TamilSpy

பொழுது போக்கு இணையம்…

உயிர்த்தெழுவோம் தீர்மானம்

உயிர்த்தெழுவோம்
தீர்மானம்

தமிழீழ தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்து, சத்தியத்தின் சாட்சியாக நின்று எம்மை வழிகாட்டும் உயிர்ப்பூக்களாகிய மாவீரர்களின் தியாக வரலாறு மீதும், எமது கலங்கரை விளக்காகத் திகழும் பெருந்தலைவர் – தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீதும், எமது தாய்மண்ணாகிய தமிழீழ தாயகம் மீதும், தமிழ் மொழி மீதும் ஆணையிட்டு, புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களாகிய நாம், எமது அரசியல் வேணவாவை உலக சமூகத்திற்கு இடித்துரைக்கும் வண்ணம் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றுகின்றோம்:-

1. தலைமுறை தலைமுறையாக தமது வரலாற்று வாழ்விடமாக விளங்கிய தமிழீழ மண்ணை விட்டு ஆயுதமுனையில் எமது உறவுகளை சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றுவதற்கு உதவியும் இடமளித்தும், வதைமுகாம்களுக்குள் அவர்களை இட்டுச் சென்ற உலக வல்லரசுகளும், ஐக்கிய நாடுகள் சபையும், எமது உறவுகளை உடனடியாக பொறுப்பேற்று, அவர்களின் பாதுகாப்பையும், நலன்களையும், விடுதலையையும், உரிமைகளையும், மீள்குடியேற்றத்தையும் காலம் தாழ்த்தாது உறுதிசெய்யும் வகையில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம்.

2. சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள போராளிகளையும், அவர்களின் குடும்பங்களையும், மனிதநேயப் பணியாளர்களையும், ஏனைய பொதுமக்களையும், பன்னாட்டு மனிதநேய சட்டங்களுக்கும், போருக்குப் பின்னரான சமாதான நெறிமுறைகளுக்கு இசைவாகவும் உடனடியாக விடுதலை செய்து, அவர்களின் அமைதியான வாழ்விற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

3. கடந்த இரண்டரை ஆண்டுகால யுத்தத்தில், வன்னியில் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான எமது உறவுகளை கொன்றுகுவித்தும், படுகாயப்படுத்தியும், காணாமல் போனோராக்கியும், மேலும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான எமது உறவுகளை தமது வரலாற்று வாழ்விடங்களை விட்டு வேரோடு குடிபெயர்த்தியும், பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அழித்தும் – சிதைத்தும், வாழ்வாதாரத்தை முற்றாக இல்லாதொழித்தும், வரலாறு காணாத மிகப் பெரும் மனிதப் பேரவலத்தை தமிழீழ மண்ணில் தோற்றுவித்த சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் இனப்படுகொலைகளுக்கு எதிராக, போர்க்குற்ற வழக்குகளையும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களுக்கான வழக்குகளையும், இனஅழித்தொழிப்பிற்கு எதிரான வழக்குகளையும் தாக்கல் செய்து, சிங்கள ஆட்சியாளர்களை உலக அரங்கில் நீதியின் முன்னிறுத்தி தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்தை நாம் வேண்டி நிற்கின்றோம்.

4. ஈழத்தீவில் எமது வரலாற்றுத் தாயகமாக விளங்கும் தமிழீழ தாயக பூமியில், எமது தேசிய அடையாளத்தைப் பேணும் தன்னாட்சியுரிமையுடைய, சகல விதமான ஒடுக்குமுறைகளும் நீங்கிய சமதர்ம தமிழீழ தனியரசை நிறுவுவதற்கான எமது இலட்சிய உறுதியையும், வேட்கையையும் மீண்டுமொரு தடவை உலக சமூகத்திற்கு நாம் இடித்துரைக்கின்றோம்.

5. எமது தேச சுதந்திரப் போராட்டத்தையும், அரசியல் அபிலாசைகளையும் நசுக்கும் நோக்கத்துடன் முழுவீச்சுடன் எமது தேசத்தின் மீது அந்நிய நாட்டவரின் உதவியுடன் முழுப் படைவலிமையைப் பிரயோகித்து, எமது உறவுகளின் உயிர்களை பலியெடுத்த சிங்கள தேசத்துடன், ஈழத்தமிழர்களாகிய நாம் இனியும் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்ற மெய்யுண்மையை, உலக சமூகத்திற்கு இவ்வேளையில் நாம் மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

6. கிழக்குத் தீமோர், மொன்ரநிக்ரோ, கொசவோ போன்ற தேசங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, முழுமையான தன்னாட்சியுரிமையின் அடிப்படையில் அவர்களுக்கான தனியரசுகளை நிறுவிக் கொடுத்த உலக சமூகம், சிங்கள தேசத்துடன் தமிழீழ தேசம் இனியும் சமரசம் செய்துகொள்வது சாத்தியமில்லை என்ற மெய்யுண்மையைப் புரிந்துகொண்டு, தமிழீழ தேசத்தின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, பலஸ்தீனர்களுக்கு தனியரசை நிறுவிக் கொடுப்பதற்கு இணங்கியமை போன்று, தமிழீழ தனியரசை நிறுவுவதற்கு தேவையான அரசியல் – இராசதந்திர உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்று நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

7. தமிழீழ தேச விடுதலைக்காக தமது உயிரை காவலரணாக்கி, இத்தருணத்தில்கூட தமிழீழ தாயக பூமியில் எமக்காகவும், எமது தேச சுதந்திரத்திற்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து நிற்கும் எமது ஏகோபித்த பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்கி, பயங்கரவாத முத்திரையை அகற்றி, கடந்த போர்நிறுத்த காலப்பகுதியில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அரசியல் – இராசதந்திர அங்கீகாரத்தையும், சமதரப்பு நிலையையும் மீளளிக்குமாறு உலக சமூகத்தை நாம் வலியுறுத்துகின்றோம்.

8. எமது குருதியும், சதையுமாக விளங்கும் எமது உறவுகளாகிய தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழீழ மக்களாகிய நாமும் எவராலும் பிரிக்கப்பட முடியாதவர்கள் என்பதை இவ்வேளையில் நாம் நினைவூட்டுகின்றோம்.

9. மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே என்றென்றும் எங்களின் தேசியத் தலைவர் என்பதையும், அவரது இலட்சிய வழிகாட்டலில் நின்று நிச்சயம் எமது தேச சுதந்திரத்தை ஈட்டுவோம் என்பதையும், இவ்வேளையில் உலக சமூகத்திற்கு நாம் இடித்துரைக்கின்றோம்.

10. உலகரங்கில் தமிழன் என்ற அடையாளத்தை அளித்த, மாவீரர்களின் தியாகத்தில் உருவான புலிக்கொடியே தமிழீழ தேசியக் கொடி என்பதை மீண்டுமொரு தடவை உலக அரங்கில் நாம் உறுதிசெய்கின்றோம்.

11. உலக அரங்கில் அகதி என்றும், அந்நிய இனத்துக் குடிமகன் என்றும் அலைந்து திரியும் அவலத்தில் இருந்து விடுதலைபெற்று, எமது தமிழீழ தாயக பூமியில் தமிழீழத்தின் பூர்வீக குடிமக்களாக வாழ்வதற்கான எமது அசையா உறுதியையும் விருப்பையும், வேணவாவையும், மீண்டுமொரு தடவை நாம் வெளிப்படுத்துகின்றோம்.

12. எமது அரசியல் உரிமைகளையும், அரசியல் சுதந்திரத்தையும், தன்னாட்சியுரிமையையும் வென்றெடுப்பதற்கும், தமிழீழ தனியரசை நிறுவும் எமது இலட்சியப் பயணத்தில் எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும், இடையூறுகளை எதிர்கொண்டாலும், பின்னடைவுகளை சந்தித்தாலும், தமிழீழ தாயக மண்ணில் இறுதி வரை இலட்சிய உறுதி தளராது, எம்தேசத்தை மீட்பதற்கும் நம் தமிழீழத் தேசியத் தலைவர் காட்டிய பாதையில் பயணித்து அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நமது மண்ணை மீட்டெடுக்க, புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களாகிய நாம் எமது பூரண ஆதரவை நல்கி என்றும் உதவி நிற்போம் என்பதையும், இவ்வேளையில் உலக சமூகத்திற்கு நினைவூட்டுகின்றோம்.

||தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்||

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*