TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இந்தியா ஊடான ஈழத் தமிழர் நலன்கள் என்பது எப்போதுமே

இந்தியா ஊடான ஈழத் தமிழர் நலன்கள் என்பது எப்போதுமே சாத்தியமானது அல்ல!

இந்தியா இல்லாமல் ஈழத் தமிழர்களுக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை என்பதே எம்மிடையே இப்போதும் வாழும் இந்திய தாசர்களின் கருத்தாக உள்ளது. இந்தியா என்ற பிரமாண்டத்தையும், அதன்மீது ஈழத் தமிழர்கள் கொண்டிருந்த காதலுமே நடந்து முடிந்த அத்தனை அவலங்களுக்கும் காரணம் என்பதை இந்த இந்திய தாசர்கள் உணர்ந்து கொள்ள மறுத்தே வருகின்றார்கள்.

பிரமாண்டத்தை மட்டும் வைத்து பயம் கொள்வதும், அதனை வெல்ல முடியாத சக்தியாக நம்பி வணங்குவதுமான பண்டைய கால மனிதர்களின் எண்ணங்களிலிருந்து நாம் முற்றாக விடுபடவேண்டும். பிரமாண்டங்களை எல்லாம் வெல்லும் சக்தி மிக்க மனிதாகள் வாழும் உலகில் நாமும் வாழ்கின்றோம் என்ற நம்பிக்கை எமக்குள் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பேட்டை ரௌடிக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கும் கோழைத்தனத்திலிருந்து நாம் வெளிவர வேண்டும்.

ஆம், தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்துவதற்காகவே ஈழத் தமிழர்களை அச்சத்திலேயே வைத்திருக்க விழையும் இந்தியாவுக்கும், தனது புஜபல அராஜக பொடூரங்கள் மூலம் மக்களை அச்சுறுத்தித் தன் இருப்பை நிலைநிறுத்த முயலும் பேட்டை ரௌடிக்கும் அதிகம் வேறுபாட்டைக் காண முடியவில்லை. ஆனால், இந்தியாவின் பிரமாண்டத்தை ஈழத் தமிழர்களைத் தவிர இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த நாடும், எந்த இனமும் அச்சத்துடன் நோக்கவில்லை. பாக்கிஸ்தான் இந்தியாவுடன் இரண்டு போர்களை நடாத்தி முடித்துள்ளது. அதனால், இந்தியாவின் பிரமாண்டத்தை முறியடித்து காஷ்மீரின் ஒரு பகுதியைக் கைப்பற்றவும் முடிந்திருக்கின்றது. சீனா இந்தியாவை விடவும் பிரமாண்டமானது.

எனவே, இந்திய சீன யுத்தத்தில் இந்தியா உரிமை கோரும் பெரும் பகுதியை சீனா தனதாக்கியதை எமது ஆய்வுக்குள் கொண்டுவர முடியாது. பாக்கிஸ்தானினால் ஏற்படக்கூடிய நீண்டகால ஆபத்தைக் காரணமாகக் கொண்டு, இந்தியா வங்காளதேசத்தை உருவாக்கிக் கொடுத்திருந்தாலும், அந்த நாடும் இந்தியாவின் பிரமாண்டத்திற்கு அடி பணியாமலேயே நிமிர்ந்து நிற்கிறது. இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்குள் சிறைபட்டுக் கிடந்த நேபாளமும் இந்திய எதிர் நிலைப்பாட்டை எடுத்துவிட்டது. பூட்டானின் அரசியலில் இந்தியா செல்லாக்காசாகவே உள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ள தீபெத் இந்தியாவின் கையாலாகாத்தனத்தின் அடையாளமாகவே உள்ளது.
சீனாவின் செல்வாக்கை அதிகமாகக் கொண்டுள்ள சிங்கள தேசத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நகர்வுக்குரிய சந்தர்ப்பமாக சிங்கள – தமிழ் முரண்பாட்டைக் கையாண்ட இந்தியா, தன்னை நம்பிய ஈழத் தமிழர்களை சிங்களத்தை குளிர்த்திப்படுத்தும் வேள்விக் கடாக்களாக்கி, பெரும் பேரழிவுகளையும் நடாத்தி முடித்துள்ளது. ஆக, சிங்கள தேசம் சீனாவின் கையில் முற்றாக விழுந்துவிடாமல் தக்கவைப்பதற்கான ஆயுதமகவே ஈழத் தமிழர்கள் இந்தியாவால் பயன்படுத்தப்பட்டு வருகின்றார்கள். பயன்படுத்தப்பட இருக்கின்றார்கள். இந்தியாவைச் சுற்றி உள்ள நாடுகளும், இனங்களும் இந்தியாவைப் புரிந்து கொண்டது போல் ஈழத் தமிழர்களும் இந்தியாவைப் புரிந்து கொண்டு தமது அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவைத் தவிர்த்துவிட்டு, ஈழத் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கவே முடியாது என்ற கருத்தைத் திணிக்க முயல்பவர்கள் கடந்த காலங்களில் ஈழத் தமிழர்கள் இந்தியாவால் அடைந்த நன்மைகளைப் பட்டியலிட வேண்டும். இந்தியா என்ற பிரமாண்டத்தையும், தமிழகம் ஊடான ஈழத் தமிழர்களின் பாசப் பிணைப்பையும் கண்டு சிங்கள மக்கள் மத்தியில் உருவான அச்சமே சிங்கள – தமிழ் இன முரண்பாடாகக் கூர்மையடைந்தது. அந்த இன முரண்பாட்டினூடாகத் தனது பிராந்திய வல்லாதிக்க நலனை அடைய முனைந்த இந்தியாவால் ஈழத் தமிழர்கள் இத்தனை அழிவுக்கும் உள்ளானார்கள். இந்திய – சீன பிராந்திய வல்லாதிக்க கபடியாட்டத்தில் சீனாவின் கரம் பற்றி சிங்களவர்கள் தப்பித்துக் கொள்ள, ஈழத் தமிழர்கள் இந்தியாவை நம்பிச் சிதையுண்டு போன கதை நீடித்தே செல்கின்றது.

நாங்கள் சோணமிட்ட குதிரைகள் போல் இந்தியா ஊடாகத்தான் எமது நலன்களைப் பேண முடியும் என்ற இந்திய தாசர்களின் கருத்தை முதலில் நாம் முழுதாக நிராகரிக்க வேண்டும். இந்தியா என்ற பிரமாண்டத்தை சிறிலங்கா உட்பட அதைச் சுற்றியுள்ள நாடுகள் எதிர்கொள்வது போலவே நாமும் அதனை எதிர் கொள்ள வேண்டும். இந்தியா ஊடான ஈழத் தமிழர் நலன்கள் என்பது எப்போதுமே சாத்தியமானது அல்ல என்பதை தெற்காசிய அரசியலைப் புரிந்து கொள்பவர்கள் நிட்சயமாக ஏற்றுக் கொள்வார்கள். ஈழத் தமிழர்களைப் பகடைக்காய்களாக நகர்த்தி இலங்கைத் தீவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தியா முயல்வது போலவே, சீனாவைக் கருவியாகக் கொண்டு சிங்கள தேசம் அதனை முறியடிக்கும் சமன்பாட்டைத் தொடரவே போகின்றது. சீனாவின் வேகமான செயல்திறனுக்கும் நகர்வுகளுக்கும் ஈடாக நகரமுடியாத இந்தியா குள்ளநரி வேடத்தில் நின்றே காரியமாற்ற முனைகின்றது. இது எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு சாத்தியமாக அமையப் போவதில்லை.

சிங்கள தேசத்தின் இன அழிப்பு யுத்தத்திற்குத் துணை வழங்கிய இந்தியா, அந்த யுத்த காலத்தின் கொடுமைகளை சர்வதேச அரங்கில் விசாரணைக்குக் கொண்டுவர மேற்குலகம் மேற்கொண்ட முயற்சிகளைக்கூடத் தனது பரம வைரிகளான சீனாவுடனும் பாக்கிஸ்தானுடனும் இணைந்து தடுத்து நிறுத்திய கொடூரத்தினை ஈழத் தமிழர்கள் என்றுமே மறந்துவிட முடியாது. எனவே, ஈழத் தமிழர்கள் தமது அரசியல் இலக்கை வென்றெடுக்க இந்தியாவைத் தாண்டிச் சிந்திக்க வேண்டும்.

ஈழத் தமிழர்களது ஆயுத பலம் சிதைக்கப்பட்ட பின்னர் உருவான வெற்றிடமும், அச்ச நிலையும் அவர்களது அரசியற் பலமான தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இந்தியாவின் கரங்களுக்குள் புதைத்து விட்டது. சிங்கள தேசத்தைப் போலவே, இந்தியாவின் கைகளுக்கெட்டாத பலமாக புலம்பெயர் தமிழர்களே உள்ளனர். சிங்கள தேசம் போலவே தமது நலனை வென்றெடுக்க இந்தியாவும் புலம்பெயர் தமிழர்களுக்கு வலை விரிக்க ஆரம்பித்துவிட்டது. புலம்பெயர் தமிழர்களை வென்றெடுக்காமல் மேற்கொள்ளப்படும் எந்த நகர்வும் முற்றுப்பெறப் போவதில்லை என்பதை இந்தியாவும் உணர்ந்தே உள்ளது. புலம்பெயர் தேசங்களிலுள்ள இந்திய தாசர்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டு மரியாதைப்படுத்தப்படுவதுடன், புலம்பெயர் தேசங்களில் இந்திய பிரமிப்புக்களை ஏற்படுத்தும்படியும் பணிக்கப்பட்டு வருகின்றார்கள். இதற்கான வழங்கல்களும் தாராளமாகவே திறந்து விடப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு எதிரான மேற்குலகின் அழுத்தங்களும், பெருளாதார ரீதியான தடங்கல்களும் அதிகரித்துச் செல்வது புலம்பெயர் தமிழர்களை மட்டுமல்லாது, தமிழீழ மக்களையும் மேற்குலகை நோக்கி நகர்த்திவிடும் என்ற அச்சம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. தனது பிரமாண்டமான சந்தை வாய்ப்பைப் பயன்படுத்தி மேற்குலகைக் கட்டி வைத்திருந்த இந்தியாவிற்கு, ஈழத் தமிழர்கள் மீதான மீதான தேற்குலகின் அனுதாபப் பார்வையைத் தடுத்து நிறுத்த முடியாத அளவிற்கு சிங்கள அரசின் கொடூரங்கள் அதிகரித்தே வருகின்றது.

இதனால், தனது பிராந்திய நலன் சார்ந்த தமிழீழத் தளம் தன்னை விட்டு நிரந்தரமாக விட்டுப் போகாமல் இருப்பதற்காக ஈழத் தமிழர்கள் தலையில் மீண்டும் மிளகாய் அரைக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. புலம்பெயர் தமிழீழ மக்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்கவும், புதிதான பல ஒட்டுக் குழுக்களைப் பிரசவிக்கவும், புதிய வரதராஜப்பெருமாள்களை புலம்பெயர் தமிழர்களுக்குத் தலைமை ஏற்க வைக்கவும் இந்தியா தொடர் பிரயத்தனங்களை மேற்கொள்ளப் போகின்றது. சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*