TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இலங்கை இந்திய அரசியல் விளைவுகள் எதிர்விளைவுகள்!

புலம் பெயர் தமிழினம் வெல்லுமா அல்லது மொத்தத் தமிழினமும் வீழ்ந்துபடுமா?

கடந்த 2009 மே மாதத்தில் நடைபெற்ற இந்திய மத்திய அரசுத் தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் அமைந்ததோடு ஈழத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போருக்கும் தேசிய விடுதலைக்கும் மிகப் பெரும் பேரிடியாக அமைந்தது.

ஊசலாட்டத்தில் உயிர் வாழ்ந்த இந்திய மத்திய அரசும் தமிழக மாநில அரசும் அடைந்த பெரு வெற்றிக்குக் காரணம் பணப் பொறியா கணிப் பொறியா என்பதைக் கண்டறிவது அத்தனை சுலபமானது அல்ல. ஆயினும் மாற்றுக் கட்சிகளின் வாக்குகளை காங்கிரஸ் கூட்டணிக்கு வளைச்சுப் போட்ட கைங்கரியத்தைக் கணனி மூல வாக்களிப்பு செய்து கொடுத்தது எனப் பல கட்சிகளும் கணிப்பொறி நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை வெறும் தோல்வியின் வெளிப்பாடு எனக் கொள்ள முடியாது ஏனென்றால் இந்தியக் கணினி மூல வாக்கெடுப்பு முறையில் மீள் பார்வை செய்யும் வசதி கிடையாது அதற்கான நிலையான பதிவுகளும் கிடையாது. அப்படியான நிலையில் இந்தியாவில் இடம் பெற்ற கணினி மூல வாக்குப் பதிவுக் குளறுபடிகளைக் கண்டு அறியும் வசதியும் கிடையாது.

அப்படியிருந்தும் இன்றைய இந்திய உள் துறைப் பாதுகாப்பு அமைச்சரின் வெற்றியை பணம் பதவி அதிகாரமே பெற்றுக் கொடுத்தது என்ற செய்தி யாவரும் அறிந்த ஒன்றே. எனவே கணினியால் கூட இந்தக் காங்கிரஸ் அமைச்சருக்கு வெற்றியைப் பெற்றுத்தர முடிய வில்லை என்பதை அறியலாம்.

இலங்கையில் நடந்து முடிந்த அரச அதிபர் தேர்தலில் கணினி மூல வாக்கெடுப்பு நடை பெறவில்லை. ஆயினும் கணினி மோசடி நடந்தது என தோல்வியுற்ற வேட்பாளர் சரத் பொன்சேகா சொல்கிறார். அவரது குற்றச் சாட்டுக்கு ஆதாரமாக மகிந்தவின் பழைய சகா ஒருவரும் முன்பும் மகிந்த இதே மாதிரிக் கணினி மோசடி செய்தார் எனக் கூறியுள்ளார்.

தரவுகளைக் கணினியில் தவறாகக் கொடுத்தால் அதன் முடிவுகளும் தவறாகத்தானே அமையும். அப்படித்தான் தனக்குச் சேரவேண்டிய வாக்குகள் மகிந்தருக்கு சேர்க்கப்பட்டு அதன் மூலம் தமது வெற்றியைப் பெற்றுக் கொண்டார் என்ற சரத்தின் குற்றச்சாட்டு வெறுமனே புறம் தள்ளிவிடக் கூடிய ஒன்று அல்ல.

அந்த ஊழல்களின் வெளிப்பாடாக பல புதிய செய்திகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. அத்தகைய ஒரு சேதிதான் இரத்தினபுரியில் கண்டெடுக்கப் பட்டதாகக் கூறப்புடும் பாதி எரிந்த நிலையில் உள்ள சரத்துக்குப் பதிவான வாக்குக் கட்டு. வாக்குச் சீட்டின் பின் புறத்தில் தேர்தல் அலுவலரின் பதவி முத்திரையும் கையொப்பமும் காணப்படுவது மோசடியின் உண்மைத் தன்மையைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

எண்ணப் பட்ட வாக்குகள் மற்றும் தேர்தல் தொடர்பான பத்திரங்கள் குறிப்பிட்ட வருடகாலப் பகுதி வரை பாதுகாப்பாக வைக்கப் பட வேண்டிய ஆவணங்களாகும். அப்படியான ஒரு ஆவணம் இப்படிச் சில நாட்களிலேயே எரிந்த நிலையில் காணப்படுவது ஜனநாயகம் சட்டம் ஒழுங்கு என்பன இலங்கையில் எந்த நிலைக்கு இறங்கி விட்டது என்பதைக் காட்டுகிறது.

தேர்தலில் தமிழ் இஸ்லாமிய மக்களின் வாக்குகள் முடிவைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்டுள்ளன என ஆய்வாளர் பலரும் அடித்துச் சொல்லி இன்று அசடு வழிந்து நிற்கும் காட்சியைப் பார்க்கிறோம். இவர்கள் சிங்கள மக்களின் உணர்வுகளைப் புரியாதவர்களா அல்லது புரிந்தும் வேண்டும் என்றே கவனத்தில் எடுக்கத் தவறியவர்களா?

போர் நடந்த நாட்களில்; சிங்கள மக்களிடையே எடுக்கப் பட்ட சகல கருத்துக் கணிப்புகளும் மிகப் பெரும் விகிதமான சிங்கள மக்கள் போருக்கு ஆதரவான கருத்துகளைப் பதிந்தே வந்துள்ளன.

அப்படியான மக்கள் அந்தப் போரின் வெற்றிக் களிப்பில் மிதந்து கொண்டிருக்கும் இக்காலப் பகுதியில் எப்படி அந்த வெற்றியின் நாயகன் மகிந்த நடத்தும் தேர்தலில் அவருக்கு எதிராக வாக்களிப்பர் எனக் கருதலாம்?

எதிர்க் கட்சிகள் அனைத்தும் இன்னொரு போர் கதாநாயகனான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பின்னால் அவசரக் கூட்டு ஒன்றினை ஏற்படுத்திய காரணம் அவற்றின் பலவீனம் அல்லவா?

சிங்களப் பெரும்பான்மை மக்கள் மகிந்தரின் பின்னால் உள்ளனர் என்ற உண்மையால் எழுந்த அச்சம் இது என்பதை ஏன் ஆய்வாளர் தமது கருத்தில் எடுக்கத் தவறினர்?

இச் செயற்பாட்டின் மூலம் இலங்கையில் சிங்கள அரசியல் கட்சிகள் தமது இன மத மொழி மேலாதிக்க மற்றும் தமிழின அடக்குமுறை அரசியலில் இருந்து விலகிச் செல்லமுடியாத கையறு நிலையும் வெளியாகி உள்ளது. இதில் மிகப் பெரிய பரிதாப நிலை என்ன வென்றால் தமிழரின் தலைமை எனப் பெருமைப்படும் தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த உண்மையை உய்த்துணரும் ஆற்றல் இல்லாமல் போனதே.

1960 களின் பின்னால் உள்ள கல்விப்பாடத் திட்டம் காரணமாக பெரும்பாலான சிங்கள மக்கள் சிங்கள இன மேலாதிக்கச் சிந்தனையும் தமிழின வெறுப்பு உணர்வும் கொண்ட மனத்தவர்களாக வளர்த்து எடுக்கப்பட்டு விட்டனர். இந்த வரலாற்றுக் காரணி இனிமேல் என்றுமே மாற்றப்படக் கூடியது அல்ல என்பதை எல்லா சமூகவியல் ஆய்வாளர்களும் கருத்தில் எடுத்துக் கொண்டால் மட்டுமே ஆய்வுகளில் இதுபோன்ற பாரிய தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

எது எப்படியோ தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தவறான வழி நடத்தலிலும் கூட தமிழ் மக்கள் தமது தேர்தல் மீதான வெறுப்புணர்வை வெளிப்படுத்தி விட்டனர். வாக்களித்தவர் சிலராகவும் அதுவும் பெருமளவு செல்லுபடியற்ற வாக்குகள் மூலமும் தமது மனக் குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர். இளைஞர்கள் பெருமளவில் வாக்களிக்கவில்லை என்பதும் பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர்கள் வெளிப்படுத்தி உள்ள எதிர்ப்பு எனவே பார்க்கப்படவேண்டும்.

இத்தனைக்கும் மத்தியில் தேர்தல் ஆணையாளர் பாடோ பெரும்பாடாகி உள்ளது. தேர்தல் சட்டங்களை நேர்மையாக அமுலாக்கியே தீருவேன் என்ற அவரது ஆரம்ப காலப் பல்லவி சட்ட அமுலாக்கம் செய்ய வேண்டிய காவல் துறையின் ஒத்துழைப்பு இன்மையால் சுருதி கெட்டு தாளமும் தப்பித் தள்ளாடியது.

தேர்தலின் போது இடம் பெற்ற வன்முறைகள் கொலைகள் இரு தரப்புக் குற்றச்சாட்டுகள் கட்டு மீறிய நிலையில் தேர்தல் தினத்தன்று அதிரடியான ஏற்பாடுகளைச் செய்து அசத்தி விடுவேன் என்ற அறைகூவலும் விட்டார். ஆனால் அவரால் அப்படியான அதிசயம் எதுவும் நிகழ்த்த முடியாமல் போனது. அது மட்டுமன்றி அவரே இடம் பெற்றதாகச் சொல்லிக் கொண்ட தேர்தல் குற்றச் சாட்டுகள் குற்றங்கள் எவையும் தேர்தலின் போது இடம்பெற வில்லை என இன்று நற்சான்றும் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்.

பிச்சை வேண்டாம் நாயைப் பிடித்தால் போதும் என ஜனாதிபதித் தேர்தலோடு தனது பதவிக்கே முழுக்குப் போட்டுவிடுகிறேன் என்று கூறிய தேர்தல் ஆணையாளரால் இன்று அதனைத் தானும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்.அவரை வைத்தே பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றியைக் கண்டுவிட இன்றைய அதிகார வர்க்கம் தீர்மானித்து விட்டது.

தேர்தல் ஆணையாளரின் கதை திரிசங்கு சொர்க்கம் என்றால் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதியோ இந்நாள் கூண்டுப் புலியாகி நித்திய கண்டம் என்ற நிலையில் உயிர்ப் பிச்சை கேட்டு நிற்கிறார். அவரது உதவியாளர் பலர் பதவி நீக்கப்பட்டும் கைதாகியும் தேசத் துரோக குற்றச் சாட்டுக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களில் இருவர் தமிழர் என்ற செய்தியும் மனதுக்கு ஆறுதல் தருகிறது.

* சைவமோ மச்சமோ கறிக்கு கறிவேப்பிலை எத்தனை சுவையோ அது போல்தான் இலங்கையில் நல்லதோ கெட்டதோ எதற்கும் இரண்டு தமிழரும் அவசியம் என்பது 1947ல் டி.எஸ். சேனநாயக்கா முதல் 2010ல் மகிந்தர் வரை நடைமுறையில் உள்ள ஒரு பாரம்பரியம். அமைச்சரவையில் கூட்டிக் கொடுக்கவும் காட்டிக் கொடுக்கவும் இரண்டு இடங்களைச் சிங்களம் தமிழருக்கு ஒதுக்கியே வந்துள்ளது. அந்தப் பாரம்பரியம் இந்தக் கைதிலும் பின்பற்றப் பட்டிருப்பது சிங்களவரும் தமிழரும் அண்ணன் தம்பிகள் ஒரு தாய் மக்கள் என்ற மகிந்தரின் 62வது சுதந்திர தின உரையை நினைவு படுத்துகிறது.

அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் சரத் தலை காட்ட முடியாதவாறு காட்சிகள் அரங்கேற்றப்படும் நிலையே தெரிகிறது. சரத்தைக் காப்பாற்ற எதிரணிக் கட்சிகள் பகீரதப் பிரயத்தனம் செய்வர். ஆனால் எது வரினும் அது முறியடிக்கப்படும் என்ற கோத்தபாய ராஜபக்ஷவின் குரலும் ஆவேசமும் இந்ந உலகே வந்தாலும் சரத்தின் கழுத்தில் விழ உள்ள கத்தியைத் தடுக்க முடியாது செய்துவிடும். செம்மணி முதல் முள்ளிவாய்க்கால் வரை சரத் ஆற்றிய அரும்பணிக்கான விலையாகத் தர்மம் அவரைப் பழி தீர்த்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

அறம் கொன்ற பேருக்கு மீட்சி இல்லை என்பது தமிழரின் நம்பிக்கை. அந்ந வகையில் முன்னாள் தலைமை நீதிபதி(?) சரத் என். சில்வா நினைவில் கொள்ளப்பட வேண்டியவர் ஆகிறார். சுனாமி நிதி மோசடியில் சிக்கிய அன்றைய பிரதமர் மகிந்தவுக்கு எதிராக ஒரு வழக்கு இதே சில்வா முன் வந்தது. அந்த வழக்கை நேர்மையாக விசாரித்திருந்தால் மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது போயிருக்கலாம். அன்று அந்த வழக்கை விசாரணைக்கு எடுக்காது கொம்பு சீவி விட்டதால் இன்று அதே சில்வாவை உள்ளே தள்ள நினைக்கிறார் மகிந்தர்.

வடக்கையும் கிழக்கையும் தமது தீர்ப்பின் மூலம் பிரித்துத் தமது இனவெறியை வெளிக் காட்டிய இதே சில்வா அதனைத் தமது சாதனையாகவும் பேசிப் பெருமைப் பட்டவர். இன்று சரத்தை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட வேண்டியவரில் ஒருவராக அவரே ஒரு குற்ற வாளியாக நிறுத்தப்படுகிறார். இவை யாவும் அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்ற முதுமொழியை எமக்கு நினைவு படுத்துகின்றன.

கடைசி நேரத்தில் வன்னி மக்களில் ஒரு சிலரையாவது சர்வதேச சமுகம் காப்பாற்ற முடியாமல் பெரும் மனித அவலத்துக்கு துணைபோனது. இன்று ஒரு தனி மனிதனான சரத்தை சர்தேச சமூகம் காப்பாற்ற வலுவற்று நிற்கும் காட்சியையும் நாம் காண முடிகிறது. சரத் உயிரோடு உள்ள வரை மனித உரிமை மீறல் போர்க் குற்ற விசாரணை என்பன மகிந்தவை அச்சுறுத்தும். எனவே எந்த ஆண்டவன் வன்னி மக்களைக் காப்பாற்றினானோ(?) அதே ஆண்டவன் தான் சரத்தையும் காப்பாற்ற முடியும்.

* மகிந்த ஒரு முழுமையான இராணுவ ஆட்சித் தலைவனாக உருவெடுத்து விட்டார் அதற்கான முழுமையான பாதுகாப்பையும் சீனா வழங்கும். சீனப் பெருஞ்சுவர் இருக்கும் பொழுது சீக்கியக் குட்டிச்சுவர் எதற்கு என்ற நியாயமான கேள்வியும் எழும். அந்த நிலைப்பாட்டில் வடக்கில் சீனாவின் மேலாண்மையுடன் சிங்களம் தமிழ் மக்களை அபிவிருத்தி பொருளாதார வளர்ச்சி என்ற மாய மானின் அழகில் சொக்க வைத்து இராணுவ அடக்கு முறை வெளியே தெரியாத படி பார்த்துக் கொள்ளும்.

இத்தகைய சூழலில் இந்தியாவும் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் ஒற்றையாட்சியின் கீழ் 13வது திருத்தச் சட்டத்தின் படி அதிகாரப் பகிர்வு என்ற குச்சி ஐஸ் பழம் தந்து தமிழ் மக்களின் தமிழீழத் தாகத்தைத் தீர்க்கப் பார்க்கின்றனர். இந்தக் குச்சி ஐஸ் மகிந்தவின் அனைத்துத் தரப்பு மக்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வுதான் ஒரே முடிவு என்ற தீப்பந்தத்தின் வெப்பத்தில் உருகாது என்பதற்கு என்ன நிச்சயம்.

எப்படியோ எமது பிரச்சனையில் எவர் எவரோ தமக்குத் தேவையானதைச் சம்பாதித்துக் கொண்டு விட்டனர். இந்தப் பட்டியலில் பல தனிநபர்களும் நாடுகளும் அடங்கும். ஆனால்…

* ஈழத் தமிழினம் கொடுத்த விலையும் பட்ட துன்ப துயரங்களும் கணக்கிட முடியாத அளவு பெரியது. அதனை ஈடு செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு புலம் பெயர் தமிழரின் உழைப்பில் மட்டுமே தங்கி இருக்கிறது. புலம் பெயர் தமிழினம் வெல்லுமா அல்லது மொத்தத் தமிழினமும் வீழ்ந்துபடுமா?

அரசியல் ஆய்வாளர் த.எதிர்மன்னசிங்கம்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*