TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தியாகமும் சுயநலம் இன்றிய பொதுநலம் பேணும் தலைமை

தியாகமும் சுயநலம் இன்றிய பொதுநலம் பேணும் தலைமை வேண்டும் என ஏங்கும் தமிழினம்?

இலங்கையின் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அறுதிப் பெரும்பாண்மை பெறுவது அல்லது குறைந்தது சாதாரண பெரும்பான்மையையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் ராஜபக்ஸக்கள் கருத்தாக இருக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றிற்கு இடையில் பாரிய வேறுபாடு உண்டு. நாடாளுமண்றத் தேர்தல் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டது. 1978ஆம் அண்டு ஜே.ஆர் ஜெயவர்த்தனா ஏற்படுத்திய இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பில் கொண்டு வரப்பட்ட இந்த முறைமையினால் எந்தக் கட்சியும் தனித்து அறுதிப் பெரும்பான்மையை நாடாளுமன்றில் பெற்றுக் கொள்ள முடியாது. அந்த வகையில் ஜேஆரின் காலத்தில் மட்டுமே அறுதிப் பெரும்பான்மை கொண்ட அரசாங்கம் ஆட்சியில் இருந்தது.

அதன் பின் வந்த பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்திலோ அல்லது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் ஆட்சிக் காலத்திலோ இப்போதைய மகிந்தவின் காலத்திலோ கூட்டமைப்புக் கட்சிகளே அரசாங்கத்தை அமைத்திருந்தன.

ஆனால் தமது இரண்டாவது பதவிக் காலத்தில் நாடாளுமன்றின் துணையுடன் நினைத்தவற்றையெல்லாம் நடத்தி முடிப்பதற்கான ஒரு களத்தை அமைப்பதில் ராஜபக்ஸக்கள் கங்கணம் கட்டி நிற்கிறார்கள்.

அதற்கான அனைத்து நகர்வுகளும் மகிந்தவின் அரசியல் மூளை எனக் கருதப்படும் பசில் ராஜபக்ஸவினால் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

ஏற்கனவே 2005 ஆம் அண்டில் ஆட்சிப் பீடம் ஏறிய ராஜபக்ஸக்கள் இலங்கையில் பலகட்சி ஆட்சிமுறை இருப்பதனை விரும்பவில்லை. இது குறித்து ஏற்கனவே கருத்து வெளியிட்டு இருந்த மகிந்தவின் இராணுவ மூளையாக கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஸ இலங்கையில் இரண்டு கட்சிகள் மட்டும் இருந்தால் போதும் ஏனைய கட்சிகள் தேவையில்லை எனக் கூறியிருந்தார். அத்துடன் இனரீதியான மதரீதியான மொழிசார்ந்த பெயர்களை அல்லது பிரிவினையை வலியுறுத்தும் பெயர்களைக் கொண்ட கட்சிகள் தேர்தல் செயலகத்தில் பதிய முடியாது என்ற சட்டத்தையும் ராஜபக்ஸக்கள் கொண்டுவர முனைந்து நீதிமன்றத்தில் தோல்வி கண்டனர். எனினும் சிறிய மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளை அழித்தொழிப்பதில் ஆட்சியாளர்களின் வியூகங்கள் தொடர்கின்றன. அதில் கணிசமான வெற்றியையும் ஆட்சியாளர்களான ராஜபக்ஸக்கள் பெற்றுக்கொண்டனர்.

நாட்டின் பாரம்பரிய கட்சியாகவும் சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமராக இருந்த டி.எஸ் சேனநாயக்காவினால் தோற்றுவிக்கப்பட்டு டட்லிசேனநாயக்கா, சேர்ஜோன் கொத்தலாவல, யூனிய றிச்சாட் ஜெயவர்த்தனே,பிரேமதாஸா இறுதியில் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் வழிநடத்தப்பட்டு வந்த ஐக்கியதேசியக் கட்சியினை பலவீனமடையச் செய்வதில் ராஜபக்ஸக்கள் வெற்றி பெற்றனர். இலங்கையின் பலம்பொருந்திய கட்சி எனவும் எக்காலத்திலும் நிரந்தர வாக்கு வங்கியைக் கொண்ட கட்சியெனவும் கருதப்பட்ட ஐக்கியதேசியக் கட்சியில் இருந்து முதலில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பின்னர் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ராஜபக்ஸக்கள் அள்ளி எடுத்தனர்.

முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் இருந்து 7 வரையான நாடாளுமண்ற உறுப்பினர்களை பிரித்தெடுத்தனர். எவராலும் பிரிக்க முடியாத இரும்புக் கட்சியென கருதப்பட்ட ஜே.வீ.பீக் கட்சியை அதன் தூண் எனக் கருதப்பட்ட விமல்வீரவன்ச தலமையில் 10 பேருடன் தூக்கி எடுத்தனர்.

தமது அரசாங்கத்துடன் இணைந்திருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மலையக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பேரியல் தலமையிலான கட்சிகளைக் கூட பலவீனப்படுத்த உதிரிகளாக, பலரை அரசாங்கத்துடன் ராஜபக்ஸக்கள் இணைத்துக் கொண்டனர். குறிப்பாக கிழக்கில் கருணாவும் பிள்ளையானும் அம்பாறையில் இனியபாரதியும் இணைந்திருக்கக் கூடாது என்பதில் அவதானமாக இருந்த ராஜபக்ஸக்கள் அவர்களை கூறுபோட்டு ஒருவருக்கு ஒருவரை எதிரிகளாக்கினர்.

இவற்றுடன் அவர்கள் ஓய்ந்துவிடவில்லை. ஜனாதிபதி தேர்தல் நெருங்கிய காலத்தில் எதிர்க்ட்சிகளின் கூட்டமைப்பை தகர்ப்பதற்கு அரச ஊடகங்களை சிறப்பாகப் பயன்படுத்தியதுடன் பல முக்கியஸ்த்தர்களை மிரட்டியும் பணம் கொடுத்தும் தம்பக்கம் இணைத்தும் கொண்டனர்.

இப்போ எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பு மீண்டும் ஒருமித்து நாடாளுமண்றத் தேர்தலில் களமிறங்குவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் முடுக்கிவிட்டுள்ளனர்.

அதற்காக பிரிதாளும் தந்திரத்தைக் கையாள்வதுடன் கடும்போக்குவாத சிங்களவர்களின் வாக்குகள் பிரிந்து செல்வதனைத் தடுக்க ஜெனரல் சரத் பொன்சோகாவை சிறையில் அடைத்து நாட்டைக் கவிழ்க்க சதி செய்தார் என்ற குற்றச்சாட்டை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இவை ஒருபுறம் அரங்கேற மே 18ன் பின் தமது பிடியில் சிக்கி செய்வதறியாது தவிக்கும் போராளிகளையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணத்தையும் பலாத்காரமாக தமக்குச் சார்பான பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

* விடுதலைப்புலிகள் கோலோச்சிய காலத்தில் அவர்களுக்கு உதவி புரிந்தனர் அல்லது அவர்களுடன் பணியாற்றினர் என்ற காரணத்தால் அடையாளப்படுத்தப்பட்டோரையும் பயமுறுத்தி தம்முடைய ஆதரவுசக்த்திகளாக்கினர். அதனை விடவும் எக்காலத்திலும் அதிகாரத் தரப்பினருடனேயே ஒட்டியிருக்க வேண்டும் என்ற கோட்பாடு உடையோர் மே 18ன் பின்னர் அரச அதரவு சக்திகளாக உருவெடுத்துள்ளனர். இதில் முக்கியமானவர் வெளிச்சம் கருணாகரன். இப்போ யாழ்ப்பாணத்தில் அரச ஆதரவு பெற்ற முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் பிரமுகராக மாறி பலரைக் கட்டாயப்படுத்துபவராக மாறியுள்ளார்.

* அண்மையில் கூட வடமராட்சி மீனவர் சமாகத்தின் முக்கியஸ்த்தர்களை யாழ்ப்பாணம் அழைத்த இந்தக் கட்சியின் தலைவரும் மற்றும் தற்போது புலிகளுக்கு எதிரான முக்கிய பிரமுகராக மாறியுள்ள வெளிச்சம் கருணாகரன் அவர்களை நிர்ப்பந்தித்து தமக்கு சார்பான அமைப்புகளை உருவாக்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இவை தவிரவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பல கூறுகளாகப் பிரிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்ட ராஜபக்ஸக்கள் அதில் வெளிப்படையாக வெற்றி பெறாவிடினும் இப்போ இக் கூட்டமைப்பில் சிலரை தம்முடன் மென்மைப் போக்கை கடைப்பிடிப்பவர்களாக மாற்றி உள்ளனர். இதனை மகிந்தராஜபக்ஸவே ஒரு பொதுக் கூட்டத்தில் கூறும்போது கூட்டமைப்பில் உள்ள பலர் தமக்கு ஆதரவு அளிப்பவர்களாக உள்ளனர். எனினும் அதனை அவர்கள் வெளிப்படுத்த முடியாத இக்கட்டான சூழலில் உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இப்போ நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வர இருக்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்த்தர்களாக இருந்து மே 18ன் முன்பும்,பின்பும் படையினரின் பிடியில் சிக்கி உள்ள பலரை கட்டாயப்படுத்தியும் அச்சுறுத்தியும் தமது வேலைகளுக்காக வடகிழக்கில் மறைமுகமாக இறக்கியிருப்பதாகவும் அங்கிருக்கும் பலரும் தெரிவிக்கிறார்கள்.

கடந்த 3 தசாப்பத கால இலங்கையின் அரசியலில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அற்றநிலையில் இடம்பெற்ற உள்ளுராட்சி மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் அரசாங்கமும் அரச ஆதரவுக் கட்சிகளும் வடகிழக்கில் வாங்கிய அடியின் பின் இப்போ நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ஸக்கள் புதிய வியூகத்தை அமைக்கத் தொடங்கியுள்ளனர். இதன்படி கிழக்கில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளையும் வடக்கில் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பிகட்சியினரையும் தனித்து கேட்பதற்கு அனுமதித்துள்ளனர். வன்னியில் புளொட் தனித்தே போட்டியிட்டு வந்ததனால் அதுவும் அவர்களுக்கு இலாபமாகவே அமையும் என எதிர்பார்க்கின்றனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ராஸபக்ஸக்களின் வியூகம் இவைதான் என எவரும் குறைத்து மதிப்பிட்டு விடவேண்டாம். இவற்றிற்கும் அப்பால் யாழ்ப்பாணம், வன்னி மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல சுயேட்ச்சைக் குழுக்களையும் அவர்கள் களமிறக்குகின்றனர். இதில் பல சுயேட்சைக் குழுக்களில் புலம்பெயர்நாடுகளில் இருந்து சென்ற பல பிரமுகர்களும் உள்நாட்டில் விடுதலைப் போராட்டத்துக்கு நெருக்கமாக அல்லது ஆதரவாளர்களாக இருந்தவர்களும் உள்ளடங்குவதாக தெரிய வருகிறது. உதாரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் விவசாய அமைப்புக்கள் மீனவ அமைப்புக்கள் என பல புதிய அமைப்புகளை உருவாக்கி அவர்களை கூட்டமைப்பின் பின் செல்லாது நீங்கள் தனித்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று உங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யுங்கள் என பசில்ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இவை தவிர அரசாங்கத்தினால் சிறீ ரெலோ, ஈரோஸ் என்பனவும் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளன. ஈழவர் ஜனநாயக முன்னணி என்கின்ற ஈரோஸ் அமைப்பு வடக்கு கிழக்கிலும் மலையகத்தின் இரு மாவட்டங்களிலும் போட்டியிடப் போவதாக மட்டக்களப்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் அறிவித்துள்ளனர். அம்பாறை, யாழ்ப்பாணம். வன்னி, திருகோணமலை, நுவரெலியா, பதுளை ஆகிய 6 மாவட்டங்களிலும் தனித்தும் மட்டக்களப்பில் கிழக்கு ஜனநாயகமுன்னணியுடன் இணைந்தும் போட்டியிடவுள்ளதாக கட்சியின் செயலாளர் ராஜநாதன் பிரபாகரன் இதனை அறிவித்துள்ளார்.

அதேவேளை வன்னி மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக சரவணபவானந்தன் ஜெயநாதன் நிறுத்தப்படவிருப்பதாகவும் யாழ் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக கட்சியின் தவிசாளர் அருளர் அருட்பிரகாசம் நிறுத்தப்படவிருப்பதாகவும் ஈரோஸ் அறிவித்துள்ளது.

ஆக விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அற்ற நாடாளுமன்ற தேர்தலில் வடகிழக்கில் சுயேட்சைகளாகவும் தனிக் கட்சிகளாகவும் கூட்டுக் கட்சிகளாகவும் தமிழர்களையே மோதவிட்டு வாக்குகளை சிதறடித்து எந்த ஒரு தமிழ்க் கட்சியையும் தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சியாக உருவாக விடாமல் தடுப்பதில் ராஜபக்ஸக்கள் முனைகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் தேர்வு செய்யப்படும் தமிழ்த் தலைமைகளுடன் தீர்வு பற்றி பேசுவேன் என அண்மையில் மகிந்த அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பிற்கு ஏற்றவாறு எந்த ஒரு தமிழ்க் கட்சியும் தனித்து பெரும்பான்மை ஆசனங்களை நாடாளுமன்றில் பெற்றுக் கொள்ளாமல் தடுப்பதற்கான முயற்சிகளை இப்போ ராஜபக்ஸக்கள் முடுக்கி விட்டுள்ளனர்.

இதேபோன்றதொரு நிலமையைத்தான் முஸ்லீம் தரப்பிலும் ஏற்படுத்துவதற்கு ராஸபக்ஸக்கள் பல குழுக்களையும் கட்சிகளையும் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஊக்குவித்துள்ளனர். அதன் மூலம் முஸ்லீகளின் பேரம் பேசும் வலுவையும் இழக்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

* தமது இலக்கை அடைவதற்காக தமது பகைவர்களான சிறைப்பிடிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், விடுதலைப்புலிகளுக்கும்,போராட்டத்துக்கும் துரோகம் இழைத்தவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களுடன் கூட்டுக்களை ஏற்படுத்தி ராஜபக்ஸக்களால் ஒவ்வொரு விடயங்களிலும் வெற்றி பெற முடியும் என்றால் ஏன் தமிழ்பேசும் மக்களால் மட்டும் முடியாது?

* இந்த நிலமையை தமிழ்மக்களும் முஸ்லீம் மக்களும் அவர்களின் தலைமைகளாக தம்மைக் காட்டிக்கொள்பவர்களும் சரியாக புரிந்து கொள்ளாதவிடத்து தமிழ்பேசும் சமூகம் இன்னும் அரை நூற்றாண்டுக்கு பேரழிவைச் சந்திப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.

அதனால் கடந்தகாலக் கசப்புணர்வுகளை மறந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லீம் காங்கிரசும் உயரிய தியாகங்களைப் புரிந்தாயினும் இணக்கப்பட்டுக்கு வரக்கூடிய அனைத்து சக்த்திகளையும் ஒருங்கிணைத்து புரிந்துணர்வுள்ள பரந்துபட்ட அணிகளை வடகிழக்கில் உருவாக்க வேண்டும் கொழும்பிலும் மலையகத்திலும் இணக்கப்பட்டுக்கு வரக்கூடிய சக்த்திகளுடன் புரிந்துணர்வைக் கட்டி எழுப்பி அவர்களுக்கு நிபந்தனையற்ற முழு ஆதரவை வழங்க வேண்டும். தமிழ் பேசும் மக்கள் ஐதாக வாழும் தெற்கின் ஏனைய பகுதிகளில் முற்போகான சிங்கள சக்த்திகளுக்கு அதரவை வழங்க வேண்டும்.

உண்மையில் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக இதயசுத்தியுடனும் அர்பணிப்புடனும் பணியாற்றுபவர்களை இயன்றளவு இனம் கண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்களை வழங்க வேண்டும்.

இதற்காக பலர் தமது ஆசனங்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுப்பதற்குக் கூட தயாராக இருக்க வேண்டும். உதாரணமாக ஜே.வி.பி.யில் அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க, செயலாளர் ரில்வின் சில்வா, உள்ளிட்ட வெளியில் பெயர்கள் வெளிப்படாத பல உயர்மட்ட அல்லது மத்திய குழு உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதில்லை. ஆனால் கட்சியில் பலம்பொருந்தியவர்களாக கட்சியை வழிநடத்துபவர்களாக அவர்கள் தொழிற்படுகின்றனர்.

* ஆக மூன்று தசாப்பத கால ஆயுதப் போராட்டம் உறங்கு நிலைக்கு தள்ளப்பட்டு உள்ள இந்தக் காலக்கட்டத்தில் அரசியல் சாணக்கியமும் ராஜதந்திர நகர்வும் பேரம் பேசலுக்கான வலுவை அதிகரிப்பதுமே மிகவும் இன்றியமையாதது. அதற்கு தொலைநோக்குடன் கூடிய அர்ப்பணிப்பும் தியாகமும் சுயநலம் இன்றிய பொதுநலமும் வேண்டும் அதற்குத் தமிழ்பேசும் தலைமைகள் தயாரா?

செ.நடராஜன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*