TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நாடாளுமன்றத் தேர்தலில் பிரிந்து நிற்கும் எதிர்க்கட்சிகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்காக காலஎல்லை ஆரம்பமாகி விட்டது.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் முயற்சிகளில் பெரும்பாலான கட்சிகள் இன்னமும் ஈடுபட்டுள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மட்டுமே பெரும்பாலான மாவட்டங்களின் வேட்பாளர் பட்டியலைப் பூர்த்தி செய்துவிட்டு நிம்மதியாக இருப்பதாகத் தெரிகிறது. ஏனைய கட்சிகள் விடயத்தில் பெரும் குழப்பமும்- இறுதித் தீர்மானம் எடுக்க முடியாத நிலையும் நீடிக்கிறது.

தனித்துப் போட்டியிடுவதா கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதா என்ற குழப்பத்தில் இருந்து விடுபட முடியாத நிலை காணப்படுகிறது. ஒரு பக்கத்தில் ஆளும்கட்சி தன்னைப் பலப்படுத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணியோ சிதைந்து சின்னாபின்னமாகி வருகிறது.

கடந்த வாரம் அமைச்சர் பேரியல் அஷ்ரப் ஆளும்கட்சியில் இணைந்து கொண்டார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவி அவர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம்கள் சார்பு அரசியலில் இருந்து விலகி அனைத்து இனத்தவர்களையும் பிரதிநிதித்துவப் படுத்தக் கூடியதொரு அரசியல் அமைப்பாக உருவாக்குவதற்கான அஷ்ரப் முயற்சியே இந்த தேசிய ஐக்கிய முன்னணி. அதை உருவாக்கி குறுகிய காலத்துக்குள்ளேயே அஷ்ரப்பின் மரணம் நிகழ்ந்தது. அதன்பின்னர் முஸ்லிம் காங்கிரசும், தேசிய ஐக்கிய முன்னணியும் உடைந்து உடைந்து பல கட்சிகளாகிப் போயின.

பலமானதொரு அரசியல் கட்சியாக தேசிய ஐக்கிய முன்னணியைக் கட்டியமைக்க பேரியல் அஷ்ரப் தவறிவிட்டார். அதற்கான பக்குவமும் ஆளுமையும் அவரிடத்தில் இருக்கவில்லை. அதன் விளைவாக பேரியல் ஆளும் கட்சியுடன் இணைந்து விட்டார்.

இப்போது அஷ்ரப்பின் கனவும் அஸ்தமனமாகிப் போயிருக்கிறது.இப்படி ஆளும்கட்சி, பிறகட்சிகளில் இருந்து முக்கிய பிரமுகர்களை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்க எதிர்க்கட்சிகளோ சின்னத்துக்காக சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றன.

சரத் பொன்சேகாவை போதுவேட்பாளராக நிறுத்துவதில் இணக்கப்பாட்டை எட்டிக் கொண்ட ஜேவிபியும் ஐதேகவும், இந்தப் பொதுத்தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஆனால் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவதென்ற சிக்கல்களால் இந்த முயற்சி கைகூடாமல் போய்விட்டது. ஐதேகவும் ஜேவிபியும் ஒரே அணியில் இணைந்து போட்டியிட்டிருந்தால், அது இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வாகக் கருதப்பட்டிருக்கும்.

காரணம் இடதுசாரிகளில் மிகத் தீவிரமானவர்கள் ஜேவிபியினர். அதேவேளை ஐதேகவோ முதலாளித்துவக் கொள்கையில் வளர்க்கப்பட்டது.

இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து பொதுவேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தி- ஒன்றாக இணைந்து அவருக்காகப் பிரசாரம் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

எப்போதும் எலியும் பூனையுமாக இருந்தவர்களா ஒரே மேடையில் நிற்கிறார்கள் என்று வாக்காளர்கள் அதிசயத்துடன் பார்த்தனர். ஆனால் அதுபோன்ற நிலை பொதுத்தேர்தலில் இருக்காது என்பது உறுதியாகி விட்டது. இதற்குக் காரணம் சின்னம் தான்.

இருகட்சிகளும் கூட்டணி அமைப்பதற்குத் தயாராகவே இருந்தன. ஆனால் சின்னம் விடயத்தில் இருதரப்புமே விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்வதற்குத் தயாராக இருக்கவில்லை. இதன்விளைவாகத் தனித்தனியே போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

சரத் பொன்சேகா போட்டியிட்ட அன்னம் சின்னத்தில் போட்டியிட முன்வருமாறு ஐதேகவை அழைத்தது ஜேவிபி. ஆனால் ஐதேகவோ யானையை விட்டுக் கொடுக்க முடியாது என்றும் அதில் போட்டியிட வருமாறும் ஜேவிபியை அழைத்தது.இந்த இழுபறிக்குத் தீர்வு காணமுடியாத நிலையில் இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட முடிவு செய்தள்ளன.

யானை சின்னத்தில் போட்டியிடவுள்ள ஐதேகவுடன் ஜனநாயக மக்கள் முன்னணி, மங்கள சமரவீரவின் மகாஜன அணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ ஆகியன கூட்டணி சேர்ந்துள்ளன.

அதேவேளை சரத் பொன்சேகாவின் தலைமையில் உருவாக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் பெயரில் ஜேவிபி, வெற்றிக்கிண்ணம் சின்னத்தில் போட்டியிடப் போவதாக கூறியுள்ளது. மொத்தத்தில் ஜேவிபிக்கு இது சோதனைக் காலம் என்றே சொல்ல வேண்டும்.

அது தனது மணி சின்னத்தைக் கைவிட்டு வேறொரு சின்னத்துக்காகப் போராடும் நிலைக்கு வந்திருக்கிறது. சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அனுதாப வாக்குகளைக் கவர்வதற்கே இந்த முயற்சி. ஜேவிபி தனித்துப் போட்டியிட்டால் அதற்கு குறைந்தளவு ஆசனங்களே கிடைக்கும் என்பது உறுதி.

இந்தநிலையில் தான் கடந்த முறை சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்தது போல, இந்தமுறை ஐதேகவுடன் ஒட்டிக்கொள்ள நினைத்தது.ஆனால் அது முடியாமல் போக கடைசியில் சரத் பொன்சேகாவின் பெயரை முன்நிறுத்தி பொதுத்தேர்தலில் குறைந்தது பத்து ஆசனங்களையாவது பெறுவதற்கு முயற்சி செய்கிறது.

சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகவே போட்டியிடுவேன்- வேறொரு கட்சியில் போட்டியிடமாட்டேன் என்று கூறிவந்தவர். ஆனால் கடைசியில் புதிய ஜனநாயக முன்னணியின் அன்னம் சின்னத்தில் தான் அவரால் போட்டியிட முடிந்தது. அதன் பின்னராவது அவரால் பொதுத்தன்மையைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இப்போது ஜேவிபி அவரை முன்னிறுத்தியே போட்டியில் குதிக்கப் போகிறது. இது சரத் பொன்சேகாவைப் பாதுகாப்பதற்கான முயற்சியாக ஜேவிபி கூறிக் கொண்டாலும் உண்மையில் ஜேவிபியைக் காப்பாற்றும் முயற்சியேயாகும். இந்தத் தேர்தலில் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி ஜேவிபி போட்டியிடுவதுடன் சரத் பொன்சேகாவின் பொதுத்தன்மையும் இல்லாமல் போகப் போகிறது. அவர் ஜேவிபி சார்புடையவராக மாற்றப்படும் நிலை உருவாகவுள்ளது.

பலமானதொரு எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக உருவாகியிருந்த நிலையில் இப்போது அது பலவீனமடைந்து செல்கிறது. இது ஆளும்கட்சிக்கு இருந்து வந்த நெருக்கடியைக் குறைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்;டும்.

அதேவேளை ஜேவிபி விடயத்தில் கூட்டணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டது ஐதேகவுக்கே இலாபம் என்ற கருத்தும் இருக்கவே செய்;கிறது. ஜேவிபியுடன் இணைந்ததால் தான் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஐதேகவின் வாக்குகள் முழுமையாகக் கிடைக்கவில்லை என்ற கருத்தும் ஐதேக தலைவர்களிடத்தில் உள்ளது.

இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் ஆளும்கட்சிக்கு நெருக்கடியை அதிகரிக்கலாம் என்பது அவர்களின் கருத்து. எவ்வாறாயினும் இந்தத் தேர்தல் பெரும்பாலும் இருமுனைப் போட்டியாக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலை மாறிப்போய் விட்டது.

ஜேவிபி பலமானதொரு போட்டியாக அமையுமா என்பது கேள்வியாக இருந்தாலும்- உதிரிக்கட்சிகளையும் சுயேட்சைகளைகளையும் ஒதுக்கி விட்டுப் பார்க்கும் போது மும்முனைப் போட்டி என்பது உறுதியாகியிருக்கிறது.

கொழும்பிலிருந்து ஹரிகரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*