TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மாறிவரும் கூட்டமைப்பும், மாறாத தமிழத் தேசியமும்!

மீண்டும் ஒருதேர்தல் தமிழீழ மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நாடாளுமன்றத்திற்கான திகதி நிட்சயிக்கப்பட்டது முதல் தமிழீழ மக்கள் யாரை ஆதரிப்பது என்பதில் உருவாகியுள்ள குழப்பம் காலவரையின்றி நீடித்தே செல்கின்றது.

தமிழீழ மக்களின் அரசியல் சக்தியாக விடுதலைப் புலிகளின் தமிழீழ இலட்சியத்தை உள்நாட்டு அரசியலிலும், சர்வதேச அரங்குகளிலும் எடுத்துச் செல்ல உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் தடுமாற்றமான அரசியலையே மேற்கொள்கின்றது. அதனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குறித்த அச்சங்கள் பலராலும் பரவலாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அண்மைக் காலமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை வெளியிட்டு வரும் கருத்துக்கள் ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, புலம்பெயர் தமிழீழ மக்கள் மத்தியிலும் அதிருப்திகளையும், சந்தேகங்களையும் உருவாக்கி வருகின்றது. குறிப்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களால் அவ்வப்போது தெரிவிக்கப்படும் புதிய கருத்துக்கள் தமிழ்த் தேசியவாதிகள் மத்தியில் பலத்த சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றது. சம்பந்தன் அவர்கள் விடுதலைப் புலிகளின் கடந்தகால அரசியல் நகர்வுகளையும் விமர்சித்திருந்தார்.

காலத்திற்கேற்ற முடிவுகளை மேற்கொள்வது அரசியல் களத்தில் முக்கியமானதாகவே கொள்ளப்படுகின்றது. கடந்து வந்த பாதையில் நடந்து முடிந்த சறுக்கல்களைச் சீர்தூக்கிப் பார்த்து எடுத்து வைக்கும் கால்களை நிதானப்படுத்த வேண்டியது அவசியமானதுதான். ஆனால், அவற்றை எல்லாம் எம்மைத் தூக்கி நிறுத்திய புனிதர்கள் தலையில் போட்டுவிட்டு, புதிதான பாதைக்கு நியாயம் தேடுவது கடைந்தெடுத்த போக்கிரித்தனம். கடந்து வந்த பாதையின் நியாயங்களை எடுத்துவைக்கும் பாதைக்காக மறுதலிப்பதும் வரலாறு மன்னிக்காத துரோகமாகவே தமிழீழ மக்களால் நோக்கப்படும்.

நடந்து முடிந்த சிறிலங்கா அரச அதிபருக்கான தேர்தலில் ஈழத் தமிழர்களுக்கு எந்தத் தெரிவுமே இருக்கவில்லை. தம்மை அழித்தவனா? அழிக்கச் சொன்னவனா? யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விக்கு அவர்களிடம் விடை கிடையாது. ஆனாலும், அந்தத் தேர்தலின்போது கொடுங்கோலன் மகிந்த ராஜபக்ஷவைத் தண்டிப்பதற்கு அவர்கள் முயன்றுள்ளார்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழீழ மக்களுக்கு நம்பிக்கைக்குரிய தேர்வு கிடைக்கப் போவதில்லை. தமிழீழ மக்களினது விடுதலைப் புலிகள் மீதான நம்பிக்கையும் அபிமானமும் அவர்களது மனதில் இப்போதும் நிறைந் உள்ளது.

விடுதலைப் புலிகளால் கட்டி எழுப்பப்பட் தமிழ்த் தேசியத்தை அடைவதற்கான ஆயுத பலம் சிதைக்கப்பட்டுவிட்ட போதும், அந்த இலட்சியக் கனல் ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் எரிந்து கொண்டே உள்ளது. அந்த இலட்சியத்தினூடு பயணிப்பவர்கள் மட்டுமே ஈழத் தமிழர்களுக்குத் தலைமை தாங்க முடியும். இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ்த் தேசியம் குறித்த தடுமாற்ற, தளம்பல் போக்கு தமிழ் மக்களுக்கான சரியான அரசியல் தலைமையாக அதனை ஏற்றுக் கொள்ள முடியாததாகவே உள்ளது.

ஆனாலும், ஈழத் தமிழர்களுக்கு இந்தத் தேர்தலில் வேறு தெரிவு இருப்பதாகத் தெரியவில்லை. சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்பதாகத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், நம்பிக்கைக்குரிய புதிய கட்சியை உருவாக்கவோ, நம்பிக்கையுடன் புதிய குழுவைக் களமிறக்கவோ முடியாத நிலையிலேயே ஈழத் தமிழ் மக்கள் முடிவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்க முயன்றால், அது டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்ற ஒட்டுக் குழுக்களுக்கோ, சிங்கள அரசியல் கட்சிகளுக்கோ சாதகமாக அமையலாம் என்ற அச்சநிலை உருவாகியுள்ளது. அதையும் மீறி, ஈழத் தமிழ் மக்களின் வாக்குகள் பிரிக்கப்படும் நிலை தோன்றுமாயின் தமிழர்களது அரசியல் பலம் சிதைக்கப்படும் அபாயமும் உள்ளது.

அதிசயமான காட்சி மாற்றங்கள் திடீர் உருவாக்கம் பெறாத பட்சத்தில், தமிழீழ மக்களது அரசியல் தளத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தாண்டித் தீர்மானிக்க முடியாத நிலையே தற்சமயம் காணப்படுகின்றது. இது ஒரு வகையில், சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தது போன்றதே. ஈழத் தமிழர்களின் சாபக்கேடான ஒட்டுக் குழுக்களும், சிங்கள இனவாதக் கட்சிகளும் தமிழர் தாயகத்தில் நிலை எடுப்பதைத் தடுப்பது மிக மிக அவசியமாகவே உள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை காலம் திருத்தி எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்கே வாக்களிக்க வேண்டிய அவசியம் ஈழத் தமிழர்களுக்கு உருவாகியுள்ளது.

தப்புத் தாளங்களை ஆரம்பித்த போதே புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர்புகளைப் பேண முயற்சி செய்தது. ஆனாலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைப் புறக்கணித்தே வருகின்றது. இலங்கைத் தீவின் ஒட்டு மொத்த தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து வாழும் நிலையில், அவர்களது பலத்தை நிராகரிப்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குச் சாதகமான நிலையை தமிழர் மாயகத்தில் உருவாக்காது. தமிழீழ பிரதேசங்களில் வாழும் ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்தினதும் முக்கிய உறுப்பினர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். இவர்களால், தங்கள் எண்ணப்படி தமது குடும்பத்தினரது அரசியல் நிலைப்பாடுகளை நெறிப்படுத்தவும் முடியும் என்பதை தமிழ் அரசியல் சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே, நடைபெற்று முடிந்த யாழ். மாநகரசபை தேர்தலிலும், சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலிலும் ஈழத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஏற்று வாக்களித்தார்கள் என்று கூற முடியாது. பெரும்பாலான தமிழ் மக்கள் இந்தத் தேர்தல்களில் தமது வேண்டுகோளையும் மறுதலித்து தமது வாக்குக்களைச் செலுத்தாமல் புறக்கணித்ததையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். காலத்தின் கட்டாயத்தால் மட்டுமே ஈழத் தமிழர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்கும் நிலையில் உள்ளார்கள் என்பதை மனதில் நிறுத்தித் தமது பாதையை நேர்படுத்திச் செல்ல வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கக் கனவுகளுக்காக மீண்டும் தமிழர்களைப் பலிக்கடாக்கள் ஆக்காமல், தமிழ்த் தேசியத்தினூடான இலட்சியப் பாதையில் பயணித்து தமிழீழத்தை வென்றெடுக்க வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*