TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தேர்தலும் தமிழர் தரப்புகளின் சவால்களும்

2010 நாடாளுமன்றத் தேர்தல் வழமையிலும் பார்க்க இந்த முறை பரபரப்பு மிக்கதாக நோக்கப்படுகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பில் மாறுபட்ட வாதப்பிரதிவாதங்களும், மக்கள் முடிவெடுப்பதில் நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதே போல சிங்கள தேசத்திலும் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.

முதலில் சிங்களத் தரப்பினரின் தேர்தல் நகர்வுகளை மேலோட்டமாக நோக்குவோம். தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் மகிந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தனதாக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

தனது மகன் நாமல்ராஜபக்ச, சகோதரன் பசில் ராஜபக்ச, மற்றும் உலக பிரபல்யங்களான சனத்ஜெயசூரிய, முத்தையா முரளீரதன், சுசந்திகா ஜெயசிங்க உட்பட்டோரையும், நடிகர்களையும் தேர்தலில் களமிறக்குகின்றார். அதே நேரம் எதிர்கட்சிக் கூட்டணி உடைந்து சரத் பொன்சேகா தலைமையிலான அணி வெற்றிக் கிண்ணம் என்ற சின்னத்தை கையில் எடுத்துள்ளது. மாறாக ரணில் விக்கிரம சிங்க யானைச் சின்னத்தை மீண்டும் பலப்படுத்தும் முடிவில் உறுதியாகியுள்ளார்.

தற்போது ரணில் ஒரு உண்மையை உணரத் தலைப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அவரைப் பொறுத்தவரையில் சரத்பொன்சேகாவை தேர்தலில் களமிறங்க அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் ஒரு பாரிய சூழ்ச்சியை நோக்கியே நகர்கின்றது என்ற நிலைபாட்டினை ரணிலோ அல்லது அவர் சார்ந்த எவரோ எதிர்வு கூறியிருக்கின்றனர் என்றே எண்ணத் தோன்றுகின்றது. காரணம் பொன்சேகா இராணுவ தடுப்பில் உள்ள அதேவேளை அவருக்கான அனுதாப வாக்குகள் கிடைப்பதனைத் தடுக்க முடியாது. அவரை தேர்தலில் நிறுத்தாது தடுத்தால் அவை கூடுதலாக ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சிக்கே கிடைப்பதற்கான அபாய நிலை ஏற்பட்டுவிடும். இந்த நிலையில் சரத்பொன்சேகாவை தேர்தலுக்காக அனுமதித்தால் அவர் பெறுகின்ற ஆசனங்களை பின்னர் சிதைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

ஒன்றில் ஐக்கியதேசியக் கட்சியும், ஜேவிபியும் இணைந்து தேர்தலில் குதித்தால் அவர்கள் கூடுதல் ஆசனங்களைப் பெற்றாலும் அவர்களால் ஆட்சி அமைக்கும் போது பாரிய நெருக்கடிகள் ஏற்படும். எந்த சந்தர்ப்பத்திலும் இரண்டு பிரதான தரப்புக்களும் ஒருமித்த கொள்கையுடன் ஆட்சியில் செயற்பட முடியாது என்பது வெளிப்படை. ஏற்கனவே கிடைத்திருக்கின்ற நிறைவேற்று அதிகாரத்தையும், இரண்டு தரப்புக்களுக்குள்ளும் இருக்கின்ற முரண் நிலைகளையும் பயன்படுத்தி தான் நினைத்ததை ஒப்பேற்றுவது. அல்லது பொன்சேகா தலைமையிலான கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தனித்து களத்தில் இறங்கினால் குறிப்பிட்ட இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வாக்குப் பங்கீட்டில் சிதைவு ஏற்படும். அந்தச் சந்தர்ப்பத்தில் தனது கட்சியினர் குறைந்த வாக்குகளிலேயே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும். அதே நேரத்தில் சர்வதேச ரீதியாக ஏற்பட்டு வருகின்ற பொன்சேகா எதிர்நிலைக்கான அழுத்தங்களைத் தவிர்ப்பதற்கான ஒரு உத்தியாக ஜனநாயக தேர்தலில் போட்டியிட அவரை அனுமதித்ததாக ஒரு மாயை ஏற்படுத்துவது போன்ற விடயங்களைக் கைக்கொண்டு மகிந்த செயற்படுகின்றார்.

இது இவ்வாறு இருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலரை வெளியேற்றி புதிய முகங்கள் பலவற்றை உள்வாங்கியிருக்கின்றது. கூட்டமைப்பின் இந் நடவடிக்கையானது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்தும் என தற்போது எதிர்பார்க்க முடியாத சூழல் தோன்றத்தலைப்பட்டுள்ளது.

காரணம் கூட்டமைப்பில் இருந்து பத்துவரையானோர் வெளியேற்றப்பட்ட அதேவேளை ஒருவர் தானாகவே வெளியேறினார். இந்த இடத்தில் அவர்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் பரவலான விமர்சனங்கள் தலைதூக்கின. ஆனாலும் அந்த விமர்சனங்களை வலுவாக்கி விஸ்வரூபம் எடுக்கக்கூடிய சூழலில் இருந்த குறிப்பிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பு எடுத்த முடிவுகளைச் சரி என நிரூபிக்கும் வகையிலான நகர்வுகளை உடனடியாக மேற்கொள்ளத் தலைப்பட்டுவிட்டனர். கிசோர், தங்கேஸ்வரி, கனகரட்ணம் உட்பட்டோர் உடனடியாகவே மகிந்தவுடன் கூட்டுச் சேர்வதற்கான அறிவிப்பினை விடுத்தனர். மற்றொரு தரப்பினர் விக்கிரமபாகு கருணாரட்ணவுடன் கூட்டுச் சேர்ந்த அதேவேளை அவர்களில் ஒருவரான சிறீகாந்தா தன்னை தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற கட்சியின் தலைவராக அறிவிக்க சிவாஜிலிங்கம் தன்னைச் செயலாளர் என அறிவித்தார்.

இந்த நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனித் தமிழீழத்தை வலியுறுத்தி தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும் தன்னுடன் கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரை இணைக்கவுள்ளதாகவும் நெருங்கியவர்களிடம் தெரிவித்திருக்கின்றார். இந்த இடத்தில் அவர் எடுத்து செயற்படுகின்ற முடிவு தமிழ்த் தேசியவாதிகளை உணர்வின் உச்சிக்கே இட்டுச் செல்லும் என்பது வெளிப்படையானது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இவர்களால் இன்னொரு பலமான தமிழர் சக்தியை திரட்டமுடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனி நாட்டுக் கோரிக்கையை முற்றாக் கைவிட்டுவிட்டதா? என்ற கேள்வியை எழுப்பியபோது அவர்கள் வழங்குகின்ற பதில் வழமைபோலவே தமிழர்களின் அடிப்படை உரிமைகளில் எந்த சமரசத்தையும் செய்யமாட்டோம் என கூறுகிறார்கள்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றில் இருந்து விலகமாட்டோம். இவற்றை விடுத்து இவற்றுக்குக் கீழான எந்த ஒரு அதிகாரத்தைப் பற்றியும் இந்தியா உட்பட்ட எவருடனும் பேசமாட்டோம். இராணுவ பலம் பொருந்திய சூழலில் சர்வதேசத்தின் மத்தியில் பேச்சுக்களில் ஈடுபட்ட எமது ஏக பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தார்கள். அன்றைய சூழலில் அதனைக் கேட்பதற்கான வலு எங்களிடம் இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் எங்களிடம் சம பலம் என்பது இல்லை.

எனவே எமக்கான தீர்வினை படிப்படியாகவே எட்டமுடியும். சிறிய அளவிலான எந்த ஒரு தீர்வினையும் எமக்குத் தருவதற்கு எந்த ஒரு சிங்களத் தலைமையும் தயார் இல்லை என்பதை நாங்கள் நன்குணர்வோம். நாங்கள் முன்வைக்கும் இலகுவாக சிங்களத் தலைமைகளால் வழங்கக் கூடிய தீர்வினைக் கூட சிங்கள தேசம் எங்களிடம் தராது, அல்லது தரவில்லை என்ற விடயங்களை சர்வதேசத்தின் முன் அம்பலப்படுத்துவோம். அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் நகர்வுகளின் மூலம் எமது மக்களின் அபிலாசைகளை எட்டுவோம் என கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.

இந்த இடத்தில் இதேபோன்றதான தெளிவு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. படிப்படியாக எமது இலட்சியத்தினை எமது மக்களுக்கு ஈட்டிக்கொடுப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுவோம் என அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அவர் தனது கட்சி சார்பில் நான்கு பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்தில் இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருக்கின்றார். அந்தக் கோரிக்கைக்கும் கூட்டமைப்பு உடன்பட்டிருக்கின்றது. ஆனாலும் அந்த நான்கு இடங்களில் இரண்டை கஜேந்திரனுக்கும் பத்மினி சிதம்பரநாதனுக்கும் ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருக்கிறது. அதனை ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இருப்பதாக அறியப்படுகிறது. யாழ் மக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்தே அவ்வாறான வெளியேற்றம் அவசியமாக இருந்தது என கூட்டமைப்பு கூறுகிறது.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாமல் கஜேந்திரகுமார் வெளியேறினாலும் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தில் தேர்தலை எதிர்கொள்கின்றார் என்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கஜேந்திரகுமார், சிவாஜிலிங்கம், சிறீகாந்தா ஆகியோர் வெளியேறினாலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் பெறும் நான்கு கட்சிகளும் அங்கம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

கஜேந்திரன் வெளியேற்றப்பட்டமை மட்டுமே ஒப்பீட்டளவில் பாரிய முறைகேடாக அல்லது நியாயமற்ற செயல் என பரவலாக நோக்கப்படுகின்றது. அவரது சகோதரன் வெள்ளைவானில் கடத்தப்பட்டு இரண்டு நாட்களில் விடுவிக்கப்பட்டார். அது எப்படி உடனடிச் சாத்தியம்? இலங்கையில் அவ்வாறான நிகழ்வு ஏதாவது நிகழ்ந்துள்ளதா? அதனைவிடவும் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளராகப் பணியாற்றிய குறிப்பிட்ட சகோதரனை நிரந்தர விரிவுரையாளராக அமர்த்துவதற்கான அழுத்தங்களை கஜேந்திரன் மேற்கொள்வதாக கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது.

இது நிற்க,

கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பிலும் அதன் முக்கியஸ்தர்கள் தொடர்பிலும் கட்சியில் இருந்து வெளியேறியோர் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தலைப்பட்டுள்ளனர். இது உண்மையில் ஓர் ஆரோக்கியமான விடயம் என்றே கொள்ளவேண்டும். குறிப்பாக இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கே கூட்டமைப்பு செயற்படுவதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. இதற்கான பதில் என்னவாக இருந்தாலும், எமது பார்வையில் பிராந்தி வல்லசு என்பது இந்தியா. இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த ஒரு தீர்வும் தமிழ் மக்களுக்குக் கிடைத்துவிடப் போவதில்லை. அதற்கு எந்தச் சூழ் நிலையிலும் இந்தியா அனுமதிக்கப் போவதுமில்லை.

இந்த நிலையில் தற்போது இந்தியா தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். எமக்கான தேசியத்திற்கான தீர்வினைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் இந்தியாவுடன் உறவினை மேற்கொள்வது சரி என்றாலும், எல்லை தாண்டிய போக்குடன் கூட்டமைப்பு தனது நகர்வினை மேற்கொள்ளாது. அவ்வாறு நகர்ந்தால் அதற்கான பதில் வழங்கப்படும் என்பதே மக்களின் நிலைப்பாடு.

இதேவேளை கூட்டமைப்புக்குள் புதிதாக உள் வாங்கப்படுபவர்களில் குறிப்பிடத்தக்க பலர் தமிழ்த் தேசியம் தொடர்பிலான தெளிவான நிலைப்பாட்டில் உள்ள அதேவேளை தமிழ்த் தேசியத்தில் இருந்து விலை போகாதவர்களாகவே உள்ளவர்கள் என்பது உண்மையான விடயம் தான். இவர்களில் குறிப்பாகச் சிலர் தமிழ்த்தேசியத்துடன் மிக நீண்டகாலமாக ஒன்றித்துப் பயணித்தவர்கள். அவர்களின் தமிழ் தேசிய செயற்பாடுகள் குறித்த சரியான ஆதாரங்களை மிக விரைவில் எமது அடுத்த பத்திகளில் வெளிப்படுத்துவோம்.

இதேவேளை கூட்டமைப்பிற்குள் புதிதாக உள்வாங்கப்படுபவர்களில் கல்வி சார் சமூக நலன் சார் செயற்பாட்டாளர்கள் பலர். இவர்களுடன் தமிழ்த் தேசியத்திற்காக குரல் கொடுத்துவருகின்ற ஊடகம் ஒன்றின் நிர்வாகி ஒருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ்.மாவட்டத்தில் அங்கம் பெறுகின்றார். அவரது நாடாளுமன்ற வருகையானது ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டியது. காரணம் தற்போதைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் மக்களுக்குமான உறவுப் பாலமாகத் திகழக்கூடிய எந்த ஒரு ஊடகப் பலமும் இல்லை. உதாரணமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியமை தொடர்பில் கொழும்பு உட்பட்ட இலங்கையில் தமிழ் அச்சு ஊடகங்கள் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் சில வலுவான சக்திகளுக்கு சார்பு நிலை எடுத்துச் செயற்படுகின்ற ஊடகம் ஒன்று “உடைந்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு” என பெரிய தலைப்பில் செய்தி வெளியிட்டு மக்களைக் குழப்பியது.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றின் நிர்வாகி ஒருவர் உள்வாங்கப்பட்டமை ஆனது கூட்டமைப்பின் வழிச் செல்லுதல்களுடன் கூடவே பயணிக்கும் ஒரு ஊடகத்திற்கூடான மக்களுக்கான தெளிவூட்டல்களும், கூட்டமைப்பின் பயணம் தொடர்பில் மக்கள் கொண்டிருக்கின்ற நிலைப்பாடுகளுக்கும் ஒரு களமாக அமைவதற்கான வாய்ப்புக்களே உள்ளன.

இந்த இடத்திலும் ஏற்கனவே வெளிவந்த கட்டுரைகளிலும் நாங்கள் கூறிவந்த கருத்தினை இதிலும் வலியுறுத்த முற்படுகின்றோம். தமிழ் மக்கள் வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது கிடைக்கப் போவதில்லை. ஆனாலும் இத்தனைக்குப் பின்னும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் மக்கள் விடுதலை அடைந்துவிட்டார்கள். நாட்டில் எல்லாம் முடிந்துவிட்டது என்ற மாயையை சிங்கள தேசம் சர்வதேசத்தின் முன் நிலைநிறுத்தியுள்ளது. இந்த இடத்தில் தமிழ் மக்கள் தமது பலத்தினை நிலைநிறுத்த அல்லது வெளிப்படுத்த ஒருமித்த சக்தி என்பதை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு தற்போதைய சூழலில் ஒரே ஒரு தெரிவாக இருப்பது தமிழீழ விடுதலைப்புலிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டும் என்பதால் தான் மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.

இந்த கள யதார்த்தம் புரிந்து அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டிய சூழல் இருக்கின்றது. எதிர்காலத்தில் தீர்வுகளுக்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டால் அதன் போது கூட்டமைப்பு சோரம்போனமை உறுதி செய்யப்பட்டால் அதற் கெதிராகவும் போராட மக்கள் தயாராய் இருக்கின்றார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தத்துவம் ஒன்றிருக்கின்றது ‘வலியோன் வாழ்வான்” இதன்படி தமிழ் மக்கள் ஒருமித்து பயணிக்க வேண்டிய சூழல் தற்போது எதிர்கொள்ளப்படுகின்றது.

இராவணேசன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*