TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழீழத்திற்கான புலத்து தமிழர்களின் ஆணை

தமிழீழத்திற்கான புலத்து தமிழர்களின் ஆணை சாதிக்கப்போவது என்ன?

இன்றுவரை புலத்து தமிழர்கள் வாழ்ந்துவரும் பல்வேறு நாடுகளில் தமிழீழ தனிநாட்டுக்கான மக்களாணையை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு நடத்தப்பட்டுவரும் தேர்தல்களும் அவற்றில் மக்களின் பங்களிப்பும் சர்வதேச அரசுகளினது கவனத்தை கவர்ந்துள்ளதுள்ளதுடன், சிறிலங்கா அரசையும் அச்சுறுத்த தொடங்கியுள்ள வேளையில், இவ்வாறான தேர்தல்களும் அவை சாதிக்கபோவது என்ன? என்ற வினாக்களும் அவசியமற்றவை தான்.

ஆனாலும் இவ்வாறான மக்களாணையை பற்றிய புரிதல் தமிழர்கள் மத்தியில் தெளிவாக கொண்டுசெல்லப்பட்டிருக்கிறதா என்பதும் அவ்வாறான மக்களாணை அவசியம் தானா என்பது பற்றிய தெளிதல் ஏற்பட்டுள்ளதா என்பதும் அவசியமானது. இன்னும் பல நாடுகளில் தமிழீழ தனியரசிற்கான மக்களாணைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சில முக்கிய விளக்கங்களை தருவது பொருத்தமானது என கருதுகின்றோம்.

அன்றைய தமிழ்க்கட்சிகளால், 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட, 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழீழ மக்களால் ஆதரவளிக்கப்பட்ட, வட்டுக்கோட்டை தீர்மானம் சொல்வது என்ன?

இலங்கைத்தீவில் வாழும் தமிழர்களுக்கு, தமிழீழ தனியரசே பொருத்தமான தீர்வென குறிப்பிட்டு அதற்கான மக்களாணையை அன்றைய பிரதான தமிழர் தரப்பான தமிழர் விடுதலைக் கூட்டணியால் தமிழ் மக்களிடம் கேட்கப்பட்டது. அதற்கான மக்களாணை அத்தேர்தலில் வழங்கப்பட்டுமிருந்தது.

ஆனாலும் குறித்த மக்களாணையை கருத்திற்கொள்ளாமல், தமிழ் மக்கள் மேல் இன ரீதியான ஒடுக்குமுறையை சிறிலங்கா அரசு கட்டவிழ்த்துவிட்டபோது, தமிழ் மக்களின் ஆணையை ஏற்ற தமிழீழ விடுதலை இயக்கங்கள் ஆயுத போராட்டத்தின் ஊடாகவே அதனை அடையமுடியும் என நம்பி போராட்டத்தில் குதித்தனர்.

அவ்வாறு பல்வேறு இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலை போராட்டத்தை, தொடர்ச்சியாக கொள்கை தவறாது முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும், சிறிலங்கா அரசினாலும் மற்றைய வல்லாதிக்க சக்திகளின் நேரடியான ஒத்துழைப்புடனும் 2009 ஆம் ஆண்டின் மே மாதத்தில் நிகழ்ந்த பேரழிவுடன் முடக்கப்பட்டது.

தமிழீழ நடைமுறை அரசு செயற்பட்டுவந்த காலத்தில் அதன் இறைமைக்கு அச்சுறுத்தல் எழுந்தபோது, சர்வதேச ரீதியாக விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்தி, சர்வதேசத்தின் தலையீட்டை வலியுறுத்தி தமிழர்களது தாயகம் மீதான போரை நிறுத்தவேண்டிய தேவை உணரப்பட்டிருந்தது.

அதற்கமைவாக புலத்து தமிழர்கள் வாழும் நாடுகளில், தமிழீழத்திற்கான ஆணையை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும், அதனூடாக சர்வதேச சமூகத்திற்கு எமது போராட்டத்தின் நியாயங்களை எடுத்துச் செல்லலாம் என உணரப்பட்டிருந்தது.

முதலாவதாக நோர்வேயில் மே மாதம் 10 ஆம் திகதி தமிழீழ தனியரசிற்கான மக்களாணையை பெற்றுக்கொள்வதற்கான தேர்தல் நடத்தப்பட்டது. மற்றைய நாடுகளில் தேர்தலை நடத்துவதற்கான ஒழுங்குபடுத்தல்களை செய்வதற்கு முன்னதாகவே, வன்னியில் எவருமே எதிர்பாராத பேரழிவு நடந்துமுடிந்துவிட்டிருந்தது.

தமிழர்களின் விடுதலைபோராட்டம் தாயகத்தில் சந்தித்த பேரழிவின் பின்னர், தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் திட்டத்தை செயற்படுத்தவேண்டிய பொறுப்பு புலத்துவாழ் தமிழர்கள் பொறுப்பெடுக்கவேண்டிய நிலை எழுந்தது.

தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலானது தமிழீழ தனியரசிற்கான மக்கள் ஆணையை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக பெற்றுக்கொண்டு, அதனை அடிப்படையாக கொண்டு நாடு தழுவிய மக்கள் அவைகளை நிறுவி, நாடு தழுவிய மக்கள் அவைகளின் பிரதிநிதிகளை கொண்டு நாடு கடந்த அரசை கட்டமைத்து, தாயக மக்களுக்கான அரசியலை புலத்துவாழ் தமிழர்கள் முன்னெடுப்பதே பொருத்தமாகவிருக்கும்.

தற்போது தமிழீழ தனியரசிற்கான மக்களாணையை, புலத்துவாழ் தமிழர்களிடம் பெற்றுக்கொள்வதன் மூலம் நாம் சாதிக்க கூடியது என்ன? இவ்வாறான மக்களாணை வினைத்திறனுள்ள பெறுபேற்றை தந்து, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை முன்னோக்கி தள்ளுமா? தாயகத்தில் வாழும் தமிழர்களுக்கு இதனால் கிடைக்கப்போவது என்ன? போன்ற கேள்விகள் எழுவது தவிர்க்கமுடியாதது.

தமிழீழ தனியரசிற்கான மக்களாணையை புலத்துதமிழர்களிடம் நடத்துவதுதன் மூலம் அடையப்படும் சாதகமான விடயங்களாக பின்வருவற்றை கூறலாம்.

1. தாயகத்தில் வாழும் மக்களுக்கான குரலாக இது அமைதல்
2. தமிழர்களின் வலுச்சமநிலையை மீள தக்கவைத்தல்
3. புலத்துதமிழர்களின் எந்தவொரு கட்டுமானத்திற்கான அடித்தளம்
4. தேசிய மட்டத்திலான அரசியலில் தமிழர்களின் குரல்
5. புதிய சந்ததியும் கலந்துகொள்ளக்கூடிய சந்தர்ப்பம்

இன்று தமிழர்களின் நடைமுறை அரசு இல்லாமல் போன நிலையில், தாயகத்து தமிழர்கள் தமது உரிமைக்கான குரலையும் இழந்துள்ளார்கள். குரலடங்கிப்போன மக்களின் குரலாக, அவர்களின் விடிவிற்காக குரல் எழுப்ப வேண்டிய கடமைப்பாடு புலத்து தமிழர்களுக்கு உண்டு. அதற்கான சந்தர்ப்பத்தை இவ் மக்களாணைக்கான தேர்தல் வழங்குகிறது.

தமிழர்களுக்கான எந்தவொரு தீர்வுத்திட்டத்தையும் பேரம் பேசி பெற்றுக்கொள்ளக்கூடிய சூழல், கடந்த வருடத்தில் நடந்தேறிய பேரழிவுடன் மாறியுள்ளது. தமிழர்களின் படைவலுவே தமிழர்களின் பேரம் பேசும் சக்தியை கொடுத்து, இலங்கைத்தீவில் இரண்டு தேச மக்களின் வலுச்சமநிலையை பேணிவந்தது. இழந்துபோன படைவலுக்கு நிகராக மக்கள் சக்தியை திரட்டி, சனநாயக வழிமுறைகளில் எமது அபிலாசைகளை சர்வதேசத்திற்கு சொல்லக்கூடிய சந்தர்ப்பத்தை, இவ் மக்களாணைக்கான தேர்தல் வழங்குகிறது.

தமிழீழ நடைமுறை அரசு இல்லாமல் போன நிலையில், புலத்து வாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து, பலமான சக்தியாக கட்டியெழுப்புவதற்கு, நாடு தழுவிய மக்கள் அவைகளும், நாடு கடந்த தமிழீழ அரசும் சாத்தியமான பொறிமுறையாக தமிழ் மக்கள் அனைவராலும் பார்க்கப்படுகிறது. அவற்றை புலத்து நாடுகளில் நிறுவி நடத்துவதற்கான அடித்தளத்தை தமிழீழ தனியரசிற்கான மக்களாணையே வழங்குகிறது.

புலத்து தமிழர்கள் வாழும் ஒவ்வொரு நாடுகளும் தமிழர்களது விடுதலைக்கான போராட்டத்தின் நியாயத்தை அறிந்துகொள்ளவேண்டும். அவ்வாறு அறிந்துகொள்வதுடன், அதனை அனைத்து தமிழர்களும் ஆதரிக்கிறார்களா என்பதையும் அந்நாடுகள் அவதானிக்கும். அவற்றை கருத்திற்கொண்டே, தமிழர்களது அரசியல் நியாயப்பாடுகளுக்கான தமது கொள்கைகளை வரித்துக்கொள்ளும். இன்று புலத்துதமிழர்கள் வாழும் பல நாடுகளில், புலத்து தமிழர்களின் வாக்குகள் அந்தந்த நாடுகளில் சிறியளவாவது செல்வாக்கு செலுத்தகூடிய நிலை உள்ளது. எனவே அந்தந்த நாடுகளில் எவ்வளவு தமிழர்கள் உள்ளார்கள் என்பதையும் அவர்களின் அபிலாசைகள் என்ன என்பதையும் அறிவிக்கும் களமாகவும், இவ் மக்களாணைக்கான தேர்தல் வழங்குகிறது.

அடுத்ததாக 1977 ஆம் ஆண்டில் மக்களால் அதிகாரமளிக்கப்பட்ட மக்களாணைக்கு மீளவும் ஏன் ஆணையை பெறவேண்டும் என கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. அன்றைய தேர்தலில் 1960 ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்களாலேயே தமிழீழ தனியரசிற்கான ஆணை வழங்கப்பட்டிருந்தது. அதற்கு பின்பு பிறந்தவர்களும் தமது ஆணையை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை இத்தேர்தல் வழங்குகிறது.

மேற்குறிப்பிட்ட சாதகமான விடயங்களை கருத்திற்கொண்டால், தமிழீழ தனியரசிற்கான மக்களாணைக்கான வாக்கெடுப்பை புலத்து தேசங்களில் நடத்துவதன் மூலம் தாயகத்திலுள்ள தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தில் புலத்துவாழ் தமிழர்களும் சாத்தியமான உயரிய பங்களிப்பை வழங்கமுடியும் என கண்டுகொள்ளலாம். எனவே அனைத்து புலத்து தமிழர்களும் தாயக மக்களின் விடுதலை போருக்கு தம்மாலான பங்களிப்பை செய்வதற்கு என்ன செய்யமுடியுமோ அதனை செய்வதற்கு அனைவரும் தயாராவதே புலத்து தமிழர்களின் முன்னுள்ள ஒரேயொரு தெரிவாகும்.

சங்கிலியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*