TamilSpy

பொழுது போக்கு இணையம்…

த.தே.கூ அலுவலகம்; தமிழர்களுக்கு வைக்கும் ஆப்பு?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம்; “தமிழரின் தேசிய அபிலாசைகளுக்கு” வைக்கப்படும் ஆப்பு?

எப்படியோ சில இரகசியங்கள் தானாகவோ அல்லது சிலரின் தேவை கருதியோ வெளியாகி விடுகின்றன. தமிழர் தேசியக் கூட்டமைப்புக்குப் புது டில்லியில் ஒரு அலுவலகம் என்ற சேதி இதில் எந்த வகையைச் சேர்ந்தது என இப்போதைக்கு கண்டிறிவது இயலாதுள்ளது.

செய்தியின் மூல நாயகன் திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் என்பதும் முன்னாள் விடுதலைப் போராளி இயக்கத்தின் தலைவர் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியவை. அவர் இந்தச் சேதி பற்றித் தெரிவித்த தகவல்கள் துணிச்சலும் உண்மையும் நிறைந்து காணப் படுகின்றன.

தம்மால் வெளி வந்த செய்தியைப் பெருந்தன்மையுடன் ஒத்துக் கொண்டதோடு அப்படியான ஒரு பணி மனைக்கு நெடுநாட்களாகவே கோரிக்கை த.தே.கூ. தரப்பால் வைக்கப் பட்டது எனவும் கூறினார். இதன் மூலம் த.தே.கூ. இந்தியாவின் வலைக்குள் சிக்கி உள்ள நிலை வெளிப்படுகிறது. பிந்திய செய்திகளின்படி இது போன்ற பணிமனைகளைக் கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் திறக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியுள்ளார் எனவும் தெரிய வருகிறது.

இத்தனை காலமும் த.தே.கூ. ஈழத் தமிழ் மக்களின் ஏகப் பிரதி நிதிகள் எனப் பாவனை காட்டிய நிலை மாறி டில்லியின் கொத்தடிமைகள் என்ற நிலைக்கு வந்து விட்டதை இவர்களின் புது டில்லிப் பணிமனைக் கோரிக்கை காட்டுகிறது.

இவர்களுக்கு பணி மனைகள் யாழில், திருமலை, மன்னார், மட்டக்களப்பு, வன்னியில் ஏன் கொழும்பிலும் கூட உள்ளதா என்ற கேள்வி எழுப்படும் பரிதாப நிலையில் உள்ளது த.தே.கூ. இந்த இலட்சணத்தில் புது டில்லியில் பணி மனையின் அவசியம் தெரிந்திருப்பதன் மர்மம் என்ன? தமிழர் தேசியத்தின் தேவையா அல்லது இந்திய மேலாதிக்கத்தின் விருப்பமா?

இலங்கை இனப் பிரச்சனையை ஊதிப் பெருப்பித்தும், விடுதலை அமைப்புகளை உருவாக்கி வளர்த்து மோதவைத்துச் சிதறடித்தும், இனப் பிரச்சனை அமைதிப் பேச்சுகளைப் பல தடவைகள் முறித்தும், முடிவில் மகிந்த அரசுக்குச் சகல வசதிகளும் வளங்களும் வழங்கி ஈழத் தமிழின அழிப்பைச் செய்தும், இன்னும் தமிழருக்கு நீதியான நீதி விசாரணை நிவாரணம் கிடைக்க விடாதும் போன்ற பல நற் காரியங்களைச் தொடர்ந்து செய்தும் வருகிறது இந்தியா.

இத்தனைக்கும் மத்தியில் இந்தியாவால் மட்டுமே ஈழத் தமிழினத்துக்கு விடியல் வரும் என்ற மாய மானின் பின்னால் இன்னும் தமிழர் தே.கூட்டமைப்பும் அதன் ஆதரவாளரும் ஓடும் பரிதாப நிலை கண்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரிய வில்லை. இவர்களுக்கு இந்தியா தலாய் லாமாவுக்கும் திபெத்திய மக்களுக்கும் கடந்த 50 வருடங்களாக தண்ணி காட்டி வருவது ஏனோ கண்களுக்குத் தெரியவில்லை. அன்று சீனா சர்வதேச அரங்கில் இன்று போல் பலம் வாய்ந்த நிலையில் இல்லாத நிலையில், இந்தியா நினைத்திருந்தால் திபெத்தை அங்கீகரித்து ஐ.நா. அங்கத்துவம் கூடப் பெற்றுக் கொடுத்திருக்க முடியும். இன்று இந்தியா மட்டும் அல்ல அமெரிக்கா முயன்றாலும் கூட திபெத்துக்கு அரசியல் விடிவு கிட்டப் போவதில்லை என்ற நிலையே உள்ளது.

இதே நிலைதான் இன்று ஈழத் தமிழரின் விடுதலைப் போருக்கும் நியாயமான அமைதிவழி அரசியல் தீர்வுக்கும் ஏற்பட்டுள்ளது. இப்போதே மகிந்தவின் சிந்தனை பெரும்பான்மை மக்களின் விருப்பு வாக்கெடுப்பின் அடிப்படையில்தான் தமிழருக்கும் தீர்வு என்கிறார். அடுத்த தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனம் கேட்டு சிங்கள மக்களிடம் வாக்குக் கேட்டு வருகிறார். இதன் மூலம் சர்வதேசத்துக்கும் இந்தியாவுக்கும் தான் தமிழருக்கு அரசியல் தீர்வு காணும் ஆவல் கொண்டுள்ளதை வெளிப்படுத்தும் உள் நோக்கமும் வெளிப்படுகிறது.

ஆனால் நிறைவான ஆசனங்கள் பெற்று ஆட்சியை அமைப்பதே அவர் முதல் இலக்காக இருக்கும் எனச் சிறு பிள்ளை கூட அறியும். அவருடைய நெருக்குவாரம் அவர் நிழலில் குளிர் காய்ந்து வரும் டக்லஸ், கருணா, பிள்ளையான் பக்கமும் அதிகரித்து வருகிறது. அவர்கள் ஒன்றிரண்டு ஆசனங்களுடன் அமைச்சுப் பதவி பெற்றுவிடலாம் என்ற கனவும் கலையும் காலமும் கனிந்து வருகிறது. எனவே த.தே.கூ. பெரும்பான்மை ஆசனங்களுடன் வருவதை விரும்பாத போதும் இனப் பிரச்சனைத் தீர்வு என வரும் பொழுது தமிழர் தரப்பு பேரத்தை எந்த ஒரு தனிக் கட்சியுடனும் நடத்தும் எண்ணம் அவரிடம் இல்லை. எல்லாரையும் பந்தியில் இருத்தி கொக்கு நரி விருந்து வைத்து அனுப்பி வைப்பதே அவர் திட்டமாக இருக்கும்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தேசியம் தன்னாட்சி உரிமை பற்றிப் பல்லவி பாடிய த.தே.கூ. இன்று பாராளுமன்றத் தேர்தலில் எல்லாவற்றையும் மறந்தும் துறந்தும் தனது அரசியல் வறட்டுத் தனத்தை அம்பலப்படுத்தி நிற்கிறது. இந்தத் தேர்தலுடன் த.தே.கூ. உடைந்து நொருங்கி பலமிழந்த நிலையில் வருவதையே மகிந்தவும் இந்தியாவும் விரும்புகின்றன.

தமிழர் தன்னாட்சி மட்டுமல்ல மாநில சுயாட்சி என்ற பேச்சுக் கூடப் பேச முடியாத நிலையில் த.தே.கூ உள்ளது என்பதே யதார்த்த நிலை. இதன் முதற்கட்ட நிகழ்வே அதன் முன்னைய தமிழீழ ஆதரவாள உறுப்பினர் பலர் வெளி யேற்றப் பட்டுள்ளமை. இதற்கிடையில் தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாகப் புதிய கட்சி உருவாகிறது எனவும் அதன் பல இரகசியங்களை சிவநாதன் கிஷோர் வெளியிடப் போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் புதிய சுயேட்சை கூட்டு தேர்தல் களத்தில் இறங்கி விட்டது.

இவற்றைக் கொண்டு பார்க்கும் போது எது எப்படியாயினும் தமிழர் தரப்பு அரசியல் கோரிக்கைகளும் போராட்ட உணர்வுகளும் இலங்கையில் அடியோடு இல்லாது செய்யப்பட்டு விடும். ஈழக் கோரிக்கைக்கு மிக அவசியமான ஒருங்கிணைந்த பிரதேசம் என்பது இன:றைய இலங்கை அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், அரசபடைத் தளங்கள், காவல் அரண்கள் என்பவற்றால் வடக்கு கிழக்கு மன்னார் வன்னிப் பிரதேசங்கள் பல கூறுகளாகத் துண்டாடப் பட்டுக் கிடக்கிறது. இதன்மூலம் தமிழரின் தாயகக் கோட்பாட்டின் அத்திவாரம் அடியோடு தகர்க்கப் படுவதோடு இனிமேலும் அதற்கான தேவை இல்லை என்பதைச் சிங்களம் நிரூபிக்க முற்படும்.

தமிழ் மக்கள் சுயாதீனமாக வாக்களிக்கும் நிலையோ அல்லது வெளிப் படையான மக்களாட்சி விழுமியங்களோ அறவே இல்லாத நிலையில் ஜனநாயக முலாம் பூசப்பட்ட அப்பட்டமான இராணுவ ஆட்சியும் அதன் அடக்கு முறைக்குள் நடைபெறும் தேர்தலாகவே உள்ளது. ஆனால் இந்த உண்மையை வெளி உலகுக்கு எடுத்துச் சொல்லும் கடப்பாட்டை த.தே.கூ உணரும் நிலையில் இல்லை என்பதோடு அத்தகைய செயலைச் செய்ய வல்ல பிற தமிழர் தரப்பு அமைப்புகளும் இல்லை என்பது ஆபத்தான உண்மைகளாகும்.

* தமிழீழ வீடுதலைப் புலிகள் அமைப்பும் தமிழினமும் இப்பெரும் அழிவைச் சந்திப்பதற்கு த.தே.கூ காட்டி வந்த மெத்தனத்தனமும் போருக்கான மறைமுகமான ஆதரவும் என்பதை ஒரு சிலரே புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளனர் என்பது எமது மக்களின் அரசியல் பற்றிய புரிதல் குறை பாடாகவே பார்க்கப் படவேண்டும். இந்நிலை உருவாக வேண்டும் என்றே சிங்கள அரசுகள் திட்ட மிட்டு சிவராம் போன்ற சிறந்த ஆய்வாளர்களையும் யோசப் பரராசசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் போன்ற அரசியல் வாதிகளையும் கொலை செய்தது. இந்தக் கொலைகளைக் கூட த.தே.கூ கண்டு கொண்டதாகக் காட்டியது கூடக் கிடையாது.

தான் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் மக்களையோ அல்லது தனது சக உறுப்பினரையோ அக்கரையுடன் பார்க்காத த.தே.கூட்டமைப்பை மகிந்தவின் சூழ்சியால்தான் உடைகிறது என்கிற வாதம் எந்த வகையைக் கொண்டு பார்க்கமுடியும்? இதுதான் தமிழ் அரசியல் வாதிகளின் மரபு என எண்ணும் அளவுக்கு த.தே.கூ. நடந்துகொள்கிறது என்றே தெரிகிறது.

இத்தகைய பின்னணியில் ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகள் பற்றிப் பேரம் பேசக் கூடிய நிலை இலங்கையிலோ இந்தியாவிலோ எவருக்கும் சாத்தியப் படாத நிலை உருவாக்கப்பட்டு விடும். அதாவது தமிழினத்தின் பூரண சரணாகதியும் இராணுவ ஆட்சி அடக்கு முறையும் தமிழ் மக்களின் தலைவிதியாக தொடரப் போகிறது. தாயகம் தேசியம் தன்னாட்சி சுய நிர்ணயம் என்பது தொடர்ச்சியான நிலப்பரப்போ தமிழ் மக்கட் பரம்பலோ இல்லாது கனவாகிப் போய்விடும்.

இந்நிலையில் புகலிடத் தமிழரின் அடுத்த அரசியல் நடவடிக்கையான நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றுதான் இலங்கை இந்திய அரசுகளின் தாக்குதல் இலக்கு என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இப்போதைக்கு ஈழத் தமிழரையும் தமிழ் நாட்டுத் தமிழீழ உணர்வாளர்களையும் தற்காலிகமாக ஆசுவாசப் படுத்தும் வேலையில் இந்திய மத்திய மாநில அரசுகள் ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வு பற்றிய செய்திகள் வெகு அக்கரையாக அன்றாடம் வெளிவந்த வண்ணம் உள்ளன.

* இத்தகைய கற்பனைகளுக்கு வலுவூட்டவே த.தே.கூ. புது டில்லியில் பணிமனை அமைப்பது பற்றிய செய்திகள் பார்க்கப்பட வேண்டி உள்ளது. தமிழீழ மக்களால் தெரிவு செய்யப்படும் ஆயினும் த.தே.கூ. புது டில்லியின் கட்டப்பாட்டுக்குள் இயங்குவது புலத்தில் தமிழீழ மக்கள் முன்னெடுக்கும் நாடு கடந்த அரசுக் கோரிக்கையை சர்வதேச அரசியலில் மிகப் பெரும் பாதகமான பின் விளைவுகளையே ஏற்படுத்தும். தனித் தமிழ் ஈழம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்த சுவாதீனமற்ற தெரிவு என சர்வதேச அரங்கில் இலங்கை இந்திய அரசுகள் செய்த பிரச்சாரத்தின் விளைவே தமிழீழ விடுமதலைப் புலிகளுக்கும் தமிழினத்துக்கும் ஏற்பட்ட மிகப் பெரும் பின்னடைவுக்கும் அழிவுக்கும் காரணமாக அமைந்தது.

* நாடு கடந்த அரசுக் தமிழீழ அரசுக் கோரிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகளின் நாட்டைப் பிரிக்கும் நாசகார நடவடிக்கை என இலங்கை இந்திய அரசுகள் பிரச்சாரப் படுத்துகின்றன. இத்தகைய பிரச்சாரத்துக்கு த.தே.கூ. முழுமையான பலம் மிக்க ஆயுதமாகப் பயன் படுத்தப்படும் என்பதில் எவருக்கும் சந்தேகம் வர முடியாது. அந்த வகையில் தமிழீழ மக்களின் நாடு கடந்த அரசு மூலமாகத் தொடரவுள்ள ஈழத் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய பயணம் முற்றாக முறியடிக்கப் பட்டு விடும். தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத் தமிழரின் எஞ்சியுள்ள ஒரே ஒரு வழியும் அடைக்கப் பட்டு ஈழத் தமிழின அழிப்பு முழுமை கண்டு விடும்.

தமிழினம் இப்பொழுதே த.தே.கூட்டமைப்பை எச்சரித்து நிலைமையைக் கட்டுப் படுத்தாது விட்டால் முழு இனத்தின் வருங்காலமும் முடிவற்ற அடிமைத் தளைக்கும் இனச் சுத்தி கரிப்புக்கும் உள்ளாகி ஒரே இனம் ஒரே தேசம் ஒரே மதம் என்ற பௌத்த சிங்கள தேசமாக தமிழினம் மாற்றப் பட்டுவிடும்.

அரசியல் விமர்சகர் த.எதிர்மன்னசிங்கம்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*