TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழ்த் தே.கூட்டமைப்பினது வரலாறும், தவறுகளும்

த.தே.கூட்டமைப்பினது வரலாறும், தவறுகளும், படிப்பினைகளும்…..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் நிலவிவந்த நீண்டகாலக் கொந்தளிப்பின் ஒரு பகுதி ஏறக்குறைய இப்போது முடிவுக்கு வந்துள்ளது. எல்லோரும் எதிர்பார்த்ததைப் போல அதன் முடிவில்லாத முரண்கள் முற்றி இப்போது உடைவு நிலையை எட்டியுள்ளன.

கூட்டமைப்பில் அங்கம் வகித்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும் பகுதியினரை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலையொட்டி வெளியேற்றுவதன் மூலம் இந்தக் கொந்தளிப்பை முடிவுக்குக் கொண்டு வரலாம் என அதன் தலைமைப் பீடம் கருதியுள்ளது. அதன்படியே அமைப்பின் தலைமைப் பீடம் (சம்பந்தன் – சுரேஸ் பிரேமச்சந்திரன் அணி) ‘அதன் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்’ என்று தெரிவித்துள்ளது.

ஆனால், இவ்வாறு இவர்களை சம்பந்தன் அணியினர் வெளியேற்றுவதன் மூலம் கூட்டமைப்பு அதன் அர்த்தத்தை இழக்கவுள்ளது என்பதுடன், அதன் உடைவுக்கும் வழியேற்படுத்தியிருக்கிறது. ‘அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நிச்சயம் கூட்டமைப்பு உடைந்து விடும்’ என்று பலராலும் எதிர்வு கூறப்பட்டு வந்தது. அதுவே இப்போது நடந்திருக்கிறது. இதில் பெரும் ஆச்சரியங்கள் எதுவும் இல்லை. எனினும் மறுபடியும் ‘தமிழ் மக்கள் இன்னும் ஒரு காலப்பகுதியை இன்னொரு புதிய அணியில் செலவழிக்கப் போகின்றார்கள் என்பதே இங்கே கவலைக்குரியதும் அவதானத்துக்குரியதுமாகும்.

இப்போதே பெரும் பின்னடைவுகள், பலவீனங்களின் மத்தியிலிருக்கும் தமிழ் பேசும் மக்கள் இன்னும் ஒரு குறிப்பிட்ட காலத்தை, புதிய தேர்தலுடன் உருவாகவுள்ள ஒரு காலப்பகுதியை, மயக்கங்கள், மாயைகளில் செலவழிக்க வேண்டிவருமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (அது உடைவு நிலையில் இருக்கும் போது அதை இவ்வாறு அழைப்பது பொருத்தமானதா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில் உண்மையில் கூட்டமைப்பை உருவாக்கிய சக்திகளுக்கு, அதனுடன் இணைந்து நின்று பங்காற்றியவர்களுக்குத்தான் தெரியும் கூட்டமைப்பை யார் யார், எப்படி உருவாக்கினார்கள், என்ன நோக்கத்துக்காக அதை உருவாக்கினார்கள்? என்பதெல்லாம். இப்போது கூட்டமைப்பின் தலைமைப் பீடமாக தம்மைப் பிரகடனம் செய்யவுள்ளதாக எதிர்பார்க்கின்ற திரு.சம்பந்தன் அணியினர் கூட்டமைப்பை உரித்துக் கொண்டாட முடியாத நிலையில்தான் இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது). என்பதை யார் உரித்துக் கொண்டாடவுள்ளனர் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் பலமாக இருந்தபோது அன்றைய அரசியற் சூழலில் ஒரு அபிப்பிராயத்தை தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துவோரும் ஆதரிப்போரும் புலிகளிடமும் பொது வெளியிலும் முன்வைத்தனர். அதாவது ‘வெளியேயுள்ள அரசியற் சக்திகளை ஒருங்கிணைத்து, ஒரு முகப்படுத்திச் செயற்படுவது பொருத்தமானது’ என்ற அபிப்பிராயம் அது. தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் பலரால் முன்வைக்கப்பட்ட இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்ட விடுதலைப்புலிகள் அதற்கான சம்மதத்தை அளித்ததன் பேரில் வெளியே இருந்த பல சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பலத்த இழுபறிகள், நம்பிக்கையின்மைகளின் மத்தியில் கட்டமைக்கப்பட்டதே கூட்டமைப்பு. ‘சரியான வேலைத் திட்டமும் சுயாதீனமும் இல்லாதபோது இந்தக் கூட்டமைப்பினால் எதையும் செய்யமுடியாது,

எனவே இதனால், எந்தப் பயனும் கிட்டப்போவதில்லை’ என்ற அபிப்பிராயம் அப்போதே இன்னொரு சாராரால் கூறப்பட்டது. என்றபோதும் இந்த முரண்கள் கால நடைமுறையில் மக்களின் நன்மைகருதி மருவி, ஒரு பொது இணக்கப்பாடு உருவாகும் என அப்போது கூறப்பட்டது. இறுதியில் இந்த நம்பிக்கையின்மையை முன்வைத்தவர்கள் சொன்னதே நடந்திருக்கிறது என்பதையும் இங்கே நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் கவலையோடு மனங்கொள்வது முக்கியம். ஏனெனில் இப்போது மறுபடியும் அத்தகையதொரு புதிய அணி அல்லது புதிய அணிகளின் காலம் உருவாகியுள்ளது.

* கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட கடந்த எட்டாண்டுகளில் அது எப்படிச் செயற்பட்டிருக்கிறது? உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை அது நிறைவேற்றியிருக்கிறதா என்று பரிசீலிக்க வேண்டியது இன்று ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகியிருக்கிறது. ஏனெனில், இந்த எட்டாண்டுகளில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி என்ற வகையில் கூட்டமைப்பினரை புலம் பெயர் மக்கள் கூட முழுதாக ஆதரித்தனர். ஒரு கட்டத்தில் கூட்டமைப்பினர் நாட்டில் இருப்பது பாதுகாப்பில்லாதது என்று சொல்லப்பட்டபோது அவர்களை தங்களிடம் அழைத்துப் பாதுகாத்தனர் புலம் பெயர் மக்கள். ‘என்னதான் குறைபாடுகள் இருந்தாலும் தமிழ்த் தேசியத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் தரப்பினர் இவர்கள்’ என்ற எண்ணமே புலம் பெயர் மக்களை இப்படி இவர்களை ஆதரிக்கத் தூண்டியது.

* ஆனால், புலம் பெயர் மக்கள் இவர்களை ஆதரித்த அளவுக்கும் பாதுகாத்த அளவுக்கும் கூட்டமைப்பினரோ, புலம் பெயர் மக்களின் உறவுகளான வன்னி மக்கள் பேரவலத்துக்குள் சிக்கியிருந்தபோதும் முகாம் வாழ்க்கையில் அல்லற்பட்டபோதும் எதுவும் செய்யவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதில் ‘இவர், அவர்’ என்ற பேதங்களிருக்கவில்லை என்பதையும் இங்கே நேர்மையாகப் பதிவு செய்ய வேண்டும். எனினும் தமிழ்த் தேசியத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த மாபெரும் குறைபாட்டையும் புலம் பெயர் மக்களும் தாயக மக்களும் மன்னித்திருந்தனர்.

ஆனால், இந்த மன்னிப்புகளைத் தமக்கான வாய்ப்பாகவும் தமக்கான பாதுகாப்பாகவும் கருதிக் கொண்டு தமது தனிப்பட்ட நலன்களின் அடிப்படையில் செயற்பட்ட கூட்டமைப்பின் தலைமைப் பீடம் இப்போது அதன் உச்சக்கட்டத்தக்கு வந்துள்ளது. அதாவது இந்தத் தனிப்பட்ட நலன்கள், தேசியத்தைப் பாழாக்கும் உச்சப்புள்ளியில் இன்று வந்து நிற்கின்றன. ‘இந்தத் தவறுகள் ஒரு தர்க்க பூர்வமான வளர்ச்சி நிலையில் இத்தகைய சரிவுகளை உண்டாக்கும்’ என்பது வரலாறு எமக்குத் திரும்பத் திரும்பச் சுட்டுகின்ற முக்கிய விசயமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது தவறுகளும் வரலாற்று படிப்பினைபோல் ஒரு புள்ளியில்தான் இன்று கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என்பதை வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இதேவேளை இந்தத் தவறுகளுக்கு இனிமேல் இரண்டு பட்டுள்ள அணிகளும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டப் போகிறார்கள். அல்லது ஒரு அணிமீது எல்லாப் பழிகளையும் சுமத்திவிட்டு, மற்றவர்கள் மக்களிடம் தாம் புனிதர்களைப் போல வந்து வாக்குகளைக் கேட்கப் போகிறார்கள். இவ்வாறு தம்மைப் புனிதப் படுத்திக் கொண்டு வாக்கு வேட்டைக்காக இறங்குவதில் இப்போது அதிக முன்னிலை வகிக்கப் போவது சம்பந்தன் – சுரேஸ் அணியினர்தான் என்பது நிலைமைகளை அவதானிக்கும் போது தெரிகிறது.

இதில் தமிழ்க் காங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரெலோவின் ஒரு பகுதியினரான சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, மற்றும் எப்போதும் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தி வந்த எந்தக் கட்சிகளையும் சாராத பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன், தங்கேஸ்வரி, கனகசபை, ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், சொலமன் சூ சிறில், சந்திரநேரு, சதாசிவம் கனகரத்தினம் போன்றவர்கள் இன்னொரு அணியாக வேறு தரப்புகளையும் இணைத்து கூட்டமைப்பைத் தம் வசப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் கூட்டமைப்பின் அடித்தளமான தமிழ்த்தேசியத்தை இவர்களே அதிகம் வலியுறுத்தி வந்தவர்கள். இதற்கான பழிவாங்கல் நடவடிக்கைகளே இப்போது நடந்து கொண்டிருப்பதாக நிலைமைகளை அவதானிப்போர் கூறுகின்றனர். உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கும் போது அதில் தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கின்ற, அந்த அடிப்படையை ஆதாரமாகக் கொண்டவர்களை மையப்படுத்தியே அது கட்டமைக்கப்பட்டது. இதற்காக இந்த மையக் கொள்கையைக் கொண்டவர்கள் இந்த அமைப்பினுள் உள்ளடக்கப்பட்டனர். இவர்கள் இதற்கு முன்னர் அரசாங்கத்தோடு நேரடியாக பக்கம் சாராதோராகவும் கட்சிகளில் இருந்தவர்களில் தமிழ்த் தேசியத்தை வெளிப்படையாகப் பேசிவந்தோராகவும்; இருந்தனர். அத்துடன் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தோராகவும் இருந்தனர்.

* குறிப்பாக செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், சதாசிவம் கனகரத்தினம், சந்திரநேரு, சொலமன் சூ சிறில் போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள். இதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, மாவை சேனாதிராஜா போன்றவர்களும் தீவிரமாகத் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி வந்தவர்கள். இதற்காக அவர்கள் கூட்டமைப்பினுள் சந்தித்த நெருக்கடிகள் ஏராளம். இதில் மாவை மீது அதிக நெருக்கடிகள் ஏற்படுத்தப்படவில்லை. என்றபோதும் அப்போது இந்த அணியினர் மீது எத்தகைய குற்றச்சாட்டுகளையும் மற்ற அணியினரால் முன்வைக்க முடியவில்லை.

இப்போதும் சம்பந்தன் தரப்பினரால் எத்தகைய குற்றச்சாட்டுகளையும் இவர்கள் மீது சுமத்திவிட முடியாது. காரணம் தனியே அரசாங்கத்தை எதிர்த்துக் கொண்டிருக்காமல், புதிய தந்திரோபாயங்களின் அடிப்படையில், தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பெறவேண்டும் என்பது இந்த அணியினரின் கருத்தாக இருந்து வருகிறது. அதாவது கடந்தகாலத்தைப் போல தனியே இந்தியாவின் மீது முழுதாக நம்பிக்கை வைப்பதோ, அரசாங்கத்தை முழுதாகப் பகைத்துக் கொள்வதோ, புலம்பெயர் மக்களினதும் தாயக மக்களினதும் மனஉணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறுவதோ பொருத்தமில்லை என இந்த அணியினர் தெரிவித்து வருகின்றனர். இதை ஏற்க மறுத்துவரும் சம்பந்தன் தரப்பினர், இந்த அணியினரை புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் பலவீனமாக்கும் நடவடிக்கையில் இவர்களை ஓரங்கட்டவும் முடியவில்லை. ஏனெனில் இவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, செல்வம் அடைக்கலநாதன் போன்ற சிலரைத் தவிர ஏனையவர்கள் எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யாமல், விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஆதரித்தவர்கள் என்ற அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள்.

இந்த இடத்தில் அக்காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் நடந்த விசயங்கள் தொடர்பாக எத்தகைய நடவடிக்கைகளை கிளிநொச்சி மேற்கொண்டது எனக் குறிப்பிடுவது பொருத்தமானதாகும். அப்போது கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் மீதும் சுரேஸ் பிரேமச்சந்திரன் மீதும் அளவுக்கதிகமான குற்றச்சாட்டுகளும் புகார்களும் சொல்லப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளின் ஊடகங்களில் (இணையங்கள் உட்பட) இந்த இருவருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதை இதை அவதானித்தோர் நன்கறிவர். இவர்கள் இருவரும் அளவுக்கதிகமாக அப்போதைய சந்திரிகா அரசின் பக்கம் சார்ந்திருந்தார்கள். மக்களின் பிரச்சினையைப் புரிந்து கொள்வதிலும் மக்களுடன் சேர்ந்திருப்பதிலும் இவர்கள் மாற்று அபிப்பிராயத்துடன், எட்டவே நின்றார்கள் என்பதும் இந்தக் குற்றச்சாட்டுகளில் முக்கியமானவையாக இருந்தன.

அத்துடன் எதற்கெடுத்தாலும் இந்தியாவையே இவர்கள் பக்கத்துணைக்கு அழைப்பதும் இந்தியாவைத் தவிர்த்து தம்மால் எதனையும் செய்ய முடியாது என்று கூறுவதும் இவர்களுடைய வழமையாக இருக்கிறது என்றும் இவர்களின் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது விடுதலைப்புலிகளுடனான இறுதிநாட்களிலும் கூட உள் மோதலாக இருந்துள்ளது. இதேவேளை தங்களைப் பற்றிய தவறான தகவல்களை புலிகளின் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் என கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், ஜெயானந்தமூர்த்தி, தங்கேஸ்வரி, அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, சந்திரநேரு சந்திரகாந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் மீது அதிருப்தியை வெளியிட்டு வந்தனர் சம்பந்தனும் சுரேஸ் பிரேமச்சந்திரனும்.

இவையெல்லாம் நாடறிந்த உண்மைகள். ஆக கூட்டமைப்பினுள் இந்த இரண்டு பட்ட நிலைமை தொடர்ந்தும் இருந்து கொண்டேயிருக்கிறது. பொதுவாக ‘சனங்களுக்குரிய பிரச்சினைகளைக் குறித்து அக்கறை செலுத்துவதற்கான உபாயங்களை வகுக்க வேண்டும்’ என ஒரு சாராரும் ‘அதைப் பற்றி இப்போது சிந்திப்பதற்கு நேரமில்லை, நாங்கள் இந்தியாவுடன் பேச வேண்டும், அரசாங்கத்தை மடக்க வேண்டும் என மறுசாராருமாகவே கூட்டமைப்பினர் இருக்கின்றனர். (இதுபற்றி – கூட்டமைப்பின் உள்மோதல்கள், உள்நிலைமைகள் பற்றி தனியாக அடுத்த கட்டுரை எழுதப்படுகிறது)

ஆகவே இத்தகைய போக்கை கட்டுப்படுத்தவும் சில இடங்களில் வழிப்படுத்தவும் கூட்டமைப்பினர் அடிக்கடி கிளிநொச்சிக்கு அழைக்கப்பட்டனர். சில சந்தர்ப்பங்களில் கடுமையான கட்டளைகள் கிளிநொச்சியில் பிறப்பிக்கப்பட்டதும் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளர்த்தத்தில் ஏற்கனவே பலவீனப்பட்டு விட்டது. என்றபடியால்தான் அது எந்தச் சந்தர்ப்பத்திலும் நடைமுறைப் பொருத்தமான, மக்களின் துயரங்களுக்கும் அபிலாசைகளுக்கும் பொருத்தமான, தீர்மானங்களை எடுக்கமுடியமல் தவறியது. இப்போது புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் புலிகளை ஆதரித்தோரும் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி வந்தோரும் வெளியேற்றப்படுவதற்கான முயற்சிகள் நடந்து விட்டன. இதை மிகச் சாதுரியமாக சம்பந்தன் சுரேஸ் அணியினர் நடத்திவிட்டனர். இது ஒன்றும் இரகசியமான சங்கதிகளுமல்ல.

தாயகக் கோட்பாடு, தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்ற கோரிக்கைகள் இனி மெல்ல மெல்லக் கைவிடப்படும் ஒரு பரிதாபகரமான நிலை உருவாகியிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஒரு மெல்லிய முழக்கம் நடக்கும். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்பதாக அது இருக்கும். ஆனால், அது பின்னர் மெல்ல அடங்கிவிடும். இதை வெளிச் சக்திகள் மிகக் கவனமாகக் கையாள்கின்றன. முதலில் தமிழரின் விடுதலைப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. இப்போது அதை ஆதரித்த தரப்புகள் முறியடிக்கப்படுகின்றன. ஆகவே, இப்போது புலம் பெயர்ந்த மக்கள் உள்ளிட்ட தாயக மக்கள் இது குறித்து, இந்த நிலைகுறித்து தீர்க்கமாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இது இன்று தவிர்க்க முடியாதது.

உமா தங்கேஸ்வரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*