TamilSpy

பொழுது போக்கு இணையம்…

“விலைபோகத் தயாராகி விட்டனரா”?…

தமிழ்மக்கள் கடந்த முப்பதாண்டுகளாக நடந்த போரால் நொந்து நூலாகிப் போயிருக்கின்ற நிலையில்-கூட்டமைப்பு தலைவர்கள் தமது அரசியல் சித்து விளையாடல்களை அரங்கேற்ற முனைவது அபத்தமான செயல். இது நிச்சயமாக தமிழ்மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றாக இருக்காது. என மாதமிருமுறை வெளிவரும் தாய் நாடு இணைய பத்திரிகை தனது ஆசிரியர் பகுதியில் குறிப்பிட்டுள்ளது.

* கடும் போட்டிகள், சவால்கள் நிறைந்துள்ள இந்தத் தேர்தல் களத்தில் கூட்டமைப்புத் தலைமை செய்யும் காரியங்கள் அதனை பலவீனப்படுத்துவதாகவே அமையப் போகிறது. இதுதான் யதார்த்தம்.

என குறிப்பிடும் தாய்நாடு பத்திரிகையின் ஆசிரியர் பகுதி வருமாறு;

* இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரசியல் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலும் தமிழ்மக்களுக்குப் பெரும் தலைவலியைக் கொடுக்கின்ற ஒன்றாக மாறிவருகிறது. இதற்கு வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. என்றைக்கும் தமது உரிமைக்காகப் போராடும்- தமிழ்த் தேசியத்தைக் கட்டிக் காப்பாற்றும் என்று நம்பியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இதற்குக் காரணமாகியுள்ளது. இந்தமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அணுகுமுறைகள் தொடர்பாக வெளியாகும் செய்திகளை, தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் தமிழருக்கு நியாயமான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்று விரும்பும் எவராலுமே ஜீரணிக்க முடியாததாக உள்ளன.

ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டமைப்பின் தலைமை எடுத்த பக்கச் சார்புடைய தீர்மானத்துக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை, இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்காமல்- ஒதுக்கி வைக்கும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்த முடிவைக் கூட்டமைப்பு எடுக்குமேயானால், அது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை- அது பின் நோக்கித் தள்ளத் தயாராகி விட்டது என்பதை உணர்த்துவதாகவே அமையும்.

* கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேர் மீதும் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஏராளமான விமர்சனங்களைக் கொண்டிருந்தார்கள். காரணம் அவர்கள் ஒரு போதும் – அது சம்பந்தனாக இருந்தாலும் சரி சிவாஜிலிங்கமாக இருந்தாலும் சரி சுரேஸ் பிறேமச்சந்திரனாக இருந்தாலும் சரி கஜேந்திரனாக இருந்தாலும் சரி- மக்களுடன் மக்களாக வாழவோ அல்லது அவர்களுக்கான பணிகளில் ஈடுபடவோ இல்லை என்பது வெளிப்படை.

அப்படியிருந்த போதும் தமிழ் மக்கள் கூட்டமைப்பை ஆதரிக்க எடுத்த முடிவுக்குக் காரணமே, அவர்கள் தமிழ்த் தேசியத்தையும்- தமிழரின் அரசியல் போராட்டத்தையும் தலைமை தாங்கவல்ல சக்திகளாக இருப்பார்கள் என்பதற்காகவே. ஆனால் அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் கூட்டமைப்பு தலைமை செயற்படத்
தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

* கடும் போட்டிகள், சவால்கள் நிறைந்துள்ள இந்தத் தேர்தல் களத்தில் கூட்டமைப்புத் தலைமை செய்யும் காரியங்கள் அதனை பலவீனப்படுத்துவதாகவே அமையப் போகிறது. இதுதான் யதார்த்தம். ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் எடுத்த தவறானதொரு முடிவினால் தான் கூட்டமைப்புக்கு இந்த நிலை வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்தநிலையில் பொதுத்தேர்தலில் பலரையும் ஓரங்கட்டும் முடிவை எடுத்தால்- அது அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தமிழரின் எதிர்பார்ப்புக்கு முரணான காரியமாகவே அமையும். மாறாக எவரையாவது கழற்றி விட்டுத் தனியானதொரு பாதையில் கூட்டமைப்பு பயணிக்க நேர்ந்தால்- அது நிச்சயம் அதன் தனித்துவத்தை மட்டுமன்றி மக்களின் ஆதரவையும் இழக்க நேரிடும். இதைக் கூட்டமைப்பின் பழம்பெரும் அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்மக்கள் கடந்த முப்பதாண்டுகளாக நடந்த போரால் நொந்து நூலாகிப் போயிருக்கின்ற நிலையில்-கூட்டமைப்பு தலைவர்கள் தமது அரசியல் சித்து விளையாடல்களை அரங்கேற்ற முனைவது அபத்தமான செயல். இது நிச்சயமாக தமிழ்மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றாக இருக்காது.

இப்படியான செயல்களின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு விலகி செல்லவே நேரிடும். அதையே கூட்டமைப்பு தலைவர்கள் செய்ய நினைக்கிறார்கள் என்றால், அவர்கள் சிங்களப் பேரினவாத சக்திகளுக்கும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளுக்கும் விலை போகத் தயாராகி விட்டார்கள் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*