TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வினை விதைத்தால் வினையே விளையும்

வினை விதைத்தால் வினையே விளையும் என்பது இனிமேலாவது தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்குப் புரியவேண்டும்.

அவசரகாலச்சட்டமும் எதிர்க்கட்சிகளும்

அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை தவறான முறையில் பயனப்படுத்துகிறது

அவசரகாலச் சட்டத்தின் கீழ் சரத் பொன்சேகாவைக் கைது செய்து தடுத்து வைத்திருக்கிறது என்றெல்லாம் கடந்த சில நாட்களாக சிறிலங்காவின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட பின்னர் தான் அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் தவறான முறையில் பயன்படுத்துகிறது என்ற உண்மை தென்னிலங்கையின் அரசியல் கட்சிகள் பலவற்றுக்கே தெரியவந்திருக்கிறது.

* இப்போதாவது இந்த உண்மை அவர்களுக்குத் தெரியவந்திருக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்வதா அல்லது காலம் கடந்த ஞானம் பிறந்திருக்கிறதே என்று கவலை கொள்வதா என்று புரியவில்லை. கடந்த முப்பதாண்டுகளில் பெரும்பாலான காலத்தை அவசரகாலச் சட்டம் தான் இலங்கையை ஆட்சி செய்தது. அதுவும் தமிழ் மக்கள் மீதான அதிகளவு வன்முறைகள் அடக்குமுறைகளுக்கே இந்த அவசரகாலச் சட்டம் வழிவகுத்திருந்தது.

தமிழர்களின் வகை தொகையற்ற கைதுகள், ஆட்கடத்தல்கள், காணாமற்போதல்கள், மரணங்கள் எல்லாவற்றையும் நீதியின் முன்பாக நியாயப்படுத்தி- இந்த அநீதிகளுக்குக் காரணமான அரசபடைகளையும் அதன் துணை ஆயுதக்குழுவினரையும் பாதுகாத்து நின்றதும் இந்த அவசரகாலச் சட்டம் தான்.

அவசரகாலச் சட்டம் இலங்கையில் வாழும் ஒவ்வொரு தமிழனின் மீதும் ஏதோ ஒருவித அழுத்தத்தை-அடக்குமறையைப் பிரயோகிக்கக் காரணமாக இருந்தது.

இதை எவராலும் மறுக்க முடியாது. அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி காலவரையறையின்றி ஆயிரக்கணக்கான தமிழர்கள் எந்த விசாரணைகளோ- குற்றச்சாட்டுகளோ இல்லாமல் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டனர்.

அதுமட்டுமன்றி கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டுப் பெறப்பட்ட வாக்குமூலத்தை வைத்தே அவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டனர்.

அதற்குக் கூட இந்த அவசரகாலச் சட்டம் துணை போனது. அப்படிப்பட்ட அவசரகாலச் சட்டத்தை இதுவரை எதிர்க்காமல்- ஆதரவு தெரிவித்து வந்த எதிர்க்கட்சிகள் இப்போது தான் அது ஆபத்தானது என்கின்றன. அவ்வப்போது இந்த எதிர்க்கட்சிகளும் அவசரகாலச் சட்டத்தை கைதட்டி வரவேற்று நடைமுறைப்படுத்த உதவியவையே என்பது தான் ஆச்சரியம்.

ஐதேக ஆட்சியில் இருந்த போதும் இதே அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசுடன் கூடிக் குலவியிருந்த போது ஜேவிபியும் இதற்கு ஆதரவு வழங்கியது. அப்போதெல்லாம் இது மோசமானது என்று அவர்களுக்குத் தெரியாமல் போனதா?

* அவசரகாலச் சட்டத்தின் வலியை அவர்கள் இப்போது உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அவசரகாலச் சட்டத்தை நீடிக்கின்ற விடயத்தில் எதிர்கட்சிகள் கடந்த 5ம் திகதி நாடாளுமன்றம் கடைசியாகக் கூடிய போதும் இரட்டைவேடம் போட்டதை யாரும் மறந்துவிட முடியாது.

அன்றைய தினம் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கின்ற பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது அதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 15 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். பிரேரணைக்கு ஆதரவாக 102 வாக்குகள் கிடைத்தன. 87 வாக்குகள் வித்தியாசத்தில் அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை நிறைவேறியது.

* இந்தச் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சிகள் ஏன் அதற்கு எதிராக வாக்களிக்க முன்வரவில்லை?

* வாக்கெடுப்பு நடந்த போது எதற்காக வெளியே போய் நின்று கொண்டன?

விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர் நடைபெற்ற காலத்திலும் சரி- அதற்குப் பின்னரும் சரி, அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் ஆதரவு வழங்கியே வந்தன. ஒன்றில் நேரடியாக அல்லது மறைமுகமான ஆதரவு வழங்கப்பட்டது. அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தின் போது- அதற்கு எதிராக உரையாற்றுவார்கள். பின்னர் வாக்கெடுப்பு நடக்கின்ற போது யாருமே இருக்கமாட்டார்கள்.

அவசரகாலச்சட்ட விடயத்தில் பச்சோந்தித்தனமாகவே எதிர்க்கட்சிகள் நடந்து கொண்டன. அதன் பலாபலனைத் தான் இப்போது அவர்கள் அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர்.

அவசரகாலச் சட்டம் என்பது இரு முனைகளைக் கொண்ட கூரிய வாள் என்பது இப்போது தான் அவர்களுக்குப் புரிகிறது. அது இதுவரையில் தமிழர்களைப் பதம் பார்த்துக் கொண்டிருந்த போது- அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அது தம்மையே பதம் பார்க்கத் தொடங்கியதும் தான் கோபமும் எரிச்சலும் வருகிறது.

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி, எத்தனையோ ஆயிரம் மரணங்களுக்கு காரணமாக இருந்தவருக்கு-இலட்சக்கணக்கானோரின் சொத்துகளை அழிப்பதற்குக் காரணமாக இருந்தவருக்கு எததனையோ பேரைக் காணாமல் போகச் செய்தவருக்கு-இன்று அதே அவசரகாலச் சட்டம் எமனாக வந்திருக்கிறது. இது காலத்தின் சுழற்சி.

* வினை விதைத்தால் வினையே விளையும் என்பது இனிமேலாவது தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்குப் புரியவேண்டும்.

தாய் நாடு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*