TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தடுக்க தவறும் தமிழன் நான் பெரிதா? நீ பெரிதா?

தடுக்க தவறும் தமிழன் நான் பெரிதா? நீ பெரிதா? தெருச்சண்டையில்…

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஸ்ரீலங்கா அரசின் செயல் திட்டங்களுக்கமைய சிங்கள மக்களால் துரிதகதியில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது. போர்ச்சூழல் காரணமாக தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நிலங்களே அதிகமாக இவ்வாறு அபகரிக்கப்பட்டு வருகின்றன.

வறுமையில் வாடும் தமிழ் மக்களின் வறுமையை சாதகமாக பயன்படுத்தி அவர்களுக்கு அதிகளவு பணங்களை கொடுத்து அவர்களின் நிலங்களை பெரும்பாலான சிங்களவர்கள் வாங்கிவருகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில வருடங்களில் வடபகுதி எங்கும் அதிகளவான சிங்களவர்கள் குடியேறிவிடுவர். அதன் பின் அவர்களுக்காக சிங்கள பாடசாலைகளும், பெளத்த விகாரைகளும் எங்கும் முளைக்கும். அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாதுபோகும்.

அத்தோடு அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடைபெறும் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் சிங்களவர்களும் போட்டியிட்டு தேர்வாகும் வாய்ப்புக்கள் அதிகரிக்கவே இது போன்ற நடவடிக்கைகள் வழிகோலும் என்பதில் ஐயமில்லை.

* எனவே இலங்கை வாழ் தமிழர்கள் என்ன நிலை ஏற்படினும் தமது நிலங்களையோ, சொத்துக்களையோ ஒரு சிங்களவருக்கு கூட விற்கக்கூடாது. முடிந்தவரையில் தாமே அதை பாதுகாத்துக் கொள்ள வேண்டு. அதையும் மீறிய தேவைகள், கஷ்டங்கள் ஏற்படுமிடத்து நிலங்களை விற்பதாயின் அதனை தமிழர்களுக்கு மட்டுமே விற்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே தமிழர்கள் தமது பூர்வீக தாயக நிலங்களை பாதுகாப்பாக தமிழர் நிலங்களாகவே பாதுகாக்க முடியும். அத்தோடு புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழீழ தமிழர்கள் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி இனிவருங் காலங்களிலாவது தமிழர் நிலங்கள் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தை புரிந்து கொண்டு தமது முதலீடுகளை வடக்கு கிழக்கு பகுதிகளில் கூடியளவு செலவிடவேண்டும் என்பதும் இன்றைய காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.

இதுவரை காலமும் தமிழர் தாயகப்பகுதிகளில் கணிசமான அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்தையும், நில அபகரிப்புக்களையும் செய்து வந்த சிங்கள பேரினவாத அரசு தற்போது மிகவும் புத்திசாலித்தனமாக தமிழர் தாயகப்பகுதிகளில் உள்ள நிலங்களை தமிழர்களின் விருப்புடனேயே அவர்களின் வீடுகளையும், காணிகளையும் பணத்தைக்கொடுத்து வாங்கும் தந்திரத்தை அரங்கேற்றி வருகிறது.

இந்த சதிவலைக்குள் சிக்கி தமிழர் தாயக நிலப்பரப்புக்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரதும் இன்றைய வரலாற்றுக் கடமையாக உள்ளது.

இந்த மண்ணையும், மக்களையும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றி சுதந்திர தமிழீழத்தை உருவாக்கி அதில் அனைத்து தமிழ் பேசும் மக்களும் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே 33,000 ற்கும் மேற்பட்ட மாவீரர்களும் போராடி தமது விலைமதிப்பற்ற இன்னுயிர்களை தமிழீழ விடுதலைக்காக உரமாக்கி விதைகுழிகளில் விதைக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒவ்வொரு வினாடியும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக ஆயுதப்போராட்டம் நடாத்திய போதும் சரி, பேச்சுவார்த்தைகள் என்று பல நாடுகளுடன் ஈடுபட்டிருந்த போதிலும் சரி தமிழரின் உரிமையையோ, தமிழீழக்கோட்பாட்டையோ விட்டுக்கொடுக்காது தமது பிரதிநிதித்துவத்தை சரிவர செயற்படுத்தி வந்தனர்.

இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் துணையோடு இலங்கை அரச இயந்திரம் மிக மூர்க்கமான தாக்குதல்களையும், சர்வதேசங்களினால் தடைசெய்யப்பட்ட போர் ஆயுதங்களையும் பயன்படுத்தி தமிழர் நிலங்களையும், தமிழ் மக்களையும் அழித்து தமிழினம் என்றும் கண்டிராத மிகப்பெரும் இனப்படுகொலையை சந்தித்த போது சர்வதேச நெருக்கடிகளை கருத்திற்கொண்டும், சர்வதேசம் தமிழர் பிரச்சனையில் அணுகமுனையும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டும் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக இருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மெளனித்தனர். இது அனைவரும் அறிந்த உண்மையே!

* ஆனால் ஆயுதங்களை மெளனித்ததின் பின்னர் எத்தனை போராளிகள் மிகக்கொடூரமாக கொன்றழிக்கப்பட்டனர். தமது மண்ணினதும், தம் மக்களினதும் மானம் பெரிதென போராடியவர்கள் உடல்கள் கிழிக்கப்பட்டும், நிர்வாணப்படுத்தியும், பல துண்டுகளாக்கப்பட்டும் மனிதநேயமற்ற முறையில் சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படுவதை ஊடகங்கள் வாயிலாக பார்த்தும், கேட்டும் அதன் பின்னரும் உணர்வுள்ள தமிழராய் ஒன்றிணையாது தமிழர்களிடையே பிளவுகளை அதிகரித்துக்கொண்டே இருப்போமானால் தமிழினம் இலங்கையில் இருந்த தடமே இல்லாது போகும் அபாயம் இருக்கிறது. அதனால் ஒன்றிணைந்து போராடுவதும், குரல் கொடுப்பதும் அவசியம். இதை விடுத்து இன்னொருவரை தாக்குவதிலும், நான் பெரிதா? நீ பெரிதா? என முட்டி மோதிக்கொள்வதிலும் எந்த பலனும் இல்லை. தமிழ்த் தேசியத்தையும், தமிழர் நலன்களையும் விட்டு விலகி சலுகைகளுக்காக அரசியல் செய்வோரை அடையாளம் கண்டுகொண்டு அவர்களை மக்கள் புறம்தள்ளி அவர்களின் கருத்தை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழர்கள் தமது பலத்தைக் கட்டிக்காப்பதோடு உட்பூசல்களை தவிர்த்து உறுதியான தமிழர் பிரதிநிதிகளின் வழியில் தமிழீழத்தை அடையமுடியும்.

அனைவரும் ஒன்றிணைந்து தமிழர் தாயக நிலப்பரப்புகளையும், தமிழீழ விடுதலைப் போராட்ட போராளிகளையும், அனாதைகளாக, அடிமைகளாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களையும் காப்பதே இன்று ஒட்டுமொத்த தமிழர்கள் (தமிழ் அமைப்புக்கள்) முன்னும் உள்ள மிக முக்கிய செயற்திட்டங்களாக உள்ளது என்பதை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

இந்த செயற்திட்டங்களை முன்னுரிமை கொடுத்து செயற்படுத்த அனைத்து தமிழ் அமைப்புக்கள், தமிழர் பிரதிநிதிகள் என அனைவருக்கும் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழரும் எடுத்துரைத்து அவர்களை செயற்பட வைப்பதும் மக்களின் தவிர்க்கமுடியாத வரலாற்றுக்கடமை என்பதையே இன்றைய காலம் உணர்த்தி நிற்கிறது.

தமிழ்மாறன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • kavi says:

    tamil maran avarkale athu makavum jatharthamana kaddurai.tamilarkal anaivarum unarthal vetti nitsajam.kavi

    February 18, 2010 at 16:04

Your email address will not be published. Required fields are marked *

*