TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பந்தியில் யார் அமர்ந்தாலும் எலும்புகள் தமக்குத்தான்

‘பந்தியில் யார் அமர்ந்தாலும் எலும்புகள் தமக்குத்தான்’ என்பது ஒட்டுக்குழுக்களுக்கு நன்றாகவே தெரியும்!

‘ஆடடா ராமா… ஆடு! குட்டிக்கரணம் போடு! அடிச்ச குத்துக் கரணத்தோடு… காசை வாங்கிப் போடு!’ இது மக்களுக்கு வித்தை காட்டும் குரங்காட்டிகள் எடுத்துவிடும் வசனம்.

இந்தக் குரங்காட்டிகளின் இடத்தில் ராஜபக்ஜக்களை வைத்தால், அவர்கள் யாரை வைத்து வித்தை காட்ட முற்படுகிறார்கள் என்பது நன்றாகவே புரிந்துவிடும். ஒரு காலத்தில் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சராக அமர்ந்து தன் எஜமானருக்கு வழங்கிய சேவை காரணமாக, அவரை ஆட்டுவித்த இந்தியா, வரதராஜப்பெருமாளை இப்போதும் பாதுகாப்பாகப் பராமரித்துவருகின்றது. இந்த நிலையில், தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து, அதனால் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வரும் டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றவர்களை சிங்கள தேசம் கைவிட்டுவிடவா போகின்றது?

ஈழத் தமிழர்கள்மீது கொடூரமான இன அழிப்பு யுத்தத்தை நடாத்திப் பேரழிவுகளை நடாத்தியதுடன் சிங்கள அரச பயங்கரவாதம் அதில் தப்பிப் பிழைத்த தமிழீழ மக்களை முள்வேலி முகாம்களுக்குள் முடக்கிச் சித்திரவதைகள் புரிந்த போதும் கூட எஜமான விசுவாசத்துடன் தொடர் பணியாற்றிய இவர்களை சிங்கள இனவாத அரசு கைவிட்டு விடுமா? டக்ளசை அமைச்சராகவும், கருணாவை அமைச்சர் 10 கட்சியின் உப தலைவராகவும், பிள்ளையானை கிழக்கின் சொந்தக்காரனாகவும் உயரத் தூக்கி வைத்திருக்கும் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இந்தத் தேர்தலில் இவர்கள் தேறுவார்களா என்ற நியாயமான அச்சம் தோன்றியுள்ளது.

ராஜபக்ஷக்களின் தமிழின அழிப்பு யுத்தத்தை சிங்கள மக்கள் பெரும்பாலும் ஏகமனதாக அங்கீகரித்து, ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை அமோக வெற்றியீட்ட வைத்தபோதும், தமிழர் தாயகம் ராஜபக்ஷக்களைத் தண்டிக்கவே முயன்றுள்ளனர். மகிந்த சகோதரர்களின் கயிற்றை இடுப்பில் கட்டிக்கொண்டு டக்ளசும், கருணாவும், பிள்ளையானும் போட்டி போட்டுக்கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் வித்தை காட்டியபோதும் அவை எவையும் எடுபடவில்லை என்ற கவலை கொண்டுள்ள மகிந்த சகோதரர்களைத் திருப்திப்படுத்த, புதியவிதமான வித்தைகளைக் காட்டும் முயற்சியில் டக்ளசும், கருணாவும், பிள்ளையானும் தத்தமக்கு இருக்கும் மூளையைக் கசக்கிப் பிழிந்தபடி உள்ளனர்.

கடந்த யாழ். மாநகர, வவுனியா நகர சபைகளின் தேர்தல்களில் மகிந்தவின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டி போட்ட டக்ளஸ் அணியால், ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு வாக்குக்களைத் திரட்டிக் கொடுக்க முடியாமல் போய்விட்டது. ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகம்’ என்று தன் ஒட்டுக்குழுத் தனத்தை நியாயப்படுத்த முயன்ற டக்ளசால் மகிந்த ராஜபக்ஷவின் வடக்கு – கிழக்கு பிரிப்பையும், அதனை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என்ற வக்கிர வசனங்களையும் ஈழத் தமிழ் மக்களிடையே போணியாக்க முடியவில்லை. இந்த நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்தவின் வெற்றிலைச் சின்னம் தமிழ் மக்களிடம் எடுபடப் போவதில்லை என்பதால், தனித்து வித்தை காட்டும் முடிவை எடுத்துள்ளார்.

கிழக்கைப் பொறுத்தவரை கருணா எஜமானாக இருந்தாலும், களத்தில் வித்தை காட்ட வேண்டிய பொறுப்பு பிள்ளையானுக்கே உண்டு. ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குக்களை அள்ளிக் கொடுக்கலாம் என்று நம்பியிருந்த பிள்ளையானால் கிள்ளிக்கூடக் கொடுக்க முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலிலும் மகிந்த மேற்பார்த்து என்ற விலாசத்தில் சென்றால், தனது இருப்பும் கேள்விக்குறியாகிப் போய்விடும் என்ற அச்சம் பிள்ளையானையும் தனி ஆட்டம் ஆடத் தூண்டியுள்ளது.

ஆக மெத்தத்தில், தமிழினத்தைக் காட்டிக்கொடுத்துப் பதிவி சுகம் கண்டவர்கள், இந்த நாடாளுமன்றத் தேர்தல் தமக்கு சங்கு ஊதிவிடுமோ என்ற அச்சத்தில் அவசர அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாட்கள் நெருங்க நெருங்க ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா போல் மகிந்த சகோதரர்கள்மீது குற்றப்பத்திரிகை வாசித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. டக்ளசின் நாடாளுமன்ற வாழ்க்கை ஐக்கியதேசியக் கட்சியின் அரசிலேயே ஆரம்பமாகியது. கருணாவின் குத்துக்கரணமும் ரணிலின் காலத்திலேயே நடந்தேறியது. ‘பந்தியில் யார் அமர்ந்தாலும் எலும்புகள் தமக்குத்தான்’ என்பது ஒட்டுக்குழுக்களுக்கு நன்றாகவே தெரியும். மகிந்த மீண்டும் ஜனாதிபதியாகத் தெர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், கருணாவின் பதவிக்கும், வரவுக்கும் இப்போதைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

கருணாவை வெகு சீக்கிரம் கைவிடும் நிலையில் ராஜபக்ஷ சகோதரர்களும் இல்லை. ஆனால், டக்ளஸ் குழுவும், பிள்ளையான் குழுவும் அங்கே போவதற்கான பாதையின் திறப்பு தற்சமயம் தமிழ் மக்களிடம் இருப்பதுதான் அவர்களுக்கு உதறலாக உள்ளது. ஒருவேளை நியாயமான தேர்தலுக்கான நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டால், திட்டமிட்ட கள்ள வாக்குக்களும் கிடைக்காமல் போய்விடலாம் அன்ற அச்சத்தோடு, தமிழ் மக்களிடம் புதிய வித்தைகள் காட்டும் அவசியமும் அவர்களுக்கு உள்ளதை மறுத்துவிட முடியாது.

நன்றி்:ஈழநாடு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*