TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆளும்கட்சிக்குக் கிடைக்குமா?

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் ஏற்கனவே அரசியல்கட்சிகள் இறங்கி விட்டன. இந்தத் தேர்தல் ஒரு வகையில் முக்கியமானதொன்றாக அமையப் போகிறது. காரணம் என்னவென்றால,; இந்தத் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. அதேபோல ஆளும்கட்சியும்; அரசியலமைப்பைத் திருத்தப் போவதாக கூறிவந்துள்ளது.

சிறுபான்மையினருக்கு உரிமைகளை வழங்குவதற்கு அரசியலமைப்பைத் திருத்துவது அவசியம் என்றும் அதைச் செய்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம் என்பதும் அரசாங்கத்தின் வாதம். ஏற்கனவே மாகாணசபைத் தேர்தல்களில் கிடைத்த வாக்குகளை கொண்டு- தமக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மை பலமே கிடைத்து விடும் என்று ஆளும்கட்சியின் அமைச்சர்கள் பலரும் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது அவர்களின் சுருதி சற்று மாறத் தொடங்கியுள்ளது. இதற்குக் காரணம், ஜனாதிபதித் தேர்தலில் ஆளும்கட்சி வேட்பாளருக்கு 57.88 வீத வாக்குகளே கிடைத்தது தான். சரத் பொன்சேகாவுக்கு 40.15 வீத வாக்குகள் கிடைத்திருந்தன.

இதே கணக்கில் பொதுத்தேர்தலிலும் வாக்குகள் கிடைத்தால் அது மூன்றில் இருண்டு பெரும்பான்மை பலம் ஆளும்கட்சிக்குக் கிடைக்காது. இது முக்கியமானதொரு விடயம். ஆளும்கட்சி இந்தப் பொதுத்தேர்தலில் குறைந்தது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் குறியாக உள்ளது. அதனால் தான் அது சகல வழிகளிலும் நெருக்கமான போட்டியை எதிர்க்கட்சிகளுக்கு கொடுப்பதற்கு முனைகிறது.

ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் பார்த்தால் ஆளும்கட்சிக்கு 131 ஆசனங்கள் மட்டுமே கிடைக்கும். ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்தைவிட எதிர்க்கட்சிகளுக்கு வாக்குகள் குறைந்தால் ஆகக் கூடியது 138 ஆசனங்கள் கிடைக்கும் என்பது அரசதரப்பின் கணிப்பு. இதை வேறெவரும் சொல்லவில்லை. அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவே கூறியிருக்கிறார். இந்த வகையில் பார்க்கும் போது 138 ஆசனங்கள் கிடைத்தாலும் ஆளும்கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு 12 ஆசனங்கள் தேவைப்படும்.

சில மாதங்களுக்கு முந்திய கணிப்புகள்- நம்பிக்கைகள் அனைத்துமே ஆளும்கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கலாம் என்பதாகவே இருந்து வந்தது. ஆனால் இன்று நிலைமை மாறிப் போயிருயிருக்கிறது. ஆளும்கட்சிக்கு பொதுத்தேர்தலில் 138 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தால் அது அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு எதிரணியின் ஆதரவைப் பெற வேண்டியிருக்கும். ஆனால், அதற்கு அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டிய தேவை இருப்பது முக்கியமான பிரச்சினை. அதேவேளை எதிர்க்கட்சிகள் அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால் அதற்கு அரசதரப்பு இணங்க வேண்டியிருக்கும். ஆனால் அடுத்த ஏழு வருடங்களுக்கு இந்தப் பதவியில் இருக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ள மகிந்த ராஜபக்ஸ தனது நிறைவேற்று அதிகாரத்தை இழப்பதற்கு ஒரு போதும் விரும்பமாட்டார். இது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற எதிரணியின் ஆதரவைப் பெறுவதற்குத் தடையாக அமையும்.

* இந்தக் கட்டத்தில் அரசாங்கத்துக்கு, தனித்துப் போட்டியிடும் சிறுபான்மைக் கட்சியினரின் தயவை நாடுவதை விட வேறேதும் வழி இருக்க முடியாது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தத் தேர்தலில் குறைந்தது 15 ஆசனங்களாவது கிடைக்குமானால் அது முக்கியமான சக்தியாக உருவெடுக்கும். அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி;ன் பேரம் பேசும் சக்தியையும் அதிகப்படுத்துவதாகவும் அமையும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த வேறெந்தக் கட்சியாலும் குறைந்தது 15 ஆசனங்களைப் பெறுவது இயலாத காரியம் என்பது வெளிப்படை. காரணம் என்னவெனில் ஈபிடிபியின் செல்வாக்குப் பரப்பு ஆசனங்களைப் பெறுவதற்கேற்ற வகையில் கிழக்கில் பலமாக இல்லை. புளொட்டுக்கு கிழக்கிலும் யாழ்ப்பாணத்திலும் அவ்வளவு ஆதரவில்லை. பிள்ளையானுக்கு வடக்கில் தளம் கிடையாது. முஸ்லிம் காங்கிரசுக்குக் கூட குறைந்தது 15 ஆசனங்களை வெல்கின்ற அளவு வாக்கு வங்கி இல்லை. எனவே இந்த வாய்ப்பு கூட்டமைப்புக்கு மட்டுமே இருக்கும்.

* ஆனால் கூட்டமைப்பு குறைந்தது 15 ஆசனங்களையாவது வெற்றி பெறுவது மிகப் பெரிய சவாலாகவே இருக்கும். அதேவேளை, அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவது அதன் ஆகக் கூடிய வேலைத்திட்டமாகத் தெரிகிறது. அரசாங்கத்தின் இந்த முயற்சியை முறியடிப்பதாயின் எதிர்க்கட்சிகள ஒன்றிணைவது அவசியமாக இருக்கும். தனித்தனியாகப் போட்டியிட முனைந்தால் ஜேவிபியால் ஆகக் கூடியது பத்து ஆசனங்களைக் கூட வெல்ல முடியுமா என்பது சந்தேகம் தான். ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் அமைக்கப்பட்டது போன்றதொரு கூட்டமைப்பை உருவாக்கும் போது அது கணிசமான வாக்குகளை உள்வாங்கிக் கொள்வதற்கு வசதியாக அமையும்.

அதைவிட தேசியப்பட்டியல் ஆசனங்களை பகிர்ந்து கொள்வதிலும் அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும். 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் கூட்டமைப்பினால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டபோது- சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடலாம் என்றே பலரும் அபிப்பிராயம் தெரிவித்திருந்தனர். ஆனால் தேசியப்பட்டியல் ஆசனத்துக்காகவே தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடும் முடிவு எடுக்கப்பட்டது. அதை சில கட்சிகள் விரும்பாத போதும் பின்னர் தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்த போது தான் அவர்களுக்கே அதன் பலம் புரிந்தது. அதேபோலவே இப்போது வெற்றிலைச் சின்னத்தில் நாடு முழுவதிலும் வேட்பாளர்களை நிறுத்தி தேசியப்பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றும் முனைப்பில் ஆளும்கட்சி ஈடுபட்டுள்ளது. இதனால் தான் ஈபிடிபி, புளொட், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற கட்சிகளை தமது அணிக்குள் ஒரே பட்டியலில் போட்;டியிட வைக்க அரசாங்கம் முனைகிறது.

வேட்பாளர்கள் தெரிவு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்வதற்கும் அது தயாராகவே இருக்கிறது. ஆனால் வெற்றிலையில் போட்டியிட வேண்டும் என்பதே அதன் ஒரே நிபந்தனை. இப்படிப் போட்டியிடும் போது தேசியப்பட்டியல் ஆசனங்களை பெருமளவில் கைப்பற்ற முடியும். இது அரசின் வியூகம்.

எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட முனைந்தால் அது தேசியப்பட்டியலில் ஆசனங்களை பெறுவது குறைந்து விடும்;. வரும் பொதுத்தேர்தலில் ஆளும்கட்சியைப் பொறுத்தவரையில் ஆட்சியைரப் பிடிப்பது என்பதைவிட மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பெறுவதே அதன் இலக்காக இருக்கப் போகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கோ இது ஆட்சியைப பிடிப்பதற்கான போட்டியாக அமைந்துள்ளது.

கொழும்பிலிருந்து ஹரிகரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*