TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழ் அரசியல் தலைமையில் இடதுசாரிகளின் பங்கு

“மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி, கஷ்டங்களைப் போக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.”

அதாவது, அரசியல் வேலைத் திட்டங்கள் யாவும், பன்முகப் பார்வை கொண்ட மக்களின் விடிவிற்கானதாக இருக்க வேண்டுமென்பதே இதன் உட்பொருளாகும்.
போராட்ட வடிவங்கள் மாறினாலும் மக்களின் விடுதலை என்கிற அடிப்படை நோக்கிலிருந்து அவை விலகிச் செல்லக் கூடாது.

மாறும் வடிவங்கள், புவிசார் அரசியலைப் புரிந்து முற்போக்கான பாதையொன்றை தெரிவு செய்ய வேண்டும்.

அதாவது போராட்ட முறைமைகளில் காத்திரமான விமர்சனங்களை முன் வைக்கும் வெகுஜன இயக்கங்களை இனங் காண வேண்டிய கடப்பாடு மக்களுக்கு உண்டு.

புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் இப்பொறுப்பு உண்டு. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாகப் பெரும் பரப்புரைப் பணியாற்றிய கியூபா தேசத்தின், அரசியலை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

இடதுசாரிகள் எனப்படுவோர், பிரிந்து செல்லும் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டிற்கு எதிரானவர்கள் என்கிற தவறான கருத்தினை, தேசிய இன விடுதலையை முன்னெடுக்கும் சில சக்திகள் பிரசாரப்படுத்துகின்றன.

மேற்குலக, இந்திய ஆதரவுடன் விடுதலை வென்றெடுக்கப்படும் என்கிற, பூர்சுவா சிந்தனையுடன் செயலாற்றும் முதலாளித்துவ வாதிகளுக்கு பொதுவுடமைவாதிகள் எதிராளிகளாகத் தென்படுவது ஆச்சரியத்திற்குரியதல்ல. உதாரணமாக தோழர் சண்முகதாசன் தலைமையில் தீண்டாமைக்கு எதிராக யாழ். குடாவில் நடத்தப்பட்ட வெகுஜனப் போராட்டங்களை, வியட்நாம் போன்றொரு நிலைமையை உருவாக்க அங்கு சிலர் முயற்சிக்கிறார்களென்று திரிபுபடுத்திய, தமிழினத் தலைவர்களும் எமது வரலாற்றில் உண்டு.

ஆகவே தமிழினத்தின் சுய நிர்ணய உரிமை என்கிற பிறப்புரிமையை ஏற்றுக் கொள்ளும் முற்போக்குச் சக்திகளுடன் ஒன்றிணைந்து அடுத்த கட்ட போராட்ட நகர்வினை முன்னெடுக்க வேண்டிய காலத்தின் தேவை உணரப்படுகிறது.
வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களை, நாடாளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், பரந்துபட்டு செயற்படும் முற்போக்கு அணியினருடன் ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இணையலாம்.

அதேவேளை, தேசிய இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது பிராந்திய வல்லரசுகளின் சூழ்ச்சியினால் முடக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக உருவாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பிட பேரினவாத சக்திகள் முயற்சிப்பதனை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

அதிகார பலம்கொண்ட ஆட்சியாளர்கள், சில தமிழ் கட்சிகளையும் தனி நபர்களையும் தம்மோடு இணைத்து தமிழ் தேசியத்திற்கான அரசியல் தளத்தினை அழித்து விடலாமெனக் காய்களை நகர்த்துகிறார்கள்.

அதாவது தமிழினத்தின் அரசியல் பிரதிநிதித்துவமோ அல்லது இன அடையாளத்தை வெளிப்படுத்தும் கட்சிகளோ இல்லாத எல்லைக் கிராமங்களற்ற பெருந்தேசிய இராஜ்ஜியமொன்றை இலங்கையில் நிர்மாணிப்பதே பேரினவாதத்தின் இலட்சியம்.

இந்நிலையில், அவலத்தையும், அழிவுகளையும் தொடர்ந்து அனுபவித்து வரும் தாயக மக்களுக்கான சரியான அரசியல் தலைமையொன்று உருவாக்கப்பட வேண்டும்.

அதனை தாயக மக்களும், போராட்டச் சக்திகளும் அங்குள்ள இடதுசாரி இயக்கங்களும் இணைந்தே கட்டியெழுப்ப வேண்டும். புலம்பெயர்நாட்டிலிருந்து தாயக மக்களுக்கான தலைமையை இறக்குமதி செய்ய முடியாது. போராடும் மண்ணின் மக்களே தமக்கான தலைமையை தேர்ந்தெடுக்கும் உரித்துடையவர்கள்.

தாயக மக்களுக்கு மூச்சடைத்து விட்டது, அதனால் சுவாசிக்க வழியின்றி குரல் இழந்து போயுள்ளார்களென்று புலம்புபவர்கள், ஒடுக்கப்படும் மக்களே விடுதலைக்காகப் போராடுவார்கள் என்கிற எளிய உண்மையை புரிந்து கொள்ளவில்லை.

இந்தியாவுடன் பேசப் போகிறோம், நோர்வேயுடன் பேசிக் öகாண்டிருக்கிறோம் என்பவர்கள் கியூபா, சீனாவுடனும் பேசலாம். டானியல் ஒட்டேகாவின் நிக்கராகுவாவுடனும் பேசலாம்.

சர்வதேச சட்டங்களும் ஐ.நா. வின் எழுத்துருவிலுள்ள சரத்துகளும் முள்ளிவாய்க்காலில் அவலப்பட்ட மக்களைக் காப்பாற்ற முன்வரவில்லை.
நியூயோர்க் மனித உரிமைக் கண்காணிப்பகமும் ஆசிய மனித உரிமைச் சங்கமும் சர்வதேச மன்னிப்புச் சபையும் மனிதக் கேடய விவகாரத்தை தூக்கிப் பிடித்து மனிதாபிமான அரசியலை நடத்தின.

இன்றும் கூட யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கைப் போர் மட்டும் நடத்தப்படுகிறது.

இந்தச் சபைகள், அமைப்புகளை மீறி, பிராந்திய நலன் பேணும் அரசியலொன்று இயங்கிக் கொண்டிருப்பதை இவர்கள் அறிவார்கள்.

தற்போது காஸா மீது இஸ்ரேல் தொடுத்த பேõரில் நடைபெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடைபெறுகின்றன.

முடிவுகள் எதுவாக இருந்தாலும் தண்டனையிலிருந்து இஸ்ரேலைக் காப்பாற்ற

அமெரிக்காவும் மேற்குலக நண்பர்களும் துணை நிற்பார்களென்று யூதர்களுக்குப் புரியும்.

ஆகவே தாயக மக்களின் அரசியல் தளத்தினை பலப்படுத்த வேண்டிய சமகாலத் தேவையைப் புரிவதனை விடுத்து நாடு கடந்த தேசத்தை அமைப்பதால் மக்களுக்கான விடுதலை அரசியல் உயிர்த்தெழ முடியாது.

அமெரிக்கா ஏற்றுக் கொள்ள மறுப்பதால் இந்தியாவை அணுகிப் பார்க்கலாமென்றுதாவிச் செல்லும் அரசியலை முன்னெடுக்காமல் சர்வதேச மக்களின் ஆதரவைத்திரட்டும் பணியில் இவர்கள் ஈடுபடலாம்.

தீண்டத் தகாதவர்களாகக் கருதப்படும் சோசலிச நாடுகளையும் அணுகிப் பார்க்கலாம். மக்கள் புரட்சி மூலம் விடுதலை பெற்ற கியூபா, வியட்னாம் போன்ற நாடுகள் எம்மை புறக்கணித்து விட்டன என்கிற அங்கலாய்ப்பில் அவர்களைத் தூற்றுவதை விடுத்து அவர்கள் அவ்வாறான நிலைப்பாட்டினை மேற்கொண்டதற்கான காரணிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதுவரை நிகழ்ந்த ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது, மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்காக நடத்தப்பட்டது என்கிற கருத்தியலொன்று இவர்களிடம் காணப்படுகிறது.

இதனை மாற்றிட வேண்டிய அவசியம், தமிழ் மக்களிடையே இயங்கும் பொதுவுடமைச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட முற்போக்குச் சக்திகளõல் உணரப்படுகிறது.

– சி.இதயச்சந்திரன்

-நன்றி வீரகேசரி வாரவெளியீடு –

Related Posts Plugin for WordPress, Blogger...
  • Akilan Swiss says:

    இந்தியாவை விட சீனா எனக்கு பெரும் துரோகம் செய்யவில்ல ஆகவே எமக்கு யாரும் எதிரி இல்லை. நாங்கள் எல்லா நாடுகளுடனும் நல்ல உறவை பேணி அவர்களை எங்கள் விடுதலைக்கு உதவ வைக்கணும் எல்லா நாடுகளுக்கும் எமது பிரச்சனைய விளக்கி சொல்லணும்

    July 7, 2009 at 19:11

Your email address will not be published. Required fields are marked *

*