொலைக்காட்சித் தொடருக்குப் போவது போலப் பயமுறுத்துகிறது. இப்படியான காட்சிகளுக்கு இன்னும் வேறொரு பரிமாணத்தில் வித்தியாசமான இசைக்கலவையைப் பயன்படுத்தியிருக்கலாம். படத்திற்காக மொத்தம் ஆறு பாடல்கள் ஒரு தீம் இசை, எடுக்கப்பட்டாலும் இரு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட்டிருக்கின்றன. எஸ்பி.பாலசுப்ரமணியம், கார்த்திக் குரல்களில் கேட்ட பாடல்களைப் படத்தில் பார்க்கும் போது இன்னும் இனிமை.

படத்தின் ஒளிப்பதிவைப் பொறுத்தவரை இரவு நேரக் காட்சிகள், பாடற் காட்சிகள் போன்றவற்றில் இருந்த நேர்த்தியான கமெரக் கோணங்கள், ஒளியமைப்பு போன்றவை மற்றைய காட்சிகள் சிலதில் பொலிவிழந்து, ஒளி பெருகி சீரியலுக்குப் போவோமா என்று அடம்பிடிப்பது போல அமைந்ததைத் தவிர்த்திருக்கலாம். நுணுக்கமாகப் பார்த்தால் சில இடங்களில் கமெரா மெல்ல ஆட்டம் கண்டிருக்கிறது. அத்தோடு குளோசப்பில் முகங்களைக் காட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இந்த நுணுக்கமான குறைளைத் தவிர்த்தால் தொழில்நுட்ப ரீதியில் இன்னும் மேம்பட்ட படைப்பாக இது அமைந்திருக்குக்கும்.
அட, நம்மவர் படத்தில் பாடற்காட்சியை சிரிக்க வைக்காமல் சிறக்க எடுத்திருக்கிறார்களே என நினைக்கத் தோன்றுகிறது.

படத்தில் நடித்த எந்த ஒரு நடிகருமே தம் பாத்திரத்துக்கு மிகையில்லாமலும், குறையில்லாமலும் தந்தாலும், நாயகன் அன்புவாக வந்த சுதன் மகாலிங்கம், இளைஞர் கோஷ்டித் தலைவர் குமாராக வரும் திலீபன் சோமசேகரமும் ஒரு படி சிறப்பாகச் செய்கிறார்கள். மூத்த கலைஞர் கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள் வரும் காட்சியமைப்புக்கள் குறைவு என்றாலும் அங்கேயும் நிறைவு. கனடாவில் இருக்கும் குழு மோதல்களை மையப்படுத்தியதாக அமைந்தாலும் எதிர்க்குழுவை படம் முடியும் வரை காட்டாது பயணிப்பது வித்தியாசமாக இருக்கிறது. ஒவ்வொருவரின் கோணத்தில் தம்மை நியாயப்படுத்தும் போது எங்கே இந்தத் தவறு நடக்கிறது என்று தர்க்க ரீதியான கேள்வி மனதில் எழுகின்றது.

“வன்னியில் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையை விடுதலைப்புலிகள் ஆரம்பித்திருக்கிறார்கள், ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கின்றன” படத்தின் முடிவில் வானொலி ஒன்றின் குரல் மேலெழுகிறது. மனம் பெருங்குரலெடுத்து அழுகிறது, என்னைப் போலவே பலரும் அதை உணர்ந்திருப்பார்கள்.

படம் முடிந்ததும் அரங்கம் கைதட்டிப் பாராட்டுகிறது.
புலம்பெயர் வாழ்க்கைச் சூழலில் அன்பு என்னும் திசை மாறிய இளைஞனின் போக்கில் கதையை அமைத்து அதனூடே சொல்லும் நிஜங்கள் சுடுகின்றன. ஊரை இழந்து, உறவை இழந்து புலம்பெயர்ந்து போன நாம் அங்கே நிம்மதியான வாழ்வை எதிர்கொண்டோமா, நம் இனம் சபிக்கப்பட்ட இனமா என்ற ஆதங்கம் மனதில் பாரமாக ஒட்டிக்கொள்கின்றது. அதுவே “1999″ படத்தின் உருவாக்கத்துக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்.

எழுதியவர் கானா பிரபா

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*